இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பானதுமான நாளாக ஆடி அமாவாசை இருக்கிறது. ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை நாளில் விரதமிருந்து முன்னோரை வழிபடும் நிகழ்வினை "ஆடி அமாவாசை விரதம்" என்கின்றனர்.
வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே இராசியிற் கூடுகின்ற போதுள்ள காலம் அமாவாசையாகும். சூரியனைப் "பிதிர் காரகன்" என்கிறோம். சந்திரனை "மாதுர் காரகன்" என்கிறோம். எனவே, சூரியனும் சந்திரனும் எமது பிதா மாதாக்களாகிய வழிபடு தெய்வங்களாகும். ஆடி அமாவாசை நாளில் அதிகாலை நித்திரை விட்டெழுந்து தீர்த்தம் ஆடி, பின்னர் சிவாலய தரிசனம், பிதிர்தர்ப்பணம், அன்னதானம் செய்தல் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன.
தமிழ்நாட்டில் ஆடி அமாவாசை நாளில் , பிதிர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பிதிர்களின் தோசங்களில் இருந்து நீக்கமுறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. கடல் அல்லது புனித ஆறுகளில் நீராடி இறைவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கி விமோசனம் பெறமுடியும் என்கிற நம்பிக்கையும் இந்து சமயத்தினரிடம் உள்ளது. இந்நாளில், நீர்நிலைகளுக்கு அருகில் முன்னோர்களுக்கான வழிபாடும் நடத்தப்பெறுகின்றன.
கேரள மாநிலத்தில் கொல்லம் ஆண்டின் கர்க்கடக (தமிழ் மாதம் ஆடி) மாதத்தின் அமாவாசை நாளில், மக்கள் ஆற்றங்கரைகளிலும் கடற்கரைகளிலும் முன்னோர்களுக்கு படையல் அல்லது பலி வழங்குவதற்காகக் கூடுகின்றன்ர். வர்கலாவில் உள்ள பாபநாசம் கடற்கரை அத்தகைய வழிபாடு செய்யும் ஒரு முக்கிய இந்து மதத் தலங்களில் ஒன்றாக இருக்கிறது. அன்றைய நாளில், வழிபாடு செய்தால், தங்கள் குடும்பங்களில் இறந்த முன்னோர்களின் ஆன்மாக்கள் மோட்சம் (முக்தி) அடைகின்றன என்று மக்கள் நம்புகின்றனர்.
இச்சடங்கை மலையாள மக்கள் வாவி பலி என்று மலையாள மொழியில் குறிப்பிடுகின்றனர். தமிழில் அமாவாசை படையல் என்கின்றனர். இறந்த முன்னோர்களின் ஆன்மாக்கள் எளிதில் சாந்தமடையவும், மோட்சம் அடையவும் எண்ணி படைக்கப்படும் வாவு பலி அல்லது படையல் அந்தக் குடும்பத்தின் சார்பாக வயது முதிர்ந்த பெரியவர்கள் அல்லது இந்து சமயப் பூசாரிகளின் வழிகாட்டுதலின் கீழ் நிகழ்த்தப்படுகிறது. தர்ப்பை (ஒரு வகை நீளமான புல்), பவித்திரம் (தர்பா புல்லால் செய்யப்பட்ட மோதிரம்), எள் (எல்லு), செருளா (ஒரு சிறப்பு மூலிகை) சமைத்த சாதம், தண்ணீர் மற்றும் வாழை இலைகள் ஆகியவை இந்த சடங்கிற்கு தேவையான முக்கியத் துணைப்பொருட்களாகும். இந்தச் சடங்குகள் எல்லா இடங்களிலும் ஒன்று போல இருப்பதில்லை. சடங்குகள் மற்றும் அதற்க்கு தேவையான பொருட்கள் இடத்திற்கேற்ப மாறுபடுகின்றன.