அரசு மருத்துவமனை, அறுவை சிகிச்சைக்காகக் காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் மூர்த்தி கடைசிப்பெட்டில் படுத்திருந்தான். காலை உணவு கொடுத்திருந்த செல்வி,கொஞ்சநேரம் கடக்கவும் கணவனுக்கான மருந்து, மாத்திரைகளை எடுத்து வைத்ததும் ‘என்னங்க எழுந்து உக்காருங்க' என்றாள்.
சிரமப்பட்டு எழுந்தமர்ந்து, நிறைய மூச்சிரைக்க “இன்னிக்கு வருவாரா செல்வி...” கேட்டான்.
“ரெண்டு நாளைக்கு அவர் லீவாம்” என்றவளின் கையிலிருந்த மாத்திரையை வாங்கி வாயில் போட்டதும் தண்ணீர் ஊற்றி முழுங்கி, தன்னை சற்று ஆசுவாசப்படுத்தி “அந்த டாக்டர் ஏதோ பேசனும்னு சொன்னாரே”
“அதான் எனக்கும் மனசு படபடனு இருக்குயா... நர்சு பொண்ணுட்ட கேட்டதுக்கு தெரியலயேன்னு சொல்லிருச்சு” என்றதும் மருந்தைக் கொடுக்கவும், இரண்டாம் நிலை மருத்துவர் வந்தார்.
அந்தந்த பெட்டில் உள்ள நோயாளிகள் சாய்ந்தும், நிமிர்ந்தும் தயாராகிக்கொண்டனர். முடியாதவர் படுத்தே கிடந்தனர்.
வழக்கம்போலவே மூர்த்தியிடம் கடைசியாக வந்ததும், “என்ன மூர்த்தி இரவு நல்ல தூங்குனீங்களா..?” கேட்கவும்
“எங்கையா ஒரே பொழம்பலு” செல்விதான் பதிலளித்தாள்.
“இதோ பாரும்மா பெரிய டாக்டர் ஒரு விசயம் சொல்லச் சொன்னார் மதியம் ஒருமணிக்கு வந்து பாரு” ஊசிகுத்தும் போதே மெல்லமாய் கூறியதும், ‘நர்ஸ் மறக்காம இவங்களை என் ரூம்க்கு கூட்டியாம்மா ' என்றதும் நகர்ந்துவிட்டார்.
நேத்து ராத்திரி தூங்குவதற்கு முன் மாடசாமியண்ணன் சொன்னதுதான் காரணமாக இருக்குமோ...?
‘ம் இந்த சீக்கெல்லாம் நமக்கேன் வரனும்...' வேதனையின் அழுத்தமுடன் பெருமூச்சை வெளிப்படுத்தினாள்.
எப்போது ஒருமணி வருமென காத்திருந்து, அழைத்துப் போனாள் நர்ஸ். செல்விக்குள் சுடுதலில் விழுந்த துடிப்பில் ‘மாரியாத்தா...' மனமுருகிக்கொண்டாள்.
“இந்தாம்மா உன் வீட்டுக்காருக்கு ஆப்ரேசன் வரிசை வர இன்னும் ரெண்டு மூனு வாரம் ஆகும். இப்போதைக்கு ஏதோ கவனித்து, வீட்டுக்கு அனுப்பிருவாங்க தெரியுமுள்ள...”
“ஆமாங்கையா”
“மூர்த்திக்கு உடனே ஆப்ரேசன் செஞ்சாகனும் நம்ம பெரிய டாக்டர் அண்ணாநகர்ல இந்த மாதிரியான கேசுக்குன்னே நவீன ஆஸ்பத்திரி வெச்சுருக்கார் அங்கபோனா சீக்கிரமா குணமாகிடும் அதசொல்லத்தான் வரச்சொன்னேன்”
மாடசாமியண்ணன் அவள் ஞாபகத்தில் வந்துபோனார்.
“நெறைய பணம் வேணுமேய்யா...” இயலாமை கேள்வி
“கடன உடன வாங்கித்தான் பாக்கனும் இங்கயே காத்திருந்து நோய அதிகப்படுத்துறதுக்கு நம்ம டாக்டரிடம் போனா தெள்ளத் தெளிவா வைத்தியம் செஞ்சிருவாரு அப்புரம் உன் வீட்டுக்காரர் வழக்கம்போல வேலைக்குப் போகலம். இதோ பாருமா கட்டாயம் கிடையாது மூர்தியோட உடல்நிலை உணர்ந்துதான் இதை சொல்றோம்” அரசு மருத்துவமனையில் இப்படித்தான் இருக்கும் வெளியிலிருக்கும் எங்களிடம் வாங்க... என நாசுக்காகப் புள்ளி வைத்தார்.
சத்தமிட்டு அழவேண்டும் போலிருந்தது,செல்விக்கு. சட்டென துவண்டு விட்டாள். நர்ஸ் ஜாடை காட்டவும் சுயமற்றவளாய் வெளியேறினாள்.
“குடிக்காதே... குடிக்காதே... ன்னு தலையா அடிச்சனே ஒத்தநா கேட்டிருப்பேயா இப்ப பாரு ஓங்சீக்குக்கு ஏலம் நடக்குது. ஒண்ணுமில்லாத இந்த சிரிக்கியால என்ன பதில சொல்ல முடியும்... ஊமையா வரத்தான் முடியும்” விசும்பலைத்தொடர்ந்து வாய்விட்டு அழுதாள்.
வெம்பிய காயாக ஒருக்கழித்துப் படுத்திருந்த மூர்த்தியின் கண்களில் சாரை சாரையாய் நீர்க்கசிவு...
இப்போது அவனால் வேறு என்ன செய்ய இயலும்.
கடைத்தெருவில் சுமைப்பனி உழைப்பில் நல்ல வருமானம் கிடைத்தபோதும் அதைச் சிறிய அளவில் கூட சேமித்து வைக்கத் தோனாது, கையில் பணம் உள்ளதென அப்படியொரு செலவு... பக்கத்தார், செந்தக்காரர்கள் ஏதாவது அறிவுரை கூறினால் அவ்வளவுதான் எடுத்தெரிந்து அவர்களை பேசிவிடுவான். நாளடைவில் ‘நமக்கேன்' என உறவுகள் ஒதுங்க, சகவேலையாட்கள் கிடைத்தவரை யோகமென கூட்டு சேர்ந்து ஆடினர்.
மூர்த்தியை நோய் தொட்டபோது, அண்ணே...அண்ணேன்னு ஒட்டிக்கொண்டிருந்தவர்கள் கண்டுகொள்ளாது இருந்துவிட்டனர்.
போதையில் வந்து எத்தனை தொல்லை தந்திருந்தாலும் இன்று பக்கத்தில் துணையாயிருப்பது மனைவி மட்டுமே...
செல்விக்கு இரவு வந்ததே தெரியவில்லை, பக்கத்துப் பெட்டு நோயாளிகளை யாராவது பார்க்கவந்தால் அவர்களுடன் இவளும் சகசமுடன் பேசிக்கொண்டிருப்பாள், அதிலே ஒரு ஆறுதல்... ஆனால் இப்போதோ மருத்துவர், மதியம் கூறியிருந்ததுதான் அவளின் மனமெங்கும் கனமாயிருந்தது.
தன்னால்தானே மனைவி மொத்தமா இடிவிழுந்த மரமாய் வருத்தமுடன் இருக்கிறாள்னு மூர்த்தியோ அப்படியே கண் அசந்து போனான்.
சட்டென ஞாபகம் வந்தவளாய் அரக்கப்பரக்க எழுந்தவள் உறங்கும் கணவனைக் கண்டு ஒருகனம் ஆடிப்போனாள்... ‘அய்யோ... சீக்குக்கார மனுசனாச்சே ‘ச்சே’ இப்படி வயித்துக்கு கொடுக்காம மருந்து,மாத்த்ரை முழுங்காமக் கூடத் தூங்கிப்போச்சே... ம்...எனக்கு புத்தி பேதலிச்சிப் போச்சு' பதறிக் கொண்டும் புலம்பிக்கொண்டும் கண்ணனின் தோள்பற்றி உலுக்க, ஈரக்கண்களுடன் திரும்பினான். மனைவி பார்க்காதபடி துண்டால் ஒற்றினான்.
“ஏய்யா நீயாவது ஒருவார்த்தைக் கேட்டிருக்கக் கூடாது ” என்றபடியே தட்டில் இட்லி வைத்துக் கொடுத்தாள். பாட்டில் தண்ணீரை ஊற்றி ஜன்னலுக்கு வெளியே கைகளை நீட்டிக் கழுவியதும் சாப்பிட்டான். அப்போதுதான் பக்கத்துப்பெட்டை கவனித்தான்... காலியாயிருந்தது.
இருந்த பெரியவர் வசதியானவர்கள்போல், கால்பெருவிரலில் புண். சக்கரை வியாதிக்காரர் என்பதால் நீண்டநாட்களாய் ஆறவில்லையாம் அவர்கள் வசதிக்கு அண்ணாநகரிலுள்ள அப்போலோ மருத்துவமனையிலேயே பார்க்கலாம்தான்... பழமையில் ஊறிப்போனவர்
‘இது ஆறாத புண் தேவையில்லாம பணத்தைச் செலவு செய்ய வேணாம் அரசு மருத்துவமனையிலயே காட்டாம்' என்றார்.
இந்தியன் வங்கியில் கேசியர் பணியிலிருக்கும் மகன் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தார்... அவரோ பிடிவாதமாக, தானாகவே வந்துவிட்டார்.
பெரியவரின் தோற்றமே வைத்தியம் பார்த்த மருத்துவரை வசப்படுத்தியது போல் ‘அய்யா நாலு நாட்கள் அதிகம் நடக்காமல் விரல் கொஞ்சம் அசைவில்லாமல் இருந்தாலே பட்டுப்போல் புண் ஆறிடும்' என கூறிக்கொண்டிருக்கையில் அரக்கப்பரக்க அங்கே வந்த மகன்,
‘டாக்டர் சார் இவர் என்னோட பாதர்...' என்ற வார்த்தையில்
‘இங்கலாம் வேண்டான்னு சொன்னாக் கேட்ட மாட்டேங்கிறார் ' என்கிற அர்த்தம் பொதிந்திருந்தது.
“டே ராகவா நான் உன்னோட அப்பாதானான்னு உறுதிமொழியா டாக்டர் கேட்டார். இதோ பாருடா நீ கிளம்பு நான் பாட்டுக்கு ஓய்வா இங்கே இருக்கேன்”அவரின் வார்த்தையில் பிடிப்பு,தெளிவு தெரியவும். மருத்துவரும் அவருக்கே சாதகமாகப் பேசவும் ராகவன் கிளம்பிவிட, மனதில் இனம் புரியாதவொரு சந்தோசம் கொண்டவராய் தங்கிவிட்டார்.
மூர்த்தி பெட்டிற்கு பக்கத்துப்பெட்.
முற்போக்குத்தனமான தந்தை, எங்கே வாரக்கணக்கில் மருத்துவமனையில் தங்கிவிடுவாரோ என கவலையாயிருந்த ராகவனுக்கு, மூன்று நாட்களில் அவர் திரும்பியிருந்ததில் பெரிய மகிழ்ச்சி... உண்மையிலேயே அன்பு, மரியாதை.
மருமகள் கொண்டுவந்து கொடுத்த காபி.காலை தினசரி இரண்டையும் வாங்கியதும் ‘கீதா, ராகவனைக் கொஞ்சம் இங்க வரச்சொல்லும்மா ' என்றார்.
அடுத்த சற்று நிமிடத்தில், ‘என்னப்பா...'ன்னு ராகவன் வந்து நிற்கவும்
“எனக்கொரு உதவி செய்யனுமேப்பா...”
“சொல்லுங்கப்பா...”
“நீ என்ன பார்க்க வந்தப்போ பக்கத்து பெட்டில் இருந்த பேசன்ட கவனிச்சிருப்பயே”
“ஆமாப்பா அவருக்கென்ன...”
“அந்தப் பையன் பேரு மூர்த்தி அவனோட ஆப்ரேசனுக்கு நீ பணம் கொடுக்கனும்”
எதுவும் பேசாதிருந்தான், ராகவன்.
“பாவம்,ஏழக்குடும்பம். அவன் பிழைச்சாத்தான் பென்டாட்டி, புள்ளைகளுக்குத் துணையாம். பெரியாஸ்பத்திரியில் என்னத்த கவனிப்பாங்க ஏதோ ஒப்புக்கு வைத்தியம் பார்த்து வீட்டுக்கு அனுப்பிருவாங்க”
‘அதுக்காக?' என்பதாக மகன் ஏறிட்டுப்பார்க்கவும்
“நாம உதவினா தனியார் ஆஸ்பத்திரிக்குப் போவான் சீக்கிரமா குணமாவான் குடும்பம் மொத்தமும் புது வாழ்வுபெறும் என்னப்பா சொல்ற..?” கேட்டார்
அப்போதும் மகன் யோசனையில் இருக்க...
“ராகவா நமக்கு இப்ப ஒரு ஜம்பது, அறுபது ஆயிரம் உதவி பெரியவிசயமில்லை தாராளமாச் செய்யலாம். எனக்கென்னமோ சொல்ல முடியாத உறுத்தல்... அதுவுமில்லாம நமக்கு எந்த வகையிலும் சம்மந்தமே இல்லாத மூணாம் மனுசங்களுக்கு இப்படியாக செய்யும் உதவியால் அவங்க அடையும் வெளிப்படையான சந்தோசங்கறது அனுபவ சுயம்புமாதிரிப்பா... யோசனை பண்ண ஒன்னுமே இல்லை என்னோட கால்புண்ண சரி பண்ணனும்னா உடனே நீ எவ்வளவுபணம் வேணும்னாலும் செலவழிப்பே இல்லையா வாழ்க்கையோட முக்கால்வாசிப் பாதையைக் கடந்த எனக்கு பணவிரையத்தில் உடன்பாடில்லை அதனாலதான் பெரிய ஆஸ்பத்திரிக்கு போனேன். ஆனா வாழ்க்கையோட முதல் படியில் இருக்கும் மூர்த்தி குணமானா அதுல ஒரு அர்த்தமிருக்கும்”
கண்டிப்பாக உதவனும்பா... என்பதாக இருந்தது தந்தையின் வார்த்தைகள். மனைவி கீதாகூட ஜாடைப் பார்வையிலேயே ‘உதவலாங்க...' என்றாள்.
விசயத்தைக் கேள்விப்பட்டதும் சட்டென நெடுஞ்சானாய் பெரியவரின் கால்களில் விழுந்துவிட்டாள்,செல்வி. காய்ந்த ஓடையில் வெள்ளப்பெருக்கென தன்னிலை மொத்தமும் குளிர்ந்து, உருகிப்போய் கண்ணீர்மல்கக் கைகூப்பினாள்.
மூர்த்தியின் அருகில் சென்ற, ராகவன் “கவலைப்படவேண்டாம் மூர்த்தி உன்னோட நிலமை, உன் மனைவியோட பரிதவிப்பு, சின்னப்புள்ளைகளோட பரிதாபம் எல்லாமே அப்பா மனச தொட்டுருச்சு அதான் இந்த உதவி. நாளைக்கே டிஸ்சார்சாகி டாக்டர் சொன்னபடி அண்ணாநகர் கிளினிக்குளேயே அட்மிட்டாயிரு... எல்லாவிசயமும் டாக்டரிடம் பேசி அட்வான்ஸ் பணமும் கட்டிட்டேன் வேற தேவையென்றாலும் சொல்லு உதவுறேன்” என்றதும் தன் தந்தையின் பக்கம் திரும்பி
“இப்ப சந்தோசமாப்பா...” புன்னகையுடன் கேட்டான்.
அந்தக் கேள்விக்கு பதிலாக, வார்டில் உள்ள நோயாளிகள் மற்றவர்கள் அனைவரும் நன்றி கூறினாற்போல் எழுந்து நின்றனர்... கரங்கள் கூப்பியிருந்தது.பெருமிதத்துடன் மகனின் கையைப் பற்றிக்கொண்டார் பெரியவர்.
ஈரம் இன்னமும் இங்கே உள்ளது.