முற்காலத்தில் தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து அமிர்தம் பெறுவதற்காக திருப்பாற்கடலை கடைந்த போது, அமிர்தத்தோடு, ஆலகால விஷம், கற்பக விருட்சம், மகாலெட்சுமி, காமதேனு பசு, மற்றும் பல அதிசயங்களும் அற்புதங்களும் வெளியே வந்தன.
அப்படி அமிர்தத்தோடு பல தரப்பட்ட விஷயங்கள் வெளிவந்த வேளையில் சங்கொலி முழங்கிட விசித்திரமான, வீரியமான பல விதமான பூதக் கணங்களும் வெளியே வந்தன.
அந்தப் பூதக் கணங்களின் தலைவனாக கையில் தண்டத்தை ஆயுதமாகவும், உடல் மேல் கனத்த இரும்புச் சங்கிலிகளை ஆபரணமாகவும் அணிந்தபடி வெளியே வந்தவர்தான் சங்கிலி பூதத்தார்.
அமிர்தக் கலசத்தோடு பிறந்ததால், இவருக்கு அமிர்த பாலன் என்ற பெயரும் உண்டு.
அண்டமெல்லாம் நடுங்கச் செய்த அதி பயங்கர ஆல கால விஷத்தை உலக நன்மைக்காக விழுங்கி அனைத்துலக ஜீவராசிகளையும் அழிவில் இருந்து காப்பாற்றிய சிவபெருமான், வெளிவந்த பூத கணங்களையும், பூத கணங்களின் தலைவனான சங்கிலி பூதத்தாரையும் கைலாயத்தில் சேர்த்துக் கொண்டார்.
சிவபெருமான் ஆணையிட்ட படி, சங்கிலி பூதத்தார் மற்ற பூத கணங்களின் உதவியோடு மிகவும் சிறப்பாக கைலாய மலையைப் பாதுகாத்து வந்தார்.
ஒருமுறை சிவபெருமான் சங்கிலி பூதத்தாரிடம் மொத்தக் கைலாய நிர்வாகப் பொறுப்பையும் ஒப்படைத்து விட்டுப் பூலோக சஞ்சாரம் மேற்கொள்ள போவதாக கூறிச் சென்றார். அப்படிப் போன சிவபெருமான் நீண்ட நாட்கள் ஆகியும் திரும்பி வராத காரணத்தினால், பொறுமை இழந்த அம்மை பார்வதி, பூதத்தாரை அழைத்து, பூலோகம் சென்று சிவபெருமானை கையோடு அழைத்து வர உத்திரவிடுகிறார்.
அம்மையின் உத்தரவை மீற முடியாத பூதத்தாரும், சிவபெருமானைத் தேடிப் பூலோகம் நோக்கி கிளம்பி வருகிறார். அப்படி அவர் தேடி வரும் போது, தொலைவில் சிவபெருமானும் கைலாயத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தார். சிவபெருமான் வருவதைப் பார்த்த பூதத்தார், கைலாயம் விட்டுக் கீழே இறங்கி வருவதைச் சிவபெருமான் பார்த்தால் கொடுத்த பணியைச் செய்யாமல், இப்படி இடையில் விட்டுவிட்டு வந்து விட்டாயே எனக் கேட்பாரோ எனப் பயந்து , அங்கு கிடந்த பாம்பு விட்டு சென்ற சட்டைக்குள் புகுந்து மறைந்து கொண்டார்.
இதனை தனது ஞான திருஷ்டியில் உணர்ந்த சிவபெருமான் சங்கிலி பூதத்தாரை கைலாயத்தில் சிறப்பாக காவல் நிர்வாகம் செய்து வரும் பாதுகாப்பும், திருவருளும் பூலோக மக்களும் அடைய வேண்டும் என்பதற்காக பூலோகம் சென்று பணியாற்றக் கட்டளையிட்டார். அதன்படி பூதத்தார் பூலோகம் வந்து பர்வத மலை, திருச்செந்தூர், திருக்குறுங்குடி, திருநெல்வேலி போன்ற பல இடங்களில் மக்களுக்குத் தேவையான நற்செயல்களைச் செய்து, தனக்கென பக்தர்களை வரவழைத்து, அவர்களுக்கு அருள் பாலித்து வரத் தொடங்கினார்.
இறுதியாக, அகத்தியரின் வேண்டுகோளுக்கேற்ப திருநெல்வேலி மாவட்டம், காரையார் சொரி முத்து அய்யனார் கோவிலில் காவல் தெய்வமானார்.