* காமமும் போகமும் சில நிமிடங்கள் இன்பமளிக்கக் கூடியவை; நீண்ட காலம் துன்பமளிக்கக் கூடியவை. இவற்றில் துன்பம் அதிகம், இன்பம் சிறிது, இவை முக்திக்கு எதிரியும், தீமைக்கு இருப்பிடமுமாகும்.
* எப்படி வாழை மரத்தின் பட்டையில் எந்தச் சிறப்பும் இல்லையோ, அது போலவே புலனின்பங்களில் சுகம் என்பதே இல்லை என்பது நன்கு ஆராய்ந்த பின்னர் காணும் முடிவாகும். அதில் காணும் இன்பம் வெறும் கற்பனைதான்.
* அரசர்களுக்கு அரசனாக இருப்பவனும், தேவர்களின் அரசனான இந்திரனும் அனுபவிக்கும் சிற்றின்பமும் துன்பமேயாகும். அது ஒரு சில நிமிட இன்பமாகும். அதன் விளைவு மிக மிகக் கொடியது. எனவே அதிலிருந்து விலகியிருப்பதே மிகவும் சிறந்த தன்மையைத் தரும்.
* சிரங்கு வந்தவன் சொறிந்து கொள்வதில் இன்பம் காண்பது போல, காம வெறியன் சிற்றின்பத்தில் உண்டாகும் துன்பத்தையும் இன்பமாக மதிக்கிறான் என்னே மதியீனம்!
* சளியில் சிக்கித் தவிக்கும் ஈயைப் போல ஆன்மாவை மாசுப்படுத்தும் சிற்றின்பத்தில் இன்பம் காண்பதாலும், நன்மை தீமைகளை அறியாததாலும், அறிவிலியும் மூடனுமாகிய ஜீவன் கர்மங்களால் பந்தப்பட்டு துன்பப்படுகிறது.
* ஜீவன் பிறப்பு, இறப்பு, முதுமை ஆகியவற்றால் உண்டாகும் துன்பத்தைக் காண்கிறது. அதைப் பற்றிச் சிந்திக்கவும் செய்கிறது. ஆனால் ஏனோ அதை வெறுப்பதில்லை. காரணம், சிற்றின்ப மாயை போட்ட சிக்கலான முடிச்சு, எளிதில் பிரித்தெடுக்க முடியாதது.
* உலக வாழ்க்கையில் சிக்கித் தவிக்கும் ஜீவன்களுக்கு விருப்பு - வெறுப்பாகிய எண்ணங்கள் தோன்றுகின்றன. அவைகளால் கர்ம பந்தங்கள் ஏற்படுகின்றன. அந்தக் கர்மங்களின் காரணமாக ஜீவன் பல பிறவிகளில் சுற்றி அலைகிறது. ஜீவன் பிறக்கிறது; பிறந்த பின்பு உடலையும் பெறுகிறது. அந்த உடலில் புலன்கள் தோன்றுகின்றன. ஜீவன் அவைகளைக் கொண்டு திரும்பவும் சிற்றின்ப வேட்கையில் ஈடுபடுகிறது. அதனால் திரும்பவும் விருப்பு - வெறுப்பாகிய எண்ணங்கள் உதிக்கின்றன. இப்படியே ஜீவன் அநாதி காலமாக வாழ்க்கைக் கடலில் சுற்றிச் சுற்றி அலை கிறது. நற்காட்சி (ஞானம்) பெறும் வரையில் ஜீவன் இதே நிலையில் அலைந்து கொண்டே இருக்கும். ஆனால் நற்காட்சி பெற்ற ஜீவன் விரை வில் இத்தகைய துன்பத்திலிருந்து விடுபடுகிறது.
* பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகிய அனைத்தும் துக்கமயமானதுதான். இவற்றைக் கொண்ட உலக வாழ்க்கையும் துன்பம் நிறைந்ததுதான். ஜீவன் நீண்ட நெடுங்காலமாக இத்தகைய துன்பத்தில் சிக்கித்தவித்துக்கொண்டிருக்கிறது.
* மனைவி, மக்கள், உற்றார், உறவினர் ஆகிய எவராலும் பிறவித் துன்பத்தைப் போக்க இயலாது. ஏனென்றால் வினைகள் ஜீவனைத் தொடர்கின்றன. எனவே ஜீவன் அந்த வினைகளுக்கேற்ப தன்னந்தனியாகவே அந்தத் துன்பங்களை அனுபவிக்கிறது.