சிவபெருமானின் கழுத்தில் பாம்பு இருப்பதைப் பார்க்கிறோம். இந்து சமயத்தில் பாம்பு அல்லது நாகங்கள் என்பது வழிபடுவதற்குரிய ஒன்றாகவேக் கருதப்படுகிறது. சிவபெருமான் பாற்கடலைக் கடைந்த விஷத்தைக் குடித்ததில் இருந்துதான் பாம்பு அவரின் கழுத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. தொண்டைப் பகுதியில் நீலம் பாய்ந்த சிவபெருமான் அந்தத் தருணத்திலிருந்து நீலகண்டன் என்ற பெயரும் பெற்றார். சிவபெருமானின் கழுத்திலிருக்கும் அந்தப் பாம்பு நமக்கு உணர்த்தும் குறியீடுகள் என்ன என்பதைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
1. சிவபெருமானின் கழுத்தில் பாம்பு இருப்பது பிறப்பு மற்றும் முடிவில்லா வாழ்க்கை சக்கரத்தைக் குறிக்கிறது. மேலும், கழுத்தில் அணியும் பாம்பானது நமக்குள் இருக்கும் தான் என்கிற எண்ணத்தை எப்படிக் கட்டுப்படுத்த வேண்டும் என்று குறிக்கிறது என்றும் கூறப்படுகிறது.
2. சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்த போதுதான் பாம்பு அவரின் கழுத்திற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. திருமணத்தின் போது, சிவன் பாம்பைப் பார்வதி தேவிக்கு அன்பளிப்பாக அளித்தார். பாம்புகள் அவற்றின் தலையில் விலை மதிப்பில்லாத மணிகளை சுமந்து கொண்டு அவற்றை அன்பளிப்பாகப் பார்வதிக்குக் கொண்டு சென்றது என்றும், அதன் பிறகு, அவர் பாம்பைக் கழுத்தில் அணிந்து கொண்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
3. சிவபெருமானுக்குப் பசுபதிநாத் என்னும் பெயரும் உள்ளது. அதன் பொருள், அனைத்து உயிர்களுக்கும் ஆன கடவுள் மற்றும் அனைத்து விலங்குகளையும் கட்டுப்படுத்துபவர் என்றும் பொருளாகும். பொதுவாகவே, மனிதர்களுக்குப் பாம்பு என்றாலே பயம். அதனால்தான் சிவன் பாம்பைத் தன் கழுத்தில் அணிந்து உள்ளதாக கூறப்படுகிறது.
4. சிவன் கழுத்தில் பாம்பை அணிகலனாக அணிந்துள்ளார். பாம்பு பயம் மற்றும் மரணத்தை வழங்கக் கூடியது. இதன் மூலம் சிவன் பயம் மற்றும் மரணத்தை அடக்கித் தன் கழுத்தில் அணிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
5. சிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு மொத்தம் மூன்று சுற்றுகளாக இருக்கிறது. இந்த மூன்று சுற்றுகளும் நிகழ்காலம், கடந்தகாலம் மற்றும் எதிர்காலத்தை உணர்த்துகிறது. இதன் மூலம் சிவபெருமான் முக்காலத்தையும் உணர்ந்து அதனைக் கட்டுப்படுத்துபவர் என்று அறிந்து கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.