பார்ப்பதெல்லாம் அழகாய்த் தெரியும் இளம்பருவம். இயல்பாய் இவ்வுலகை அணுகமுடியாத கால்கள் நிலத்தைத் தொடாமல் பறந்து தவழ்ந்து மிதந்து கொண்டிருக்கிற இளமை. அவள் கண்கள் எப்போதும் தேடி அலையும் அவன் இன்று வகுப்புக்கு வரவில்லை. ஏக்கம் ததும்பும் இவள் கண்களுக்கு அவனின் தரிசனம் கிடைக்காத ஏமாற்றமான நாள்.
மதியத்திற்கு மேல்தான் தெரிந்தது. இன்று பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளுக்குத் தேர்வு நடக்கிறது. அங்கேதான் தன் கண் நிறைந்த அவன் சென்றிருக்கிறான் என்று. நல்ல காரணம்தான் என்றாலும், அவனை பார்க்காத ஏக்கம் அதிகமாய் அவளை அலைக்கழித்தது. மதிய உணவு இடைவேளையில்,
“ஏய்...ஏய்... வினோதினி... ஏய்... வினோதினி... இவ... இந்த ஒலகத்துலயே இல்லடி” என்று சிரித்தபடி பக்கத்தில் இருந்த இலக்கியா வினோதினியை உலுக்கிய பின்புதான் அவளுக்கு நிலமை புரிந்தது.
சாப்பாடு ஒருவாய்கூட சாப்பிடாமல் சாப்பாட்டை பிசைந்து பிசைந்து கையே காய்ந்த பின்பும் அவள் யோசனை நிற்கவில்லை. அவளைப் பார்த்து மாலினி, “என்னடி என்ன விசேசம்?” என்று சொல்லி புரிந்தும் புரியாமலும் கொல்லென்று சிரித்ததும்தான் வினோதினி பேச ஆரம்பித்தாள்.
“ஒன்னுமில்லடி . கொஞ்சம் உடம்புக்கு முடியல” என்றதும் தமிழ், “ஏன்டி என்ன ஆச்சு?” என்றதற்கு வினோதினி உள்ளதைச் யாரிடமும் சொல்ல முடியாமல் தயக்கத்தோடு வேறு காரணம் தேடிக் கொண்டிருந்தாள்.
பின்பு, “தலவலிடி. அதான் சாப்பாடு எறங்கல” என்று சொல்லி, கொண்டு வந்த டிபன் பாக்ஸை அப்படியே மூடி வைத்தாள். அதைப் பார்த்ததும் இலக்கியா சந்தேகப்பட்டு, “வேற ஒன்னுமில்லையே” என்று திரும்பத் திரும்பக் கேட்டும் எதுவும் சொல்லவில்லை அவள்.
என்ன சொல்ல முடியும். வினோத் இன்று கல்லூரி வரவில்லை. அதனால்தான் என் மனது சரியில்லை என்று சொல்ல முடியுமா? சொன்னால் தோழிகள் சிரிக்க மாட்டார்களா? கேலி செய்ய மாட்டார்களா? என்ற நினைப்பின் ஊடாக தன் மீதே தனக்கு ஒரு இரக்கம் ஏற்பட்டு அழுகையும் கண்ணோரத்தில் எட்டிப் பார்ப்பதை கடினப்பட்டு அடக்கிக் கொண்டிருந்தாள்.
கல்லூரியின் முதல்நாள் அன்று நடந்தது இப்போது நடந்ததைப் போல் பசுமையாக இருந்தது. அன்று வகுப்பில் அனைவரும் அப்போதுதான் வந்து சேர்ந்தோம் என்பதால் பேராசிரியர் உங்களை நீங்களே அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் என்றதும், இறுதியாக வகுப்புக்கு வந்த இருவரும் ஒருவருக்கொருவர் முகம் பார்த்து ஒரு நட்பு புன்னகை உதிர்த்து அமர வருகையில், “கடைசியா வந்த ரெண்டு பேரும் அறிமுகப்படுத்திக்கோங்க” என்றதும் அவன், “நான் வினோத். நாவினிப்பட்டி” என்று சொல்லி அமர்ந்த வரையில் வகுப்பு அமைதியாகத்தான் இருந்தது. பின்பு அவள் எழுந்து, “நான் வினோதினி தெற்குத்தெரு” என்றதும் அனைவரும் சிரித்துவிட்டார்கள்.
பேராசிரியர்கூட மெலிதாய் புன்னகைக்கவும், பதற்றத்தில் புரிந்து கொள்ளாத வினோதினி தற்போது புரிந்து கொண்டாள். இருவரின் பெயரும் ஒரே மாதிரியாய் இருப்பதும், அடுத்தடுத்துச் சொன்னதும் சிரித்தார்கள் என்று. திரும்பவும் ஒருவரையொருவர் பார்த்து மெலிதாகப் புன்னகைத்துக் கொண்டார்கள்.
எப்போதாவது தோழிகளிடம் இப்பெயர் பொருத்தம் பேசுபொருள் ஆவதும், பின்பு அவள் அவன் பெயரால் கேலி செய்யப்படுவதும் அடுத்தடுத்து நிகழ்ந்து கொண்டிருந்தது.
எப்போது இருவரின் பெயர் எதுக்காக வாசிக்கப்பட்டாலும் சிரிப்பொலி வகுப்பில் மிதப்பது வழக்கமாகி விட்டது. இது முதலில் கொஞ்சம் சங்கடமாக இருந்தாலும் பின் தோழிகளோடு சேர்ந்து அவளும் சிரிப்பது அவளை அறியாமலே வழக்கமாகிவிட்டது.
இன்று அது பிரியமாகிப்போய் மனதில் வேரூன்றிய விருட்சமாகிவிட்டது.
அன்று தொடங்கியதுதான் இன்று நடந்ததைப் போலத் தேடல், இன்று வரை தொடர்ந்து கொண்டிருந்தது. விளையாட்டாய் மனதில் போட்ட விதை இப்பொழுது பிடுங்கி எறிய முடியாத மரமாய் மாறிப் போயிருக்கிறது. இருந்தும் தோழிகளிடம் சொல்லாமல் அதனை மறைத்து வந்தாள் இதுநாள் வரையிலும்...
அவன் ஒரு வாரமும் கல்லூரிப்பக்கமே வரவில்லை. தொடர்ந்து அவர்கள் வெற்றி பெற்றார்கள் என்று மட்டும்தான் தகவல் வந்தது. ஆனால் அவன் வரவில்லை. அவனைப் பார்க்காத ஏக்கம் மனதில் ஆனி அடித்ததைப்போல் நகர முடியாமல் ஆக்கியது.
“என்னடி இந்த ஒருவாரமா ஒழுங்கா சாப்ட மாட்ற?”எனும் கேள்விக்கு கேலியாக, “ஒருவேள வினோத் வராததால இருக்குமோ?” என்று தோழிகளே பதில் சொல்லவும், வினோதினிக்கு கண்ணெல்லாம் கலங்க ஆரம்பித்தது விட்டது.
அழுதுவிடக்கூடாது என்று வெடித்து நின்ற அழுகையை அடக்க, கண்களில் நீர் நிறைந்து தழும்பியது. இலக்கியாவோ, தோழிகளோ பார்க்க வேண்டாம் எனத் தலையைத் திருப்பி கண்களை மறைக்க இமை கடந்தது கண்ணீர். அதன்பிறகு தோழிகளிடையே பதற்றம் தொற்றிக் கொண்டது.
“என்னடி என்ன ஆச்சு?”
சந்தியாவுக்கு தான் கிண்டல் செய்ததால்தான் வினோதினி அழுகிறாளோ என்ற பயம் தொற்றிக் கொண்டது. தன் வாயிலேயே அடித்துக் கொண்டாள்.
“ஒன்னுமில்ல” என்று சொல்ல வாயெடுத்தவள் பாதியிலேயே முடிக்க முடியாமல், கண்களைக் கடக்கும் கண்ணீரையும் கட்டுப்படுத்த முடியாமல், இது பருவக் கோளாறுதான் என்று உணர்ந்தாலும், இது தவறு என அனைவரும் கேலி செய்வார்கள் என்று உணர்ந்த போதும், இங்ஙனம் அழுகையில் அனைவருக்கும் பல நாள் யாரும் காணாமல் சேகரித்த செய்தி அடுத்தவர்க்கு நொடியில் தெரிந்து விடுகிறது.
இலக்கியா வினோதினியை ஏதோ ஒரு வகையில் உணர்ந்து கொண்டு, அனைவரையும் அனுப்பிவிட்டு, “நீங்க போங்கடி. நான் பேசிட்டு கூட்டிட்டு வர்றேன்”; என்றதும் தோழிகள் தயக்கத்தோடு களைந்தனர். அவர்கள் போனதும் மெல்லக் கேட்டாள்.
“வினோ…. வினோ… இங்க பாரு… என்ன பாரு” என்றதும் அழுது சிவந்த கண்களோடு அவள் இலக்கியாவைப் பார்த்தாள்.
“சொல்லுடி. என்னதான்டி பிரச்சன?. சொன்னாத்தான எனக்குத் தெரியும்.” என்று கேட்டும் பதிலில்லாமல் அழுது கொண்டே இருந்தாள். சரி அழுது முடிக்கட்டும் எனக் காத்திருந்தாள் இலக்கியா.
“சந்தியா கிண்டல் பண்ணதுக்கா அழுகுற?” என்றதும் இல்லை என்பதாகத் தலையை ஆட்டினாளே தவிர ஏதும் பேசவில்லை.
“ வேற என்ன பிரச்சன வினோ? எதுன்னாலும் சொல்லு. நான் யாருகிட்டயும் சொல்ல மாட்டேன். நீ என்ன நம்புறியா? இல்லையா?” என்றும் கேட்டாள்.
வினோதினி இப்போது பேச ஆரம்பித்தாள். உடைந்த குரலில், “ இல்ல இலக்கியா இது சரியா? தப்பா? சொல்லலாமா? கூடாதா? குழப்பம் அதிகமா இருக்கு எனக்கு. ஆனா, நீ ஒருத்திதான் என்ன புரிஞ்சுப்ப. அதனால நான் ஒங்கிட்ட சொல்றேன்”
“சொல்லுடி” என்றாள் இலக்கியா.
“வினோத் இருக்கான்ல.”
“ஆமா இருக்கான். அவனுக்கென்ன?” என இவள் சம்பந்தமில்லாமல் அவனைப் பற்றி ஏன் கேட்கிறாள். என்று ஆர்வமற்றுக் கேட்கவும், “அவன எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. அவன பாக்கணும், பேசணும்னு தோணிக்கிட்டே இருக்கு. இது கொஞ்ச நாள்ல மாறிடும்ணு நெனச்சேன். ஆனா இன்னைக்கு என்னால கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அவன் நெனப்பு எனக்குள்ள வந்துகிட்டே இருக்கு. என்னதான் எவ்வளவுதான் அவன மறந்துடணும்னு நெனச்சாலும் அவன் பேரையோ? ஏன் என் பேரையோ கேட்டாக்கூட அவன் நினைவுதான் வருது. விளையாட்டுப் போட்டின்னு பலநேரம் எங்காவது போயிடுவான். அவன பத்தி எதுவும் தெரியாது.
வாரக் கணக்குல வகுப்பே வர மாட்டான் அப்படியே வந்தாலும் வகுப்பில் ஒன்னு ரெண்டு மணி நேரம்தான் இருப்பான். என்னால முடிலடி. அவன் அப்படி காணாமப் போக போக என் மனசு இன்னும் அதிவேகமாக அவன கண்டுபிடிக்கச் சொல்லி என்ன தூண்டுது. யாருகிட்ட அவன பத்தி கேக்க. கேட்ட மறு நிமிசமே நீ ஏன் அவன பத்தி கேக்கறன்னு கேப்பாங்க. என்கிட்ட பதில் இல்லயே. அதனால இன்னும் இன்னும் அழுகதாண்டி வருது. இந்த வாட்டியும் அப்படித்தான் அழுகய அடக்கிட்டு இருந்தேன். சந்தியா வேற அவன் பேரச் சொல்லிக் கிண்டல் பண்ணதும் முடிலடி.” என்று ஒருவாறு சொல்லி முடித்தாள்.
“அப்போ வினோத்த நீ லவ் பண்றியா” என்று இலக்கியா வெடுக்கெனக் கேட்டதும், “இதுக்கு எனக்கே பதில் தெரியலடி. என்ன நீ தப்பா நெனைக்காத” என்று சொல்லி முடிக்கும் முன்பே கடகடவென்று அழுது விட்டாள்.
“இவ்வளவு நடந்திருக்கு. எங்கிட்ட ஒத்த வார்த்த சொல்லல. இந்தக் கத எப்பயிருந்து?” என்று விசாரணை பாணியில் கேட்க, வயிற்றிலிருந்து ஒருவிதக் கூச்சமும், தயக்கமும், எப்படிச் சொல்வது? என்ற யோசனையும் வார்த்தைகளைச் சொல்ல அவளுக்கு இடம் கொடுக்கவில்லை.
பொதுவாகவே இந்த வயதில் வரும் இந்த வகையான உணர்வு எல்லோருக்கும் வருவதுதான். ஆனால் இந்த உணர்வைக் கையாளத் தெரியாமல், பெரியவர்களிடமும் சொல்ல முடியாமல், தன் விளையாட்டுத் தோழமைகளிடம் அறிவுரை கேட்கும் போதுதான் முடிவு தடம் மாறுகிறது. அதே தவறைத்தான் வினோதினியும் செய்து கொண்டிருந்தாள்.
மனதில் அவன் மீது எழுந்த பெயரிட முடியாத அன்பை அதன் போக்கிலேயே விட்டிருக்கலாம். அவனைப் பிடித்துப் போனதால், அவனைப் பற்றியே தினம் தினம் மனது அசைபோட புதுபுதுக் காரணங்களை பழக்கிவிட்டு, பின்பு மனதில் முழுவுதுமே அவன் நினைவு தங்கிப் போக மறப்பது இயலாத காரியமல்லவா? வினோதினிக்கு அதுதான் நிகழ்ந்து கொண்டிருந்தது.
அவனைப் பிடித்திருக்கிறது என்று சாதாரணமாக பார்க்க ஆரம்பித்து, இன்று விழுதுகள் பல பரப்பிய ஆலமரமாய் அவள் இதயம் முழுவதும் அவனே நிறைந்திருக்க மறக்க வாய்ப்பில்லாதவளாய், எந்தக் கூட்டத்திலும் எங்கும் தேடுவதே அவன் முகமே என்றாகிப் போனது.
அவன் விளையாட்டுப் போட்டிக்கு செல்லும் வேளைகளில் அவன் இடத்தில் சென்று அமர்வதும், அவனே அவன் பெயரை எழுதி வைத்த புத்தகங்கள் நோட்டுகளில் அவன் எழுத்துகளைத் தொட்டுப் பார்ப்பதும் அவன் கையெழுத்தை எழுதிப் பார்த்த அவன் பெயரில் யாரும் பார்க்காதபோது முத்தமிடுவதும், அவன் பெயரோடு தன் பெயரை எமுதிப் பார்ப்பதும் தன்னுடைய முதல் இரண்டு எழுத்துகளை மட்டும் வேறு முறையில் அல்லது தடிமனான எழுத்துகளில் எழுதிப் பார்ப்பதும், (இருவரையும் வினோ என்று தானே அழைப்பார்கள் அதனை மட்டும் வேறுவகையில் எழுதிக் கொள்வது) அவன் தன் பெயரைச் சேர்த்து எழுத மாட்டானா? என ஏங்குவதும் இப்போது அவளுக்கு வழக்கமாகிவிட்டது.
மேலும் அவன் பெயரை ஒட்டி யாரேனும் உற்றுப் பார்த்தாள் மட்டும் தெரியும்படி இவள் பெயரையும் சேர்த்தே சிறு குச்சிகளால் தடம் மட்டும் பதியும்படி அதே நேரத்தில் மற்றவர் கண்ணுக்கு புலனாகாதபடி எழுதுவதும், அதனைத் தானே திரும்ப எடுத்து ரசிப்பதும் என்று என்னென்னவோ கிருக்குத்தனமாகச் செய்கிறோம் என்று தெரிந்தும் அதில் கிடைக்கும் ஏதோ ஒரு மகிழ்ச்சியின் பொருட்டு அவளை அறியாமலேயே செய்து கொண்டிருந்தாள். கவிதைகள் எழுதும் பழக்கமும் புதிதாய் முளைக்கத் தொடங்கிவிட்டது.
இருவர் பெயரையும் இணையாய் எழுதி ஒரு இதயம் வரைவதுதான் எத்தனைச் சுகமாய் இருக்கிறது. முதலெழுத்துகளை இணைத்து குட்டி குட்டியாய் இதயம் வரைந்து அவன் நோட்டிலேயே கூட அவள் வைத்திருந்தாள். அவன் அதனை அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதுவும் அவளுக்குத் தெரியும். பேனாவோ, பென்சிலோ வாங்கியவுடன் அவன் பெயரை எழுதுவது வழக்கமாகிவிட்டது. அதனை ரசித்துச் சிரிப்பதும் இப்போது அவளுக்கு வழக்கமாகிவிட்டது.
வினோதினியின் இயல்பான உலகில் அருகில்லாத வினோத். அவனுக்கென தனி உலகையே அவள் உருவாக்கியிருப்பதை எப்படி உணர்வான்? காலையில் விரைவாக வந்ததும் மண்ணில் அவன்பெயரை எழுதுவதும் அவள் மனம் அறிந்த ரகசியம். பேயரளவில் உறவு என்பார்கள். அவன் பெயர் மட்டும் உறவாய், உணர்வாய், உணவாய் மாறியிருப்பதை என்ன சொல்ல?
அவன் விளையாட்டில் ஆர்வம் கொண்டவன் என்பதால் பெரும்பாலும் வகுப்புகளுக்கே வருவதில்லை. இவளோ காலையிலிருந்தே வகுப்புகளையெல்லாம் பொறுத்துக் கொள்வதே அவனை உணவு இடைவேளையிலும் வீட்டிற்குச் செல்லும் போது மைதானத்திலும் கொஞ்சம் தெளிவாகப் பார்க்கலாம், அதிலும் கழிவறை செல்வதாகச் சொல்லிவிட்டு அவன் பயிற்சியில் ஐந்து நிமிடம் அப்படியே மெய் மறந்து பார்த்துவிட்டு இவளைக் காணோமென தோழிகள் தேடு முன்னே வந்து விடுவதும் தோழிகள் அறியாத ரகசியம்தான்.
விளையாட்டு விழாவில் போட்டிகளுக்கு அவன் பரிசுகள் வாங்கும்போது அவனையே பார்த்துக் கொண்டிருப்பாள். கைகள் தட்டவும் மறந்து போவாள். கல்லூரிக்கு வருகின்ற நேரத்தில் என்றாவது ஒரே வண்ணத்தில் உடை அணிந்திருந்தால் மனம் அப்போதே மகிழ்ச்சியில் அந்தரத்தில் பறக்க ஆரம்பிதது விடும். அன்று முழுவதும் இவள் முகத்தில் புன்னகை மாறாது. பார்க்கும் அனைவரும், “ என்ன பளிச்சுன்னு இருக்க ?” “இன்னைக்குத்தான் குளிச்சியோ?” என்று என்ன கேட்டாலும் திட்டத் தோன்றாது அவளுக்கு, அவ்வளவு மகிழ்வில் துள்ளிக் குதிப்பதும், அவன் கல்லூரி வந்தும் அவனுக்குப் பிடிக்காத பாட வேளைகளில் வரைகின்ற சிறுசிறு ஓவியங்களின் ரசிகையாய் அவள் மாறிப் போவதையும் அடுத்தவர்க்குத் தெரியாமல் ஒருதலை உணர்வாய் இதுவரையிலும் காத்ததே பெரிய விசயமாய் மாறிப் போனது.
இத்தனை நாளாக தான் சேமித்து வைத்திதுருந்த அன்பை ஒட்டு மொத்தமாய் இலக்கியாவிடம் சொன்னதும் கொஞ்சம் மனதின் சுமை தீர்ந்ததென நினைத்து மனதின் ரகசியங்களை கசிய விட்டாள். என்றாவது ஒருநாள் அனைவருக்கும் தெரியத்தான் போகிறது. ‘அந்தரங்கம் பொதுவானது என்பதைப் போல, சந்தரங்கம் அப்படியே இருந்துவிடப் போவதில்லை. இது நிச்சயமாகப் பரவிவிடும் என்ற நிலையில் என்ன செய்வது?
அடுத்த நாளின் நடப்பு அறியாத இளம் வயது என்பதால் பின் விளைவையும் அறியவில்லை அவள். சுமை தீர்ந்ததில் நல்ல உறக்கம் கிடைத்தது அவளுக்கு.
தோழியிடம்தானே சொன்னோம் என்று நினைத்திருந்தவளுக்கு, வகுப்பிற்குள் நுழையும்போதே அனைவரும் தன்னை ஒரு மாதிரியாகப் பார்ப்பது வித்தியாசமாகப் பட்டது. சற்று நேரத்தில் வினோதினியை நிறுத்தி அண்ணன் முறைக்காரன் ஒருவன் திடீரென வந்து,
“ஒன் போக்கு ஒன்னும் சரியில்லையே?” அவள் பதிலை எதிர்பாராமல் மீண்டும், “என்ன சித்தப்பாக்கிட்ட சொல்லணுமா? இனி இந்த மாதிரி பேச்சு வந்திச்சு. நான் வீட்ல வந்து சொல்லிடுவேன் பாத்துக்க...?” என்று மிரட்டிவிட்டுச் சென்றான். எல்லார் முன்னிலையிலும் தன்னை எதற்ககாகத் திட்டுகிறான் என்று புரிந்து கொள்ள முடியாமல் அழுகைதான் வந்தது அவளுக்கு. கண்களில் கண்ணீர் பெருக அவள் பெண்களின் ஓய்வறைக்குச் சென்று கதறி அழுதாள்.
கடகடவெனக் கொட்டிய கண்ணீரில் கொஞ்ச நேரத்தில் கண்கள் சிவந்து, மனதின் வெம்மை கூடிவிடவும் தாங்க முடியாமல் வாய்மூடி அழவும் காலையில் அவசரத்தில் சாப்பிட்ட உணவெல்லாம் குடலைப் பிரட்டிக் கொட்ட ஆரம்பித்துவிட்டது. அழுது முடித்து வாய் முகம் கழுவி வெளியேறுகையில் சிவந்த மூக்கும் வீங்கிய முகமும், அழுத கண்களும் பார்ப்பதற்கே விகாரமாய் இருந்தது. முதல் வகுப்பு மட்டுமே நடந்திருக்கிறது. இரண்டாம் வகுப்பின் ஆசிரியர் வராததால் சாப்பிட்டு விட்ட வரச் சொல்லி மாணவர்களை அனுப்பிவிட்டதால் அவளுடைய பை மட்டும் அங்கே அநாதையாய்க் கிடந்தது.
அவளைப்போலவே கேட்பாரற்று அந்த அறை முழுவதும் கண்கள் தன்னை உற்றுப் பார்ப்பதைப்போல பயமாய் இருந்தது அவளுக்கு. கொஞ்சம் டேபிளில் கண்மூடலாம் என்றால் இன்று நடந்ததை அண்ணன் வீட்டில் வந்து சொன்னால் என்ன ஆகும் என்கிற நினைப்பு அவளை அலைக்கழித்தது. காலையில் சாப்பிட்டதும் வயிற்றில் இல்லை. இப்போதும் சாப்பிட வில்லை. தன்னை அறியாத மயக்கத்தில் சிறிது கண்மூடினாள் என்ன காரணம்? என்ன காரணம் என்று நினைத்துக் கொண்டே... அப்பொழுதுதான் வெளியிலிருந்து ஒரு பெரும் சத்தம்.
என்னவென்று பார்க்கையில், அவள் கண்முன்னே வந்த ஒருத்தி, “ரொம்ப அப்பாவி மாதிரியெ ல்லாம் நடிக்காத. நானும் உன்ன இன்னவரைக்கும் அப்பாவின்னுதான் நெனச்சேன்.” என்று மிகவும் கோபமாக சத்தம் போட்டுக் கொண்டிருந்தாள்.
என்ன சொல்வதென்று வினோதினிக்கு விளங்கவில்லை. என்ன நடக்கிறதென்று புரியவுமில்லை. சொல்ல வார்த்தையுமில்லை, சக்தியுமில்லை. அடிவயிறு கூச ஆரம்பித்துவிட்டது. இன்னும் அழத் தயாராயிருந்தது கண்கள். அவள் இவளைப் பொருட்படுத்தாமல் மேலும் பேச ஆரம்பித்தாள்.
“இங்க பாரு வினோத் என் ஃபிரெண்ட். அவன பிடிச்சிருக்கு. காதலிக்கிறேன். இந்த மாதிரியெல்லாம் யாருகிட்டயும் சொல்லிக்கிட்டு திரியாத. இதுதான் உனக்குக் கடைசி வார்னிங்.” என்று வினோத்துடனும் அவுனுடைய ஆண் நண்பர்களுடனும் எப்போதும் ஒருத்தியாக இருக்கும் ரேணுகா சொல்லி விட்டுப் போனாள்.
இந்த நிமிடத்தில் வினோதினிக்கு ஒன்று உண்மையாய்ப் புரிந்தது. ரேணுகா வினோத்தை விரும்புகிறாள். அது அவளின் தீர்க்கமான வார்த்தைகளிலும், எச்சரித்த பாணியிலும், அவள் கண்கள் வெளியேற்றும் கோபத்திலும் நன்றாகவே புரிந்தது. ரேணுகா சென்ற பிறகும் கோபக் கனல் வீசிய கண்கள் வினோதினியை பயமுறுத்திக் கொண்டிருந்தது.
அந்தக் கணத்தில் வினோதினியிடம் இருந்து இரண்டு உறவுகள் இல்லாமல் போனது. ஒன்று இதுவரை மனதில் மட்டுமே வைத்திருந்த வினோத்தின் மீதிருந்த ஈர்ப்பு, அன்பு, அவுளுக்குத் தெரிந்து அவளது முதல் காதல். மற்றொன்று இலக்கியா மீது வைத்திருந்த அளவு கடந்த நம்பிக்கை நட்பு. போன நொடி வரை இருந்த இந்த இரண்டு உறவுகளும் இப்போது இல்லாமல் போனது.
அவள் அழுதாலும் மீண்டும் யாரையும் நம்ப முடியாத நட்பையும், காதலிக்கச் சக்தியற்ற நிலையாயும் உயிரின் ஆனி வேர்வரை கத்தி இறக்கிவிட்ட நிகழ்வாக வினோதினியின் வாழ்வு இருந்து விட்டது. இது இன்று நடந்ததைப் போலத்தான் அவள் நினைவில் கனலைக் கக்கிக் கொண்டிருந்தது. அதனால் எந்த ஆணுடனும் சாதாரணமாக பேசுவதைக்கூட தவிர்த்து வந்தாள். எந்த ஆணையும் காதலனாக கணவனாக ஒரு நிமிடம் கூட நினைக்க விடாமல் இன்றும் ரேணுகாவின் கண்கள் அவளை இம்சிக்கிறது. சில நேரங்களில் அவளது நெருப்பைக் கக்கும் விழிகள் கனவாகக் கூட வருவதுண்டு.
எந்த ஆணையும் பிடிக்காமல் போனது, வினோத்தின் மீது அவள் ஒருதலையாக வைத்திருந்த ஒருதலைக் காதலால் அல்ல. ரேணுகாவின் கண்கள் கக்கும் தீயால். நெருப்புக் கோளத்திலிருந்து பிரிந்து வந்த பூமி, பல்லாயிரம் ஆண்டுகளுக்குப்பின் குளிர்ந்ததைப் போல, கொஞ்சம் மனம் குளிர ஆரம்பித்த காலகட்டத்தில் வினோதினியிடம் நல்ல நண்பனாய் அறிமுகமானான் சிவா. நட்பையே இலக்கியாவால் வெறுத்திருந்தவள். சிவாவின் நட்பால் மனம் மாறினாள். பெண்களிடம் எவ்வளவு வெளிப்படையாகப் பேசுவாலோ அத விடவும் நன்றாகப் பேசி பழகும் அளவு இருவரின் நட்பு வளர ஆரம்பித்தது. பழைய காலத்தின் வடுக்களை கொஞ்சம் மறந்தே போனாள்.
எப்போதாவது அவனோடு சேர்ந்து கல்லூரி வளாகத் தேநீர்க்கடையில் தேநீர் குடிப்பதுண்டு. ஆண், பெண் இருவர் இணைந்து நின்றாலே சமூகம் நிச்சயமாக வேறு கண்கொண்டுதானே பார்க்கும். இவர்கள் நட்பிலேயும் இதுதான் நடந்தது. அனைவரும் அப்படிக் கேட்பதும் இருவருக்கும் பழக்கமாகி விட்டாலும், இருவரின் நட்பையும் எந்த இடத்திலும் இருவருமெ விட்டுக் கொடுக்காமல் இருந்தனர். அதனால் அத்தனைக் கேள்விகளையும் மிகச் சாதாரணமாக இருவரும் கடந்தனர்.
ஒருநாள் சிவாவுடன் தேநீர் அருந்துகையில் பழைய கல்லூரியில் அவனோடு படித்த தோழி வரவும் அவனைப் பார்த்ததும் பழைய சிநேகிதத்தில் அவன் கைகளைத் தொடுவதும் முடியைக் கோதிவிடுவதும் என்று வினோதினியைக் கண்டு கொள்ளாமல் இருவருமாய் பழைய விசயங்களைப் பேசியவள். திடீரென நினைவு வந்தவன் போல், தன் தோழியாகிய வினோதினியை அறிமுகப்படுத்தியதும் கை கொடுத்தாள்.
புன்னகையுடன் அவள் கை கொடுத்தாலும் அவள் கண்களில் பரவிய தீ அவள் கைகளின் வழி இவள் கைகளில் பட, மின்சாரம் தாக்கியதைப்போல் கைகளை அவசரமாக உருவிக் கொண்டு, நிமிர்ந்து பார்க்கையில், கொஞ்ச நாட்களாக மறந்திருந்த ரேணுகாவின் அதே கனல் கக்கும் கண்கள் சிவாவின் தோழியிடமும் தெரிந்தது.
காதலிக்கும் ஆண்களுக்கோ சமூகத்திற்கோ சொல்ல முடியாத பெண்களின் காதல் உணர்வினை, அந்த ஆணை நெருங்கியிருக்கும் பெண்கள் எளிதாக அடையாளம் காண்கிறார்கள். அந்த ஆணை நெருக்கும் மற்றொரு பெண் மீது கோபமாய் வெளிப்படும் போலும்.
பெண்ணின் காதலை… அவள் விரும்பும் ஆணின் அருகிலிருக்கும் பெண்களே முதலில் அறிகிறார்கள். இப்போது சிவாவின் தோழி சிவா மீது வைத்திருந்த காதலை வினோதினி அறிந்ததைப் போல, அவளின் கண்கள் இவளைத் துன்புறுத்தியதைப் போல, வினோதினியின் கண்களில் படிந்த ஏதோவொன்றை சிவாவின் பழைய கல்லூரித் தோழி உணர்ந்திருப்பாளோ? அவளை அறியாமலே அவள் கண்களின் வழி முதல் சந்திப்பிலேயே கண்களின் வழி கசிந்திருக்குமோ? அதனால்தான் அவன் தோழியும் அந்தப் பார்வை பார்த்திருப்பாளோ? ‘பாம்பின் கால் பாம்பறியும்’ என்பதைப்போல பெண்ணின் காதலை பெண்கள் தான் முதலில் அறிவார்கள் போல….