வெயில் பிசுபிசுக்கும் பங்குனி. எந்தப் பொருளையும் தொடவும்,வெளியில் நடக்கவும் கூட விரும்பாத பங்குனி. கல்லூரியை விட்டு வெளியில் வந்ததும் தனது மேல் துப்பட்டாவைத் தலையில் போட்டுக் கொண்டாள். எவ்வளவு போர்த்தியும் அனலும் வெயிலும் துப்பட்டாவைத் தாண்டி தகித்துக் கொண்டிருந்தது. தனது கல்லூரியிலிருந்து பேருந்து நிலையத்திற்கு நடப்பதற்கு உள்ளாக வெயில் கவிதாவின் ஒட்டுமொத்த சுறுசுறுப்பையும் உறிஞ்சிக் கொண்டது. கால்களை அவள் முன்னோக்கி வைத்தாலும் நடக்க நடக்க வெயிலில் தூரம் குறைவதைப்போல் தோன்றவில்லை.
பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது.வெயிலில் ஏற்படும் அனலும் தனலும் ஏற்றிய சூடும் அது அனைவரின் உடலில் ஏற்றிய வியர்வையின் நெடியும் “ஏன்தான் வெளியில் வந்தோமோ?” என்று எல்லோர் மனதிலும் ஒருவிதக் கோபமும் வெறுப்பும் வெயில் மீது குடிகொண்டு விட்டது. அப்படியிருந்தும் இந்த வெயிலிலும் பேருந்துகள் மக்கள் நிறைந்து கொண்டும் ஒருவரையொருவர் இடித்துக் கொண்டும் தூரமாய் இருந்தாலும் நின்று கொண்டும் என்னென்ன வேலைக்காகவோ ஓடி ஏறிக் கொண்டிருந்தார்கள்.
கவிதா வந்து நின்றதன் பின்னே திருச்சி செல்லும் மூன்று பேருந்துகள் நிறைமாதக் கர்ப்பிணியைப் போல் இப்பொழுதுதான் போனது. ஒரே பேருந்தில் போகலாம் இன்னும் முக்கால் மணிநேரம் கூடிவிடும் என்பதால் திருச்சி போய் திருச்சியிலிருந்து மதுரை போகலாம் என்று முடிவெடுத்திருந்தாள். இப்பொழுது தேர்வு விடுமுறை ஆகவே சீக்கிரம் வீடு செல்ல வேண்டும் என்று நினைத்து இந்த முடிவை எடுத்தாள்.
நான்காவது பேருந்தில் ஒருவழியாக ஜன்னலோர இருக்கை கிடைத்தது. ஜன்னலோர இருக்கையின் சுகத்தை மற்ற நாட்களைப் போல வெயிலில் அனுபவிக்க முடியாது. காலை பத்து மணிக்கு உச்சி பிளக்கும் வெயில் தன் கோபத்தால் உலகை வறுக்கத் தொடங்கும்.
அதனால் பேருந்தின் கம்பிகள், ஜன்னல்கள் என்று எதனையும் தெரியாமல் தொடவோ, சாயவோ முடியாது. இருக்கையிலும் எல்லா இடத்திலும் மனிதர்களுக்கு முன்பேயே வெப்பம் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருந்தது. என்மேல் உட்கார முடியுமா? என்று சவால் விடுவதைப் போல் சம்மணமிட, அதனை மதிக்காமல் அங்கே அமர்ந்தால் தண்டனையும் எந்த வித்தியாசமும் பார்க்காமல் கொடுத்துக் கொண்டிருந்தது.
அதே போல வெயில் அமர்ந்த இடத்தில் கவிதாவும் உட்கார்ந்து, “…. என்னா சூடு…” என்று அவளையும் அறியாமல் வெளியில் சொல்லிவிட்டாள். நிமிடத்திற்குள்ளாகவே அந்தப் பேருந்தும் நெரிசல் மிக்க இடமாய் மாறிப் போனது. கொஞ்ச நேரம் சூட்டினைப் பொறுத்துக் கொள்ளவில்லையென்றால் இன்னும் அதிக நெரிசலில் மோதிக் கொண்டு கலவையான வியர்வை நெடியோடு காற்றறும் இல்லாமல் மூச்சு முட்டும். அதனாலேயே பரவாயில்லை என்று ஜன்னல் இருக்கையில் அமர்ந்தாள்.
வெயிலை விடவும் பேருந்தில் மற்றொரு சோதனையும் உண்டு. அது என்னவென்றால் நாம் பேருந்து நின்ற இடத்தில் நின்று கொண்டிருக்க நமக்குப் பின் வந்து நிறுத்திய பேருந்துகள் உடனடியாக ஆட்களை ஊற்றி கிளம்புவதுதான். அதை விடக் கோபப்படுத்தும் சோதனை யோசித்து யோசித்து அந்தப் பேருந்தில் ஏறியிருப்போம். நாம் ஊறி இருக்கையில் உட்கார்ந்த பின் சாவகாசமாக ஓட்டுநர் இறங்கி எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு பேருந்தைப் பார்த்துக் கொண்டே தன் சக
பணியாளர்களிடம் பேசிக்கொண்டு தேநீர் அருந்துவது.
அப்படியும் அநியாயத்துக்கு கவதாவிற்குச் சோதனை. இப்படியாக ஒவ்வொன்றும் கவிதாவிற்கு ஒட்டுமொத்தமாக நடந்து கொண்டிருந்தது. அந்த முக்கால் மணிநேரத்தில் இப்பொழுது அரை மணி நேரம் பேருந்தில் உட்கார்ந்தே வீணாகிவிட்டது. பேருந்து சிறிதாவது நகர்ந்தால்தானே கொஞ்சம் காற்றுப் பட்டு முகத்தில் சிறிது உயிர் வரும். ஆனால் இன்னும் பேருந்து கொஞ்சமும் நகரவில்லை.
தொடர்ந்து அடுத்த சோதனை. அப்பொழுதுதான் ஓட்டுநர் இருக்கையில் வந்து அமர, எங்கிருந்தோ வந்த மற்றொரு ஓட்டுநர் வந்து இப்பொழுது பேசவும் கவிதாவுக்கு பொறுமை எல்லை மீறிவிட்டது. என்ன செய்ய முடியும். அவள் தனக்குத்தானே நொந்து கொண்டு தன் நெற்றியில் அடித்துக் கொண்டாள். ஆய்வியல் நிறைஞர் பட்டம் பயிலும் மாணவி கவிதா. இப்போது விடுமுறை. விடுமுறையிலும் தன் மண்ணையும் மனிதர்களையும் அடையாளப்படுத்தும் நாட்டுப்புறவியல் ஆய்வினைச் செய்யலாம் என்ற யோசனையோடு, தேர்வு முடிந்த நிலையில் விடுதியிலிருந்து புத்தக், ஆடைகள், சாதாரணமாக எப்பொழுதும் தூக்கிச் செல்லும் பொருட்களோடு ஒரு பெரிய பை நிறைய துணியும் கட்டப்பையில் புத்தகமும் சாதாரண பைநிறைய இதரப் பொருட்களும் நிரப்பி நடக்க முடியாமல் நடந்து தூக்கி வந்ததால், அவளால் இறங்கிக் கூட நடக்க முடியவில்லை.
மூன்றாவது இருக்கையில் ஜன்னலோர இருக்கை என்றதும் தன்னைத் தானே தேற்றிக் கொண்டு அமர்ந்து விட்டாள். தன் காலுக்கடியில் பையும் அதன் மெல் கட்டப்பையும் தன் மடியில் கைப்பையும் எல்லாவற்றையும் நிறைத்து விட்டாள். ஆனால் கால் வைக்கத்தான் இடமில்லை. ஒருவழியாக உட்கார்ந்து இருந்த போதும் வேகமாக எடுத்திருந்தாலாவது அவளுக்கு ஆறுதலாக இருந்திருக்கும் அதுவும் அங்கு நிகழவில்லை.
வேறுவழியில்லை பொறுமையாகச் செல்வோம் என்று பெருமூச்சுவிட்டாள் கவிதா.
சிறிது ஓட்டுநரின் பேச்சுக்குப் பின் தான் பேருந்து மெதுவாய் நகர ஆரம்பித்தது. முதலில் தன்னைக் கரைத்துக் கொண்ட காற்று முகத்தில் குப்பென்று வெப்பத்தை வாரி இறைத்தது.
வெந்து தணிகிறதே என்று கைக்குட்டையை எடுத்து முகத்தை அழுந்தித் துடைத்துக் கொண்டாள். தஞ்சையிலிருந்து மெதுவாக திருச்சிக்கு பேருந்து ஊர்ந்து போகிறதோ? ஏன்று நினைக்கும்படி மிக மெதுவாக நகர்ந்தது பேருந்து. ஏற்கனவே 4 மணி நேரத்திற்கு மேல் பயணம் என்பதனால் உணவும் அருந்தவில்லை. சிறிது தலைவலிப்பதும், தலை சுற்றுவதும் போல் இருந்தது. சாப்பிடாததால்தான் என நினைத்துக் கொண்டாள். நீரும் குடிக்கவில்லை. வீட்டிற்குச் செல்லும் வரை பேருந்திலிருந்து இறங்க முடியாது என்பதால் தண்ணீர் கூட குடிக்கவில்லை.
திருச்சி பேருந்து நிலையம் ஒருவாராக வந்துவிட்டது. தட்டுத் தடுமாறி மதுரைக்கு அப்போது செல்லத் தயாராகிக் கொண்டிருக்கும் பேருந்தில் கைகாட்டி ஏறி, நாலாவது இருக்கையில் இடம் கிடைக்கவும் அமர்ந்தாள். அதுவும் ஜன்னலோர இருக்கை கிடைத்தது அதிசயம்தான். கிடைத்ததும் அமர்ந்து விட்டாள். சிறிது நேரத்திற்கெல்லாம் வயிறு கொஞ்சம் வலிக்கத் தொடங்கியது. முதுகுவலி கூடி மார்பெல்லாம் கெட்டிப்பட்டுப் போனது. “அந்த மூன்று நாளாய் இருக்குமோ?” என்று மனத்தில் கணக்கிட்டுப் பார்த்தாள்.
அதற்கும் இன்னும் ஏழு நாட்கள் இருக்கிறது. இருந்தும் ஏன் இவ்வளவு வலி? வலியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சிறிது நேரம் சாய்ந்து உட்காருவதும், பின்னர் முன்னிழுத்து அமருவதும் என்று தத்தளித்துக் கொண்டிருந்தாள். எதாவது அவசரம் என்றாலும் பேருந்தை நிறுத்த முடியாது. கவிதா ஏறியதோ இடைநில்லாப் பேருந்து. ஆதலால் எதைப் பற்றியும் சிந்திக்க வேண்டாம் சிறிது நேரம் கண்களை மூடிக் கொள்வோம் என்று கண்களை மூடிக் கொண்டாள்.
பிரான்மலை தாண்டி பேருந்து குலுங்கியதில் அடிவயிறும் மார்பும் விண்ணென்று தெறித்து வலித்தது. அவசரத்தில் சாப்பிட எதுவும் வாங்காமலேஞம் ஏறிவிட்டாள். என்ன செய்ய? எதற்கும் நிற்காத பேருந்தில், எப்போதாவது கிடைக்கும் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து இசையோடு ரசித்துக் கொண்டு வருவாள் எப்போதும். ஆனால் இன்று நிலை அப்படியில்லை. எதையும் ரசிக்கும் மனநிலை கவிதாவிற்கு இல்லை.
கிட்டத்தட்ட பேருந்து மேலூர் கடக்கையில் எதை வேண்டாம் என்று நினைத்துக் கொண்டே வந்தாலோ? அது நடந்தேறிவிட்டது. அவளால் அசையவும் முடியவில்லை.
அவள் இப்பொழுது பேருந்தை நரகமாக உணர்ந்தாள். ஆடையில் கறையாகிவிட்டதா? நனைந்து விட்டதா? என்று நினைத்த மாத்திரத்தில் அவளுடைய இடுப்புக்குக் கீழே எல்லாம் பிசுபிசுப்பதாய் உணர்ந்தாள்.
எதை யாரிடம் சொல்வது? அருகிருப்பவரிடமும் சொல்ல முடியவில்லை. வலியும் ரணமாய் இருக்க. வயிறு பிசைந்து பிசைந்து வலி எடுத்தது. ஜன்னலிலிருந்து காற்று படும்போதெல்லாம் துர்நாற்றம் உடலிலிருந்து வீசுவதாய் உணர்ந்தாள்.
எழுந்து உதவி கேட்கக்கூட முடியவில்லை. நடத்துநர் எங்கே இருக்கிறார்? என்று தேடவும் முடியவில்லை. அவள் நினைப்பெல்லாம் தான் அமர்ந்த இடத்தில் கறைபட்டிருக்குமோ? தனது உடையில் கறை பட்டிருக்குமோ? என்று தட்டுத் தடுமாறி
எழுகையில்தான் இன்னும் கொடூரமான ஒன்றும் நிகழ்ந்தது.
அவள் எழுகையில் அவளுடைய இடுப்பையும், மார்பையும் தொட இருக்கையின் இடுக்கு வழியாகத் தொட முயன்று கொண்டிருந்தான் பின் இருக்கையில் உட்கார்ந்திருந்த ஆசாமி. அவளது இடுப்பை முன்னிருந்தே தடவிக் கொண்டிருந்திருக்கிறான். ஆனால் இவளோ வலியில் துடித்துக் கொண்டிருந்ததால் இதைச் சரி வர உணரவில்லை. வலி ஒன்றே உடல் முழுவதும் வியாபித்ததில் இது தெரியாமல் இருந்திருக்கிறது. அத்தனைப் பைகளை மடியில் வைத்திருந்ததாலும் வலி அதிகமாய் இருந்ததாலும் அவன் செய்கையை அதற்கு முன் அவளால் அறிய முடியவில்லை. தட்டுத் தடுமாறி எழும்போது “சீ!!! நாயே. உனக்கெல்லாம் அறிவே இல்லையா? என்று மட்டும்தான் கேட்க முடிந்தது.
இதற்கு மேல் கேட்டால் எல்லோரும் தன்னைக் கவனிப்பார்கள் என்று அத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டி வந்தது. இருக்கையில் கறைபடவில்லை என்றாலும் உடையில் பட்டிருந்தது. வேறுவழியில்லாமல் நடத்துநரைத் தேடி நான் இங்கு இறங்க வேண்டும் என்றும் அவசரம் என்றும் சொல்லவும், ஒரு வழியாகப் புரிந்து கொண்டு இறக்கினாரா? இல்லையா? எனத் தெரியவில்லை. ஆனால் விசிலடித்து பேருந்தை நிறுத்தினார்.
திறந்திருந்த உணவகம் அருகில் இறங்கி,தனது பைக்குள் வைத்திருந்த துணியையும், நாப்கினையும் எடுத்து கழிவறையில் மாற்றிக் கொண்டு, வலியில் இடுப்பு எலும்புகளும் நரம்புகளும் புடைத்து எழ அவளுக்கு பையை நகர்த்தக் கூட முடியாமல் இருந்தது. ஒரவழியாக பேருந்து நிறுத்தம் வந்து நின்றாள். மாலை நேரத்தின் வெளிச்சம் குறைந்து அதன் வெள்ளை நிறத்தை இருள் நிரப்பிக் கொண்டிருந்தது.
ஆடை மாற்றி நாப்கின் மாற்றி வரவே அரை மணி நேரத்திற்கு மேலானது. பிறகு ஏதோ உள்ளூர்ப் பேருந்து கால் மணி நேரத்திற்குப் பின்புதான் வந்தது. நிற்க முடியாமல் கால், இடுப்பு என்று கடுத்துக் கொண்டிருக்க ஒருவழியாக பேருந்து ஏறினாள்.
அவ்வளவாக ஆட்கள் இல்லாத பேருந்து இன்று அதிசயமாக மீண்டும் ஒருமுறை ஜன்னலோர இருக்கை கிடைத்தது. உட்கார்ந்ததும் வேகத்தடையில் பேருந்து ஏறி இறங்கியது. ஏறி இறங்கியதும் கெட்டிப் பட்டுக் கிடந்த கல் போன்ற மார்பு பயங்கரமாக உயிர் போக வலித்தது.
கொஞ்ச நேரத்திலேயே தன்னை அறியாமலேயே தனது இருக்கையின் இடைவெளி வழியே கவிதாவின் கண்கள் போனது. பின் இருக்கையில் யார் அமர்ந்திருக்கிறார்? என்று நொடி திரும்பிப் பார்த்தாள். நல்லவேளையாக பின் இருக்கையில் ஒரு பெண் அமர்ந்திருந்தாள். கவிதாவின் மனது லேசாக வலியையும் தாண்டி லேசாக ஆறதல்பட்டுக் கொண்டது.
பெண்ணின் வெளி சுருங்குவதெல்லாம் இப்படிப்பட்ட ஒரு சிலரால்தானே… பெண்ணின் எல்லை வகுப்பது இப்படிச் சிலரின் கைகளும்தான் என்று மாறுமோ...???