இரண்டு தினங்களாகவே மரகதத்தின் மனசு வாடிய கதம்பம் சரம் மாதிரிதான் இருக்கு.பகவதி சொன்ன வெக்கையான தகவல் அப்படி..?
‘ஓ மருமக பூக்கட போடப்போறாலாம்ல...'ஏதோ ரகசியமா ஆரம்பித்து, ‘ஓ மகன் உசுரோட இருக்கையிலேயே சரசுக்கு சித்தி பையன்னு சொல்லிகிட்டு ஒருத்தன் வருவான்ல அவன்தான் எல்லா எற்பாடும் செய்றானாம். வேலை செய்ற இடத்தில் ரெண்டுபேரும் தெனமும் சந்திக்கறாங்களாம். என் மகன்தானே மேஸ்திரி, தெரிஞ்ச பொண்ணு இப்படி நடக்குதேனு வருத்தப்பட்டான். உனக்கு எதுவும் தெரியாதா?'
அனல் மூட்டப்பட்டது.
மொத்த பூ வியாபாரம் பண்ணிக் கொண்டிருந்த ஒரே மகன் திடீறென்று விபத்தில் இறந்து போக,துக்கம் கேட்ட கையோடு, விட்டால் போதுமென மரகதத்தோட நெருங்கிய உறவுகள் ஒதுங்கிப் போகவும். ஆதரவாக நின்றிருந்தது, மருமகள் குடும்பம் மட்டுமே.
‘கைப்புள்ளைய வச்சிக்கிட்டு இவ இங்க எதுக்கு,திருமங்களத்துக்கே கூட்டிப்போறோம். உங்களுக்குனு இங்கேயும் யாருமில்ல நீங்களும் சேந்து வாங்க'சரசோட, அப்பாவும் அம்மாவும் வற்புறுத்தி அழைக்கவும், ‘இல்லப்பா அத்தை பிறந்த ஊரு, நா வாழவந்த வீடு இங்கேயே நாங்க இருந்து விடுகிறோம்' என்றாள். அவர்களும் நிறைய சொன்னார்கள்...
உறுதி குறையாது சரசு சாதித்துவிட, தனக்கான மருமகள் என்று வாயாரிப்போனாள்.
கழுத்துல தாலி கட்டியவனும், வயித்துல புள்ளையா வந்தவனும் அடுத்தடுத்து இல்லாம போயிட்டாங்களே... என்று துக்கம் தாளாது அழுகை முட்டும் போதெல்லாம், மருமக இருக்காங்கற நம்பிக்கையே கண்ணீர் துடைக்கும் கைகளாக மாறும்.
இழப்பீடு வர, சரசு சித்தி மகன்தான்,போலீஸ் ஸ்டேசன்,கோர்ட், வக்கீல் கேஸ்னு சீரழிஞ்சி, ‘இன்சூரன்ஸ்ல ஏதோ சட்ட சிக்கலாம் கேஸ் முடிய நாளாகுமாம்' ன்னு ஒரு நாள் கூற, குடும்பத் தேவை, பிள்ளையின் வளர்ப்பு, எல்லாம் யோசித்த சரசு, அன்றே தெளிவானதோர் முடிவுக்கு வந்தவளாக, ‘அத்த நீங்க புள்ளைய கவனிச்சிக்கிட்டு வீட்ல இருங்க நான் கட்டிட வேலைக்குப் போறேன்' என்றாள்.
‘சித்தால் வேலைக்கு போறதா..?' முதலில் மரகதத்துக்கு வருத்தம்தான். அதை அவள் முகம் காட்டிக் கொடுக்க, எதிர் காலத்தில் இந்த குடும்பம் தன்னிறைவோடு நிற்க வேண்டுமானால்... வருமானம் மட்டுமே முக்கியம். அத்தைக்கு எடுத்துக்கூற, ஒரு வழியாக மரகதம் சம்மதம் தெரிவித்தாள்.
அக்கம் பக்கத்தில் குடியிருப்பவர்கள் ‘மரகதம் உன்னோட மருமக நூத்துல ஒருத்தி ' எதிர்ப்படுக்கையில் இப்படி பெருமை சொல்வார்கள்.மருமகளை நினைத்து உள்ளூரப் பூரித்துப் போவாள்.
அன்னியத்திருந்து வாழ வந்தவ, தன் வாழ்க்கைய இழந்த பின்னும் தியாக மனப்பான்மையுடன் இங்கேயே தங்கிவிட்ட சரசு, இப்போது தன்னிச்சையா ஏன் முடிவெடுக்கனும்? நாளும்,பொழுதும் நல்லபடியா கடந்து கொண்டிருக்கையில் மனசு மாற வேண்டிய காரணம்..?
இரவு, குழந்தையை அமர்த்திப் படுக்க வைத்ததும்,உறக்கமின்றி விழித்து, சுவர்ப் பக்காமாய் ஒருக்களித்து கிடக்கும் அத்தையின் அருகில் போய், “அத்த எந்திரிச்சி உட்காருங்க”என்றதும் தானும் அமர்ந்தாள்.மரகதமும் அதற்கே காத்திருந்த மாதிரி எழுந்து, ’என்னம்மா...சொல்லு..?'ன்னு கேள்வியாக ஏறிட்டுப் பார்த்தாள்.
“இந்தச் சனிக்கிழமை சம்பளம் வாங்கிக் கிட்டு வேலைக்கு வரலேன்னு சொல்லிரப்போறேன் அத்தை.”
“ஏம்மா..?”
“மேஸ்திரியோட பார்வையும்,றெட்ட அர்த்தப் பேச்சும் எனக்கு சுத்தமாப் பிடிக்கல, ஒரு வாட்டி எச்சரிச்சும் பார்த்துட்டேன். ஆனா அவன் திருந்தரதா தெரியல, அதான் துஷ்டங்கிட்ட இருந்து விலகலாம்னு...”
“நீ என்ன சொல்றம்மா” உண்மையாகவேப் பதறிவிட்டாள் மரகதம்.
“பயப்பட வேணாம். நாம முள்ளா இருக்கையில் யாரும் கைவைக்க முடியாது, முந்தாநாள் அப்படித்தான் மேஸ்திரி கண்றாவியா பேசிக்கிட்டு இருந்தான். ஆம்பள ஆதரவு இல்லாதவன்னு தைரியமா பேசுறானேன்னு நெனைக்கையில் தற்செயலா போஸ் அண்ணன ரோட்ல பார்த்துக் கூப்பிட, அவர் வரவும் அந்த நாய் ஒதுங்கிருச்சு. புள்ளைய,உங்கள விசாரிச்சுட்டு ‘ஏம்மா இப்படி வெயில திரியற நம்ம பூ வியாபரத்தையே பாக்கலாமே'னு சொல்றார். இப்ப அதுதான் சரினு படுது நீங்க என்ன சொல்றிங்க அத்தை.”
பகவதியோட தம்பி நாய்... அக்காக்காரிட்ட திரிச்சி சொல்லிருக்கோ?
மேலும் சரசு, “இங்க ஊருக்குள்ளேயே பூ வியாபாரம் பண்ணலாம். என்னதான் அப்படி, இப்படினு பேசினாலும் புருஷன் இல்லாதவகிட்ட பூ வாங்குறதானு நிறையபேர் தயங்குவாங்க, அதான் டவுனுக்குள்ள சிவன் கோவில் முன்னால ஒரு பெட்டி காலியா இருக்குனு கேள்விப்பட்டேன். சாமி கும்பிட வாரவங்க இந்த வேற்றும பாக்க மாட்டாங்க, சரினு நெனச்சா ஞாயத்துக்கிழம ரெண்டுபேருமா போய் பாத்து உறுதி படுத்திட்டு வருவோம்” தன்னையறியாது கண்கள் கசிய,
மருமகளின் இரு கைகளையும் இறுக்கமுடன் பற்றி, “நீ ஏ வயித்துல பொறக்காத மகம்மா...”அதற்கு மேல் வார்த்தையின்றி அழுதே விட்டாள், மரகதம்.
சரசுதான் தேற்றினாள்.
அந்த வாரம் வெள்ளிக்கிழமையே பூக்கடை ஆரம்பம்... பழகிய கைத்தொழில்... மரகதமும் தன்னால் முடிந்தளவு பூச்சரம், மாலைகள் கட்டி, மதிய சாப்பாடுடன்,பேத்தியையும் தூக்கிக்கொண்டு,தினம் மினி பேருந்து ஏறிவிடுவாள். கடையில் சாயங்காலம்வரை மருமகளுக்கு, இல்லை, இல்லை மகள் சரசுக்கு துணையாக இருக்கலாமென்ற தெளிந்த மனதுடன்.