மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதப் பெருமான் ஆடிய திருவிளையாடல் மக்களை மிகவும் கவர்வதாகும்.
இத்திருவிளையாடல்களில் ஒன்றாக, செம்மனச் செல்விக்கான வரம்புப் பங்கினைத் தாம் அடைப்பதாக அவரிடம் பிட்டினைக் கூலியாகப் பெற்று, கூலிக்குரிய வேலையைச் செய்யாது நின்று சொக்கன் பிரம்படிபட்ட திருவிளையாடல் ஆவணி மூலத்திற்குரியதாக இருக்கிறது. மதுரையிலே இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்படும் பிட்டுத் திருவிழா என்று பெயர் பெற்றிருக்கிறது. இத்திருவிழாவின் போது, சுந்தரேசர் பொற்கூடையுடனும், பொன் மண்வெட்டியுடனும் இந்த விழா நாளில் வைகை ஆற்றிலிருந்து பக்தர் சூழ கோயிலுக்கு எழுந்தருளுவர்.
அதாவது, சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்து வைகையின் வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தியதாக மக்களிடையே நம்பிக்கை நிலவுகின்றது. பிட்டுத்தயார் செய்து உண்பர். இவ்விழாவைப் பிட்டுத்திருவிழா என்பர். பிட்டுக்கு மண் சுமந்த லீலையின்போது சுவாமி, அம்மன் மற்றும் மாணிக்கவாசகர் கோயிலிலிருந்து புறப்பட்டு, முக்கிய வீதிகளின் வழியாகச் செல்வர். பின்னர் பொன்னகரம் பகுதியில் உள்ள பிட்டுத் தோப்பு மண்டபத்தில் எழுந்தருள்வர். தொடர்ந்து சுந்தரேசுவரர் பிட்டுக்காக பிரம்படி படும் பூசைகள் நடைபெறும்.
சிவபெருமான் மாணிக்கவாசகருக்காக நரிகளைப் பரிகளாக்கித் திருவிளையாடல் புரிந்ததும் இந்த ஆவணி மூல நட்சத்திர நாளில்தான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மூல நட்சத்திரத்தின் அதி தேவதை நிருதி என்னும் அசுரன் என்றும், அதனால் அசுரச் சக்தியின் செல்வாக்கினைச் சொக்கனின் மேல் ஏற்படும் பக்தி உணர்ச்சியின் மூலம் ஒழிக்க வேண்டும் என்று சைவர்கள் கருதுவர். தெய்வப் பக்தியை வற்புறுத்துவதாகத் திருவிளையாடல் அமைதல் குறிப்பிடத்தக்கது.