இந்து சமயக் கோயில்களில் இடம் பெற்றிருக்கும் பலி பீடம் என்பது ஆன்மாக்களின் ஆணவ மலங்களை அழித்துக் பக்குவப்படுத்திப் புனிதப்படுத்துகிறது. பத்திரப்படுத்துவதால் அதற்கு பத்திரலிங்கம் என்ற பெயரும் உண்டு.
சிவாலயங்களில் நந்தி தேவருக்குப் பின்னுள்ள பலி பீடம் பிரதான பலி பீடமாகும். இவை பொதுவாக, ஆலயத்தின் பிரதான மூர்த்தியின் பாதங்களைத் தாங்கியதாக தாமரை வடிவில் இருக்கும். பலி பீடத்தின் அருகே சென்று நம்மிடமுள்ள காம, குரோத, லோப, மோக, மத, மாத்சர்யங்களைப் பலி கொடுத்ததாக உறுதி செய்து கொள்ள வேண்டும். அகங்காரம், மமகாரம் பலியிடப்பட்ட பின்னரே தெய்வ தரிசனத்தைப் பெற வேண்டும் என்ற உயர்ந்தத் தத்துவத்தை இது சுட்டிக் காட்டுகிறது.
சைவ சித்தாந்தம் கூறும் பதி, பசு, பாசத்தில் பலி பீடம் பாசத்தை உணர்த்துகிறது. மிகப் பெரிய சிவாலயங்களிலே எட்டுத்திக்கிற்கும் பலிபீடம் அமைத்து வழிபடுவதைக் காணலாம்.