இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சிறுகதை

சின்ன(த்)தாய் சிந்தனை

பாரதியான்

'ஏ டி பி காமோன்டெல்லாம் எறங்குங்க' நடத்துனரின் குரல்

“இந்தாம்மா நீங்க கேட்ட ஸ்டாப்பு இதுதான் ‘' இறங்கத் தயாரான இளைஞன் சொல்லவும், அரக்கப் பரக்க எழுந்து கொண்டாள், சின்னத்தாய். கருத்த,பெருத்த உடல்வாகு,மஞ்சளும் சிகப்பும் கலந்த சின்னாளப்பட்டி சேலை கட்டியிருந்தாள். இறுக்க கொண்டை முடிந்து நெற்றியில் அகலமான குங்குமம் வைத்து, கீற்றாய்த் திருநீருமிட்டுருந்தாள். பார்த்தவுடன் அன்யோனியம் ஏற்படுத்தும் சிரித்த முகம்.

பயணிகளை இறக்கி விட்டதும் பேருந்து கிளம்பியது.

சின்னத்தாயின் கால்கள் தரையில் பட்டதும் இனம்புரியாதொரு சிலிர்ப்பு உச்சந்தலை வரை மின்னலாய் ஓடி மறைந்தது. அந்தப் பகுதியை மொத்தமாய் நோட்டமிட்டது, கண்கள்... எத்தனை பொழுதுகள் கழித்து வந்தாலும் இது தனது இடமென கூட்டோடு சேரும் உணர்வு கொண்டாள்.

ஏதேதோ மாற்றங்களில் மறைந்து நகர்கிறது மனிதவாழ்வு, அதிலே பிரித்தெடுக்க முடியாத பழைய இணைப்பு கிடைத்தால் முதலில் கசிவது கண்கள்தான்...முந்தியெடுத்து ஒற்றினாள்.

'அடேங்கப்பா எம்புட்டு மாறிப்போயிருக்கு'

தனியாக இருந்தபகுதி இன்று தேசியசாலையை ஒட்டிய நகரின் முக்கியப் பகுதி. சின்னத்தாயின் இமைகள் ஆச்சரியத்தில் அகலமாய் அகண்டது. இருபுறமும் தகரம் வேய்ந்த சின்ன சின்ன கடைகள்தான் இருந்தது. இப்போதோ சட்டர் பொருத்திய கடைகளாக மாறியிருந்தது. வலது புறத்திலொரு அம்மன் திண்டுக்கோயில். அது, உயர்ந்த கோபுரக் கோயிலாகச் சுற்றுப்பிரகாரத்துடன் காட்சியளித்தது. அதனையொட்டிய பெரிய பொட்டலாக கிடந்த இடத்தில் மூன்று மாடிக்கட்டிடம் மேல்பகுதியில் செல் டவர்கள்.

எல்லாமே பிரமிப்பு ! ஆனாலும் அத்தனையையும் தாண்டி, அந்தத் தெருக்கோடிக்கு ஓடியது, ஒன்றை தேடியது பார்வை.

பெரிய, பெரிய பட்டியக் கல்லால் அமைக்கப்பட்ட கிணறு குப்பை மேடாக இருந்தது எத்தனை, எத்தனை மனுசங்களுக்குத் தாகம் தீர்த்து உயிர் தண்ணீர் ஊறிக் கொடுத்தது. எந்த நேரம் பார்த்தாலும் பானையும் வாளியுமா ஆள் நடமாட்டம் தெரியுமே... இப்போதோ கால நகர்வில் நாதியத்துப் போய், அடையாளச் சின்னமாகிப் போனதோ.

ஆனாலும் அங்கே எப்போதும்போல் தென்னங்கீற்றாலான டீ கடை அதே இடம்தான்... அதே இடம்தான்... அனல்காற்று சின்னத்தாயின் கண்ணுரசிப்போனது? அவமானம் நிர்வாணமாக்க, கூனிக்குறுகி நின்றிருந்தது அந்த டீக்கடை முன்தான் மறக்க முடியுமா... இல்லை மறக்கக்கூடியதா... சட்டெனத் தன்னை அரையும் கேள்விகளைத் தொடர்ந்து, முடுக்கி விட்டாற் போல் கடையை நோக்கிச் சென்று மொத்தமாய்ப் பார்த்தாள்... டீ பட்டறையில் நின்றிருந்தவனின் முகம் அவளின் ஞாபகத்தில் ஒட்டிப்போயிருக்கும் சாடையை நினைக்க வைத்தது.



''என்னம்மா டீ வேணுமா'' அவனின் குரல்

'என்னம்மா டீ வேணுமா ' ஆகாயத்திலிருந்து மீண்டுமொருமுறை குரல் ஒலித்து உயிருக்குள் போய் ஒட்டிக் கொண்ட பிரமை .அவளுக்குள்ளிருந்து இனம் புரியாத ஒன்று, மெல்லத் தலைதூக்கிக் கொக்கரிக்க ஆரம்பித்தது

''ஆமா தம்பி சக்கரை கம்மியாப் போடுப்பா '' என்றது” தன் முந்தானையில் முடிச்சவிழ்த்து, ஒரு ஐந்து ருபாய் நாணயம் எடுத்து நீட்டியபடியே கவனித்தாள். தேயிலை மாற்றி டிகாசன் வடித்தான் கடைக்காரன். உள்ளுக்குள் கொக்கரிப்பு அதிகரித்தது?

''இந்தாம்மா சுகர் கம்மி டீ '' நுரை நிறைத்த கிளாசைக் கொடுத்ததும், நாணயத்தை வாங்கிக் கல்லாவில் போட்டுக் கொண்டான். கையிலிருந்த கிளாஸ் கங்காகச்சுட்டது... டீயின் சூட்டை அவள் உணரவில்லை, மனசுக்குள்ளிருந்து அணைக்க முடியாத ஓர் கொதிப்பது... பற்களை இறுக்கக் கடித்துக் கொண்டாள். அதே சமயம் ஏகமாய்க் கொக்கரித்துச் சில்லாட்டம் உள்ளுக்குள்.

சின்னத்தாயை உத்துக் கவனித்த டீ குடிக்க வந்தவர், ''ரொம்பச் சூடாயிருந்தா ஒரு ஆத்து ஆத்தி வாங்கவேண்டியதுதான'' என்ற போது சட்டென சுயத்துக்கு வந்தவளாய்

''அதுக்கில்லிங்க இன்னிக்கு நா வெரதம் அந்த நெனப்பில்லாம டீய சொல்லித் தொலஞ்சிட்டேன் 'ம்' அஞ்சுரூபா வேஸ்ட் '' தானாகவே கொஞ்சம் சத்தமாக முணங்கியபடி டீயைப் பக்கத்துக் குப்பைத் தொட்டியில் ஊற்றியதும் கிளாசை வைத்துவிட்டு ஓர்விதக் கம்பீரத்துடன் நகர்ந்தாள்.

அச்செய்கை கடைக்காரனுக்குச் சாதாரண ஒன்றாகத் தெரியலாம் சின்னத்தாயினுள் கொக்கரித்து ஆடுதே அதுக்குத் தெரியும் இது இறுமாப்பு என்று...நெஞ்சுக்குழிக்குள் நிரந்தரமாய் ஓர் வலியிருக்கும் அதற்கு இதுவுமோர் மருந்து தடவல் என்று...

பேருந்து இறக்கிவிட்ட இடத்திற்கே வந்தாள்.

குனிந்து கொண்டு நுழையும் குடிசைவீடு, ஓட்டுவீடுகள்தான், சாக்கடையும் சகதியுமாய்க் குப்பைமேடாக நாறிக் கிடக்கும் தெரு... இப்போதோ பெரிய பெரிய வீடுகளாகக் கண்ணுக்கெட்டிய தூரம் சிமிண்ட் சாலை. ஒவ்வொரு வீட்டின் முன்னும் சைக்கிள்,டூவீலர்கள் நிருத்தப்பட்டிருந்தன.

அது என்ன ?

'அன்னியர் யாரும் உள்ளே நுழையக்கூடாது ' அறிவிப்பு பலகை வரவேற்றது.



படித்ததும் புன்முறுவலித்தாள். தற்பெருமையானது என்றாலும், தான் சார்ந்த பிறப்புக்கு பிடித்திருந்தது.

'நாவொன்னும் ஊராத்தி இல்லேப்பா... உரிமையானவ ' வாய்விட்டுக் கூறியபடியே வெரப்பாக நடந்து போய் நாலாவதுவீட்டின் முன் திண்டில் உட்கார்ந்தாள்.

''யார்மா வீட்டுக்குள்ளே..'' கூப்பிட்டாள்

கைக்குழந்தையுடன் வெளிப்பட்ட நடுத்தட்டு வயதுப்பெண் ' யாரு ' என உற்றுப்பார்த்து, விக்கித்துப்போய் ''அய்யோ ஏரியாத்தாளே'' இடுப்பிலிருந்த குழந்தையை விசுக்கென கீழே போட்டதும் கட்டிக் கொண்டு அழுதாள். பல வருடப் பிரிவு... சின்னத்தாயும் பாசத்தில் உருகுபவள், ஒன்னுவிட்ட தங்கையின் மகளை இருக்க சேர்ந்தாள்

சொந்த,பந்தமெல்லாம் கூடிவிட்டது.

''நீ இப்ப எங்க இருக்க பெரியாத்தா ''

''மெட்ராசுல '' அழுகையின் ஊடே

''ஏத்தா எங்க ஒறவே வேண்டாம்னு இம்புட்டு நா தூர தேசத்துல தங்கிட்டீயே ''

''ஏன்டீ சிரிக்கி ஓ ஆத்தா அப்பேன் சேந்தாப்புல போய்ச் சேரவும் நாதியத்துக் கெடந்த... தூக்கியாந்து ஏதோ ஊத்துறத ஊத்தி மனுசியா ஆக்குனது நா அந்த நன்றிக்காவது இங்கிருக்கேனு ஒரு கடுதாசி போட்டுருக்ககூடாது '' தள்ளாத வயதுப்பாட்டி கம்பூன்டி வந்து ஆதங்கப்பட்டது.

''விடுங்க தொணதொணன்டு அக்காவுக்கு எதுனாலு சாப்பிடக் குடுங்க ''

''சின்னத்தாயிக்கு இத்தன காலத்துக்குப் பெறகாவது நம்மளையெல்லாம் வந்து பாக்கனும்னு தோனுச்சே அதான் ரத்தபாசம் ''

''பாத்தேல ஓமேல இந்த சனமெல்லாம் எம்பூட்டு அக்கர வெச்சுருக்காங்கனு, நாங்க என்ன பாவம் செஞ்சோம்? பொசுக்குனு ராவோடராவா போயிட்டீயே... நீ எங்க இருக்க எப்படி இருப்பேன்னுத் தெரியாம எத்தன நாள் தவிச்சுருக்கேன் தெரியுமா? ஏன் ஒரேடியா கருவருத்துப் போயிட்ட, இங்க எத்தன நல்லது நடந்தது, யாரெல்லாம் செத்துப் போனாங்கன்னு உனக்குத் தெரியுமா'' கைப்பிள்ளைக்காரியால் விசும்பலைக் கட்டுப்டுத்த முடியவில்லை.



சின்னத்தாய் !

இதே துப்பரவு தொழிலாளர்கள் காலனியில் பிறந்து வளர்ந்தவள். வயதுக்கு வரவும் தாய்மாமனுக்கே வாக்கப்பட்டு நாலுவீடுதள்ளி வாழப் போனாள்... அவனுக்கும் நகராட்சியில் தெருக்கூட்டும் வேலை... கிடைத்ததே வசந்தமென நாட்கள் கழிந்தது.

வீட்டிலேயே முடங்கிக் கிடக்க விரும்பாத சின்னத்தாயோ ஒருநாள்

''மாமா அழகக்காகூட நானும் வேலைக்குப் போகட்டா'' கேட்டாள்.

அவனுக்குத் தெரியும் அவளால் ஒரே இடத்தில் இருக்க முடியாதுன்னு. சின்ன வயது முதலே துருதுருனு அலைவா

'ஆம்பள கழுதையாட்டம் வெடச்சி திரியரா பாரு'பலரின் முணு முணுப்பு காது வந்து விழுவதுண்டு. கட்டிக்கப்போறவளாச்சேனு அவனும் அவ்வப்போது 'அடக்க ஒடுக்கமா இரு சின்னு' வைவான்

'போ மாமா..' என ஓடிப்போவாள்.

இப்போது குடும்பத்தலைவி...

தனக்குச் சரின்னு பட்டதில் நிறைய யோசித்த போது, கணவனின் குறைவான வருமானத்தில் வாழ்க்கை சீராக நகர்த்துவதென்பது சிரமம்... அவசரத் தேவை என்றால் வார வட்டிக்காரனிடம் போய்க் கையேந்தி, பல் இளிக்க வேண்டும். தவணை கட்டத் தவறினால் வாசலில் நின்று மானங்கெட்ட வார்த்தைகளைக் கொட்டுவான்...

அது கூடாது.

'அடியே சின்னத்தாயி இந்த மூக்கன் அப்புரானி நீதான் பக்குவமா குடும்பம் நடத்தனும் 'தனிக்குடித்தனம் விடும்போது எதிர்வீட்டு பாட்டியின் சொல் மனசுக்குள் 'சப்' னு ஒட்டிக்கொண்டது. அதான் வைராக்கியம்,'எந்த சந்தர்ப்பத்துலேயும் கடன் வாங்காம வாழனும்' இத, ஒருநாள் ராத்திரி புது மனைவி சொன்னது ஞாபகத்துக்கு வர ''சரி சின்னு '' என்றான்.

தகரத்திலான கூடை, தேங்கா சிரட்டை சொறுகிய நீளமான மூங்கில் குச்சு தென்னங்கீத்து கட்டைமாறு, சாம்பல் சகிதத்துடன் அழகம்மாவுடன் கிளம்பிவிட்டாள், அதிகாலைப்பொழுதோடு சின்னத்தாய்.

வீடுகளின் வெளிச்சுவரில் ஒரு தொனண்டு இருக்கும். உள் பகுதியிலிருந்து குடியிருப்பவர்கள் கழிக்கும் மலம் அதிலே கிடக்கும் அதை தினமும் சுத்தம் செய்யும் வேலைதான், அழகம்மாள் மாதிரியான காலனிப் பெண்களுக்கு.

'அழக்காகூட போறேன்னு ' சின்னத்தாய் சொன்னதன் காரணம், அது வசதியானவங்க வாழும் வீடுகள், ஏதோ காசு கொஞ்சம் கூடக் கிடைக்குமென்ற நம்பிக்கையில்தான்.

'மதுரவீரஞ்சாமீ... தொழிலுக்குத் தொனயாயிரு ' மனமுருகிக்கொண்டு, தெருவின் முதல் வீட்டுக்குப்போனாள். மூடியிருந்த தட்டியைத் தூக்கிப் பக்கத்துச் சுவத்தில் சாத்தி, தொன்டைப் பார்த்தாள். பிளாஸ்டிக் பையில் கொண்டு வந்த சாம்பல் அள்ளி உள்ளே கிடந்த மலத்தின் மேல் தூவினாள். பல நாட்கள் பழக்கப்பட்டவளாய் தகரக் கூடைக்குள் மலத்தையள்ளிப் போட்டதும் 'அம்மா தண்ணி ஊத்திவிடுங்க ' சத்தமிட்டதும் தள்ளி நிற்க, ஒரு வாளி தண்ணீர் கொட்டியது, மாறு கொண்டு அலசினாள், மறுபடியும் குடம் தண்ணீர் கொட்ட, நன்றாக அலசி, கை நிறையச் சாம்பல் அள்ளித் தூவி, தட்டிவைத்து தொண்டை மூடியதும் 'அம்மா 'என்றாள் அர்த்தமாய்!


நேற்று முன்தினம் அழகம்மாள் குறிப்பிட்ட அந்தந்த வீடுகளிலும் கடமையே கண்ணாக சுத்தம் செய்து 'அம்மா ' என்றாள்.

''நீ யோகக்காரிடீ எனக்கு கெடச்சத விட கூடுதலாப் பாத்துட்டீயே...'' அழகம்மாள் சொல்ல, பூரித்துப் போனாள்,சின்னத்தாய்.

''இதோ பாரு மாமா நீ எனக்கொரு சத்தியம் செய்யனும்''கைநீட்ட கேள்வியாக மனைவியை ஏறிட்டான்,மூக்கன்.

''கடன்னு யார்டேயும் பத்துப் பைசாகூட வாங்காதே... தெருவுல நின்னு பீடி இழுத்துக்கிட்டுத் தேவையில்லாதத பேசாதே... முக்கியமா ஒன்னு கல்லுக்கிணத்து டீக்கடைப் பக்கமே போகாதே...''

'டீக்கடைப்பக்கமே போகாதே ' மகத்துவமான சொல்லுணர்ந்து சத்தியமிட்டான்.

டீக்கடை, அந்தப் பகுதிக்கே உள்ள ஒரே களம்... ஏற்றத் தாழ்வுகள் மனுசனை அங்கேதான் தினமும் கூறு போட்டுக் கொண்டிருக்கும்! முன்பெல்லாம் காலனி சனங்களுக்குச் சிரட்டையில்தான் டீ வடித்துக் கொடுக்கப்படும், இப்போதோ தனி அலுமினிய டம்ளர்! அதைத் தானே எடுத்து, டீ வாங்கி குடித்துப் பின் டம்ளரைக் கழுவி வைத்து விட வேண்டும். அதற்கான சில்லரையைக் கூட அங்கிருக்கும் தாணியமளக்கும் உலக்கொன்றில் போடனும்.

மனிதனை மனிதனே இழிபடுத்தும் செயல்.

சின்னத்தாயைப்பொருத்தவரை பாகுபாடு காட்டும் அந்த மானங்கெட்ட ருசி தேவையில்லை என்றாள். மூக்கனும் மந்திரக் கட்டுப்பாடாய் இருந்து விட்டான். தன்னைச் சார்ந்த ஒட்டுமொத்த சனங்களுக்கும் இது சாத்தியமில்லை என்றாலும் கணவனை மாற்றியதில் அடுத்த, அடுத்த மாற்றங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துமென நம்பிக்கைப் பெருமூச்சு விட்டாள்.

அடங்கியே இருக்கனும். அப்போதுதான் ஆதிக்கம் மடங்காம இருக்குமென எழுதாத சட்டம் வைத்திருப்போர் உறுமினர்?

''டே மூக்கா, என்ன இந்தப் பக்கமே வரமாட்டேங்கர... வா கிளாச எடு டீ ஊத்துறேன் '' ஒதுங்கித்தான் போய்க் கொண்டிருந்தான்.

ஆதிக்கம் வம்பிழுத்தது.

''இல்லேங்கயா உடம்பு சரியில்ல '' அவன் தான் சின்னத்தாயின் வார்த்தையுறுதியில் இருந்தானே. கடையில் உள்ளவர்கள் விடுவதாயில்லை. எங்கே இவனைப் போல் மற்றவர்களும் விழித்து விடுவார்களோ என்ற பயம் மேலோங்க, அதிகாரத்துடன் மூக்கனை வரவைத்து, தட்டியில் சொருகியிருந்த அலுமினிய டம்ளரை எடுக்க ஆணையிட்டு விட்டனர்.

இது எப்படித்தான் சின்னத்தாயிக்கு தெரிந்ததோ கனலாய் வந்து நின்றாள்...

கணவனின் கையிலிருந்த டம்ளரை ஓங்கித் தட்டி விட்டாள்! அது கிணற்றருகில் போய் விழுந்தது, யாரும் கொஞ்சமும் எதிர்பாராத சம்பவம். அதை, கோபம் கொப்பளிக்கப் பார்த்தனர் ஆதிக்கத்தினர். காளியின் ரூபமாயிருந்த, சின்னத்தாய் '’சோத்தத்தானே திங்க இல்ல நா தெனமும் அள்ளுறத திங்கறயா?''ஆக்ரோசமுடன் கேட்டாள்.

தண்ணீரில் முக்கியெடுத்த பூனையென நடுநடுங்கி நின்றான், மூக்கன்.

நடக்காதது நடந்து விட்டதில் ஆடித்தான் போனது, ஆதிக்கம்.

'இதச் சும்மா விடக் கூடாது எம்பூட்டு தைரியமிருந்தால் நம்ம முன்னாடியே இப்படி நடந்துருப்பா கீச் சாதி நாயி ' ஒரு பெருசு மீச முருக்கியது.

'இங்கனையே இழுத்துப்போட்டு நாலுசாத்து சாத்தாம போனமே ' இளவட்டம் உறுமியது.

'நம்மளெல்லாம் பொன்டுகப்பயலுகனு அவ நெனச்சுட்டாளா ... விடக்கூடாது நாமங்கற பயம் எப்பவும் தங்கற மாதிரி எதுனா பண்ணனும் எனக்கு வந்த கோபத்துக்குப் பாயிலர் சுடுதண்ணியப் புடுச்சு சிரிக்கி மூஞ்சில ஊத்திருப்பேன் ' கடைக்காரர் உள்பட பலர் கர்ஜித்தனர்.

காலனியே கலோபரத்தில் முழிச்சிக்கிடந்தது.

''அவங்கள கேவலப்படுத்தன மாதிரி காரியத்தப் பண்ணிட்டீயே ''

''அய்யோ... கூட்டமா வந்து குடுசையெல்லாம் கொழுத்திருவாங்களே... அவங்க கைய எதிர்பார்த்துப் பொழைக்கற நமக்கு வீராப்பு தேவையா, ஏ மூக்கா உனக்கு புத்தி எங்க போச்சு மேக்குடியானவங்கள பகச்சு இங்க குடியிருக்க முடியுமா...''

சின்னத்தாயை வளர்த்தவள் புலம்பித் தள்ளினாள்.


இன்னமும் நடுக்கம் குறையாது தன் மகளை மார்பில் சேர்த்தபடி மூலையில் உட்கார்ந்திருந்தான் மூக்கன்.

''யாரும் பதட்டப்பட வேணாம் அவுக என்னதான் பண்ணிருவாங்க அதையும் பாக்கலாம் நியாயம் தர்மம்னு இருக்குல,போலீஸ்க்குப் போவம் கோர்ட்டூக்குப் போ...''அவளைப் பேசவிடாது ''அட போத்தா பைத்தியம் நீ சொல்றதெல்லாம் மேட்டுக்குடி மனுசங்களுக்குத்தான் ''தலக்கட்டுப் பெரியவர் ஆதங்கப்பட்டார்.

''அத மாத்திக் காட்டுவோம், எதுக்காக இப்படிக் குனிஞ்சிக் கிடக்கனும் ''அவள் முடிக்கவில்லை, பெருங்கூட்டம் காலனிக்குள் புகுந்து விட்டது.

நொடிப்பொழுதில் குடிசைக்குள் நுழைந்த மொரட்டு,மொரட்டு ஆளுங்க சின்னத்தாயின் கையைப் பிடித்து தரதரனு இழுத்துப் போனார்கள் மகளைத் தூக்கிக் கொண்டு, மூக்கனும் கதறியழுது ஓட, காலனி சனங்களும் அடித்துக் கொண்டு பின் தொடர்ந்தது. துரியோதனன் சபையில் பாஞ்சாலியாய் டீக்கடை முன் சின்னத்தாய் நிறுத்தப்பட்டாள்.

ஆதிக்கத்தாரின் வசவுகளைக் காது கொண்டு கேட்க முடியவில்லை. இப்படியொரு அவமானமா... அதிலும் அந்த வார்த்தை ' பிய்யள்ளி காசு வாங்கற முண்ட உனக்கு யாருடி இம்புட்டுத் தைரியம் தந்தது நீங்கள்ளாம் யாரு? சோத்துக்கு மத்ததுக்கும் நாக்க தொங்கப்போடுற நாய்க எங்கள மாதிரி ஆளுங்க 'வந்து‘ ... ... ... ... ... ... ... புரட்சி செய்றீகளோ... அறுத்தெரிஞ்சுருவோம் '

இயலாமையின் பிடியில் கூனிக்குறுகினர் காலனி சனங்கள்

அவர்களால் வேற என்னசெய்ய முடியும்.

''இந்தாடா மூக்கா உன் பொண்டாட்டி செஞ்ச தப்புக்குக் கடைக்கு முனனாடி விழுந்து கும்பிட்டு, தட்டிவிட்ட டம்ளர எடுத்தாந்து கழுவி தட்டில சொறுகவும் கூட்டிட்டுப்போ இனிமே மரியாதக் குறைவா நடந்தா ஊர விட்டே தொறத்திடுவோம் புரியுதாடா''

அந்த எச்சரிக்கையைத்தொடர்ந்து... 'சின்னத்தாயி நெடுஞ்சானாய் விழு... டம்ளரை எடு... மன்னிப்புகேளு...' ன்னு காலனியே கத்தியது

உயிறற்ற பிணமாக எல்லாம் நிறைவேற்றிய அவள் மானஸ்தி, சொந்தமெல்லாம் எவ்வளவோ ஆறுதல் கூறியும் மனசு ஏனோ அமைதியாகவில்லை. நடந்தவைகள் நெறிஞ்சியாய்க் குத்தியது. காலனி மொத்தமும் அடங்கிய பின் நடுநிசி. கொட்டக் கொட்ட முழித்திருந்த மனைவியின் தோள் பற்றி உலுக்கி ''சின்னு ஏம்மா இப்படி பித்துப் பிடிச்ச மாதிரி ஒக்காந்திருக்க'' கேட்க

''இப்பவே ஊரவிட்டு கிளம்பனும் ''பற்களை நறநறனு கடித்தாள்.

''நடு...''அவனை பேசவிடாது

''மானம்னு ஒன்னு இருக்கப்போய்த்தான் உடம்புல துணி சுத்துறம் அதுவே போன பின்னாடி நாம இந்த காலனியில் இருக்கறது அம்மனமாத் திரியறதுக்குச் சமம் தேவைக்கு மட்டும் எடுத்துக்கிட்டு புள்ளைய தூக்குயா '' உத்தரவு போட்டாள்

பிறந்து, வளர்ந்து ஒட்டுதலாகிப் போன ஊர், உயிர் சுவாசித்த பொழுதுகள் உரிமை பகிர்ந்து கொண்ட உறவுகள், எல்லாவற்றையும் அன்னியமாக்கி, ரணப்படுத்தி, நெஞ்சைக் கனப்படுத்தி அந்த இரவு அவர்களை வழியனுப்பி வைக்க, மதராஸ் பட்டணம் தாங்கிக் கொண்டது காலை விடியலில்.

“ஏத்தா மூக்கன ஓ மகள கூட்டியாரலேயா “ அப்போது தான் ஞாபகம் வந்து கூட்டத்தில் ஒருவர் கேட்க, தன்னை மெல்ல அசுவாசப்படுத்தி கொண்டு முகமலர்ச்சியைக் காட்டி

“அவங்களாம் சவுக்கியமா இருக்காங்க என்னோட சொந்தங்களே நீங்களாம் இப்படிப் பகட்டா வாழ்றதப் பாத்து நெசமாவே பூரிப்பு அடையறேன் அன்னிக்கு எனக்கு நடந்த கொடுமைய ஏனு கேட்க முடியாத ஊமைகளா இருந்தோம்”


அந்த ஞாபக சுவடு அவளை சுளீர்னு சுட, சற்று அமைதியாகி, பிறகு “ஏ மக்கா இப்ப நம்ப காலனிக்குள் ‘அன்னியர் வரக்கூடாது’ ன்னு போடு வைக்கற அளவுக்கு தைரியத்தோட இருக்கிகளே இந்த நிமிர்த்தலைத்தான் எதிர்பார்த்து வந்தேன்” உணர்ச்சி வசப்பட்ட, சின்னத்தாய் மேலும் “குனிஞ்சா கொட்றவன் முன்னாடி நாம் நிமிர்ந்தா சல்யூட் அடிப்பாங்கறத காலனி சனங்க அறியனும், குலத்தொழிலுன்னு கூடையும், கையுமா காலத்த தள்ளிறாதீக. புள்ளைகள உயர்வாப் படிக்க வைக்கனும். இத ஒரு இலட்சிய நெருப்பா நெஞ்சில எறிய விடுங்க” இன்னும் கனல் வெளிப்பாடாக நிறைய பேசினாள். அவளின் ஒவ்வொரு வார்த்தையிலும் தான் முன்னேறி வந்ததன் படிமம் தெரிந்தது. காபி கொடுக்க, ரசித்துக் குடித்தாள்.

“எதுக்காகவும் யாரிடமும் கையேந்த கூடாது, நமக்கானதை நாமே பூர்த்தி பண்ணிக்கனும் அப்பத்தான் வைராக்கியம் உயர்த்தி விடும்” என்றாள் சத்தமாக.

“சரியாத்தா வீட்டுக்காரரும், மகளும் எங்க?” மறுபடி, மறுபடியுமான அந்த கேள்விக்குச் சட்டென எழுந்து நின்று, “வார சுதந்திர தினம் அன்னிக்குத் தொலைக் காட்சி பாருங்க” புதிர் போட்டதும்

“உங்க எல்லாரையும் பாத்ததுல வாழ்நாள் சந்தோசமா நெஞ்சுக் கூட்டுக்குள்ள வச்சுக்குவேன். மறுபடியும் குடும்பத்தோட சந்திக்கிறேன். ஞாபகம் இருக்கட்டும் பல்லக் காட்டி ஆதாயம் தேடுறத வெளையாட்டாக் கூட நெனைக்காதீங்க... இந்தச் சமுதாயத்தட்டுல சமநிலைக்கு நாமளும் வருவோம்னு உறுதியெடுத்துத்தான் நாட்களை நகர்த்தனும்” சிலரின் அலைபேசி எண்களை வாங்கிக் கொண்டு, கிளம்பியவளை சின்னத்தாயா... இவள் ? உறவுகள் இமையாடாது ஆச்சரியம் கொண்டனர் !

ஆமாம். பட்டணம் சென்றதும் மூக்கன் சுமைபணி வேலைக்கு சென்றான். சின்னத்தாயோ மீன் வியாபாரம் செய்தாள். மகள், அமுதா பள்ளிக்கு செல்ல, கல்வி அவளை மொத்தக் குத்தகைக்கு எடுத்தாற்போல் அனைத்து நிலைகளிலும் முதல் மாணவியாக வந்தாள் !

தான் பிறந்த மண்ணிலிருந்து அவமானப்பட்டு வந்ததன் கொடிய வலி ஒருவிதத் தூண்டுகோல் ஆனது, தாயின் இலட்சியமாய் உயர் படிப்புகளின் உச்சியைத் தொட்டாள்.

காலத்தின் சுழற்சியில் சாமான்ய மனுசியின் சாதனை பதிவாகி விட்டது?

ஜ.ஏ.எஸ் தேர்வானவர்களில் தமிழகத்தின் முதல் இடம் பிடித்த பெண் அமுதா !

மகளை வாரியணைத்து உச்சி முகர்ந்தனர் சின்னத்தாயும்,மூக்கனும்.

அன்று ஆகஸ்ட் 15

தனியார் தொலைக்காட்சியின் சுதந்திரதின சிறப்பு நிகழ்ச்சியில் ‘சாதனைப் பெண்கள்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. பார்வையாளர் பகுதியில் பட்டுச்சேலை தகதக்க,சின்னதாய்,வெள்ளை வேஸ்டி வெள்ளைச் சட்டையில் மூக்கனும் பூரித்த முகங்களோடு அமர்ந்திருந்தனர்!

அமுதாவின் நேர்கானல்...

‘எவ்வளவு கீழிருந்தாலும் தன்னை மேம்படுத்திக்கொள்ள ஒவ்வொரு இளைய தலைமுறையினரும் நம்பிக்கையுறுதியை மனதுக்குள் நங்கூரப்படுத்திவிட வேண்டும். இயலாமையில் ஒரு கனம் கூட எண்ணங்கள் தள்ளாடாமல் மிக கவனமுடன் பயணப்படனும் என்பதை என் தாயிடமிருந்து கற்றதுமில்லாது, அதை ஆணித்தரமாகக் கடைப்பிடித்தேன். வெற்றியோட இலக்கையும் தொட்டுள்ளேன்”

கூர் தீட்டும் சானை தீப்பொறியென நேர்காணல் தொடர்ந்தது...

அலைபேசியில், சின்னத்தாய் சொல்லி இருந்தாள்... எல்லாம் பார்த்து கேட்டுக் கொண்டிருந்த காலனி சனங்களின் மனசுகளில் ‘நாமும் சமூகதளத்தில் சரி நிகராவோம்’ என்ற விதை பதியமாகிக்கொண்டிருந்தது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p221.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License