வைணவர்கள் எட்டுத் திருப்பதிகளை 'ஸ்வயம் விக்தஸ்தலம்” என்று கொள்கின்றனர். சுயம்புத் தலங்களான இந்த எட்டினையும் வட இந்தியர்கள் எண் வைகுண்டங்களாகக் கருதுகின்றனர். இவற்றில் நான்கு வட இந்தியாவிலும், நான்கு தென்னிந்தியாவிலும் இருக்கின்றன.
வடநாட்டு வைகுண்டங்கள் பதரிகாசிரமம். சாளக்கிராமம், நைமிசாரணியம், புட்கரம் என்பனவாம்.
1. பதரிகாசிரமம்
ரிஷிகேசத்திலிருந்து இமயமலை மீது 170 மைல் தொலைவிலும் அரித்துவாரத்திலிருந்து 183 மைல் தொலைவிலும் உள்ளது. பதரி மரத்தின் (இலந்தை மரம்) கீழிருந்து நரனுக்குத் திருமந்திரத்தை உபதேசித்தத் தலமிது. இங்கு வீற்றிருந்த திருக்கோலத்தில் உள்ளவர் பதரி நாராயணர்; பிராட்டியாரின் திருநாபம் அரவிந்தவல்லி நாச்சியார். இங்குள்ள கடவுள் தப்தரூபி (உஷ்ணரூபி). இங்கு உஷ்ணமாய் மலையினுள்ளிருந்து வெளிவரும் நீரருவியுண்டு. பதரி நாதனைப் பெரியாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் மங்களா சாசனம் செய்துள்ளனர்.
2. சாளக்கிராமம்
நேபாளத்திலுள்ள திருப்பதி, காட்மண்டுக்கு மேற்கே கண்டகி நதியின் கரையிலுள்ளது. இங்கு நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளிய திருமாலுக்கு ஸ்ரீ மூர்த்தி என்றும் பிராட்டியாருக்கு ஸ்ரீதேவி என்றும் பெயர். பெரியாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் மங்களாசாசனம் செய்துள்ள திருப்பதி இது.
3. நைமிசாரணியம்
கிழக்கிந்திய தொடருந்துப் பாதையில் நிம்சார் எனும் தொடருந்து நிலையத்திலிருந்து ஒரு மைல் தொலைவிலுள்ளது. இங்கு முனிவர்கள் பலர் தவம் செய்துள்ளனர். இங்கு நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளிய திருமாலுக்குத் தேவராஜன் என்றும், பிராட்டியாருக்கு அரிலக்ஷ்மி, புண்டரீக வல்லி என்றும் பெயர். இப்போது சந்நிதி புலப்படவில்லை. ஆரண்யத்தையே கடவுளாக வழிபடுகின்றனர். திருமங்கையாழ்வார் மங்களா சாசனம் செய்துள்ளார்.
4. புஷ்கரம்
அஜ்மீரிலிருந்து கிழக்கே எட்டுமைல் தொலைவிலுள்ளது. இங்கு கடவுள் தீர்த்தரூபி. ஒரு பெரியகுளம் இருக்கிறது. அதற்கே பூசையும் நடக்கிறது.
தென்னாட்டு வைகுண்டங்கள் திருவேங்கடம், ஸ்ரீரங்கம், வானமாமலை, ஸ்ரீமுஷ்ணம் என்பனவாகும்.
5. திருவேங்கடம்
திருப்பதி, திருமலை என்றும் வழங்கும் இத்தலம் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மிகப் பிரபலமான பிரார்த்தனைத் தலம். நின்ற கோலத்தில் எழுந்தருளிய திருமாலுக்குத் திருவேங்கடத்தான், ஸ்ரீ நிவாசன், வெங்கடாசலபதி, பாலாஜி என்று சில பெயர்கள் இருக்கின்றன. பிராட்டியார் அலர்மேல் மங்கைத் தாயார், பத்மாவதி எனப் பெயர் பெறுவர். தொண்டரடிப் பொடியாழ்வார் நீங்கலாக, ஆழ்வார் யாவரும் மங்களாசாசனம் செய்த திருப்பதி இது.
6. ஸ்ரீரங்கம்
திருச்சிக்கு வடக்கே மூன்று மைல் தொலைவிலே அமைந்த திருவரங்கம் "கோயில்" என்று வைணவர்களால் சிறப்பிக்கப்படுகிறது. காவிரி, கொள்ளிட நதிகளின் மத்தியில் அமைந்தது. இங்கு கிடந்த திருக்கோலத்திலே அருள்புரியும் விஷ்ணுவுக்கு ரங்கநாதன், நம்பெருமாள், பெரிய பெருமாள் என்றும், பிராட்டியாருக்கு ஸ்ரீ ரங்கநாச்சியார் என்றும் பெயர். மதுரகவியாழ்வார் நீங்கலாக ஏனைய ஆழ்வார்கள் அனைவராலும் மங்களாசாசனம் செய்யப் பெற்ற சிறப்புடைய தலம். ஆழ்வார்களுடைய 247 திருப்பாசுரம் பெற்ற பெருமையுடையது.
7. வானமாமலை
இத்திருப்பதிக்குச் சிரீவரமங்கை, நாங்குனேரி, தோதாத்திரி என்றும் பெயர்களும் இருக்கின்றன. திருநெல்வேலிக்குத் தெற்கே பதினெட்டு மைல் தொலைவில் நாகர்கோயில் செல்லும் பாதையில் உள்ளது. திருமாலுக்கு வானமாமலைப் பெருமாள், தோதாத்திரி நாதன், தெய்வநாயகன் என்றும், பெரிய பிராட்டியாருக்கு சிரீவரமங்கை நாச்சியார் என்றும் பெயர்கள் வழக்கத்திலிருக்கின்றன. இங்கு வீற்றிருந்த கோலத்தில் பெருமாள் அருள்புரிகிறார். நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற திருப்பதி இது.
8. ஸ்ரீ முஷ்ணம்
சிதம்பரத்திற்கு மேற்கே இருபத்தைந்து மைல் தொலைவிலுள்ளது. இங்கு ஸ்ரீ பூவராகஸ்வாமி சந்நிதியுண்டு. மூலவர் சாளக்கிராம சிலை, வராகரூபம்; உற்சவர் யஜ்யவராக ஸ்வாமி புருஷரூபம்.