தமிழ்க்கடவுள் முருகப் பெருமானை நாம் ‘சுப்ரமண்யன்’ என்று ஏன் அழைக்கின்றோம் தெரியுமா...?
சுப்ரமண்யன் என்ற பெயரில் ‘பிரமண்யன்’ என்றால் பிரம்மத்தை உணர்ந்த பரம ஞானத்தைப் பெற்றவன் என்று பொருள். அதில் உள்ள ‘சு’ என்பது சிறப்பிக்கும் ‘அதி உன்னதமான’ என்ற அடைமொழி. அதாவது அதி உன்னதமான பரம ஞானத்தை பெற்றவன் என்பது தான் ‘சுப்ரமண்யன்’ என்பதன் பொருள். அதாவது, ஞானத்தின் உயர்நிலையான பிரம்மண்யத்தின் அதி உயர்நிலையை அடைந்தவன் என்பது பொருள். அதனால்தான் முருகனை ஞானக் கடவுள் என்கிறோம். அவனை விட, ஞானமும், அழகும் வேறு யாருக்கும் இல்லை என்பதால்தான் அழகென்றால் அதன் பெயர் முருகன் என உரைத்தனர்.
கைலாயத்தில் தேவலோக ஞானப்பழத்தை பெறமுடியவில்லை என்ற கோபத்தில் ஆண்டிக்கோலம் பூண்டு முருகன் பழனி மலைக்குச் சென்று விட்டதாக ஒரு புராணக் கதை உண்டு. ஆனால், அதன் பின் உள்ள மிக முக்கிய ஞானத்தை பெற ஏற்ற கோலம் என்ற உண்மை கதை என்ன தெரியுமா?
நாரதர் கொண்டு வந்த ஞானப்பழத்தை பெற வேண்டுமானால், ஈசன் படைத்த ஏழு உலகை முதலில் சுற்றி வருபவருக்குத்தான் என்று கூறியதும் முருகப்பெருமான் தன் வாகனமான மயிலேறி வேகமாகப் புறப்பட்டார்.
ஆனால் முருகனின் அண்ணன் விநாயகரோ, அந்த ஏழு உலகத்தையும் தன்னில் அடக்கி அருள் பாலிப்பவர்கள் சிவசக்தி என கூறி, அவர்களை வலம் வந்து ஞானப்பழத்தை பெற்றார்.
உலகை சுற்றி வந்த முருகன், அண்ணனின் கையில் ஞானப்பழம் இருப்பதை கண்டு அது எப்படி அவர் கையில் சென்றது எனத் தெரிந்து கொண்டார்.
பிள்ளையார் பிரணவ வடிவம். அவர் ஞானஸ்வரூபன். அந்த ஞானம் அவரின் கடும் தவத்தினால் கிடைத்தது. அதனால்தான் இந்த ஏழு உலகமும் சிவபார்வதியின் வடிவம் என்பதை உணர்ந்தார்.
அண்ணனைப் போலத் தானும் அந்த ஞானம் பெற வேண்டும், அதாவது, பிரம்மண்யனான தாம் சுப்ரமண்யனாக விரும்பினான்.
அதன் விளைவாகத்தான் தவக்கோலம் ஏற்று பழநி ஆண்டியாக பழனி மலையில் ஆண்டிக்கோலம் ஏற்றார்.
நெற்றிக் கண்ணில் உதித்த குமரன் ஞனக்கடலாக ஞானத்தைப் பெறவும், அதைக் காக்கவும் எடுத்துக் கொண்ட கோலம்தான் பழனி ஆண்டிக்கோலம்.
அவர் பழம் கிடைக்க வில்லை என்ற ஆதங்கத்தில் ஆண்டியாகவில்லை. அந்த ஞானத்தைப் பெற்று மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும், ஞானத்தை வழங்கவும் ஏற்ற கோலம்.
தன்னை வணங்கக் கூடியவர்களுக்கும், அந்த ஞானத்தை வழங்கக் கூடியவர் முருகன். அசுரர்களை அழிக்க மட்டும் உருவான உருவமல்ல அவர். தர்மத்தை காக்கவும், ஞானத்தை கொடுக்கவும் உருவானவர்.