சைவ சமயப் பஞ்சமூர்த்திகளில் சண்டிகேஸ்வரரும் ஒருவர். வழக்கமாக, சிவன் கோவில்களில் சிவபெருமானின் கருவறை அமைந்திருக்கும் இடத்திற்கு இடது புறம் சண்டிகேஸ்வரர் சன்னதி இருக்கும். சிவாலயங்களில் பஞ்ச மூர்த்தி உலாவின் புறப்பாடின் பொழுது சண்டிகேஸ்வரரும் இறுதியாக உலா வருவார். சண்டிகேஸ்வரர் என்பது சிவபெருமான் அளிக்கும் ஒரு பதவியின் பெயர்.
இந்த பதவி வகிப்பவர், சிவபெருமானுக்குப் படைக்கப்படும் பொருட்கள் எல்லாம் சண்டிகேஸ்வரர் பெயரில் கணக்கு வைக்கப்படுகிறது. சிவன் சொத்து குல நாசம் என்பார்கள். அதனாலேயே சண்டிகேஸ்வரர் சந்நிதிக்கு முன்பு நின்று இரண்டு கைகளையும் தட்டிக் காண்பித்து விட்டு நான் இந்த கோவிலின் சொத்துக்கள் துரும்பு உட்பட எதையும் எடுத்துச் செல்லவில்லை என்று சொல்லி விட்டுக் கோவிலை விட்டு வெளியே வருகிறோம். சண்டிகேஸ்வரர் எப்பொழுதும் தியானத்தில் இருப்பதால் இவர் சன்னதிக்கு முன்பு நின்று கை தட்டுவது கூடாது கை தட்டினால் தியானம் கலைந்து விடும் என்பார்கள். ஆனால், சிலர் சண்டிகேஸ்வரருக்கு காது கேட்காது, கண் தெரியாது அதனால் கை தட்டுகிறோம் என்பார்கள். ஆனால், இது உண்மையில்லை.
சண்டிகேஸ்வரர் முன்பு நாம் கையைத் தட்டிக் காண்பிப்பது, நான் கோவிலில் இருந்து எதையும் எடுத்துச் செல்லவில்லை என்பதை அங்கிருக்கும் சண்டிகேஸ்வரருக்குக் காட்டவேக் கையைத் தட்டுகிறோம்.
ஒவ்வொரு யுகத்திலும் ஒருவருக்கு சண்டிகேஸ்வரர் பதவியைச் சிவபெருமான் அளித்துள்ளார்.
க்ரித யுகத்தில் பிரம்மாவிற்கு இந்த பதவி கிடைத்தது. அப்போது சண்டிகேஸ்வரருக்கு நான்முக சண்டிகேஸ்வரர் என்று பெயர். தேரேதாயுகத்தில் சண்டிகேஸ்வரருக்கு மூன்று முக சண்டிகேஸ்வரர் என்றும், துவாபர யுகத்தில் சண்டிகேஸ்வரருக்கு இரண்டு முக சண்டிகேஸ்வரர் என்றும், கலியுக சண்டிகேஸ்வரருக்கு ஒரு முக சண்டிகேஸ்வரர் என்றும் பெயர். தர்மத்திற்கு தலைவனான எமதர்மருக்குச் கூட சண்டிகேஸ்வரர் பதவி தரப்பட்டுள்ளது. திருவாரூர், திருவாஞ்சியம் தலங்களில் உள்ள சிவாலயங்களில் இருக்கும் சண்டிகேஸ்வரர் யம சண்டிகேஸ்வரர் என்று அழைக்கப்படுகின்றனர்.
சண்டிகேஸ்வரரை வணங்கினால் மன உறுதியும், ஆன்ம பலமும், ஆன்மீக பலமும் சிவபெருமானைத் தரிசித்த பலனும் கிடைக்கும். பொதுவாக, சண்டிகேஸ்வரர் தன்னுடைய ஆயுதமான மழுவுடன் காட்சி தருவார். மழு என்பது சிவ பெருமானின் ஆயுதமாகும்.
சண்டிகேஸ்வரர் குறித்து மேலும் சில குறிப்புகள்:
* சண்டிகேஸ்வரர் எப்பொழுதும் தியானத்தில் இருப்பதால் இவரை வலம் வருவது கூடாது.
* அவர் சிவாலய கணக்கராக இருப்பதால் கோவிலை விட்டு வெளியே வரும் பொழுது, இவரிடம் நான் எதையும் கோவிலில் இருந்து எடுத்து செல்லவில்லை என்பதைக் கைகளை விரித்துக் காண்பித்துச் சொல்லிவிட்டு வரவேண்டும்.
* ஆடையை இவருக்கு சமர்ப்பிக்கும் வழக்கம் இருப்பதால் ஆடையிலிருந்து நூல் இழைகளை அறுத்துப் போடுவது வழக்கம்.
* சிவபெருமானை வணங்கும் பொழுது சண்டிகேஸ்வரரையும் சேர்த்து வணங்கினால்தான் முழு பலன் கிடைக்கும்.
* ஆகமங்களின் படி இவருக்கு வாகனம் காளை.
* நான்கு கரங்களைக் கொண்டவர். சூலம் உளி அபய வரத முத்திரையுடன் இருப்பார்.
* பெரும்பாலான கோவில்களில் சிவபெருமானை வழிபட்டுவிட்டு பிரகாரம் சுற்றி வரும்பொழுது துர்கை அம்மன் சன்னதிக்கு அருகில் சண்டிகேஸ்வரர் சன்னதி இருக்கும்.