பௌத்த சமய நடைமுறையில், போதிசத்துவர் என்ற சொல்லுக்குப் 'போதிநிலையில் வாழ்பவர்' என நேரடியாகப் பொருள் கொள்ளலாம். ஒவ்வொரு பௌத்த பிரிவும் போதிசத்துவர் என்பதை வெவ்வேறு விதமாக விளக்குகின்றன. கௌதம புத்தர் போதிநிலையை அடைவதற்கு முற்பட்ட காலத்தில், தன்னை போதுசத்துவர் என்றே அழைத்துக் கொண்டார். மஹாயானத்தைப் பொறுத்த வரை போதிசத்துவர்கள் என அழைக்கப்படுபவர்கள், மற்றவர்களுடைய நலனுக்குக்காவும் அவர்கள் வீடுபேறு அடைய உதவுவதற்காகவும் தாம் 'புத்த' நிலை அடைவதையே தாமதப்படுத்துபவர்கள். மகாயானம் அனைவரையும் போதிசத்துவர்களாக ஆவதற்கும் போதிசத்துவ உறுதிமொழிகள் எடுப்பதற்கும் ஊக்கம் அளிக்கிறது. இந்த உறுதிமொழிகளால் மற்றவர்கள் போதி நிலையை அடையத் தங்களை அர்ப்பணிக்கின்றனர்.
மஹாயான மரபு வழியில், ஒரு போதிசத்துவர் புத்த நிலையை அடைவதற்குப் 'பத்துப் பூமிகளை'க் கடக்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு பூமியும் ஒவ்வொரு நிலையைக் குறிக்கக்கூடியது. இந்தப் பத்து பூமிகளின் விவரங்கள் ஒவ்வொரு பிரிவிலும் சிறு மாற்றங்களுடன் காணப்படலாம்.
1. பாரமுதிதம்
போதி நிலைக்கு அருகில் உள்ளவர்கள், தான் மற்றவர்களுக்காகச் செய்யப் போகும் நன்மை குறிந்துப் பேரானந்தம் அடைவர். இந்தப் பூமியில் போதிசத்துவர்கள் அனைத்து ஒழுக்கங்களையும் (பாரமிதம்) பின்பற்றுவார்கள். இந்தப் பூமியில் வலியுறுத்தப்படுவது தானம்.
2. விமலம்
இரண்டாவது பூமியை அடைந்தவுடன், போதிசத்துவர்கள் தீய ஒழுக்கத்திலிருந்து விடுபடுகின்றனர். எனவேதான் இந்தப் பூமி விமலம் (அப்பழுக்கற்ற) என்று அழைக்கப்படுகிறது. இங்கு வலியுறுத்தப்படுவது ஒழுக்க சீலம்.
3. பிரபாகரி
மூன்றாவது பூமிக்கு 'பிரபாகரி (ஒளி உண்டாக்கக்கூடய)' என்று பெயர். ஏனெனில் இந்தப் பூமியை அடைந்த போதிசத்துவர்களிடமிருநது தர்மத்தின் ஒளி மற்றவர்களுக்காக வெளிப்படுகிறது. இங்கு வலியுறுத்தப்படுவது பொறுமை.
4. அர்ச்சிஸ்மதி
இந்தப் பூமியை அர்ச்சிஸ்மதி (தீப்பிழம்பான) என அழைபபர். ஏனெனில், இங்கு வீசக்கூடிய ஞானத்தீயின் கதிர்கள் அனைத்து உலக ஆசைகளையும் போதிநிலைக்கு எதிரானவற்றையும் எரித்து விடுகிறது. இந்தப் பூமியில் வலியுறுத்தப்படுவது வீர்யம்.
5. சுதுர்ஜய
இந்நிலையை எய்திய போதிசத்துவர் மற்ற உயிர்கள் ஞானம் கிடைப்பதற்குப் பிரதிபலன் எதிர்பார்க்காமல் கஷ்டப்படுகிறார். இங்கு வலியுறுத்தப்படுவது தியானம்.
6. அபிமுகி
இங்கு போதிசத்துவர் முழுமையாக சம்சாரத்திலும் இல்லாமல் முழுமையாக நிர்வாணத்திலும் இல்லாமல், இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் இருப்பார். இந்தப் பூமியில்தான் போதி ஞானம் கிடைக்கத் துவங்குகிறது. இங்கு வலியுறுத்தப்படுவது பிரக்ஞை.
7. தூரங்காமம்
பௌத்தத்தின் இருயானங்களுக்கும் (மஹாயானம், ஹீனயானம்) அப்பாற்பட்டு நிற்கும் நிலை. இங்கு வலியுறுத்தப்படுவது உபயம்.
8. அசலம்
இங்கு ஒருவர் தீர்க்கமாக மாத்தியமக கொள்கையைப் பின்பற்றுவர். அதனால்தான் இது அசலம் (அசைக்க இயலாத) என்று அழைக்கப்படுகிறது. இங்கிருந்து, மறுபிறவி எடுக்கும் உலகத்தைத் தேர்வு செய்யும் நிலையை ஒருவர் அடைகிறார். இங்கு வலியுறுத்தப்படுவது ஆர்வம்.
9. சாதுமதி
இங்கு ஒருவர் அனைவருக்கும் தர்மத்தை வரையறை இல்லாமல் போதிப்பர். இங்கு வலியுறுத்தப்படுவது சக்தி.
10. தர்மமேகம்
மழை மேகம் எவ்வாறு பாகுபாடின்றி அனைவருக்கு உதவுகின்றதோ அதுபோல் இந்நிலையை அடைந்த போதிசத்துவரும் அனைவருக்கும் பாகுபாடின்றி உதவுகிறார். இங்கு வலியுறுத்தப்படுவது ஆதி ஞானம்.
மஹாயான பௌத்தத்தின் படி, இந்தப் பத்துப் பூமிகளைக் கடந்தவுடன் ஒரு போதிசத்துவர் புத்த நிலையை அடைகிறார்.