மனித உடலமைப்பின்படி கோயில்கள் கட்டப்பட்டு, வழிபாட்டுக்குரிய அமைப்பாக ஏற்படுத்தப்பட்டன என்று இந்து சமய ஆகமங்கள் தெரிவிக்கின்றன.
கோவிலை மனிதனின் உடலோடு ஒப்பிடுவர். மனித உடலே திருக்கோவில், உள்ளம் கருவறை என்பர். சித்தர்களின் கூற்றுப்படி, தலை என்பது கோவிலின் கருவறை, முகம் அர்த்த மண்டபம், நெஞ்சு ஸ்நான மண்டபம், கொப்பூழ் மகா மண்டபம், கணுக்கால் ஆஸ்தான மண்டபம், பாதம் கோபுரம், புருவத்தின் மத்தியே கருவறையின் வாயில் எனக் கருதப்படுகிறது. கோபுரம் இறைவனின் திருப்பாதமாகக் கருதப்படுகிறது. அனைத்து உயிரினங்களும் இறைவனின் பாதத்தில் உறைவதனால் கோபுரதரிசனம் சிறப்பானதாகக் கூறப்படுகின்றது.
பலி பீடம் என்பது, உயிர்ப்பலி கொடுக்கப்படும் இடமல்ல. நம் மனதுள் ஒளிந்திருக்கும் காமம், ஆசை, குரோதம், லோபம், மோகம், பேராசை, மத, மாச்சர்யம் எனும் தீய குணங்களையும், கீழான மற்றும் துர்க்குணங்களையும் பலி கொடுப்பதாக நாம் உறுதி செய்து கொள்ளுமிடம். இங்குதான் நமஸ்காரம் செய்ய வேண்டும்.
கிழக்கு நோக்கிய சந்நிதானத்திலும், மேற்கு நோக்கிய சந்நிதானத்திலும் வடக்கே தலைவைத்து நமஸ்காரம் செய்ய வேண்டும். தெற்கு நோக்கிய சந்நிதானத்திலும், வடக்கு நோக்கிய சந்நிதானத்திலும் கிழக்கே தலை வைத்து நமஸ்காரம் செய்ய வேண்டும். கிழக்கிலும் வடக்கிலும் கால் நீட்டி நமஸ்காரம் செய்தல் ஆகாது.
ஆண்கள் அட்டாங்க நமஸ்காரமும் பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்தல் வேண்டும். இதனை 3, 5, 7, 9 என்ற எண்ணிக்கைகளில் செய்ய வேண்டும் என்கிறார் ஆறுமுக நாவலர்.