ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் ஏற்ற பின் ராமரைப் பார்த்து ஆசி கூற அகத்திய மாமுனிவர் அயோத்திக்கு வருகை புரிந்தார்.
அகத்தியர் சபையில் அமர்ந்ததும் ராவண வதம் பற்றி அனைவரும் விவாதிக்கலாயினர்.
அப்பொழுது, அகத்தியர் சபையினரைப் பார்த்து ராவண, கும்பகர்ண வதத்தை விட லட்சுமணன் ராவணன் மகன் மேகநாதனை வதைத்ததே மாபெரும் வீரச் செயல் என்றார் அகஸ்தியர். அதைக் கேட்டு அனைவரும் ஆச்சிரியமாக அகஸ்தியரைப் பார்க்க, ஸ்ரீராமர் ஏதும் அறியாதவர் போல் ஸ்வாமி எதை வைத்து அப்படி கூறினீர்கள்? மேகநாதன் அவ்வளவு சக்தியுள்ளவனா? என்று கேட்க, அகஸ்தியர், ராமா எல்லாம் அறிந்தவன் நீ. ஆனால், ஏதும் அறியாதவன் போல் லட்சுமணின் பெருமையை என் வாயாலேக் கூறவேண்டும் என்றுதானே இப்படி அறியாதவன் போல் கேட்கிறாய்... சரி நானேக் கூறுகிறேன்.
சபையோர்களே ராவணன் மகன் மேகநாதன் தேவலோக அரசன் இந்திரனுடன் போர்புரிந்து, அவனை வென்று சிறையில் அடைத்து வைத்தது யாவரும் அறிந்ததே. நான்முகக் கடவுளான பிரம்மா இந்திரனை விடுவிக்க மேகநாதனிடம் கோரிக்கை வைக்க, மேகநாதன் இந்திரனை விடுவிக்க வேண்டுமென்றால், தாங்கள் எனக்கு மூன்று அரிய வரங்கள் தரவேண்டும் என நிபந்தனை வைத்தான். அவை;
1. பதினான்கு ஆண்டுகள் உணவு உண்ணாதவனும்
2. அதே பதினான்கு ஆண்டுகள் ஒரு நொடி கூட உறங்காது இருப்பவனும்
3. அதே பதினான்கு ஆண்டுகள் எந்த ஒரு பெண் முகத்தையும் ஏறெடுத்து பார்க்காது இருப்பவன் எவனோ, அவனால் மட்டுமே எனக்கு மரணம் நிகழவேண்டும்
என்று பிரம்மாவிடம் மூன்று அரிய வரங்களைப் பெற்று இந்திரனை விடுவித்தான்
அதனால் மேகநாதனை யாவரும் இந்திரஜித் என்று அழைத்தனர். இப்படிப்பட்ட மேகநாதனை வதம் செய்த பெருமை லட்சுமணனையேச் சேரும் என்று கூறி முடிக்க, ராமர், லக்ஷ்மணன் என்னுடன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் இருந்த போது, அவன் எந்த ஒரு மாதையும் (பெண்ணையும்) ஏறெடுத்தும் பார்த்ததில்லை என்பதை நான் அறிவேன். ஆனால், உணவும் உறக்கமும் இல்லாமல் எப்படி இருந்திருப்பான்? என்று கேள்வி எழுப்ப, அகஸ்தியர் அனைத்தும் அறிந்து வைத்துக் கொண்டேக் கேட்கிறாயே, சரி சற்றுப் பொறு, உன் கேள்விக்கான விடையை லட்சுமணனிடமேக் கேட்டுத் தெரிந்து கொள்வோம் என்று கூறி லட்சுமணனை அழைத்து வர ஏற்பாடு செய்தார்.
சபைக்கு வந்த லட்சுமணன், அண்ணன் ராமரையும், குரு அகத்தியரையும், சபையோரையும் வணங்கிய பின், ராமர் தன் சந்தேகத்தைக் கேட்டார். “லட்சுமணா என்னோடு வனவாசம் இருந்த போது, எந்தப் பெண்ணையும் ஏறெடுத்து பார்க்காமையும், உணவு உண்ணாமையும், உறக்கம் கொள்ளாமையும் இருந்தாய் என அகத்தியர் கூறுகிறாரே எப்படி என இச்சபையில் விளக்க முடியுமா?
அண்ணா, நினைவு இருக்கலாம் ரிஷிமுக பர்வதத்தில் மாதா சீதையை தேடி அலைந்த போது மாதாவால் வீசப்பட்ட அணிகலன்களை சுக்ரீவன் நம்மிடம் காட்டும் போது, அன்னையின் பாத அணிகலன்களை தவிர, வேறு எதுவும் என்னால் அடையாளம் காண முடியவில்லை. காரணம், அன்னையின் பாதத்தை மட்டுமேப் பார்த்து நான் தினமும் வணங்குவேன். அதனால் பாத அணிகலன்களை மட்டுமே என்னால் அடையாளம் காணமுடிந்தது.
அடுத்து, வனவாசத்தின் போது, நீங்களும் மாதாவும் இரவில் உறங்கும் போது, நான் காவல் புரியும் நேரம் நித்ராதேவி என்னை ஆட்கொள்ள வரும் நேரம், நான் நித்ராதேவியிடம் ஒரு வரம் கேட்டேன் அம்மா, என் அண்ணன் ராமரையும், என் அண்ணியான மாதா சீதா தேவியையும் பாதுகாக்கவே நானும் அண்ணனோடு வனவாசம் வந்துள்ளேன். அதனால் எங்கள் வனவாசம் முடியும் வரை என்னை நீ ஆட்கொள்ளவேக் கூடாது. இந்த வனவாசம் முடியும் வரை எனக்கு உறக்கமே வரக்கூடாது என வேண்டிக் கொண்டேன். நித்ராதேவியும் என் வேண்டுதலுக்குச் செவி சாய்த்து, என்னைப் பதினான்கு ஆண்டுகள் ஆட்கொள்ள மாட்டேன் என வரமளித்தாள். அதனால் எனக்கு உறக்கம் என்பதே இல்லாமல் இருந்தது.
நம் குருநாதராகிய விஸ்வாமித்திரர் நம் உடல் சோர்வு அடையாமல் இருக்கவும், பசியே எடுக்காமல் இருக்கவும் பலா, அதிபலா என்னும் மிகவும் சக்தி வாய்ந்த காயத்திரி மந்திரத்தை நம் இருவருக்கும் அவரது யாகம் வெற்றி பெறக் காவல் புரிந்ததற்காக உபதேசித்தார் இல்லையா, அந்த பலா, அதிபலா மந்திரத்தை தினமும் உச்சரித்தே எனக்குப் பசி ஏற்படாமலும், உடல் சோர்வு அடையாமலும் பார்த்துக் கொண்டேன் என்று கூற சபையினர் எல்லோருமே லட்சுமணனை ஆச்சிரியமாக பார்த்தனர்.
லட்சுமணின் ராம பக்தியை நினைத்து, ராமர் அரியணையை விட்டு இறங்கி வந்து லட்சுமணனைக் கண்ணீருடன் ஆரத்தழுவிக் கொண்டார்.