வைணவத்தைக் கடைப்பிடிக்கும் பாங்கினை ஒட்டி இரண்டாக வகுப்பர்.
1. பாஹ்யம் (வெளி வைஷ்ணவம்)
அ. ரூபம் – சங்கு சக்கரம், திருமண், துளசிமாலை போன்ற அடையாளங்களைத் தரித்தல்,
ஆ. இறைவனின் திருநாமத்தைத் தன் பெயராகக் கொள்ளுதல்,
இ. அடியேன், தேவரீர் போன்ற வைஷ்ணவ பரிபாஷையை உபயோகித்தல்
2. ஆப்யந்தரம் (உள் வைஷ்ணவம்)
ஞானம், பக்தி, வைராக்கியம் ஆகிய குணங்கள் நிறைந்தவராக இருத்தல்.
மூவகை வைணவர்கள்
அ. சத்கார யோக்கியர் - வெளிப்புறத்தில் மாத்திரம் வைஷ்ணவ அனுஷ்டானங்களோடு இருப்பர்.
ஆ. சகவாச யோக்கியர் - எல்லா சத்குணங்களோடும், ஞானபக்தி நெறிமுறையோடும் எப்போதும் வாழ்பவர்கள்.
இ. சதானுபவ யோக்கியர் - இவர்களைப் பார்த்த மாத்திரத்திலேயே இவர்கள் ஞான, பக்தி வைராக்கியத்தில் திளைத்திருப்பதை உணர முடியும்.
தசவித வைஷ்ணவம்
1. அத்வேஷி – பெருமாளின் மீதும் அடியார் மீதும் வெறுப்பற்றவர்
2. அனுகூலர் – அத்வேஷியாகவும் நட்போடும் இருப்பவர்.
3. திருநாமதாரி – மேற்கண்டவற்றோடு இறைவன் திருப்பெயரைத் தம் பெயராகக் கொண்டவர்.
4. சக்ராங்கி – இறைவன் திருச்சின்னங்களைத் தன் உடலில் தாங்கியவர்.
5. மந்திரபாடி – திருவெட்டெழுத்தை முறையாக ஓதுபவர்.
6. வைஷ்ணவன் – மேற்கண்டவற்றோடு புலன் இன்பங்களை விட்டு, பரமபதம் அடைய வேண்டி ஞான, பக்தி கர்மங்களைக் கடைப்பிடிப்பவன்.
7. ஸ்ரீவைஷ்ணவன் – மேற்கண்டவற்றோடு பற்றற்று இறைவனிடத்தில் சிந்தையை நிலைநிறுத்தியவன்.
8. பிரபன்னன் – மேற்கூறிய தகுதிகளோடு இறைவனை அடைய சரணாகதியே சிறந்தது என்பதைத் தெளிந்து அதன் மூலம் இறைவனை அடையப் பாடுபடுபவன்.
9. ஏகாங்கி – மேற்கண்டவற்றோடு சரணாகதியும் கூட ஏற்றதல்ல என்று இறைவன் ஒருவனை மாத்திரமே உபாயமாகக் கொள்பவன்.
10. பரமஏகாந்தி – சரணாகதியும், இறைவனைப் பற்றும் உபாயமும்கூட ஏற்றதல்ல என்று நாராயணனுக்கு நெருக்கமாக உள்ள ஆச்சார்யனையே பற்றிப் பிடித்துக்கொள்பவன்.