அந்தச் செய்தியைத் தொடர்ந்து வேறு பக்கத்தைத் திருப்ப யோசனையற்று இருக்க, ‘என்னங்க இன்னொரு டீ வேணுமா...?' சமையலறையிலிருந்து கேட்ட மனைவிக்கு, ஒற்றை ‘ம்...' மை மட்டும் பதிலாக்கியதும், காலை நாளிதழை நான்காக மடித்து
பக்கத்து மெத்தை இருக்கையில் வைத்தேன்.
உள்ளுக்குள் நெரிஞ்சிமுள் குத்தும் வலி...
சமூகம் எந்த இலக்கை நோக்கி பயணப்படுகிறது..? அன்பு, ஒருத்தர் மேல் காட்டும் நேசம், ஈவு, இரக்கமெல்லாம் வார்த்தையில் மட்டும்தான் உள்ளதோ... மனிதாபிமானம்... அப்படின்னா என்ன? என்ற கேள்வியாகிவிடுமோ... உறவு, ஒட்டுதல் என்ற நெருக்கம் இப்போது இடைவெளியான ஒன்றாகிப் போனதென்றே தோன்றுகிறது ! பொறுமை, சகிப்புத் தன்மைகளை காலில் போட்டு மிதித்து, வாழ்க்கையை இழுத்து ஓடுகிறான் மனிதன். அவர், இவரென்றில்லாமல் சுயநலப்போக்கில் எல்லோருமே மாறிக்கொள்கிறார்கள்... புரிதலை புரியாமலேயே புறமொதுக்கி, எதிலும் நமக்கானது என்று சிந்திக்க மறுக்கப்படுகிறது, அல்லது அப்படியொரு இணைப்பு தேவையில்லையென உறுதி கொண்டுள்ள தன்னிலை.
கீழ் உதட்டை உள் சுருக்கி, மேல் பற்கள் கொண்டு அழுத்தினேன். மனசுக்குள் இனம் புரியாதவொரு இறுக்கம், ‘ரேகா... டீ என்னாச்சி..?' கொஞ்சம் சத்தமாகவே கேட்டேன். ஆமா கடந்த நான்கு நாட்களின் காலைப்பொழுது இப்படித்தான் மேலோங்கும் கசந்த வெறுப்பாய், எரிச்சலாய் நகர்கிறது.
‘கேஸ் முடிஞ்சி போச்சு, சிலிண்டர் மாத்தினேன்' தாமதத்திற்குக் காரணம் தெரிஞ்சிக்கங்க, என்னும் பாவனையில் பெரிய சில்வர் டம்ளரைக் கொடுக்கும் நொடிப்பொழுதில், என் நிலைப்பாட்டை நகல் பிடித்துவிட்டாள் போல், ‘இன்னைக்கும் அதே செய்தியா..? இதோ பாருங்க... உங்களால மாறிக்க முடியாது அதனால, நாளையிலருந்து பேப்பர் வாங்கறத நிறுத்திடலாம்' என்றாள்.
‘ஓங்கிட்ட யோசனை கேட்டனா...' முகம் சுழித்து டம்ளரை வாங்க, சிரித்துக்கொண்டே நாளிதழை விரிக்கலானாள் ரேகா.
இதுதான் ரேகாவின் தன்மை! சின்ன விசயமானாலும், இடிமாதிரியானதாக இருந்தாலும் அதைச் சமமாகவே எதிர் கொள்வாள். கோபம் அவளிடம் வரப் பயப்படும். எப்போதும் முகமலர்ச்சியானவள். சோகம், வலி, உடனுக்குடன் துடைத்து, மனதை ஒருநிலை லேசாகவே வைத்திருக்க வேண்டும் என்பாள்.
‘ பூ ' மனசுக்கு சொந்தக்காரி, ரேகா. பக்குவம் நிலை தெரிந்தவள். என்னால முடியலயே... அந்தச் செய்திகளைப் படிக்கப் படிக்க ‘இதென்ன மனிதாபிமானமற்ற செயல், உயிர்,உறவு இங்கே தாழ்ந்து விட்டதா..? என்று நினைக்கையில் ஒவ்வாமையில் நரம்பெல்லாம் முறுக்கி, வலி ஏற்படுகிறது. வெளியுலகம் இங்கே இப்படிதான், இமைகள் சுருக்கி, எதையும் காணாதது மாதிரியே கடந்து போய்விடனும் என்ற நெனப்பே தோன்றவில்லை.
‘ஏங்க இந்த செய்தியா..?' பக்கம் விரித்துச் சரியாகக் காட்டினாள்.
மனநலம் சரியில்லாத, தான் பெற்ற மகளை கருணைக் கொலை செய்ய அரசு அனுமதி கேட்டு,மகளுடன் வந்துள்ள பெண்மணியின் படத்தைப் பார்க்கவே அருவெறுப்பாகப் பட்டது.
பத்து மாதம் சுமந்த தன்னுடைய ரத்த உயிர்ப்பு என்பதை அவள் உணரவில்லையா...? கருணைக் கொலைக்கு இந்திய அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என விவாதம் வேற, மூண்று நாட்களாக நாளிதழில் முக்கிய இடம் பிடித்திருந்தன, வாசிக்க, வாசிக்க அப்படியொரு ஆத்திரம். இந்தக் கருணைக் கொலையை மட்டும் சட்டரீதியாக நியாயப்படுத்திவிட்டால்...முன் வருவோரின் மனு குவிந்துவிடும் போல்? எண்ணிப் பார்க்கவே குலை நடுங்கியது.
‘எல்லாருமே நம்மலாட்டம் இருக்கனும்னு நெனைக்கிறது பெரிய தப்புங்க' மனைவியை மேலும் பேச விடாது தடுத்து, ஏறிட்டு,‘இருந்தாலும் ரேகா...பெத்தவங்களே முன் வாரது மனித சமுதாய அவலம்.' அதற்கு மேல் ஏனோ எனக்குள் வார்த்தைகள் சிக்கியது,
‘அம்மா...அக்கா முணங்கறா' மாடியறையிலிருந்து மகனின் குரல்.
சுவர் கடிகாரம் பார்த்த ரேகா, ‘மணி ஏழு முப்பதாச்சா...இதோ வாரேம்பா நீ சீக்கிரமாக் கிளம்பு, என்னங்க மாடிக்குப் போங்க நான் சாப்பாடு பிசைஞ்சி எடுத்துட்டு மேல வாரேன்' சொல்லிச் சமையலறைக்குள் நுழையவும், நான் மாடிக்குச் சென்றேன்.
பெரியளவு கட்டில் மெத்தையில் என் மகள் நீளவாக்கில் படுத்திருந்தாள். அப்படியே பாட்டியின் முகச்சாயல், என்னுடைய உருவ அமைப்பு, ஆடாத, அசையாத ஓர் உயிரோவியம் மாதிரி..?
முதல் உயிர்ப்பின் குறைவான வரம்... வரம்தான், ஆறுவருஷ வேண்டுதலின் பலன், அம்மாவின் பெயர்,கோமதின்னு வைத்தேன்.மருத்துவத்திற்கு அப்பாற்பட்ட குறை என்றாலும் நிறைவாகவே ஏற்றுக் கொண்டோம். அதன் கருணையால்தானோ என்னவோ,அடுத்து மகன் பிறந்தான்... இதோ சாரதி, பள்ளிக்குக் கிளம்புகிறான்.
முகம் சுழிக்காமல் மகளுக்கு சேவை செய்கிறாள்,ரேகா.நேரத்திற்கு உணவு, தண்ணீர் கொடுத்தால் உள் வாங்கிக் கொள்ளும், தானாக மலம் வெளியேரும், சுத்தம் செய்துவிட வேண்டும், சில நேரம் முக்கல், முனங்கள் வெளிப்படும் அவ்வளவுதான் இயக்கம். நானும் வீட்டில் இருக்கும் போது உதவியாக இருப்பேன். ஒருநாள் கூட சலிப்பு காட்டியது கிடையாது. ஆண்டவனோட நமக்கான படைப்பில் இந்த நிலை உயிர்தானு இருந்திருக்கு அதை வாங்கிக் கொண்டோம். கவனிக்க வேண்டியதுதானே நம் பெற்றோர்களின் முறை, கடமையும்கூட, அனைத்தும் புரியும் ஆறறிவு கொண்ட நாமே ‘ ச்சீனு...' வெறுப்புக்காட்டி ஒதுக்கினால், அது தொப்புள் கொடி சுவாசத்துக்கு அர்த்தமில்லாத செயல், தாம்பத்தியத்தின் மறுதலிப்பு... நிறைவான ஜனனத்தில் மகிழ்ச்சி அடைவது போல், குறைபாடான வெளிப்பாட்டையும் சகிக்கனும்.அதுதானே தர்மநியதி...
இதையேதான் மற்றவர்களிடமும் எதிர்பார்க்கிறேன்...
‘இந்தாங்க கிண்ணத்த பிடிங்க, பையன அனுப்பிக்கிறே'ரேகாதான்.
பிசைந்த சாதக் கிண்ணத்தை வாங்கிக் கொண்டேன். பையனுக்கு இட்லி கொடுத்து, பேக் மாட்டிவிட்டு, வேன் ஆரண் சத்தம் கேட்கவும்,அனுப்பியதும் வந்தாள்.
முன்னமே மகளைத் தூக்கி, முதுகுக்குத் தலையனை கொடுத்து, சாய்த்து உட்கார வைத்து, ஈரத்துணியால் முகம் துடைத்திருந்தேன்.
மனசப்போட்டு குழப்பிக்காம வேலைக்கு கிளம்புங்க இனி நான் எல்லாம் பாத்துக்கறேன்' என்ற ரேகாவை ஆச்சரியம் கலந்து பார்த்ததும், ‘உன்னமாதிரியே அம்மாக்கள் அமைஞ்சிட்டா கருணை கொலை வார்த்தையே இல்லாம போயிரும் ரேகா...'மனசுக்குள் எண்ணிக் கொண்டே, வேலைக்குக் கிளம்பினேன்.