கோயில் நகரம் மதுரை, வடக்கு வாசல் மூன்றாவது தெருவுக்குள் நெருக்கடியான குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ளது அந்த ‘வள்ளுவர் குடியிருப்பு ' எதிர் எதிர் ஜந்து வீடுகளை கொண்டது. அங்கே வசிப்பவர்கள் அனைவரும் மத்தியத்தரமான வாழ்க்கைக்குச் சொந்தக்கார்கள். இன்பங்களும், துன்பங்களும் அவர்களிடம் மாறி,மாறி வந்து போகும் போதெல்லாம் ஒருவருக்கொருவர் பங்குகெடுத்துக் கொள்வார்கள். வேற்றுமையற்று எல்லா நேரங்களிலும் எல்லோரும் சகசமாகப் பழகுவர். அவர் அவர்களுக்கான பண்டிகை விஷேசங்களில் வாழ்த்துக்களும், இனிப்பும் நேசம் வளர்த்துக் கொள்ளும்.
அஞ்சல் துறையில் பணிசெய்து ஓய்வு பெற்றவர் முதல் வீட்டில் குடி இருக்கும் கோபாலன். அவர் மனைவி லட்சுமி, அவர்களுக்கு ஒரே மகள், தேவிகா. நான்கு மாதத்திற்கு முன்தான், இருந்த பணம், ஓய்வுக்குப் பின்னால் வந்த பணம் மொத்தமும் கொண்டு சிவகாசி மாப்பிள்ளைக்கு மணமுடித்துக் கொடுத்தனர். இப்போது அவர்களின் ஜீவனம் ஓய்வூதியத்தை நம்பியே இருக்கிறது.
கடைசி வீட்டில் இருப்பது கோகிலாம்மாள்... நெல்லையிலிருந்து கைக்குழந்தை தம்பதிகளாய் வந்து சில்வர் பட்டறை வேலைக்கு போய் வந்து கொண்டிருந்த கணவன் ஒருநாள், தெற்குவாசல் ரயில்வே கிராசிங்கைக் கடக்கையில், குருவாயூர் வண்டியில் அடிபட்டு அதே இடத்தில் சிதைந்து போனான். ஆதரவு உறவுகள் இல்லாததால் இங்கேயேதங்கிவிட்டாள். அகமத் ஜவுளிக்கடைக்கு வேலைக்கு போனாள், கற்று வைத்திருந்த தையல் தொழிலை வீட்டிலிருந்து செய்தாள். லட்சியம் கொண்டாற்போல் மகனைப் பாலிடெக்னிக் படிக்க வைத்து, டி.வி.எஸ்ஸில் வேலைக்கும் சேர்த்துவிட்டாள்.
முதல் மாதம் சம்பளம் வாங்கி வந்த கையோடு அம்மாவை ஜவுளிக்கடை வேலைக்கு போவதிலிருந்து வற்புறுத்தி நிறுத்தி விட்ட மோகன்,‘வயசு பையனா இவன மாதிரிதான் இருக்கனும் ' என்று குறிப்பிடும் அக்மார்க் நல்லவன். யார் என்ன உதவி கேட்டாலும் கடுகளவு கூட முகம் சுழிக்காது செய்து முடிப்பான். அவனின் ஒழுக்கம் எதிர்வீட்டு ரோகினியை ஈர்த்து, அது ஒருதலை காதலாக வளர்ந்து வருகிறது.விசயம், உறுதிபடுத்த முடியாத சாடையாக இரு வீட்டாருக்கும் தெரியும். காலம் கூடும்போது கூடட்டுமென்று கண்ணியம் காத்தனர்.
பென்னர் கம்பெனியில் பணி செய்யும் நான்கு குடும்பம். சொல்லி வைத்த மாதிரி முதல் பிள்ளை வளர்ப்பின் தொடக்கத்தில் உள்ளவர்கள்.
பெரியார் பேருந்து நிலையம் எதிர் மசூதித்தெருவில் சிறிய செப்பல் கடை நடத்தும் யூசுப் பாய், அவர் மனைவியும் ஒரு வீட்டில். அல்லா அவர்களுக்கு குழந்தைப்பாக்கியம் தரவில்லை என்றாலும், அங்கே உள்ள சிறுவர்கள் அனைவரும் ஒட்டுதலாய் இருந்ததில் குறையற்ற திருப்தியில் மனம் மகிழ்ந்து கொள்வார்கள்.
இரண்டு கிருஸ்தவக்குடும்பம்... ஒருவருக்கு மிஷின் மருத்துவமனையில் உதவியாளர் வேலை. அடுத்தவர் ஒரு இன்டிகா கார் வைத்து வாடகைக்கு ஓட்டிக் கொண்டிருக்கிறார். குடும்பத்துக்குத் தலா இரு பிள்ளைகள்... எட்டாவது, ஒன்பதாவது, பத்தாவது என படிக்கிறார்கள்.
வரிசை வீட்டின் உரிமையாளருக்கோ சங்கமமான சந்தோஷ குடும்பங்கள் அமைந்ததில் சொல்லமுடியாத பெருமிதம். அதிலும் இந்த வருட நாட்களில் துளியும் பிரச்சனைகள் இல்லாது இருந்ததில் ரெட்டிப்பு ஆனந்தம்.
தீபாவளி இன்னும் ஒரு வாரம்தான் உள்ளது...
எதிர்பார்த்திருந்த கவலை கோபாலனை தொற்றிக் கொண்டது. மகளுக்கும், மாப்பிள்ளைக்கும் முதல் தீபாவளி செய்முறை பண்ணனும்.சாப்பாடு, மருத்துவ செலவுகளுக்கு மட்டுமே ஓய்வூதியம் சரியாக உள்ளது. கையில் எதுவுமற்ற நிலையில் ‘என்ன செய்யலாம்..?' ங்கற கேள்வி, மனதை சுட்டது.
எந்த அடிப்படையிலும் கடன் கேட்க முடியாது, யாரும் தரவும் மாட்டார்கள். வெளியிலிட முடியா வெதும்பலின் காய்ச்சலிருக்கும் கணவனை எண்ணி வருந்திய லட்சுமி, “என்னங்க உங்க வங்கி கணக்குல ஆர்.டி பிடித்தமாகுமே அது எப்ப முடியும்..? ”
“எத்தன தடவ சொல்லிட்டேன்...அந்தப் பணம் வரும் போது முக்கியமான செலவுகள் இருக்குதுன்னு” கொஞ்சமாய்க் கோபப்பட்டார்.
ஆமாம், தேவிகாவின் பேறுகாலப் பணத்தேவைக்கும், குழந்தையின் முதல் செய்முறைச் செலவுகளுக்கு ஈடுகொடுக்கக்கூடிய சேமிப்பில் கைவைத்தால் அன்றைக்கு நிறைய சிரமப்பட வேண்டிருக்கும் என்றே மறந்த சேமிப்பாய் அதை விட்டுவிட்டார் கோபாலன்.
உண்மை உணர்ந்து லட்சுமி மெளனித்தாலும், பக்கத்தில் வந்துவிட்ட தலைத்தீபாவளியை எப்படி எதிர்கொள்வது..? மகள், மாப்பிள்ளையை எவ்விதம் பூர்த்தி பண்ணி அனுப்புவது..? கேள்விகள் எழுந்தது.
இதுவரைக்கும் நகர்ந்து வந்துட்டோம், இனியும் நகர்வோம்... ‘ ம் ' என்று இருவருமே ஒருசேர பெருமூச்சினை வெளிப்படுத்தினர்.
மோகனுக்கு, சமீபமாய் புது எண்ணமொன்று தோன்றியது. தன்னை ஆளாக்க, தான் வெருமையாயிருந்து அம்மா பட்ட வதைகளுக்கு
மருந்தாக வரும் தீபாவளி திருநாளில் மூன்று, மூன்றறை பவுனில் செயின் வாங்கிக் கொடுக்க வேண்டும். அப்பா இறப்பிற்கு பின் தங்க நகை அணியா அவளின் கழுத்து, மகனின் உழைப்பில் வந்ததை அணிந்து மகிழ்வதைக் கண்டு பூரித்துப்போகனும் என்பதுதான்.
சிறுகச்சிறுக சேர்த்து வைத்திருந்த தொகையை, கார் வைத்துள்ள ஸ்டீபன் மூலமாக, அவர் வாடிக்கையாக கார் சவாரி போகும் நகைக்கடையில் முன் பணமாக கொடுத்திருந்தான். ‘இந்த மாதச் சம்பளம், போனஸ் எல்லாம் வரும். குடும்பச் செலவுக்குப் போக, மீதத்தையும் நகைக்கு தந்துவிடலாம். பாக்கி இருந்தால் ஸ்டீபன் அண்ணனைச் சாமீன் சொல்லக் கேட்க வேண்டியதுதான்' உள்ளூர சந்தோஷித்து, தன்னில் ஒரு முடிவுக்கு வந்தான் மோகன்.
விடியல், அடைதல்... பொழுதுகளின் நகர்வு.
வழக்கமான பற்றாகுறை யோசனைகளோடு, ஏக்கங்களோடும் பென்னர் கம்பெனியில் பணிபுரியும் குடும்பத்தலைவர்கள்.
கடந்த தீபாவளி ஜவுளி எடுத்தலின் போதே ஜந்தாயிரத்திலிருந்து பத்தாயிரத்திற்குள் விலையில் பட்டுச்சேலை கோரிக்கை வைக்கப்பட்டது. குழந்தை பிறப்பு, அதன் வளர்ப்பு தேவைகளை காரணம் காட்டி, அவர்கள் நால்வருமே சமாளித்துக் கொண்டனர்.
‘இந்தத் தீபாவளி எங்கள் ஆசையை நிறைவேற்றுமா? 'தத்தமது துணைகளின் அந்தப் பட்டுச்சேலை மெளன கோரிக்கை முன் வந்து நிற்க, கணவன்மார்கள் போதுமான சம்பளம் இல்லையே... என்ற இயலாமையில் நொந்தனர்.
மனைவியை அழைத்தார் யூசுப் பாய். அருகில் அவள் வரவும் “பீபி எதுத்த லயனில் குடியிருக்கும் அந்த நாலு குட்டீஸ்களுக்கும் இந்தத் தீபத்திருநாளுக்கு புது துணிக எடுத்துத் தரலாம்னு நெனக்கிறேன் நீ என்ன சொல்ற...” என்றார் ஆர்வம் கலந்து.
“அதெப்படி நான் கற்பனை செய்ததை நெசமா சொல்றீங்க...தாராளமா கொடுக்கலாம் அது அல்லாவோட விருப்பம் ” முகமலர்ச்சியோடு கூற,
“அவங்களிடமும் ஒரு வார்த்தை சொல்லி அனுமதி வாங்கிறலாம் ” யூசுப் பாய் இதை தெரிவித்துக் கொண்டிருக்கையில் “உள்ளே வரலாமா மாமா..? ” மணியின் குரல். ரவியும் நின்றிருந்தான்
“புதுசா என்ன அனுமதி மாப்ள ”
“நீங்க மட்டும் அனுமதி கேட்க நெனக்கலாமா...”
பாய்க்கு ‘சுருக் ' என்றது, விசயம் புரிந்துவிட்டது. உள்ளூரக் குளிர்ந்தார்.
பாத்திமா பீபி ஏலக்கா தேனீர் கலக்கி நீட்ட, வாங்கிக் கொண்டவர்கள் ‘மனசு போல பண்ணுங்க மாமா ' என்பதாய் இருவரும் திரவம் உறிந்தனர்.
பட்டுப்புடவை கோரிக்கை நிறைவேறும் பொருளாதாரக் கணிப்பில் கணக்கு போட்டுப் பார்த்துக் கொண்டனர்.
போத்தீஸில் எடுத்து வந்த தனக்கான ஆடைகளைச் சக தோழியிடம் காட்டி, அவளின் கமென்ட் கேட்டபடியிருந்த, ரோகினியின் பார்வை அடிக்கடி கோகிலாம்மாளின் வீட்டு வாசலுக்கு ஓடியது. மோகன், வீட்டில் இல்லைதான் அவனின் அம்மா வெளிப்பட்டு, தீபாவளி ஆடை பற்றி ஏதாவது கருத்து சொல்லமாட்டாளா என்ற எதிர் பார்ப்பு...
தொலைக்காட்சி தொடரில் கண்கள் குத்தியிருந்தாலும், ரோகினியின் பெற்றோரின் கவனம் முழுவதும் மகளின் பக்கமே திரும்பி இருந்தது.அவளின் செயலில் சத்தமிட்டு சிரிக்கவேண்டும் போலிருந்தது.
தெரிந்தே விளையாட்டு வீம்பாக கோகிலாம்மாள் வெளியே வரவே இல்லை.
முகம் சுருங்கி வீட்டினுள் வந்த மகளிடம் “எதிர் வீட்டு ஆண்டிட்ட காட்டிட்டு வா ரோகினி” கணவரின் பார்வை சம்மதத்தோடு சொல்ல, துள்ளிக்குதித்தோடும் புள்ளிமானென அப்போதே ஓடும் மகளின் ஆனந்தத்தை அவர்களும் உள்வாங்கி புன்முறுவலித்தனர்.
சிறுவயது முதல் ரோகினியைத் தெரியும். எதுவானாலும் அதுவாகவே தன்னை மாற்றிக் கொள்ளக்கூடிய இலகுவான பூத்தமுக தன்மையுடையவள். தன் மகனுக்குக் காலம் ஒத்த பொறுத்தமானவள் என்று உறுதி கொண்டிருந்த கோகிலாம்மாள் முறைப்படியான விசயங்களுக்கு நாள் பார்த்திருந்தாள்.
‘அப்பா திங்ககிழமையே கூப்பிட வாங்க' செல்பேசியில் தேவகி ‘சரிமா' ஒற்றை வார்த்தைக்கு மேல் கோபாலனால் பேச முடியவில்லை.
இருப்பவைகளை சேர்த்தாலும் மேலும் ஒரு எட்டாயிரம் தேவைப்படும். ரெங்க ராட்டினமாய் கேள்வியே அவரைச் சுற்றி வர, சோகமே உருவாகத் தாழ்வாரத்தில் ஈஸிச்சேரில் அமர்ந்திருந்தவரை நோக்கி வந்த ராபட், “கோபாலன் சார் பொண்ணு செய்முறைக்கு பணம் ஏதும் தேவைப்பட்டா கேளுங்க தர்றேன்” ஏதோ அசரீரி உணர்த்தலாக அதை சொன்னான்.
தனக்கான தேவை தானாக வருகையில் யோசிக்க என்ன இருக்கு? ஆனாலும் யோசித்தார். ராபட்டே மேலும், “மூணு நாட்களாவே உங்களிடம் இதை கேட்கனும்னு ஏதோ தோனுச்சி சார், வேணும்னா வாங்கிக்கங்க எனக்கு டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ்க்குத் திரும்பத் தந்தா போதும்.இதுலாம் ஒரு சாதாரண உதவிதான சார் ”என்றான்.
இப்படியெல்லாம் சுயம்பான உதவி மனிதர்கள் இந்த பூமியில் இருக்கப் போய்தான் இயற்கை சுழற்சி மாறாமல் இருக்கிறதோ...
இன்று தீபத்திருநாள்...
மதுரை நகர் மொத்தமும் பட்டாசு சத்தத்தில் மூழ்கியிருந்தது.
அவர் அவர்களுக்கான புத்தாடை அணிவித்தலில், இனிப்புப் பலகாரம் ருசித்தலில் மகிழ்ச்சி.
‘வள்ளுவர் குடியிருப்பு ' உரிமையாளர் தன் குடும்பத்தினருடன், இனிப்பு சகிதம் வந்துவிட்டதில் அங்கே குடித்தனக்காரர்களுக்குக் கூடுதல் குஷி...
கோபாலன், தன் மகளுக்கும் மருமகனுக்கும் செய்முறை செய்தபோது, அவர்களும் பதில் மரியாதையாக, ‘ பணமாக தந்தால் அப்பாவுக்கு பெரிய உதவியா இருக்கும் ' தேவகி கேட்டுக் கொண்டதன் பேரில், வெத்திலை,பாக்கு, பழங்களுடன் ஜந்தாயிரத்தி ஒன்று பணமும் வைத்து நீட்டவும், ‘உயர்வான மாப்பிள்ளை ' என நினைத்து நெகிழ்ந்து போயினர், கோபாலனும் லட்சுமியும்.
அப்பாவின் படத்துக்கு முன் வைத்திருந்த செயினை எடுத்து அம்மா கையில் கொடுத்தான்,மோகன். ‘உங்க மகனைத் தரமா ஆளாக்கிருக்கேங்க...' உணர்ச்சி மேலிட அழுதேவிட்டாள் அம்மா.
அப்போது ரோகினி வந்தாள் பெற்றோருடன். கையில் தன் கைப்பட தயார் பண்ணிய, ஜீராவில் மிதக்கும் குலோப்ஜாமூன் கிண்ணம். முந்தியெடுத்து கண்களில் ஒற்றியதும், முகத்தில் சிரிப்பு கொண்டு அமர சொன்னாள். பரஸ்பர விசாரிப்புகளுக்கு ஊடே, மோகன் ரோகினி விழிகள் கலந்து கவி பாடிக் கொண்டிருந்தது. குலோப்ஜாமூன் கொடுத்தாள்.
வாயிக்குள் போடும் முன்பே ‘ம்... சூப்பரா இருக்கு' அவசரமாய் மோகன் கூற, ஆனந்தச் சிரிப்பொலி குறைய கொஞ்சம் நேரம் பிடித்தது.
அவர்கள் எடுத்திருந்தால் கூட அவ்வளவு விலையில் ரெடிமேட் எடுத்திருக்க மாட்டார்கள். தனது வீட்டிற்கே நான்கு குழந்தைகளையும் அழைத்துப் புது ஆடைகளை போட்டுவிட்டு, மணக்க மணக்க ஆட்டு இறைச்சிப் பிரியாணி செய்து சாப்பிடக் கொடுத்து யூசுப் பாய் அசத்தி விட்டார்.
பட்டுச்சேலை கிடைத்த துள்ளலில், ராபட்டுக்கும், கார் வைத்திருக்கும் ஸ்டீபனுக்கும் தங்கள் வீடுகளில்தான் இன்று மூன்று வேளை சாப்பாடு என அன்புக்கட்டளை அறிவித்தனர் பென்னர் கம்பெனி ஊழியர் துணைவியர்கள்.
‘வள்ளுவர் குடியிருப்பு ' பில் வசிக்கும் எங்களைப்போல் எல்லா மனசுகளும் மத்தாப்புப்பொறியாக மின்ன வேண்டுமென அனைவரும் ஒன்றாக நினைக்க, வானத்தில் வண்ணமயமான ஜொலிப்பு பரவியது.