கோயில் பண்டாரம் சோழ மன்னர் ஆட்சியில் வருவாய் நிறைந்த சைவ, வைணவக் கோயில்களில் அமைக்கப்பட்டிருந்தது. பண்டாரத்தில் கோயில் வருவாய்களான நெல் முதலான தானியங்களும், பொன்னும் பொருளும் அணிகலன்களும் பாதுகாக்கப் பெற்றன. கோயிலுக்குரிய பொற்காசுகள், இரத்தின அணிகலன்கள், திருமேனிகள், பொன், வெள்ளி, செம்பு, பித்தளை ஆகிய உலேகங்களினால் செய்யப்பட்ட வழிபாட்டுக்குரிய பொருள்களும் காக்கப்பட்டன. பண்டாரக் காப்பாளன் பண்டாரி என்று அழைக்கப்பெற்றான்.
ஸ்ரீபண்டாரம், தேவர் பண்டாரம், உடையார் பண்டாரம், கோயில் பண்டாரம் என்ற வகையில் கல்வெட்டுகள் குறிக்கின்றன. ஒரு வரையறைக்குரிய நிலபுல மூலதனங்களை நேரில் கண்காணிக்கும் அளவில் இருப்பதாயின் கோயிலேலேயே மூலப் பண்டாரம் இருக்கும். கோயிலுக்குரிய நிலபுலன்கள் மிகுதியாக உள்ளூரிலும், சார்ந்த ஊர்களிலும் இருக்குமானால் வெளியூர் பண்டாரமும், கோயிலுக்குரிய முறையில் இயங்கும். இறையிலி நிலங்களுடன் ஊர் வருவாய்களும் அமையுமானால் கோயிலுக்குரியதாக நெல் அளக்கும் ஊர்களில் ஏற்புடைய ஊரில் நாட்டுப் பண்டாரம் அமைக்கப்பெற்று, அவ்வப்போது நெல், பொன் வருவாய்களை வசூலிக்கும் செயலும் நிகழும். நாட்டுப்பண்டாரம் கோயிலுள்ள ஊரிலும் அமைக்கப்பெறும்.