விளாம்பழம்
விளாம்பழத்தின் புறஓடும் உள்ளீடான பழமும் தொடர்பில்லாமல் வெவ்வேறாக இருக்கின்றன. இரண்டிற்கும் தொடர்பற்ற இந்நிலை பழம் பழுத்த பிறகு அமைகின்றது. உடலும் உள்ளமும் பக்தியில் ஈடுபடும் போது அவைகளுக்கு எந்தப் பந்தபாசமும் தொடர்பும், கட்டும், பற்றும் இருக்கக் கூடாது. இந்தப் பற்றற்ற நிலையை உணர்த்துவது விளாம்பழம்.
மோதகம்
இதனை எருக்கலாம் கொழுக்கட்டை என்று கூறுவது வழக்கம். விநாயகருக்கு மிகவும் பிடித்தமானது. கொழுக்கட்டை மாவுக்குள் பூரணம் வைத்து மடித்துச் செய்யப்படுவது (முதம் -ஆனந்தம், சுவைத்து உண்ணும் போது ஆனந்தத்தைத் தருவது மோதகம்)
மாவு - உடல், பூரணம் - உயிர். பூரணம் பக்குவத்துடன் செய்யப்படுகின்ற உணவுக் கலவை அவித்த பயற்றம் பருப்பு + சர்க்கரை + தேங்காய்த் துருவல் இவற்றின் கலவை பூரணமான நிறைவான உயிர்முத்தி பெறக்கூடிய முழுத்தகுதியைப் பெறுகின்றது. இது மோதகம் உணர்த்தும் உட்கருத்து. மோதகம் இனிமையாகவும், சுவையாகவும் எல்லோரும் விரும்பும் பொருளாக இருப்பது போல, விநாயகரும் உயிர்களுக்கு இனியவராக இருக்கின்ற இன்னொரு தத்துவத்தையும் விளக்குகின்றது.
தேங்காய்
வழிபாட்டில் உடைக்கப்படுகின்ற தேங்காய் சில கருத்துகளைத் தெரிவிக்கின்றது. தேங்காயில் மட்டை, நார், ஓட்டுப் பகுதிகள் என்ற மூன்றும் மும்மலங்களைக் குறிக்கும். இவை நீக்கப்பட்டவுடன் நீர் - உயிர் - இறைவனது திருமுன் அர்ப்பணிக்கப்படுகின்றது என்பது ஒரு கருத்து.
தேங்காயின் வெண்மை சத்துவக் குணத்தையும், மூன்றாம் கண் ஞானக் கண்ணையும் தெரிவிக்கின்றன. அதாவது சத்துவக் குணத்துடன் பக்தியுடன் சஞ்சலம் இல்லாமல் ஞானக்கண்ணால் இறைவனைத் தரிசிக்க வேண்டும் என்ற வழிபாட்டு முறையை இது தெரிவிக்கின்றது என்பது மற்றொரு கருத்து.
சிதறு தேங்காய்
நேர்த்தியின் பொருட்டுத் தேங்காய்களைச் சிதறுகாய் அடிப்பது (சூரைக்காய் அடிப்பது) விநாயகருக்கு மட்டும் உரியது. சிதறுகாய் அகங்காரத்தின் முடிவைக் குறிக்கின்றது. சிதறுகாயைச் சிறுவர்கள் எடுப்பார்கள். இது உடைப்பவர் மறைமுகமாகச் செய்யும் தர்மமாகும். எனவே விநாயகருக்கு முன் அகங்கார மண்டை ஓடு சிதற வேண்டும். அமுதமயமான அறிவு நீரை அர்ப்பணிக்க வேண்டும் என்பன சிதறு தேங்காயின் உட்கருத்தாகும்.
வெள்ளரிப்பழம்
தோலில் வெள்ளையான வரிகளைக் கொண்ட பழம் இது. நன்றாகப் பழுத்த உடன் காம்பிலிருந்து கழன்று தரையில் விழுகின்றது. அதுபோல பற்றற்ற ஆன்மா உலகப் பிடியிலிருந்து விடுபட்டு முத்தியடைகின்றது.
அறுகம்புல்
ஆறு இடங்களில் வேர்களை ஊன்றி ஒரு கொடி போல வளர்வது அறுகு அல்லது அறுகம் புல் ஆகும். இது குளிர்ச்சியானது. கோடைக் காலத்திலும் வாடாது. இது அரிய மூலிகையாகவும் பயன்படுத்தப்படுகின்றது. அறுகம்புல்லை நீரில் இட்டுக் காய்ச்சிக் குடித்தால் காய்ச்சல் தணியும். அறுகம்புல் உடலின் எடையையும். கொழுப்பையும் குறைக்கும். நரம்புத் தளர்ச்சியை நீக்கும். இரத்தப்புற்று நோயைத் தணிக்கும், நஞ்சினை முறிக்கும். இரத்தச் சிவப்பணுக்களைப் பெருக்கும், இருமல், இதயக் கோளாறு, இரத்தச் சோகை முதலிய நோய்களுக்குக் சிறந்த மூலிகையாகும்.
"ஆல் போல் தழைத்து அறுகு போல் வேர் ஓடி' என்பது போல் உலகம் செழித்து வாழ வேண்டும் என்பதை குறிக்க அறுகம்புல் சிறந்த வழிபாட்டுப் பொருளாக விளங்குகின்றது.