இந்து சமயத்தில் குழந்தைப்பேறு வேண்டிச் செய்யப்படும் ஒரு சிறப்பு வேத வேள்வியாக, புத்திரகாமேஷ்டி யாகம் இருக்கிறது. இச்சடங்கு காம்ய கர்மங்களில் ஒன்றாகும்.
இராமாயணம் காவியத்தில் மூன்று பட்டத்து ராணிகள் கொண்ட அயோத்தி மன்னர் தசரதன் பல ஆண்டுகளாக குழந்தைப்பேறு இன்றி இருந்தார்.
தசரதனின் குலகுருவான வசிஷ்டர் ஆலோசனைப்படி, ரிஷ்யசிருங்க முனிவரைக் கொண்டு குழந்தைப் பேற்றுக்கான வேள்வி (புத்திரகாமேஷ்டி யாகம்) ஒன்றைத் தசரதன் நடத்தினார்.
அந்த வேள்வியில் தோன்றிய தெய்வீக உருவம், தசரதனின் கையில் புனிதப் பாயாசக் கலசம் ஒன்றைக் கொடுத்து, மூன்று மனைவியருக்கும் அந்தப் பாயாசத்தைச் சமமாகப் பகிர்ந்து கொடுக்கும்படிச் சொல்லி மறைந்தது.
அந்தப் பாயாசத்தை மூன்று மனைவியருக்கும் மூன்று கிண்ணத்தில் சமமாகப் பகிர்ந்து கொடுத்தான் தசரதன். அவ்வேளையில் அங்கு வந்த கழுகு ஒன்று, சுமித்திரையின் பாயாசத்தைக் கவர்ந்து சென்றது. சுமித்திரை வருத்தமடைந்தாள்.
அவளது வருத்தத்தை அறிந்த கௌசல்யாவும், கைகேயியும் தங்களிடமிருந்த பாயாசத்தைச் சுமித்திரைக்குப் பகிர்ந்து கொடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து, கௌசல்யாவிற்கு இராமனும், கைகேயிக்குப் பரதனும், சுமித்திரைக்கு லட்சுமணன் மற்றும் சத்ருகன் ஆகியோரும் மகன்களாகப் பிறந்தனர். இராமனாகத் திருமாலும், லட்சுமணனாகத் திருமாலின் பாம்புப் படுக்கையான ஆதிசேஷனும், பரதனாகத் திருமாலின் கையிலிருக்கும் பாஞ்சஜன்யம் எனும் சங்கும், சத்ருக்கனனாகத் திருமாலின் கையிலிருக்கும் சுதர்சனச் சக்கரமும் பிறந்திருந்தனர்.