அலுவலகம் மொத்தமும் சலசலத்துப்போயிருந்தது. பணி செய்வதை நிறுத்திவிட்டு, ஆளாளுக்கு சக ஜோடிகளை சேர்த்துக் கொண்டு தத்தமது கற்பனைகளுக்கு ஏற்றாற் போல் புள்ளி வைப்பதும். கோலமிடுவதுமாயிருந்தனர்.
“சார், நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மையா..?” பான்பராக் கரைதெரிந்த பல்வரிசை காட்டிக் கேட்டார் காசாளர்.
இதற்காகவே காத்திருந்தார் போல், தன் மூக்குக் கண்ணாடியைக் கழட்டிச் சட்டை முனையில் துடைத்துக் கொண்டே “ரெண்டு பேரும் சேர்ந்துபோனா உடனே தெரிஞ்சிருமுனுதான் முந்தாநாள் லீவெடுத்துப் போயிருக்கா நிர்மலா. கதிரு, நேத்து
எடுத்துருக்கான். கன்றாவி செய்தி... அதுக எங்கபோயி கும்மாளம் அடிக்குதுகளோ... ” என்றார் தன்னோட வயது தகுதி அறியாது.
“ச்சே, வேலைய விட்டு நீக்கிய மேனஜரால ஆபீஸ்க்கு ஆடிட்டிங் வரப்போகுதுனு முதலாளியே ஆட்டம் கண்டு இருக்காரு இந்த நேரத்துல அதே பிரிவைச் சேர்ந்த ரெண்டுகளும் கேவலச் செயலைப் பண்ணிருச்சிகளே... ஏதோ அப்பப்ப ரகசியமா பேசிக்கிட்டு இருப்பாக, ஆனா இந்த ஒரு மாசமா ரொம்ப ஒட்டுதலாத்தான் நடந்துக்கிட்டாங்க... அது இப்படி ஓடிப்போவதற்கான திட்டம்னு தெளிவா தெரிஞ்சிருச்சி” மாலதியும் சேர்ந்து கொண்டாள்.
“நான்தான் முதலாளிட்டெ இந்த காதலப்பத்தி சொல்லிருந்தேன் அவர் நம்பல இப்ப...” நாடக வருத்தத்துடன் காசாளர்.
“கம்பெனி கணக்கை நேர் செய்ய வேண்டியவங்களே காணாமல் போயிட்டாங்க, ஆடிட்டிங் வந்தா நம்மபாடு திண்டாட்டம்தான்” பொய்யாகச் சலித்தவாறே, “ஏம்மா ராகவி ஓங்கூடத்தானே நிர்மலா நெருக்கமா இருப்பா எந்தக் கோயில், இல்ல ரிஜிஸ்ட்ரார் ஆபீஸ்னு தகவல் சொல்லிருப்பாளே, ஏனா...தொனை இல்லாம கத்தரிக்கா காதல் வராதாமே...” மூணாவது டேபிளில் வேலையாயிருந்தவளை‘ நீ மட்டும் எப்படி வேலையாய்..' என்னும் பாவனையில் ராகவியை, தலைமைக் கணக்கர் வம்புக்கிழுக்க, அவள் முறைக்கவும்.
“முதலாளி வாரார்...” நடந்து கொண்டே எச்சரித்த பியூன், பைல்களுடன் கேபினுக்குள் நுழைந்தான்.
ஊழியர்களின் வழக்கமான மரியாதையை ஏற்கும் மனநிலையில் முதலாளி இல்லை. ‘நான்கு தலைமுறையாகப் பஞ்சு மில் தொழிலில் இருக்கிற சுவடே இல்லாது இருந்தோமே, இருபத்தேழு வருஷம் வேலை செய்த விசுவாசம் இல்லாம, அதன் மூலமா அடைந்த பல ஆதாயங்களை நெனச்சிப் பார்க்காம, முக்கியமான டாக்குமென்டுகளை எப்படியோ கொண்டு போயிட்டானே கெட்ட ராஸ்கல் 'தனக்குள்ளே ராஜசேகரனை கருவிக் கொண்டார்.
முதலாளி கூப்பிடுவதாக பியூன் வந்து சொல்லவும், பவ்யமாக சென்ற தலைமைக் கணக்கர்.
“சார் அனுமதிச்சீங்கனா அந்த ஜோடி மணக்கோலத்தில் எங்க இருக்காங்கனு தெரிஞ்சி இழுத்துட்டு வந்து...” முடிக்கவில்லை அவர்
“யோ வாராங்க பாருயா ” இருக்கையிலிருந்து எழுந்து, அலுவலக கண்காணிப்பு கம்ப்யூட்டர் திரையை முதலாளி காட்டவும்,தன் இமைகள் சுட்ட எரிச்சல் உணர்வில் விரித்துப் பார்த்தார்.
நிர்மலாவும், கதிரும் சேர்ந்தேதான் வந்தனர்.
ஆத்திரம் தீர மட்டும் முதலாளியைப் பேசவிட்டு, தான் கையோடு கொண்டுவந்த கோப்புகளை அவரிடம் நீட்டியபடியே “ஆடிட்டிங் இனி வராது சார், ராஜசேகரன் மேனேஜர் எடுத்துப் போன முக்கிய பைகள் இதுதான் இந்தாங்க சார்..:” என்றாள் புன்முறுவலோடு நிர்மலா.
வேகமாய் வாங்கி விரித்துப் பார்த்தார். நேர் செய்யப்பட்ட ஒரிஜினல் கணக்குகள். மனசு மொத்தமும் அவருக்கு லேசாக ஆகவும் “எப்படி நிர்மலா இதெல்லாம்..? ” ஆச்சரியத்துடன் கேட்டார்.
“அடுத்த வாரம் என்ன பொண்ணு பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வாராங்க சார், நான் வேலை பார்க்கிறேன்னுதான் ஆர்வமா வாராங்க இந்த நேரத்துல ஆடிட்டிங் வந்து நடக்க கூடாதது நடந்து, நான் சும்மா வீட்ல இருக்கேன்னு கேள்விப்பட்டா... எல்லாம் போச்சு அவங்க அப்படியே திரும்பிப் போயிருவாங்க. அத யோசித்து ,
விசயத்தை கதிர் அண்ணனிடம் சொல்லி பழைய மானேசரை நேரில் சந்திக்கப் போனோம்.
“ஆமாம் சார் நிர்மலாவோட இக்கட்டான நிலைமையை எடுத்துக் கூறவும், ‘ முதலாளி மேல உள்ள கோபத்தில், ஏதோவொரு காரணத்துக்காக கொண்டு வந்த இந்த கோப்பால ஒரு பெண்ணோட திருமண வாழ்க்கையே கேள்விக் குறியாக வேண்டாம், என்னோட மனச திருத்திக்கறேன் 'ன்னு உடனே பைகளை எடுத்துக் கொடுத்துட்டார்.
தொடர்ந்து இதை கதிர் தெளிவாக கூறிய பிறகும் “இத சொல்லிட்டே...” தலைமைக் கணக்கரை மேலும் பேசவிடாது, “முதலாளிட்ட சம்பளத்தை வாங்கிக்கிட்டு அதையும், இதையும் ராஜசேகரன் சார்ட சொல்லி கையேந்தரவங்க நம்ம ஆபீஸில் இருக்காங்களே...அதான், நெனச்ச முயற்சி வெற்றியடைஞ்சா வெளிப்படுத்தலாம். இல்லேன்னா கடவுள் மேல் பாரத்தை வெச்சிரலாம் என்றுதான் ரகசியமா இதில் செயல் பட்டோம் ”
“கதிர் நிர்மலா இன்றைய நிலமைக்கு நீங்க இருவரும்தான் எனக்குத் தொழில் ரீதியான கைகொடுப்பு தெய்வங்கள்...” உணர்ச்சி மேலிட நன்றி மிகுதியோடு அவர்களை ஏறிட்டுப் பார்த்ததும், சட்டென தலைமைக் கணக்கரிடம் திரும்பி ‘ நீயெல்லாம் பொறுப்புல இருக்கற பெரிய மனுஷனாயா..? சுத்தமான ரெண்டு பேரையும் ரொம்ப கேவலமா நெனச்சி பேசித் தொலஞ்சிட்டேயே...' பார்வையாலேயே எரிக்கவும், சூடுபட்ட துடிப்பில் உள் கீழுதட்டை கடித்துக் கொண்ட தலைமைக் கணக்கர் முதல் தடவையாகத் தன் தரம் தாழ்ந்த செய்லுக்கு மனம் வருந்தினார்.