லிங்கம் என்பது காண முடியாத ஒரு பொருளின் அடையாளமாக இருப்பது. சிவனுக்கு சிவலிங்கமும், விஷ்ணுவுக்கு சாளக்கிராமமும், அம்பிகைக்கு ஸ்ரீசக்கரமும் அடையாளமாக உள்ளன.
சிவலிங்கத்தின் சிறப்பு என்னவெனில், அது உருவமாகவும், அருவமாகவும், அருவுருவமாகவும் உள்ளது. அது எல்லாத் திசைகளையும் நோக்கியிருப்பதால் எத்திசையிலிருந்தும் வழிபடலாம். சிவலிங்கம் சிவனை மட்டும் குறிக்காமல், மும்மூர்த்தி ஸ்வரூபமாகவும் உள்ளது. அதன் நாற்கோண பீடம் பிரம்மஸ்வரூபம். இடையிலுள்ள எண் கோண ஆவுடையார் விஷ்ணு ஸ்வரூபம். மேற்பகுதியுள்ள பாணம் சிவஸ்வரூபம்.
மூலப்பிரக்ருதி என்கிற மாயையே லிங்கம். இதன் அடிப்பாகம் அபரபிந்து, அதற்குமேல் அபரநாதம், அதன்மேல் பரபிந்து இம்மூன்றுக்கும் மேல் பரநாதம். பாணம் உயர்ந்து இருப்பது நின்ற கோலம், சமமாக இருப்பது அமர்ந்த கோலம், குட்டையாக இருப்பது சயனக்கோலம்.
உலகையே சிவனாகக் காணும் பொழுது அண்ட லிங்கம் என்றும், ஆன்மாவைச் சிவனாகக் காணும் பொழுது ஆத்மலிங்கம் என்றும், உடம்பையே சிவனாகக் காணும் பொழுது பிண்டலிங்கம் என்றும் கூறுவர்.
லிங்கங்கள் ஏழு வகைப்படும். அவை;
1. தானாக உண்டானது சுயம்பு, 2. அம்பிகை வழிபட்டது தேவிகம், 3. தேவர்களால் அர்ச்சிக்கப்பட்டது தைவிகம், 4. மகரிஷிகளால் பூஜிக்கப்பட்டது ஆர்ஷம், 5. மனிதர்களால் வழிபடப்பட்டது மானுடம், 6. அசுரர்களால் பூஜிக்கப்பட்டது ராக்ஷஸம், 7. பாணாசுரனால் பூஜிக்கப்பட்டது பாணம். ரிஷிகள் ஸ்தாபித்த லிங்கம் சதுரமான ஆவுடையாரைக் கொண்டிருக்கும்.
ஸ்தூலமான கண்களுக்குப் புலப்படுவது பாஹ்யலிங்கம், சூட்சுமமான ஞானக் கண்ணிற்கு மட்டும் புலப்படுவது அந்தரலிங்கம்.
கிரியா சக்தியான அம்பாளும், ஞான சக்தியான சிவனும், இச்சா சக்தியான ஆவுடையாரும் இணைந்த உருவமே லிங்க வடிவம். ஆக லிங்கத்திருவுரு இச்சா, கிரியா மற்றும் ஞானசக்திகள் அடங்கியது.
கோயிலில் பிரதிஷ்டை செய்யப்படுவது ஸ்தாவரலிங்கம், கல்லால் ஆனது சைலஜம், ரத்னத்தால் ஆனது ரத்னஜம். பொன், வெள்ளியினால் ஆனது லோஹஜம். அரிசி, விபூதி, சந்தனம், மணல், பசுஞ்சாணம், வெண்ணெய் இவற்றால் ஆனது க்ஷணிகம் எனப்படும்.
ஆலயத்தில் கருவறை மேல் உள்ள விமானம் ஸ்தூல லிங்கம் என்றும், கருவறையில் உள்ள லிங்கம் சூட்சும லிங்கம் என்றும், பலி பீடம் மந்திர லிங்கம் என்றும் திருமந்திரம் கூறுகிறது.
ஆதிசங்கரர் சிவலோகத்திலிருந்து கொண்டு வந்த பஞ்ச லிங்கங்களில் முக்தி லிங்கத்தை கேதாரத்திலும், வரலிங்கத்தை நேபாளத்திலும், மோக்ஷலிங்கத்தை சிதம்பரத்திலும், போக லிங்கத்தை சிருங்கேரியிலும், யோக லிங்கத்தை காஞ்சியிலும் பிரதிஷ்டை செய்ததாக பிரம்மாண்ட புராணத்தில் மார்க்கண்டேய சம்ஹிதையில் உள்ள சிவரஹஸ்யம் கூறுகிறது.