மார்கழி மாதத்தில் நிறைமதி நாளாகிய திருவாதிரையிற் கன்னிப் பெண்கள் சடங்கறிந்த முதிய பெண்களிடம் நோன்பு முறைமையை அறிந்து பணியுடை அருணோதயத்தில் நீராடிப் பூமியானது மழை வளம் பெற்றுக் குளிர்வதாக என்று அம்பாவாடல் செய்தமை பரிபாடலிலே கூறப்படுகின்றது; இவ்வம்பாவாடலை இப்பாடல் தைந்நீராடல் என்றும் கூறுகின்றது.(11.74-92)
அம்பாவாடல் தாயோடு ஆடப் பெறுதலின் பெற்ற பெயர் என்பது பொருத்தமாகத் தெரியவில்லை. அம்பாவாடல் தேவியின் பொருட்டு நிகழ்த்தப்படும் நீராட்டு என்பது பொருத்தமாகத் தெரிகின்றது.
ஸ்ரீமத் பாகவதம் தசமஸ்கந்தம் இருபத்திரண்டாம் அத்தியாயத்தில் கோபியர் மார்கழியில் கார்த்தியாயனீ பூசையாகிய விரதத்தைத் தொடங்கி யமுனா நதியிலே தோய்ந்து ஈர நுண்மணலாற் கார்த்தியாயனி தேவியின் உருவத்தைச் சமைத்துப் பூசித்துக் கண்ணனை நாயகனாக அருளும்படி வேண்டி ஒரு மாச காலம் பூசை செய்து விரதத்தை விடாமற் செய்தமை கூறப்படுகின்றது.
தைந்நீராடல் நற்றிணை (22, 80), ஐங்குறு நூறு (84), கலித்தொகை (59) என்பனவற்றிலும் கூறப்படுகின்றது.
மார்கழி இடையிற் பௌர்ணமிக்குப் பின்வரும் மாதம் மார்கழியின் பிற்பகுதியும் தையின் முற்பகுதியுமாம். இதனால் தைந்நீராடல் என்றும் மார்கழி நீராடல் என்றும் ஒரே நிகழ்ச்சி இருபெயரால் அழைக்கப்பட்டு வந்துள்ளது. இந் நோன்பினைத் திருவெம்பாவையும் திருப்பாவையும் கூறுகின்றன.
கன்னிப் பெண்கள் நடத்திய நோன்பு ஆண்பாலார், பெண்பாலார் என்று எல்லோராலும் சமயாச்சாரமாகக் கொண்டு அனுட்டிக்கப்பட்டு வருகின்றது. திருவாதிரைக்குப் பத்து நாள் முன் தொடங்கி திருவாதிரையோடு திருவெம்பாவை இருபது பாடலும் சைவர்களாலும், நாளொன்றுக்கு ஒரு பாடலாகத் திருப்பாவை முப்பதும் வைணவர்களால் மாதம் முழுவதும் ஓதப்பட்டு வருகின்றன.