கோயில்கள் மட்டுமின்றி, வீட்டில் கடவுளை வழிபடும் போதும் மணி அடித்துப் பூஜை செய்ய வேண்டுமென்று சொல்கிறார்களே... ஏனென்று தெரியுமா?
பூஜை தொடங்குவதற்கு முன்னால் மணி அடித்தால், அந்த மணியிலிருந்து வரும் சப்தத்தைக் கேட்டவுடன், வீட்டில் ஏதாவது துர்தேவதைகள் இருந்தால் அது உடனே வெளியே ஓடி விடும். துர்தேவதை போன்ற தீய சக்திகளுக்கு மணி சப்தம் கேட்டால் பயம்; அதனால், மணியடித்து அவைகளை விரட்டி விட்டுப் பூஜையைத் தொடங்குகிறோம். ஒவ்வொரு நாளும் மணி அடிக்க வேண்டுமா? என்று உங்களுக்கு சந்தேகம் எழலாம். ஓடிப்போன துர்தேவதைகள் இருட்டிய பின், மீண்டும் ஒரு வேளை வந்து விடலாம். எனவே, ஒவ்வொரு நாளும் பூஜை தொடங்குவதற்கு முன்பு மணி அடிக்க வேண்டும். துர்தேவதைகள் இருந்தால் இருந்து விட்டுப் போகட்டுமே என்று நினைக்கலாம். ஆனால், துர்தேவதைகள் இருக்குமிடத்தில் தெய்வங்கள் வரமாட்டார்கள். தினமும் மணி அடிப்பதால் அந்த மணியோசை, துர்சக்திகளை முற்றிலுமாக விரட்டியடிப்பதோடு மட்டுமின்றி, தேவர்களையும், தேவகணத்தினரையும் அழைக்கவும், பூஜையின் போது மணியடிக்க வேண்டும் என்கிறது சாத்திரங்கள்.
பூஜையின்போது, இறைவனுக்குப் படையல் வைப்பதை நைவேத்யம், நிவேதனம் என்று சொல்லி அழைக்கிறோம். நிவேதனம் என்ற சொல்லுக்கு அறிவித்தல் என்று பொருள். அந்த அறிவிப்பை நமக்கு வெளிப்படுத்துவதே மணியின் ஓசை. கிராமங்களில் கூட இந்த துர்தேவதைகள் சுற்றிக் கொண்டே இருக்கும். அப்படிக் கோயில்களில் காலை, மாலை மணியடிக்கும் போது, இந்த சப்தம் கேட்டதும் அந்தத் துர்தேவதைகள் கிராமத்தை விட்டு ஓடி விடும். இத்தகைய சிறப்பு மிக்க அந்த மணிக்கேப் பூஜை செய்யவேண்டும் என்று பூஜா முறைகள் கூறுகின்றன.
இந்தப் பூஜா மணியின் அதிதேவதை வாசுதேவர். மணியின் நாக்குக்கு அதிதேவதை சரஸ்வதி. அடித்தல் அல்லது ஒலித்தலுக்கு அதிதேவதை சூரியன். நாதத்துக்கு அதிதேவதை ஈஸ்வரன். எனவே , மணிக்கும் பூஜை செய்ய வேண்டும் என்கிறது சாத்திரம்.
காண்டா மணி பூஜைக்கான மந்திரம்:
“ஆகமார்த்தம் து தேவாநாம் கமநார்த்தம் து ரக்ஷஸாம்
காண்டாரவம் கரோம்யத்ய தேவதாஹ் வானலாஞ்ச நம:”
உள்ளத்தில் தூய்மையான உணர்வு எழுவதற்கும், தீய உணர்வுகள் வெளியேறவும் மணியை ஒலிக்கிறேன் என்பதே அப்போது சொல்லும் சுலோகத்தின் பொருள். மணி தொடர்ந்து ஒலிக்கும் இடத்தில் தீயசக்திகள் நீங்குவதோடு, அந்த இடம் முழுவதும் நல்ல சக்தி நிரம்பிவிடும் என்பது நம்பிக்கை.