இந்து சமயத்தின் சைவ வழிபாட்டு முறையில் இறைவனின் திருவுருவாகக் கருதப்படும் புனிதமான மலையையோ அல்லது இறைவன் கோயில் அமைந்த மலையையோ நடையாக வலம் வந்து வழிபடும் ஒரு ஆன்மிகப் பயண முறையினை மலை வலம் (கிரிவலம்) என்கின்றனர்.
இந்து சமயக் கோட்பாடுகளின்படி, பிரபஞ்சத்தின் ஆற்றல் மையங்களாக விளங்கும் சில குறிப்பிட்ட மலைகள் சாதாரணப் பாறைகள் அல்லாமல், சிவபெருமானின் வடிவமாகவோ அல்லது சித்தர்கள் மற்றும் தேவர்கள் வாழும் புனித இடங்களாகவோ போற்றப்படுகின்றன. இத்தகைய மலைகளை வலம் வருவதன் மூலம், இறைவனை நேரடியாக வலம் வந்த புண்ணியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
மலைவலம் வரும் போது பக்தர்கள் சில ஆன்மிகக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுகின்றனர், அவை;
1. திசை ஒழுங்கு - மலையை எப்போதும் இடமிருந்து வலமாக மட்டுமே வலம் வர வேண்டும்.
2. ஆடை மற்றும் நடை - ஆடம்பரமற்ற ஆடைகளை அணிந்து, பெரும்பாலும் காலணிகள் அணியாமல் வெறும் கால்களால் நடக்க வேண்டும்.
3. மன நிலை - கைகளை வீசி வேகமாக ஓடாமல், வீண் கதைகள் பேசாமல், ஒரு கர்ப்பிணிப் பெண் தன் வயிற்றில் உள்ள குழந்தையைக் கவனமாகச் சுமந்து நடப்பது போல மெதுவாகவும், மனதிற்குள் "நமசிவாய" போன்ற இறை மந்திரங்களை சொல்லியபடியும் நடக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் மலைவலம் வரும் கோயில்களாக, திருவண்ணாமலை, பழநி, திருச்செங்கோடு மலைகளைக் குறிப்பிடலாம்.
திருவண்ணாமலை - இங்குள்ள அருணாச்சல மலையே சிவபெருமானாக வழிபடப்படுவதால், உலகிலேயே மிகக் கூடுதலான பக்தர்கள் கிரிவலம் வரும் தலமாக இது இருக்கிறது. இதன் சுற்றளவு 14 கிலோ மீட்டர்கள் ஆகும்.
பழநி - முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழநி மலையைச் சுற்றித் தினசரி மற்றும் தைப்பூசத் திருநாட்களில் பக்தர்கள் வலம் வருகின்றனர்.
திருச்செங்கோடு - அர்த்தநாரீஸ்வரர் வீற்றிருக்கும் இத்தலத்தில் மலை வலம் வருவது மிகவும் புண்ணியமாகக் கருதப்படுகிறது.
வைணவ வழிபாட்டில், சோளிங்கரில் யோக நரசிம்மர் வீற்றிருக்கும் இம்மலையைச் சுற்றி, கார்த்திகை மாதத்தில் பக்தர்கள் வலம் வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
இப்படி பல கிலோ மீட்டர்கள் தொடர்ந்து நடப்பதன் மூலம் நடைப்பயிற்சி நன்மை கிடைப்பதுடன், மலையிலிருந்து வீசும் அரிய மூலிகைக் காற்றினைச் சுவாசிப்பதன் வழியாக சுவாச நோய்கள் நீங்குகின்றன. இதே போன்று, இயற்கையான சூழலில் ஒரே சிந்தனையுடன் வலம் வரும் போது மன அழுத்தம் நீங்கி, ஆழ்ந்த அமைதியும் மன ஒருமைப்பாடும் உண்டாகிறது.