இந்து சமயத்தின் பெரும் பிரிவுகளில் ஒன்றான வைணவத்தின் ஒரு கிளையாக அமைந்திருப்பது ஸ்ரீவைஷ்ணவ மரபு அல்லது ஸ்ரீவைஷ்ணவம். ஸ்ரீவைஷ்ண மரபில் ஸ்ரீ எனப்படும் இலக்குமியை, திருமாலுக்கு இணையாகக் கருதி வழிபடுகின்றனர். பக்தர்களின் கோரிக்கைகள், இலக்குமி வழியாகத் திருமாலிடம் சென்றால், எளிதில் நிறைவேறும் என்பது ஸ்ரீவைஷ்ணவர்களின் நம்பிக்கை ஆகும்.
இராமானுஜரின் தொடர்புடையவர்கள் என்பதற்கு அடையாளமாக, பஞ்ச சம்ஸ்காரம் எனும் தீட்சை எடுத்துக் கொள்ளும் ஸ்ரீவைஷ்ணவர்கள், தங்கள் முன் தோள்பட்டையில் சங்கு மற்றும் சக்கரச் சின்னங்களை முத்திரையிட்டுக் கொண்டு, உடலில் 12 இடங்களில் திருமண் காப்பு இட்டுக் கொள்வதுடன், தங்களை அடியேன் இராமானுஜ தாசன் என்று மற்றவர்களிடம் அடையாளப்படுத்திக் கொள்வதுடன், விஷ்ணுவின் ஆயிரம் பெயர்களில் ஒன்றைச் சூட்டிக் கொள்கின்றனர். பெண்கள் பஞ்ச சம்ஸ்கார தீட்சையின் போது இலக்குமியின் திருப்பெயர்களில் ஒன்றைச் சூட்டிக் கொள்கின்றனர்.
ஸ்ரீவைஷ்ணவ மரபில், சமசுகிருத வேதங்களும், ராமானுஜரால் வழங்கப்பட்ட ஸ்ரீ பாஷ்யம் மற்றும் ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களும் முக்கிய நூல்களாகப் போற்றப்படுகின்றன. இராமானுஜரின் விசிட்டாத்துவைத தத்துவத்தை ஸ்ரீவைஷ்ண மரபு கடைப்பிடிக்கிறது. இலக்குமியுடன் கூடிய திருமால் மீதான் பக்தி, இலக்குமியுடன் கூடிய திருமால் விக்கிரக ஆராதனைகள், அர்ச்சனைகள், பாகவத தருமம், சத்சங்கம், நாம ஜெபம், நாம கீர்த்தனைகள், ஹரி கதாகாலட்சேபங்கள் செய்தல் ஸ்ரீவைஷ்ணவ மரபுகள் ஆகும்.
ஸ்ரீவைஷ்ணவர்கள் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொள்வது வைகுந்தப் பிராப்தி எனும் மோட்சத்திற்கு வழிவகுக்கும் என்று கருதுகின்றனர். ஸ்ரீவைஷ்ணவ மரபு தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் மைசூர் பகுதிகளில் கடைப்பிடிக்கப்படுகிறது.
வேதாந்த தேசிகர் காலத்திற்குப் பின்னர் பெருமாள் கோயில் பூஜைகள், சுவாமி வீதி உலா மற்றும் திருவிழாக்களில், தமிழ் வேதமான நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்களை இசைப்பது தொடர்பாகக் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. ஆழ்வார்களின் பாடல்கள் பெருமாள் கோயில் கருவறைகளில் இசைக்கக்கூடாது எனக் கருதியதால், ஸ்ரீவைஷ்ணவம் வடகலை, தென்கலை என இரண்டாகப் பிரிந்தது. தென் கலைப் பிரிவு ஸ்ரீவைஷ்ணவர்கள் தமிழ் வேதமாக கருதப்படும் நாலாயிரத் திவ்யப் பிரபந்தப் பாடல்களை பெருமாள் கோயில்களில் இசைக்கும் வழக்கத்தைக் கடைப்பிடித்து வருகின்றனர். வடகலை, தென்கலை பிரிவுகளில் திருமண் காப்பிட்டுக்கொள்ளும் முறையில் வேறுபாடுகள் இருக்கின்றன.