பௌத்த சமயத்தினர் புத்தம், தர்மம், சங்கம் என்று மூன்று நிலைகளில் சரணமடைவதை, ‘திரிசரணம்’ என்று குறிப்பிடுகின்றனர். இதனை மும்மணிகள், மூன்று இரத்தினங்கள் என்றும் சொல்வதுண்டு.
திரிசரணத்திடம் சரணம் அடைதல், பௌத்த சமயச் சடங்குகளில் மிகவும் முக்கியப் பங்கு வகிக்கிறது. மஜ்ஜிம நிகாயத்தில் குழந்தைப் பருவத்தில் உள்ளவர்களின் சார்பாகவும், பிறக்காத குழந்தைகளின் சார்பாகவும் கூட பிறர் சரணமடையலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மும்மணிகளிடம் சரணம் அடைதல் ஒருவரை அதிகாரப்பூர்வமாக பௌத்தராக ஆக்குவதாக பொதுவாக நம்பப்படுகிறது.
தேரவாத நாடுகிளில், புத்த பிட்சுகளும் இதை அவ்வப்போது உச்சாடனம் செய்வர்.
* புத்தம் சரணம் கச்சாமி (நான் புத்தரிடம் சரணம் அடைகிறேன்)
* தர்மம் சரணம் கச்சாமி (நான் தர்மத்திடம் சரணம் அடைகிறேன்)
* சங்கம் சரணம் கச்சாமி (நான் சங்கத்திடம் சரணம் அடைகிறேன்)
இந்தத் திரிசரணத்தின் சீன மற்றும் ஜப்பானிய மகாயன பதிப்பு, தேரவாத பதிப்பில் இருந்து சிறிதளவே வேறுபடுகிறது.
* அனைத்து உயிர்களும் பெரும் வழியைப் பின்பற்றி, பெரும் உறுதிமொழியை எடுப்பதற்காக, நான் புத்தரிடன் சரணம் அடைகிறேன்.
* அனைத்து உயிர்களும், சூத்திர பிடகத்தில் மூழ்கி ஞானத்தைப் பெறுவதற்காக, நான் தர்மத்திடம் சரணம் அடைகிறேன்.
* அனைத்து உயிர்களும் சங்கத்தினை ஒற்றுமையுடன் தடைகள் இன்றி இட்டுச்செல்ல, நான் சங்கத்திடம் சரணம் அடைகிறேன்.
இந்தத் திரிசரணம், திபெத்திய பௌத்தத்தில்;
* நான் புத்தம்,தர்மம், சங்கம் ஆகியவற்றில் சரணம் அடைகிறேன்.
- நான் போதிநிலை அடையும் வரையில்
- பல தானங்கள், மற்றும் பாராமிதங்களால நான் சேர்த்து வைத்துள்ளப் புண்ணியங்களின் படி
- அனைத்து உயிர்களின் நன்மைக்காக நான் போதிநிலை அடைவேனாக
என்று இருக்கிறது.
பௌத்தத்தில் திரிரத்தினங்களிடம் சரணம் அடைதல் மிகவும் முக்கியத்துவம் வாயந்ததாக கருதப்படுகிறது. இந்த வழக்கம் மனதில் புத்தம், தர்மம் மற்றம் சங்கத்தின் பிரதிபிம்பமாக கருதப்படுகிறது. இந்தக் குணங்கள் மஹாபரிநிப்பான சூத்திரத்தில் தர்மத்தின் பளிங்கு என அழைக்கப்படுகிறது. இது பளிங்கு போன்ற மனத்தினை அடைய உதவுவதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.