சிற்ப இலக்கணங்கள், இறை உருவ இலக்கணங்கள் பற்றி கருநாடகப் பகுதியில் கி.பி 19 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூலின் பெயர் ஸ்ரீதத்துவநிதி. பத்தொன்பதாம் நூற்றாண்டில், மைசூரை ஆண்ட, மூன்றாம் கிருஷ்ணராஜரே இந்நூலின் ஆசிரியராகச் சொல்லப்படுகிறார். கலையார்வம் மிக்க இம்மன்னர் எழுதியதாக ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் சொல்லப்படுகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீதத்துவநிதியானது, சிவன், திருமால், முருகன், பிள்ளையார், பார்வதி, ஏனைய தேவியர், நவக்கிரகம் முதலான பல தெய்வங்களின் உருவ இலக்கணங்களை வரையறுக்கின்றது. இதன் ஒவ்வொரு பாகமும் நிதி (செல்வம்) என்றேச் சொல்லப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது. ஸ்ரீதத்துவநிதியின் ஒன்பது பாகங்களும் வருமாறு;
1. சக்தி நிதி
2. விஷ்ணு நிதி
3. சிவ நிதி
4. பிரம்ம நிதி
5. கிரக நிதி
6. வைஷ்ணவ நிதி
7. சைவ நிதி
8. ஆகம நிதி
9. கௌதுக நிதி
மைசூர் பல்கலைக்கழகத்தில், ஸ்ரீதத்துவநிதி எழுதப்பட்ட மூல ஏட்டுச் சுவடியானது இன்றும் வைக்கப்பட்டிருக்கின்றது. அதன் இன்னொரு பிரதி, தற்போதைய மைசூர் அரச குடும்ப வாரிசு ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் வசம் உள்ளது. இதன் திருத்தப்படாத தேவநாகரி வரிவடிவம் மாத்திரம், ஒரு நூற்றாண்டுக்கு முன்பு மும்பையில் பதிப்பிக்கப்பட்டது. முதல் மூன்று நிதிகளும் அண்மையில் முழுமையாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளதுடன், இறுதி கௌதுக நிதியானது, 1996 ஆம் ஆண்டில் ஒரு ஹதயோக நூலொன்றில் வெளியானது. கௌதுக நிதியில் குறிப்பிடப்பட்டுள்ள 122 யோக ஆசன முறைகள் மிகப்பழைய ஆசனக்குறிப்புகள் என்ற வகையில், யோக உலகில் அதிகம் கொண்டாடப்படுகின்றன.