கேரளாவின் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஓணம் பண்டிகையின் சிறப்பம்சமாக, மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக, "அத்தப்பூ" என்ற பூக்கோலம் போடப்படுகிறது.
கேரளாவில் ஆவணி மாதம் பூக்கள் அதிகமாகப் பூத்துக் குலுங்கும் மாதமாகும். அதனால், இக்காலத்தில் வரும் ஓணத்திருநாளையும் மக்கள் பூக்களின் திருவிழாவாகக் கொண்டாடுகின்றனர்.
ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள ஆண் பிள்ளைகள் அத்தப்பூ என்ற பூவைப் பறித்துக் கொண்டு வருவர். பூக்கோலத்தில் அதைத்தான் முதலில் வைக்க வேண்டும் என்பது நம்பிக்கை. அதன் பின், தினமும் வெவ்வேறு பூக்களுடன் கோலத்தை அழகுபடுத்துவர்.
முதல் நாள் ஒரே வகையான பூக்கள் இரண்டாம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்றெனத் தொடர்ந்து பத்தாம் நாள் பத்து வகையான பூக்களால் அழகு செய்வர். பத்தாம் நாள், பூக்கோலத்தின் அளவு பெரிதாக இருக்கும்.
தும்பை, காசி, அரிப்பூ, சங்குப்பூ போன்ற பூக்களுக்கு இக்கோலத்தில் முதலிடம் தருகின்றனர்.