இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கதை
சிறுகதை

அப்பா (ஏ) மாற்றி விட்டார்

நெய்வாசல் நெடுஞ்செழியன்


சொன்னது போலவே அப்பா அம்மாவை மாற்றிக்காட்டி விட்டார். அவர் உடல் பக்கத்தில் உட்கார்ந்து அழும் அம்மாவை பார்க்கும் போது அப்படித்தான் சொல்லத் தோன்றியது. பாட்டி, பெரியம்மா, மாமா, அத்தை, சித்தப்பா என்று பலர் மாறிமாறி வந்து அமைதிப் படுத்தியும் கூட அவள் அழுகையை நிறுத்தவில்லை.

அப்பாவை கடைசியாகப் பார்க்க வந்த கிராமத்து உறவுப் பெண்களில் சிலர் மார்பில் அடித்துக் கொண்டு அழ அம்மாவும் அப்படியே செய்தாள். இத்தனைக்கும் அவள் இப்படிப்பட்ட விஷயங்களைப் பழகாதவள். ஏன் விரும்பாதவளும் கூட . அவள் பக்கத்து நெருங்கிய உறவினர் ஒருவரின் இறப்புக்குச் சென்றபோது கூட அழவேயில்லை.

அப்பாவிற்கு அஞ்சலி செலுத்த அவரின் நெருங்கிய நண்பர், நீண்டகாலம் தொடர்புடைய ராகவன் வருகிறார். பக்கத்தில் அவரது மூத்தமகன் மாலையைப் பிரித்துக் கொண்டே வர மெதுவாக நடந்து வந்தவர் படியேறி உள்ளே வந்தவுடன் வேகம் கூட்டினார். ரேழியைத் தாண்டியவுடன் குமுறலை அடக்க முடியாமல் வாய்விட்டுக் கதறியவாறே ஓடிச்சென்று அப்பாவின் உடலைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுகிறார்.

“எத்தனைக் கஷ்டத்தை எதிர் கொண்டாலும் ஜெயிச்சுக் காட்டாமல் போக மாட்டேன்னு சொன்னியே, அந்த சாவைத் தள்ளிப் போட முடியாமப் போயிட்டியே...”

இராகவன் மாமாவின் மனைவி மனோன்மணி அத்தை என்னைக் கட்டிப் பிடித்துக் கொள்கிறாள். இவள் அப்பாவுக்கு தூரத்து உறவும் கூட. மெல்லிய குரலில் விசும்பியவளுக்கு நான் ஆறுதல் கூற என் செயலால் கலவரப்பட்டு வேகமாக அழுதாள்.



இராகவன் மாமாவையும் அவள் குடும்பத்தையும் எந்த அளவுக்கு அவமானப்படுத்த வேண்டுமோ அந்த அளவுக்கு படுத்திய அம்மா இப்பொழுது மாமாவைப் பார்த்ததும் எதுவும் நடவாதது போல அவரது காலைக் கட்டிக்கொண்டு அழுகிறாள்.

“ என்னை விட்டுப் போயிட்டாருண்ணே, இப்படி திடீருன்னு போவாருன்னு நினைக்கலே, எங்களுக்கு இனிமேல் யாரிருக்கா?"

அம்மாவிடமிருந்து இப்படிப்பட்ட ஒன்றை எதிர்பாராத மாமா அவள் கைகளைப் பற்றிக் கொண்டு ஆறுதல் கூற முற்பட இந் சந்தர்ப்பத்திற்காகவே காத்திருந்தது போல அத்தை ஓடிச் சென்று அம்மாவைக் கட்டிக் கொள்கிறாள்.

“ மனோன்மணி உங்கண்ணன் என்னை மோசம் பண்ணிட்டாருடி” பேசாத இரண்டு பெண்கள் மறுபடியும் பேசிக் கொள்ளும் போது அதுவும் அழுகை நிரம்பிய இழவு வீடாக அமைந்து விடும் போது கேட்கவும் வேண்டுமோ? அழுகையால் வீடே கலவரப்பட்டது. இதுதான் உச்சக்கட்டம் போல கூடியிருந்த பெண்களும் சேர்ந்து கொள்ள அம்மாவும் ,அத்தையும் காணாமல் போயினர். அந்தக் கூட்டத்திலிருந்து மிகுந்த பிரயத்தனப்பட்டு வெளியே வந்த மாமா என் கைகளைப் பிடித்துக் கொண்டு தோட்டத்திற்குள் நுழைந்தார்.

தோட்டத்துக் கிணற்று மேடையில் என்னை உட்கார வைத்து விட்டு கிணற்றிலிருந்து நீர் இறைத்து முகம் கழுவித் துடைத்துக் கொள்கிறார். நானும் அப்பாவும் வேப்பமரத்து நிழல் படர்ந்த இந்த கிணற்று மேடையில் உட்கார்ந்து நிறைய தடவை பேசியிருக்கிறோம். அவர் எழுதியதை என்னிடம் கொடுத்து படிக்கச் சொல்லி என் கருத்துக்களைக் கேட்பார். அதில் சில சமயம் அவருடைய நாட்குறிப்பும் இருக்கும். ஆரம்ப காலத்தில் எனக்கு அதில் ஈர்ப்பு ஏற்படவில்லையென்றாலும் படிக்கப் படிக்கப் பிடித்து விட்டது. அவைகளைப் படித்த பின்புதான் அப்பா சாதாரணமான மனிதர் இல்லை, அசாதாரண தகுதிகளுடன், அதை வெளிப்படுத்த போதுமான வாய்ப்பின்றி அவதிப்படுகிறார் என்பது புரிந்தது. அதன் பின்பு அவரின் அனுமதி பெற்று இருபது வருட கிறுக்கல்களை-தன் படைப்புகளுக்கு அவர் வைத்திருந்த பொதுப்பெயர் அது தான்-படிக்க அவர் வளர்ந்த முறையையும், வாழ்ந்த பாதையையும் வாழும் இடத்தையும் புரிந்து கொள்ள முடிந்தது. அதன் பின்னர் அவரை வெறும் அப்பாவாக மட்டும் பார்க்க முடியவில்லை. மற்றவர்களிடம் அந்த உரிமையுடன் பேசுவதைத் தவிர்க்க, இது தெரிந்து அப்பா சிரித்தார். அப்பைய தீட்சிதர் கதை சொன்னார்.



அப்பைய தீட்சிதரின் அறிவுத்திறம் கண்டு வியந்த மன்னன் அவரைப் பாராட்டி பரிசுகள் வழங்கி பல்லக்கில் அனுப்பி வைக்கிறான். பல்லக்கில் செல்லும் அவரை நாட்டு மக்களெல்லாம் வணங்கி மரியாதை செய்கின்றனர். ஒருவன் அவர் பெயரைக் கூற மற்றவர்கள் வாழ்க கோஷம் போடுகின்றனர். தன் பெயர் இவ்வளவு பிரபலமாகி விட்டதே என்ற நினைப்பில் சொந்த ஊருக்கு வந்தவருக்கு தெரு முனையில் கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருந்த பெண்களின் பேச்சைக் கேட்டுத் திடுக்கிடுகிறார். அவர் வருகையை ஒரு பெண் அறிவித்த முறையே அவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. அவரின் மனைவியின் பெயரைச் சொல்லி இன்னாரின் கணவன் வருவதாகக் கூற, அடுத்த நிமிடமே அவர் பல்லக்கை நிறுத்தச் சொல்லி கீழே இறங்கி நடந்தே வீடு சென்றார்.

உலகமே பாராட்டலாம். ஆனால் உறவும் , ஊரும் அடையாளம் காட்டாமல் போனால் ... மற்ற அடையாளங்களைக் காட்டிலும் உன்னுடைய அப்பா என்று சொல்லிக் கொள்ளும் அடையாளம் தான் எனக்குப் பிடித்திருக்கிறது, என்று அவர் சொன்ன போது கண்கள் கலங்கி விட்டன. அப்படிப்பட்டவர் இன்று உயிருடன் இல்லை என்பது தெரிந்தும் ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லையே...

அப்பாவை எல்லோருக்கும் பிடித்திருந்தது, அம்மாவைத் தவிர. நிறைய நண்பர்கள், நிறைய அமைப்புகள் என்று பெரிய தொடர்பு வைத்திருந்த அவரை அம்மாவிற்கு மட்டும் பிடிக்காமல் போனது ஏன்? திருமணமான ஒரு பெண் இன்னாரின் மனைவி என பெயரெடுப்பது பெரிய விஷயமல்ல. அப்பைய தீட்சிதரின் மனைவியைப் போல இன்னாரின் கணவன் என்று சுட்டிக் காட்டுமளவிற்கு தகுதி பெறுவதுதான் பெரிய விஷயம் ஆனால் இன்றைய பெண்கள் இதுபற்றிக் கவலைப் படுவதில்லை. அவர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கும் வட்டத்திற்குள் அவர்களுக்கு வரைமுறைகள் ஏதும் இல்லை. எல்லாமும் கணவன் என சுட்டிக் காட்டுமளவிற்கு தகுதி பெறுவதும் தகுதியை உருவாக்குவதும் எப்படி முடியும்?

எல்லோருக்கும் சேதி அனுப்பிச்சுட்டியா? பணம் கையிலே இருக்கா? இந்தா இதிலே இருபதாயிரம் ரூபாய் இருக்கு கையில் வெச்சுக்க அடக்கத்துக்கான செலவை நான் பார்த்துக்கறேன். கேள்வி மேல் கேள்வியாய் அடுக்கி அப்பாவின் நினைவுகளிலிருந்து என்னை மீட்ட மாமா மறுபடியும் கண் கலங்கினார்.



ரொம்பவே நம்பிக்கை வெச்சிருந்தாம்மா, தன் மேலே ,பெண்டாட்டி மேலே, பெத்த அம்மாவும் ,கூடப்பிறந்த அக்காவும் மற்றவர்களோட ஒட்டாம வாழ்ந்து அவனுக்குத் தாங்கலே அதைக் கண்டுக்காத அப்பாகிட்டே மற்றொரு பிம்பமா உங்கம்மாவும் இருக்க உடைஞ்சுட்டான். அவனோட மென்மையான மனசு புரியாம குத்திக் கிழிச்சுட்டாங்க எல்லாம் விதி.

பேசிக்கொண்டே பணத்தைக் கையில் திணிக்க நான் திருப்பித் தருகிறேன்.

வேண்டாம் மாமா, ராயல் பதிப்பகத்தார் காலையிலே பதினைந்தாயிரம் கொடுத்திட்டுப் போயிருக்கார். அப்பாவுக்குச் சேர வேண்டிய ராயல்டி, நான் கொண்டாந்து தர்ரேன். செலவைப் பாருங்க, ஆனா ஒரேயொரு வேண்டுகோள் மாமா.

சொல்லுடா.

அப்பா அடிக்கடி சொல்வாரு, இறுதிக்காரியம் நான் பண்ணணும்னு. அதுமட்டும்...

அதிலே என்ன சந்தேகம்.

பொண்ணா பிறந்தவ இதெல்லாம் பண்ணக் கூடாதுன்னு உறவுக்காரங்க யாரும் தடுத்தா,

மாமாவின் முகம் மாறியது.

சொல்லமாட்டான், சொல்றவன் இங்கே இருக்க மாட்டான். எல்லாமும் நீதான் பண்ணப்போறே, அழாத தைரியமா இரு.

நான் அழலே மாமா, என்னாலே அழ முடியலே, அப்பா இருந்து அம்மாகிட்டே அவஸ்தைப் படறதைவிட போய்ச் சேர்ந்த வரைக்கும் நிம்மதிதான். அப்பாவுக்கு இதுதான் விடுதலை.

சரி வா போகலாம்.

இல்லே நீங்க போங்க, சித்த நேரம் நான் இப்படியே உட்கார்ந்திருந்திட்டு வர்றேன்.

தனியாவா...?

மாமாவின் தயக்கம் புரிந்தது.

நீங்க பயப்படற மாதிரி எதுவும் நடக்காது, நான் அப்ப்ப்பட்ட கோழை இல்லை. போகும் போது கதவைச் சாத்திவிட்டுப் போங்க யாரும் வராம இருப்பாங்க.



சரி என்று அவர் போனாலும் கூட அரை மனதுடன் போகிறார் என்பது அவர் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு போவதை வைத்துப் புரிந்து கொள்ள முடிந்தது. இத்துடன் அவர் சந்தேகம் முடிந்து விடாது. உள்ளே போனவுடன் அத்தையை அனுப்பி விடுவார்.

கடைசி கடைசியாய் அப்பாவை முந்தாநாள் காலை இந்த இடத்தில் சந்தித்துப் பேசினேன். நான் ஆசைப்பட்டேன் என்பதற்காக வாங்கி நட்ட ரோஜா செடிகளுக்கு உரம் வைத்து தண்ணீர் ஊற்றிக் கொண்டு இருந்தார். அவர் எழுதிய கவிதை ஒன்றைப் படிக்கத் தந்து கருத்துக் கேட்டிருந்தார்.

புதுக்கவிதை இலக்கியத் தரமான விஷயமா?

கவிதையைப் படித்து முடித்து விட்டு நான் கேட்க, ரோஜாச் செடியை விலக்கிக் கொண்டு பதில் சொன்னார்.

மனுஷ வாழ்க்கை ஒரு போராட்டம்மா, அதிலெ அல்லாடறவனுக்கு எந்த படைப்பு அமைதி தருதோ அதுவெல்லாம் நல்ல இலக்கியம்தாம்மா. இலக்கிய தரம்னா இதுதான் அர்த்தம்னு ஒரு கூட்டம் இலக்கணம் சொல்லிக்கிட்டிருக்கு. அது தப்பு, எது உணர்த்துறதோ, எது உணர வைக்கிறதோ அதுவெல்லாம் நல்ல இலக்கியம்.

இந்தப் பேச்சைத் தொடர முடியாமல் அம்மா அன்றைய சண்டையை ஆரம்பித்திருந்தாள். காலை எட்டரை மணியாகியும் மதிய சமையல் பற்றி எதுவும் கூறவில்லையே வீட்டிலிருப்பீர்களா? வெளியில் போகிறீர்களா என்று ஆரம்பித்த சண்டை அப்பாவை துவம்சம் செய்துவிட அப்பா வழக்கம் போல மௌனக்கூட்டை கட்டிக் கொண்டு விட்டார்.

முன்பெல்லாம் அம்மா பேச்சுக்கு அப்பா எதிர் பேச்சு பேசிக் கொண்டுதானிருப்பார். ஆண் பிள்ளையாயிற்றே, ஆனால் போகப் போகக் குறைத்துக் கொண்டு விட்டார். அளவுக்கு அதிகமான பேச்சு இருவருக்கிடையே பெரும் பிளவை ஏற்படுத்திவிடும். என்பது மட்டுமின்றி என் மனநிலையையும் கருதி அவர் பேச்சைக் குறைக்க அம்மா அதைப் புரிந்து கொள்ளாமல் அதிகம் பேச ஆரம்பித்து விட்டாள். அவர் அமைதி காப்பது பலவீனத்தால் என்று முடிவு செய்து கொண்டு விட்டாள். தாங்க முடியாத பட்சத்தில் சட்டையை மாட்டிக் கொண்டு வீட்டை விட்டு அவர் வெளியேறி விடுவதால் பயந்து ஓடுகிறார் என்பதாய்த் தப்பாக அர்த்தம் செய்து கொண்டு விட்டாள்.

அம்மாவுக்கு அப்பா மீது எதனால் இத்தனை கோபம் என்பது புரியவில்லை. அப்பாவைப் பிடிக்கவில்லையா? பிடிக்காதவள் விவாகரத்து வாங்கிக் கொண்டு போக வேண்டியதுதானே... ஒரு வேளை மரபை எப்படி மீறுவது என்று தயங்குகிறாளோ? அத்தனை தயக்கம் உள்ளவள் அப்பாவை, இந்த அமைப்பை ஏற்றுக் கொண்டு வாழ வேண்டும். இணைந்து வாழவும் முடியாமல் விலகிப் போகவும் முடியாமல் அவளுக்குள் நடக்கும் போரட்டம்தான் அப்பா மீதான கோபமாகவும், எடுத்ததெற்கெல்லாம் சண்டையாக வெளிப்படுத்துகிறதோ?

அப்பாவுக்கும் அம்மாவுக்கும் முடிச்சுப் போட்டது யார்? இந்த தவறை உறவுகள் செய்யவில்லை. ஏனெனில் இரண்டு பக்கமும் சொந்தக்காரர்கள் இல்லை. தன்னிலிருந்து விலகி வாழ்க்கையை பார்க்கத் தெரிந்த அப்பாவும் தன்னை வைத்துத்தான் சகலமும் என நினைக்கிற அம்மாவும் இணைந்திருக்கக் கூடாது. இது உறவுகள் போட்ட முடிச்சல்ல. இறைவன் போட்ட முடிச்சு, சிக்கலான முடிச்சு ,ஏதோ உண்மையை உணர்த்த நடத்தும் நாடகம்.

இரண்டு மனமும் ஒத்துப் போனாலொழிய திருமண வாழ்க்கை வெற்றிகரமாக அமையாது என்பதை பலர் உணர்ந்து கொள்வதேயில்லை அதிலும் தன் வாழ்நாளில் மூன்றிலொரு பகுதியைப் பிறந்த குடும்பத்தில் கழித்து விட்டு புக்ககம் வரும் பெண்கள் வந்தவுடன் தன் உரிமையை நிலை நாட்டுவதில் கவனமாக இருக்கிறார்களே தவிர இங்குள்ளவர் எப்படி? நம் அணுகுமுறை என்ன? என்பதைப் பற்றி சிறிதும் சிந்திப்பதில்லை. இதனாலேயே கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து போய்விட்டன. பெண்ணைப் பெற்றவர்கள் தன் வீட்டிற்கு வரும் மருமகள் அனைவரையும் அனுசரித்துப் போக வேண்டும் என்று நினைக்குமளவிற்கு தன் மகள் வாழப் போகும் இடத்தில் அப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று வார்த்தையளவில் கூட கூறுவதில்லை. நினைப்பதுமில்லை.

வாழ்க்கை பற்றியும் , வாழும் சூழ்நிலை பற்றியும் புரிந்து நடக்கக் கூடிய பெண்களால் மட்டுமே நல்ல மனைவியாக வாழ முடியும். நல்ல மனைவியாய் இல்லாத பட்சம் நல்ல தாயாக, தன் வாரிசுக்கு வாழ்க்கையை உணர்த்தும் தகுதி மிக்கவளாக மாற முடியாது. பெற்ற அம்மாவும் உடன் பிறந்த சகோதரியும் மனதிற்குள் ஏற்படுத்திய பாதிப்பை மாற்றியமைத்த பெண்களை அவர் வாயார புகழ ஊர் அதை தவறாகப் பேசிற்று. விமர்சித்தது. உண்மையை எடுத்துக் கூறியும் நம்பாதவர்களை ஒதுக்கினார். அதனால் ஒதுங்கினார். ஆனால் வாழ்நாள் முழுவதும் வாழ வேண்டிய மனைவியும் அதே கண்ணோட்டத்தில் பார்க்க உடைந்து போனார். உருக்குலைந்தார். அவள் அவரைப் புரிந்து கொண்டதை விட வார்த்தையால் வசை பாடியதே அதிகம்.

சராசரி அம்மாவுக்கும், சராசரிக்கு மேற்பட்ட அப்பாவுக்கும் இடையே இடைவெளி உருவாகியது. அம்மா இருப்பைப் புரிந்து கொள்ளாமல் செயல்பட்டாள். அந்த செயல்பாட்டில், பேச்சில் பிறந்த குடும்பத்தின் வாசனை தூக்கலாக இருக்க புகுந்த குடும்பமும் அதன் தாத்பர்யமும் அங்கிருந்த மனிதர்களும் எடுபடாமல் போனார்கள். பல சமயங்களில் கேவலப்படுத்தப் பட்டார்கள். இதனால் அப்பா பாதிக்கப்பட்டார். எதைப் பற்றியும் அவள் பொருட்படுத்தவில்லை, யோசிக்கவுமில்லை. அப்பா சாதாரண செயல்களைக் கூட தவறாகப் பார்த்து, தன் செயலின் தவறைப் பற்றி சிந்திக்கவேயில்லை. கட்டுப்பாடின்றி பேசினாள். எல்லை வகுத்துக் கொள்ளாமல் செயல்பட்டாள். நான் அப்படித்தான், என்னால் மாற முடியாது நீங்கள்தான் மாற வேண்டும் என்று நிர்பந்தித்தாள்.



வார்த்தைகளின் உஷ்ணம் தாங்காமல் தவித்த அப்பா விஷயத்தை அவள் பிறந்த குடும்பத்தாரிடம் கொண்டு சென்ற போதும் அவர்கள் அவரையே குறை கூறியதால் அவர்களுடனான தொடர்பையும் குறைத்துக் கொண்டார். ஒரு குடும்பத்தையும் நிலை நிறுத்தத் தேவையான பணம் சம்பாதிக்கும் பொறுப்பு ஒவ்வொரு தந்தையையும் பெரும்பாடாகப் படுத்துகிறது. அப்பாவும் அந்த நெருக்கடியைச் சந்தித்தார். ஆயினும் குடும்பத்தை நடத்தத் தேவையான பணத்தைச் சம்பாதித்தார். அப்பாவிற்கு சிறு வயதிலிருந்தே பெரிய எழுத்தாளராக வர வேண்டுமென்கிற ஆர்வம் ,ஆசை இருந்தது. அதற்கான முயற்சியையும் விடாமல் செய்தார். பெரிய அளவில் வர முடியாவிட்டாலும் ஓரளவு அதிலும் வெற்றியைப் பெற்றார். பல ஆயிரத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய இத்தகுதியை அம்மா பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, விமர்சனம் செய்யாமலாவது இருந்திருக்கலாம். அவர் எழுதும் தொழிலைக் கேவலமாகப் பேசினாள். அவைகள் மூலம் கிடைத்த பணத்தில் உரிமை கேட்கத் தெரிந்த அம்மாவிற்கு அவர் தொழிலை மட்டும் மதிக்கத் தெரியாமல் போயிற்று.

அம்மாவின் பேச்சும் செயலும் நாளுக்கு நாள் அதிகரித்து அப்பாவை பாதிக்கச் செய்ய அவர் திணறினார். திண்டாடினார். தவித்தார். தொழிலில் கவனம் செலுத்த முடியாமல் அல்லாடினார். முடியாது என்றபோது விதியை நொந்து கொண்டு அமைதியானாரே தவிர அம்மாவை மாற்றி விடமுடியும் என்கிற நம்பிக்கையை மட்டும் கைவிடவில்லை. என் மனசாட்சிப்படி நான் எந்த தப்பும் பண்ணலே. சும்மாவும் இல்லே, எனக்குத் தெரிந்ததைச் செய்கிறேன். என்னைப் போல அவளுக்குத் தெரிந்ததை அவ செய்யறா, தப்பு அதிகமா செய்யும் போது சண்டை போடறது இயல்பு. நான் தப்பு ஏதும் பண்ணலே, அதனாலே சண்டை போடனும்னு தோணலே, சண்டை தேவையில்லைன்னு தோணுது... சண்டை போடறதாலே பிரச்சனை ஏதும் தீர்ந்திடாது. இதை உங்கம்மா புரிஞ்சுக்கலை, ஆனால் புரிஞ்சுக்குவா, நிச்சயம் புரிஞ்சுக்குவா, அதற்கான நாள் ரொம்ப தூரத்திலே இல்லை. புரிய வெச்சுடுவேன். அப்பாவின் நம்பிக்கை பொய்யாகவில்லை, அதைப் பார்க்கத்தான் அவர் உயிரோடு இல்லை.

பின் பக்கம் யாரோ தொடுவது போலிருந்தது. திரும்பினேன் மனோன்மணி அத்தை.

இந்தா இதைக் குடி காலையிலேயிருந்து ஒன்னும் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் இருக்காதே என்று அவள் கையிலிருந்த காப்பி டம்ளரை நீட்டினாள்.

காப்பியைக் குடித்து விட்டு அங்கே வா, வர்றவங்களெல்லாம் உன்னைக் கேட்கிறாங்க... என்றாள்.

அங்கே வருகிறவர்கள் கேட்கிறார்களோ இல்லையோ மாமாவிற்கு நான் தனியாக இங்கு இருப்பதில் விருப்பமில்லை என்பது மட்டும் தெரிந்தது.

மனதிலே எதையும் வச்சுக்காதே, அழுது தீர்த்திடு, அப்போதுதான் மனதிலிருக்கும் பாரம் குறையும், என்ற அத்தையின் வார்த்தை மனதை இலேசாக்கியது.

பல பேர் வந்து என்னைக் கட்டிப் பிடித்து அழுத போது வராத அழுகையா இப்பொழுது வந்துவிடப் போகிறது.

உள்ளே வந்து பார்த்தேன்.



அப்பாவைச் சுற்றி... அவருடைய படைப்புலக நண்பர்கள் பலரும் வந்திருந்தனர். அவர்கள் முகத்திலும் கவலை படர்ந்திருந்தது. இவர்களில் சிலரை அப்பா எனக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். அவர்களில் பலருக்கும் அவர்களின் கவலையை இறக்கி வைக்க பத்திரிகைகள் இருக்கிறது என்கிற நம்பிக்கை. அவர்களின் வாழ்க்கையிலும் அப்பாவைப் போல அவமரியாதை வந்திருக்குமா?

அப்பாவைப் பார்க்க வந்த அவருடைய படைப்புலக நண்பர்களில் பிரபலமான அந்த பெண் எழுத்தாளர் அப்பாவின் காலடியில் அவர் கொண்ட வந்திருந்த மாலையை வைத்து வணங்கினார்.

அம்மா அவளைப் பொறாமையுடன் பார்த்தாள். பொறாமை, படபடப்பு, கோபம் அளவுக்கதிகமான பேச்சு இவைதான் அம்மாவின் அடையாளம்.

இதனால் அவளும் வாழ்ந்த பாடில்லை, அடுத்தவர்களையும் நெருங்க விடாமல் உறவுகளையும், நட்புகளையும் உதறித் தள்ளியவள். இந்த இடைப்பட்ட நிலையில் நான் வாழ்ந்திருக்கிறேன். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இடையில் ஒரு தொடர்பாக...பாலமாக...இருவர் வாழ்வுக்கும் ஆதாரமாக...

இவ்வளவு வேதனைக்குமிடையில் அப்பா என்னை பட்டை தீட்டி விட்டிருந்தார். தன்னை எருவாக்கி என்னை உருவாக்கி விட்டிருக்கிறார். எவ்வளவு சிரமத்திலும் அவர் தன் பயணத்தை நிறுத்தி விடவில்லை. அவரின் சிரமத்தில் என்னை உறுதியாக்கியிருக்கிறார். எனக்கு அவர் ஒரு முன் மாதிரி மனிதர்.

நேரம் கடந்து மாலையாகி விட்டது.

வெளியூரிலிருந்து வரவேண்டிய அப்பாவின் தம்பிக்காக காத்திருக்கிறோம்.

அப்பாவிற்கும் அம்மாவிற்குமிடையில் நடந்த சண்டைகளால் வீட்டிற்கு வருவதை விட்டுவிட்ட சித்தப்பா, பதினைந்து வருடங்களுக்குப் பிறகு, அதுவும் அப்பாவின் இறப்புக்குப் பிறகு... இப்பொழுதுதான் அவர் வரவிற்கு அம்மாவிடமிருந்து எதிர்ப்பு இல்லாத நிலை வந்திருக்கிறது.

அம்மா மாறிவிட்டாள். இல்லையில்லை மாற்றப்பட்டிருக்கிறாள்.

சித்தப்பா தன் குடும்பத்தினர் அனைவருடனும் வாடகைக் காரிலிருந்து இறங்கி உள்ளே வர சித்தியுடன் பேசாத அம்மா அவளைக் கட்டிப் பிடித்து அழுகிறாள். சித்தப்பா நேராக வந்து அப்பாவின் உடலைப் பார்த்து அழுது விட்டு என்னைத் தேற்றுவதற்காக என்னிடம் வந்தார்.

எனக்கு மட்டும் அழுகை வரவேயில்லை.

எல்லோரும் என்னைக் கல்லு மனசுக்காரி என்று மனதிற்குள் திட்டிக் கொண்டிருக்கலாம்.

ஆனால் அவர்களுக்கு என் மனசுக்குள்ளிருக்கும் அந்த உண்மை தெரிந்திருக்க நியாயமில்லை.

அப்பா சொன்னபடி அம்மா மாறிவிட்டாள். அப்பா அவளை மாற்றி விட்டார். ஆனால் அம்மாவை மாற்றிக் காட்டியவர் என்னை மட்டும் ஏமாற்றி விட்டார். அப்பாவின் மரணம் மாரடைப்பு என்று எல்லோருக்கும் நான் சொல்லிக் கொண்டிருந்தாலும், அவரின் மரணம் கயிற்றால் சுருக்கப்பட்ட தற்கொலை என்பது எனக்கு மட்டும்தானே தெரியும்.

விடியற்காலையில் எழுந்து பார்த்த எனக்கு அவர் சீலிங் பேனில் கயிற்றைப் போட்டு... அதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை... நம்பிக்கை, லட்சியம் என்று தன் மகளை ஒரு லட்சியவாதியாக வளர்த்த அப்பாவிற்கு தன் மனைவியை மாற்ற வேறு வழி தெரியாமல் ஒரு சாதாரண மனிதனாக அவர் எடுத்த இந்த முடிவு என்னால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. அவருக்காக நான் அழவும் முடியாது.

அப்பா என்னை மட்டுமில்லை, தன்னையும் ஏமாற்றிக் கொண்டு விட்டார்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p2.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License