‘அப்பா சீக்கிரமா வாங்க என்னால பொறுத்துக்க முடியல உங்கள் தாமதம் விபரீதத்தில்... விசும்பல், அழுகையின் ஊடே திக்கித்தினறிச் சொன்னதும் தொலைபேசி இணைப்பை துண்டித்துக் கொண்டாள், சுதா.
இருப்பு கொள்ளவில்லை முகுந்தனுக்கு, பதற்றம் பற்றிக் கொண்டது.
அவருக்கு சுதா ஒரே மகள், சிறு வயது முதலே தாயில்லாப் பொண்ணுனு அப்படி வளர்த்தார். அந்தத்தெரு சனமே வாயாரிப் போகும். சுதாவுக்கு அம்மா இருந்திருந்தால் கூட, முகுந்தன் கொடுத்த அன்பை, காட்டிய பாசம், அரவணப்பையெல்லாம் ஈடு செய்திருப்பது சந்தேகமே, இதை அவளே அவ்வப்போது தனக்குள் பதிவு செய்து கொள்வாள்.
காலத்தின் கடமையில் மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைக்கிறேன்னு சொந்தத்தையெல்லாம் ஒதுக்கிவிட்டு வசதியான குடும்பம், படித்த சென்னை மாப்பிள்ளை என்று மணமுடித்துக் கொடுத்தார்.
‘முகுந்தன் சார் தன் பொண்ணை உயரத்துல வெச்சுட்டார்பா...' பிறர் சொல்ல, கேட்க ரொம்ப சந்தோஷமாகத்தான் இருந்தது. எண்ணி முப்பதே நாள்... மாப்பிள்ளை மகேஷ்க்கு நிரந்தரமான வேலை, நல்ல வருமானமோ கிடையாதாம், கையில் வரும் பணம் மதுப்போதைக்கே போதவில்லையாம், சுதா ஏதாவது கேட்டால் அடிமட்ட ஆசாமியென அவளைக் கொடுமைப்படுத்தும் ரகமாம்.
கண்பார்வை துறந்த சூரியப்பார்வை நிலையாய், அப்போது விசாரிக்க, அந்தக் குடும்பமே மோசமான உறவுகள் கூடியதுன்னு சகிக்க முடியாத உண்மைகள் வெளிப்பட்டன. கல் விழுந்த கண்ணாடியென முகுந்தன் நொறுங்கிப் போனார். தனது சொந்தங்களுக்குத் தெரிந்தால் ஏளனமாகப் பார்ப்பார்கள், இளக்காரமாக சுதாவைப் பற்றிப் பேசுவார்கள். அதையே நினைத்து, நினைத்துக் கூனித்தான் போனார்.
‘சுதா ஓ தலையெழுத்து இப்படித்தான்னு இருந்திருக்கும் போது அத மாத்த நம்மால என்னமா செஞ்சிருக்க முடியும். பொறுமையா இருந்து சமாளிம்மா நாளடைவில் உன் கணவர் திருந்துவார்னு நம்பிக்கையா இரு, இது விசயமா அவர்கள் வீட்டில் பேசினாலும் பிரயோஜனமில்லைன்னு படுது, சமயம் பார்த்துத் தனிக்குடித்தனம் போக நீயே யோசனை சொல்லு நானும் அதற்கு ஏற்பாடு பண்ணுறேன் ' தந்தையின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டவளாகப் பொறுமை காத்தாள், கணவனின் கொடும் தீமைகள் தாங்கி, அப்பா இங்கே வரும் போதெல்லாம் அவர் வேதனைப்படக் கூடாதென, மகிழ்ச்சியாகவே சிரித்தாள்... முகுந்தனுக்காப் புரியாது, மகள் நெனப்பு நிஜெமென்று இருக்கட்டும் என பதிலுக்கு நடித்துக் காட்டி விட்டு, வீட்டில் வந்து தீயில் வீழ்ந்த புளுவென துடிதுடித்து கதறியழுவார்.
நாட்களின் நகர்வில் நம்பிக்கை பொய்த்துப் போனதாகவே பட்டது. அதை உறுதிப்படுத்தி விட்டது சுதாவின் தொலைபேசிக் குமுறல்...தாங்கிக் கொள்ள இயலுமா முகுந்தனால், இதோ கிளம்பி விட்டார்.
அதிகாலையில் ஆட்டோ அந்த வீட்டு முன் நின்றபோது, அங்கே நின்றிருந்த கூட்டம், சோகமயமான சூழல் எல்லாம் பார்த்து, ஒரு கனம் இருதயத்துடிப்பு நிற்க, ஓர் வித தடுமாற்றத்துடன் இறங்கிப் போனார்... ‘பைரவா... ஏம்மகளுக்கு விபரீதம் எதுவும் நடந்திருக்க கூடாது' தன் இஷ்ட தெய்வத்தை வேண்டியபடி வாசலில் நின்ற கூட்டம் விலக்கினார்.
இருதயம் மீண்டும் துடிக்க ஆரம்பித்தது.
ஹாலில் மகேஷ் கிடத்திருக்க, சுற்றி உறவினர்கள் அழுதபடியிருக்க, கணவனின் தலைமாட்டில் இறுகிப் போய் சாய்ந்திருந்த சுதாவோ தந்தையைக் கண்டதும் ஓடி வந்து கட்டிக் கொண்டு விசும்பினாள், அழுதாள்.
முகுந்தனை மொத்தமாய்க் குழப்பம் தொற்றிக் கொண்டது.
“எப்படிம்மா இது? ” ஆறுதலாக மகளின் தலையை தடவும் போதே, கேள்வி புதைந்திருந்ததை உணர்ந்து “தூக்கத்துலயே போயிருச்சிப்பா” என்றாள் முனங்கலாக.
சம்பந்தகாரர்களிடம் துக்கம் விசாரித்தார்.
“சுதாவ பாதிலயே விட்டுட்டுப் போயிட்டானே மகேஷ்... விதியோட கையில் பொம்மையா ஆயிட்டாளே...” அழுதனர்.
குழப்பம் நீங்காது இருந்த, முகுந்தன். காரியங்கள் முடியும் வரை தங்கிவிட்டார். வீடு கொஞ்சம், கொஞ்சமாக சகச நிலைக்கு வந்துவிட்டது.
மெல்ல முகுந்தனிடம் வந்த சம்பந்தியம்மாள், போலியாக முகம் மாற்றி “சுதா இங்கேயே இருக்கட்டும் எங்களுக்குப் பொண்ணா, இந்த வீட்டுக்கு ஒரு தலைமையா...” அவளை மேலும் தொடரவிடாது கையமர்த்தியதும்,
“இல்லங்க என்னோட பொண்ண நானே கூட்டிப்போறேன். இங்க அவ இருந்தானா மாப்பிள்ளையோட ஞாபகம் நிறைய துயரத்தை கொடுக்கும். சுதாவோட துர்பாக்கியத்தை பார்த்துப் பார்த்து நீங்க வேதனைப்படுவீங்க. நான் அங்கே தனியாளாத்தானே இருக்கேன் கடைசி வரைக்கும் எனக்கு மகளா இருக்கட்டுமே” என்றார்.
தந்தையிடமிருந்து இப்படியானதொரு முடிவுதான் வரவேண்டுமென நினைத்திருந்த சுதாவுக்கு நிம்மதி. கொண்டு போனதையெல்லாம் எடுத்து ‘மனைவி ' என்ற தகுதியை மட்டும் விடுத்து, பிறந்த இடத்திற்கே வந்த மகளுடன், பூமாலை போட்ட தன் மனைவியின் படத்துக்கு முன்னால் நின்ற முகுந்தன் ‘பாத்தியா நம்ம மகளோட கதிய...' நிறைய அழுதபின்.
“சுதா என்னமா நடந்துச்சி..? ” கேட்டார்.
‘மனுஷங்களே இல்லப்பா அவங்க. வாழப்போன முதல்நாளே அத அனுபவிச்சிட்டேன். வெளிய சொல்ல முடியாத அத்தனை வலிப்பா. பொறுமை மீறிய கட்டத்துல உசுர விட்ருரலாம்னு வெறுத்த நிலையில் உங்களுக்குப் போன் பண்ணினேன், திடீர்னு உள்ளுக்குள்ள ஒரு பொறி... அப்படி நாம போயிட்டா இவன் இன்னொரு பொண்ணோட வாழ்க்கையைச் சிதைக்க புது மாப்பிள்ளையா மாறிடுவான். அது கூடாது என்றுதான் உயிரோட இருக்க தகுதியற்ற நீசனின் பிராந்திப் பாட்டிலில் விஷத்தைக் கலந்து வெச்சிட்டேன். வழக்கம் போல குடிச்சான் என்னை அடிச்சான், குடும்பமே வேடிக்கைப் பார்த்தது... படுத்தான் காலையில் எனக்கு அவனிடமிருந்த நிரந்தரமான விடுதலை, இது கொலை இல்லப்பா வதம்...' அனைத்ததையும் தனக்குள்ளேயே புதைத்து, “அதான் சொன்னேலப்பா ” என்றாள்.
மகளை மேலும் வற்புறுத்தாது, ‘இனி நாம்தான் மகளுக்கு ஆறுதல் ' என நினைத்தார் முகுந்தன்.