ஒரு முறை மகாவிஷ்ணு அவருடைய பிரியமான கருடனுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திருமால் கருடனை பார்த்து, "இந்த உலகில் எத்தனை வகையான மனிதர்கள் உள்ளனர்...?" என்று கேட்டார். அதற்குச் சற்றும் யோசிக்காமல், "இறைவனே, உலகில் மூன்று வகையான மனிதர்கள் இருக்கின்றனர்" என்றார் கருடன்.
மகாவிஷ்ணு "மூன்று விதமான மனிதர்களா? இத்தனைக் கோடி மக்களில் மூன்று விதமான மக்கள்தான் உள்ளார்களா?" என்று கேட்டார்.
அதற்குக் கருடன் சொன்னார்:
“ஆமாம். முதல் வகையினர், பறவையும் அதன் குஞ்சுகளும் போலும், இரண்டாம் வகையினர் பசுவும் அதன் கன்றையும் போலும், மூன்றாம் வகையினர் கணவனும் மனைவியும் போலும் உள்ளனர்”
உடனே மகாவிஷ்ணு, "சற்று விளக்கமாகப் புரியும்படி சொல் கருடனே..." என்றார்.
கருடன் சொல்லத் தொடங்கினார்;
"முதலில் பறவையும் அதன் குஞ்சுகளும்... பறவை முட்டையிட்டுக் குஞ்சு பொரித்துவிட்டு, அதன் குஞ்சுகளுக்காக உணவு தேடிப் போகிறது. அது சென்று வருவதற்குள் பாம்புகளும் மற்ற பறவைகளும் தனது உணவாக அந்த குஞ்சுகளையே உண்டு விடுகிறது, காணாமல் போன குஞ்சுகளுக்காகப் பறவை பெரிதாகக் கவலைப்படுவதில்லை. இருப்பதற்கு உணவு ஊட்டும். அதுபோல் குஞ்சுகளுக்கும் தன் வாயில் ஊட்டப்படும் உணவு தான் தெரியும், தன் தாய் யார்? தகப்பன் யார்? போனது வருமா? வராதா? என்று எதுவும் தெரியாது. நாளானவுடன் பறக்க முயற்சி செய்து கீழே விழுந்து மடியும், மீந்து போன பறவை வாழும் வரை வாழும். அவ்வளவு தான்...
இந்த வகை மனிதர்கள் இது போலத்தான் ஏழ்மையுடன் போராட்டம், கூலி வேலை செய்வார்கள், கிடைத்ததை உண்பார்கள், இல்லையெனில் பட்டினி கிடப்பார்கள். அவர்களுக்கு உன்னைப் பற்றியேக் கூடத் தெரியாது. வாழ்வார்கள், வாழும் வரை அவ்வளவு தான்...
இரண்டாவது பசுவும் கன்றும்... பசு ஓரிடத்தில் கட்டப்பட்டிருக்கும். அதன் கன்று ஓரிடத்தில் கட்டப்பட்டிருக்கும். கன்று பசுவைப் பார்த்து சப்தமிடும், பசு கன்றினைப் பார்த்துச் சப்தமிடும், கன்றுவுக்குத் தெரியும், தாயின் மடியிலிருக்கும் பால் அருந்தினால் தான் பசி அடங்கும் என்று. ஆனாலும், அதன் கழுத்தில் கட்டப்பட்டுள்ள ஒரு முழம் கயிறு, அதனை அதன் தாயிடம் செல்ல விடாமல் தடுக்கிறது, கன்று இழுத்து இழுத்துப் பார்த்து ஏங்கித் தவிக்கும். அது போல ஒரு சாராருக்கு உன்னைத் தெரியும், உன் வழி தெரியும், உன்னால் தான் மனித வாழ்வே நிரந்திர சுகம் பெறும் என்பதும் தெரியும். ஆனாலும், உன்னிடம் வர முடியாமல் பாசம் என்ற ஒரு முழக் கயிற்றில் மாட்டிக்கொண்டு உன்னைப் பார்த்துப் பார்த்து ஏங்கி தவிக்கும்...
மூன்றாவது கணவனும் மனைவியும்... முன் பின் அறியாத ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட கணவன், அவளிடம் முகம் கொடுத்துக் கூடப் பேசமாட்டான், அவளைப் பிடிக்காமல் ஒதுங்கி ஒதுங்கிப் போவான், ஆனால் அவளோ, அவனைப் பார்த்த நாளிலிருந்து அவன் நினைவால் இருந்து அவனுக்குப் பிடித்த வகையில் உடையுடுத்தி, அவனுக்குப் பிடித்த வகையில் உணவு சமைத்து, அவனுக்குப் பிடித்த வகையில் தன்னை அலங்கரித்துக் கொண்டு அவனைக் கவர்ந்து, தான் அவனுக்காகவே பிறந்தவள் என்பதை அவனுக்கு உணர்த்தி அவனைத் தன் பக்கம் ஈர்ப்பாள். முதலில் வெறுத்த அவன் ஓராண்டுக்குள் அவள் அன்பில் கரைந்து, அவள் செல்லும் இடமெல்லாம் செல்கிறான். அவளைப் பிரிய மறுக்கிறான், பிரசவத்திற்கு அனுப்பிவிட்டு இவனும் பின்னாலேயேச் செல்கிறான். அது போல ஒரு சாரார் உன்னைக் கண்டதில்லை, ஒரு நாள் யாராவது ஒருவர் மூலமாக உணர்த்தப்பட்டு, உன்னைக் காண முற்படும் வேளையில், உனக்குப் பிடித்த உடை, உணவு, அலங்காரம் என்று தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். முதலில் சோதிக்கும் நீ எங்களின் தூய்மையான அன்பில் கரைந்து எங்களோடு வருகிறாய், எங்களோடு உறவாடுகிறாய், முடிவில் உன்னோடு எங்களை ஐக்கியப்பட அனுமதிக்கிறாய். நாங்களும் ஆனந்தமாக உன்னோடு கலந்து விடுகிறோம் ஆக மூன்று விதமான மனிதர்கள் தான் உலகில் உள்ளனர்”