காலம் எப்பொழுது யார் மீது ஈர்ப்பை ஏற்படுத்தும் அல்லது குறைக்கும் என்று சொல்ல முடியாது. சில நேரங்களில் மழை காதலை அதிகப்படுத்தும் காரணி ஆகி விடுகிறது. அதிலும் ஒருபடி மேலே மழை நாளில் குடை அறியாத ரகசியங்கள் ஒன்றும் இல்லை என்றும் கூறலாம். மழையில் குடை காதலர்களின் அந்தரங்கத் தோழனாகிறது. மழை நாளில் ஒரு குடையில் இணைக்கப்பட்ட காதல் உயிர்கள் வெளியில் மழையின் குளிரை மறந்து வெப்ப சுவாசம் கொள்கின்றனர்.
இன்றும் இரு உயிர்கள் மழைக் காலத்தில் குடைக்குள் இழுக்கப்படுவதைப் போல காதலுக்குள்ளும் இழுக்கப்படுகின்றனர். அதுவரையில் ஏதோ சின்ன காரணம் பற்றி விலகியிருந்தவர்கள் குடைக்குள் வந்ததும் காதல் மழையில் திகட்டத் திகட்ட நனையத் தொடங்கிவிடுகிறார்கள்.
இப்படித்தான் பார்வையில் மட்டுமே பிடித்திருப்பதையும், விரும்புவதையும் ஒரு நாடகம் போல தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்த காதல் மலராத இதயங்கள் அந்த மழையில் காத்திருந்தது. முதுகலை வகுப்பில் கருத்தரங்கம் இந்த நான்கு நாட்களாக, வருகை அவசியம் என்பதாலும் தலைப்பு சிறந்த தலைப்பு என்பதாலும் நவீனம் குறித்த கடைசி நாளின் விவாதம் என்பதாலும். அன்றைய நாள் தீப்பொறி விவாதங்களோடு இந்த 5 மணியையும் தாண்டி 5.30 ஐத் தொட்ட பிறகு. மேலும் விவாதிக்கலாம் மற்றுமொரு நாள் என்று சொன்னதன் பின்னேதான். அனைவரும் கைக்கடிகாரத்தையே கவனித்தார்கள்.
இறுதி நாளில் விவாதம் என்பதால் பயின்றதெல்லாம் பயன்தான் என்று தோன்றிற்று. எல்லோருக்கும் அந்தத் தலைப்பில் விவாதிக்க ஏதோவொன்று இருந்தது. இப்படியாக நிறைவு பெற்ற கருத்தரங்கின் இறுதி நாளில் தான் நல்ல மழை. அடுத்தவர் முகம் தெரியா மழை. அனைவரும் வீடு திரும்பும் நேரம். கழிவறை பயன்படுத்தப் போன நேரம் பார்த்து அனைவரும் கிளம்பிவிட, மழை வலுத்திருந்தது.
பல்கலைக்கழக வாசலில் யாருமின்றி தான் மட்டும் நின்றாள் மேகலை. மழையும் அதிகமாகி இருளும் கூடக்கூட கடைசி நிமிடத்தில் தன் பேருந்தை விடப்போகும் பயமும் அவளை அலைக்கழிக்க ஆரம்பித்தது. கையில் குடையில்லாத நாளில் வெளுத்து வாங்கும் மழையிடம் கோபித்துக் கொண்டாள். மனதுக்குள் செய்வதறியாமல் பதட்டம் மேலெழுவதும், கொஞ்சமும் கருணை காட்டாத மழையிடம் கோபித்துக் கொள்வதும் என்று உதட்டுப் பிதுக்கலிலும் அதனை கை நீட்டித் திட்டுவதிலும் நேரம் போய்க் கொண்டிருந்தது அவளுக்கு.
அப்பொழுதுதான் கொட்டும் மழையிலும் கரையாத ஞாபகமாய் அவன் முகம். நான்கு வருடங்களாய்த் தெரியும். நட்பு தான். இப்பொழுது ஆறு மாதங்களாக பேச்சு வார்த்தை கண்களில் தொடங்கி நாளும் நாளும் கண்களில் முடிகிறது. மறுநாள் மீண்டும் தன் நண்பர்களுக்குப் புலப்படா வண்ணம் கண்களில் தொடங்குகிறது. இப்படியொரு சந்தர்ப்பத்தில் அவன் இருந்திருந்தால்….. என்று மனதில் தோன்றிய ஆசையை அதே வேகத்தோடு தலையை ஆட்டி தனக்குத்தானே மறுத்துக் கொண்டாள்.
அப்படி அவள் உதட்டைப் பிதுக்குவதையும் ஏதோ ஒரு பாடலுக்கு நடனமிடுவதைப் போன்று மழையிடம் கையை ஆட்டி நடனமிடுவதைப் போல கோபித்துக் கொள்வதையும். தனக்குத்தானே தலையைச் சிலுப்பிக் கொள்வதையும் பின்னிருந்து சிறு புன்னகையோடு ரசித்துக் கொண்டிருந்தான் உதயா. யார் இந்த மழையில் தன் துணையாக இருக்க வேண்டும் என்று விரும்பினாளோ அவன்தான் இவளைப் பின்னிருந்து ரசித்துக் கொண்டிருந்தான்.
இவளைப் பற்றி நன்கு அறிந்தவன். ஆதலால் இவள் குடை கொண்டு வராததையும் அறிந்து அவசரமாக தன் விடுதி போய் நண்பன் “ஏய் எனக்கு கொடை வேணும்டா. வெளில போணும்” என்று சொல்லிவிட்டு நண்பனின் பதிலுக்குக் கொஞ்சமும் காத்திருக்காமல்.
“டேய் நானும் வெளில போணும் டா” என்கிற அவன் சத்தத்தை சிறிதும் பொருட்படுத்தாமல் மேகலை பார்க்க ஓடோடி வந்திருந்தான். அவளோடு பேசும் நேரத்திற்காக காதல் மனம் ஏங்கும். இந்த நேரத்தை விட்டுவிட மனமில்லை உதயாவிற்கு. மழையில் நனைந்து நண்பன் குடை எடுத்து மழையில் நனைந்திருந்த உடை மாற்றி வேறொரு உடை உடுத்தி பாதைகளைக் கடந்து அரைக் கிலோமீட்டரை அரை நொடியில் கடந்து வந்திருந்தான்.
இவளோ அனைவரும் சென்று விட்டதை அறிந்துதான் மழையோடு பேசிக் கொண்டிருந்தாள். உதயா அப்பொழுதுதான் பின்புறக் கதவின் வழி வந்து மேகலை கோபிப்பதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். அவள் மழையோடு உதயனையும் வாய்விட்டுத் திட்டிக் கொண்டுதான் இருந்தாள். இவனாவது இருந்திருக்கக் கூடாதா? என்று அவன் பெயரைச் சொல்லி முடிக்க பின்னிருந்து குடையோடு வந்தான் உதயன்.
இப்பொழுது கோபம் இருந்த இடம் வெட்கத்தால் நிறைந்தது.
கொட்டும் மழையில் ஒரு குடை சில நேரம் தோழனாய், சில நேரம் எதிரியாய் மாறுவதும் உண்டு. அணுக்கம் கூடவும் குறையவும் பேச்சு வார்த்தை இல்லா இந்த அடைமழையில் அவள் மூச்சு விடுவதும் மெல்லிய குளிரில் நடுங்கும் அவளின் இதழ் ஒலி கூட சத்தமாய் அவனுக்குக் கேட்டது.
மழை கொட்டாத வெண்மேகமாய் கொஞ்ச நேரம் முன்பு கருத்திருத்த மேகம் இப்போது கலைந்தது போல அவளாலும் வார்த்தைகளை இதழ் பிரித்துக் கொட்ட முடியாத மௌனம் அந்தக் குடைக்குள் மனம் திறக்காத காதலர்களை இறுக்கிக் கொண்டிருந்தது. பேசினாலும் வெளியில் கேட்காத உரத்த மழை குடையின் வெளியே பெய்து கொண்டிருந்தது.
அவனோடு அந்த மழைநாள் இருவரும் விரும்புவதை நிழற்குடை நீளும் குடையாகி இருவரின் குடையான காதலைக் கைகாட்டிப் போனது. அந்த மழைநாள் அதன் பின் காதலைக் கூட்டிக் கொடுத்தது. சேர்ந்தே பயணித்த நண்பர்கள் அறியா நாட்களே எல்லா நாட்களின் தேவையாகிப் போகக் கரைந்தது.
கொஞ்ச நாளில் காதலும் வெண்மேக மழையாய் நின்றுபோக மழையால் இணைந்த உயிர்கள் வேறு உணர்வுகளுக்க ஆட்பட காதல் குறைந்து பிரிவு அதிகமாகி பிரிந்து நினைவினில் மட்டுமே அந்த மழைநாள் நின்று கொண்டிருந்தது மேகலைக்கு.
அதனாலேயே மழையையும் குடையையும் அதன்பின்னே அவள் வெறுக்க ஆரம்பித்தாள். மறக்கவும் விரும்பினாள். இரண்டு வருடங்கள் இருவரும் சேராத இந்த உலகம் பழகிப்போனது. மழையும் குடையும் இப்பொழுதெல்லாம் காதலை அல்ல காயத்தை உண்டு பண்ணியது.
இன்றும் ஒரு மழைநாள் தான் கடந்த காலத்தின் கனலில் எறியும் இதயத்தை மறைக்க தொண்டைக்குழியிலும் சூடேற்றும் தேநீர் குவளையோடு மேகலை அந்தத் தேநீர் கடையின் தாழ்வாரத்தில் சத்தமாகப் பெய்து கொண்டிருக்கும் மழையில் சாலையைப் பார்த்தவாறு அமர்ந்து பருகக் காத்திருந்தர் மழை அவளைப் பருகிக் கொண்டிருந்தது.
அவ்வாறு அவள் பார்க்கும் போது சாலையின் மறுபுறம் இருவர். இவள் பெரிதாய் வெறுக்கும் மழையையும் குடையையும் ரசித்துக் கொண்டிருந்தார்கள். யாரும் பர்க்காத மழைநாள் அவர்களின் நெருக்கத்தைக் கூட்டி இருந்தது. அவன் அவளை இடுப்பைக் கிள்ளி சிணுங்க வைத்து ஒதுங்கிய குடையையும் சிணுங்கிய அவளையும் ஒருசேர இழுத்துப் பிடித்தான். அங்கு ஒரு காதல் நாடகம் நடக்கவும் இயல்பாக மெகலையும் பழைய நினைவுகள் அலையடிக்க பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவர்களின் பின்புறத்தைக் குடை பாதி மறைத்திருந்தது. இந்த மழையில் ஐஸ்கிரீம் சாப்பிட கடைக்கு வந்திருந்தார்கள். ஏனோ திடீரென கொட்டும் மழையில் ஐஸ்கிரீம் சாப்பிடப் பிடிக்கும் உதயாவின் முகம் அவளுக்கு தொடரோட்டமாய் நினைவு வந்தது. குடையோடு மெல்ல இணைவதும் பின் அவன் சிரிப்புக்காட்ட அவள் சிணுங்கி நகருவதும் ஒரு இருவரின் காதல் நாடகமாக நிகழ்ந்து கொண்டிருந்தது.
அவர்கள் பாதி மறைத்த பின்புறத்தால் பின்பகுதி மட்டும் தான் அவளுக்குத் தெரிந்து கொண்டிருந்தது. இருவரும் ஐஸ்கிரீம் கடையில் ஆளுக்கொன்றாய் வாங்கிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்ததும் காற்றும் சேர்ந்து கொள்ள அந்தப் பெண்ணின் உருவம் சிறிது தெரிந்தது மேகலைக்கு கொடுத்து வைத்தவள் என்று நினைத்துக் கொண்டாள். மழைநாளில் விரும்பிய துணையோடு இருப்பதை விட மிகச் சிறந்த வரம் என்ன இருந்து விடப் போகிறது.
இருவருக்கும் முதலில் ஒருவர் மாற்றி ஒருவர் தங்களின் ஐஸ்கிரீமை ஊட்டிக் கொண்டனர். இரண்டாவது முறை அவன் வாங்க மறுத்துவிட்டான் போல, இப்பொழுது கொஞ்சம் வாடிய முகத்தோடு அவளது ஐஸ்கிரீமைச் சாப்பிட முயல, அவள் அருகில் வந்து, அவள் ஐஸ்கிரீமோடு உதடையும் சுவை பார்க்க, அதுவரைக் காத்திருந்ததைப்பொல காற்றில் குடை கைவிட்டுப் பறக்க மின்னல் ஒன்று இருவர் முகத்தையும் ஒரு நிமிடம் பளிச்சென காண்பித்தது.
அந்த நேரம் இருவருக்கு நேரம் உறைந்து நின்றது. ஐஸ்கிரீம் இன்னும் உதடுகளிலும் வாயிலும் வைத்துக் கொண்டு விழுங்காமல் இருந்த அந்த இளம்பெண்ணுக்கும், சாலையின் மறுபுறத்தில் தொண்டைக்குழியில் கொதிப்போடு தொண்டைக்குழியில் இறக்கிய தேநீரை விழுங்க முடியாத மேகலையும் தான் அவர்கள்.
“அது… அது…. உதயாதான்… ஆம் அவனேதான்….”
தன்னையும் அறியாமல் மனமும் உதடும் அவன் பெயரை உச்சரித்துக் கொண்டிருந்தது. மேகலையின் மனது படபடத்தது. அந்த மழையில் உரத்த சத்தத்தோடு இடி விழுந்தது. அவள் மனத்திலும்தான்.
மீண்டும் ஒரு முறை அவள் ஐஸ்கிரீம் சாப்பிட வாய் வைக்க, இவள் இதழை நோக்கி அவன் இதழ் நகர்ந்து ஒரு நிமிடம் கவ்விப் பிடித்து மீண்டது.அவள் அங்கிருந்து அவனைத் தள்ளி விட்டு துள்ளி விலகி எதிர் நிழற்குடைக்கு மாறினாள். அதிகமாகப் பேருந்துகள் கடக்காத அந்தி நேரம் வந்த மழையில் காதல் பெருக இருவரும் அருகருகே யாருமற்ற பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருக்க மழை கொடுக்கும் தைரியத்தில் காதல் பெருகி வர இதயம் நிரம்பிய காதலின் கனத்தை தனியாகச் சுமக்க முடியாமல் அந்த இளம் பெண் உதயாவின் தோள் சாய எங்கிருந்தோ வந்த பேருந்து, அவர்களின் மீது ஒளி பாய்ச்சி மீண்டும் ஒருமுறைத் தெள்ளத் தெளிவாக மெகலைக்குக் காட்டியது.
இந்த மழையை, குடையை, சிணுங்கலை, சிரிப்பை ஏன் காதலையே மேகலைக்கு வெறுக்க வைத்தவன். இன்றும் அதே சிரிப்போடு சிணுங்கலும் நிகழ பொங்கி வழியும் காதலோடு யாரும் கவனிக்க மாட்டார்கள் என்ற துணிவில் அவளை முழுவதுமாக வளைத்துப் பிடித்து அமர்ந்திருந்தான். இன்னும் கொதிக்கும் மனதோடு அந்தத் தேநீர் குவளையில் கண்ணீர் கிளிங்கெனப்பட்டுத் தெரிக்க பாதிக் குடித்த குவளையை அங்கே வைத்துவிட்டு எப்போதும் மழையோ வெயிலோ எப்போதும் குடையோடு வழக்கமாகியிருக்க கொஞ்சம் தள்ளி நின்று எதிர்புறம் பார்க்காமலே குடை விரித்து நடக்க ஆரம்பித்தாள் மேகலை.
யார் பார்த்திருக்கக் கூடாதோ? அவளுக்குத்தான் இயற்கையும் ஒளி பாய்ச்சிக் காட்டிக் கொடுத்தது. அவனை மறக்க நினைத்து மழையை வெறுக்கத் தொடங்கியவள். இப்பொழுது மனது முழுவதிலும் எரிமலையை உணர்ந்து கொண்டிருந்தாள். இப்பொழுது மழையை இன்னும் பிடிக்காமல் போனது. மின்னலையும் இடியையும் சேர்த்துத்தான். இந்த மழைநாளும் பிடிக்காமல் போனது அவளுக்கு. குளிர்ந்த இதயங்களையும் வெம்மை கொட்டும் மனதையும் இந்த மழைநாளும் உருவாக்கியிருக்கியிருந்தது.
இதுவும் குடையும் மழையும் அறியாத ரகசியமா? பல நூற்றாண்டுகளாய் இவை அறியாத ரகசியங்கள் இருக்க முடியுமா?
இழுத்துப் பிடித்து முகம் தெரியாமல் குடையை வைத்து மறைத்துக் கொண்டாள். கண்களைத் தாண்டி கண்ணீர் சுடச்சுட அந்தக் குளிர் மழையில் மேகலையின் கண்களில் இருந்து கொட்டிக் கொண்டிருந்தது. காதலை மட்டுமல்ல கண்ணீரையும் குடைகள் அறியும்தானே...!