பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பப் பயப்படும் காலத்தில், பிள்ளைகள் படித்து என்னதான் செய்யப் போகிறார்கள்? எனும் காலத்தில், பிள்ளைகள் படித்தால் நல்லதுதான் என்று நினைத்தாலும் பள்ளிக்கு அனுப்பப் பணம் இல்லாத நிலை நந்தினியின் வீட்டில். எல்லாருக்கும் படிப்பு என்பதெல்லாம் நிறைவேறிவிடும் நிலை அவர்கள் வீட்டு சூழலால்தான் மாறும் என்பதனை மற்றவர் புரிந்து கொள்ள வாய்ப்பில்லை.
நந்தினி படுசுட்டி, படிப்பிலும் எழுத்திலும் கெட்டி. எதாவது வாசிக்க வேண்டும் என்றாலோ சொல்ல வேண்டும் என்றாலோ நந்தினியை வீட்டிலும் பள்ளியிலும் அழைப்பார்கள். கொஞ்ச காலத்திலேயே அதுவே அவளது அடையாளமாக மாறிப்
போனது.
பெண் பிள்ளைதானே படிக்க வைக்க வேண்டாம் என்கிற எண்ணம் நந்தினியின் பெற்றோருக்கு இல்லை. படிக்க வைக்க பணம்தான் இல்லை. 5 ஆம் வகுப்பு வரை அரசு தரும் இலவசக் கல்வி கிடைத்தது. அதுவும் பக்கத்து ஊர்தான். நடந்து போய் படித்தாயிற்று. இந்த ஊரிலிருந்து நடந்து போகும் பெண்களோடு நடந்து போய் படிக்கட்டும் தூரமில்லை. காசும் தேவையில்லை என்பதால் படிப்புக் கிடைத்தது. அதற்கு மேல் அரசுப் பள்ளி போக வேண்டுமென்றாலும் பேருந்தில் செல்லும் தூரம், அருகெல்லாம் எக்கச்சக்கமான தனியார் பள்ளிகள் இருந்தாலும், அந்நிழலில் கூட நந்தினியை நிற்க வைக்க நந்தினியின் அப்பாவால் முடியாது அவ்வளவு பணம் தேவை அங்கே சேர்க்க.
பல்லாயிரங்களை ரொக்கமாகக் கட்டினால்தான் அந்தப் பள்ளியின் கதவுகள் நந்தினிக்குத் திறக்கும். அதுபோக புத்தகம், சீருடை எனும்போது அதிகச் செலவு தாக்குப்பிடிக்க முடியாது. அதுமில்லாமல் ஒரு பையனையாவது படிக்க வைத்து விடவே போராட வேண்டியிருந்தது. அவனாவது நல்ல வேலைக்குப் போனால் பெண் பிள்ளையை கரையேற்றுவான் என்கிற நப்பாசைதான். அப்படி குடும்ப சூழல் இருக்கையில் நந்தினியின் பக்கம் கருணைப் பார்வை விழவே வாய்ப்பில்லை.
அவளுக்கென்று மெனக்கெடவும் வறுமை இடம் கொடுக்கவுமில்லை.
இந்தநிலையில் பக்கத்தில் ஓரளவுக்கு கம்மியான காசு கட்டும் பள்ளியில் நந்தினியின் அனத்தல் தாங்க முடியாமல் நுழைவுத் தேர்வை மட்டும் எழுத வைத்தார். அதில் இங்கிலீஸெல்லாம் கேள்வி கேப்பாங்க. நம்ம ஊரு பள்ளிக்கொடத்துல படிச்ச புள்ள மொத்த பள்ளிக்கூடத்துக்குமே ஒத்த வாத்தியாரு. இதுல நந்தினி பாஸாக மாட்டாள் என்பது அவளின் அப்பாவின் எண்ணம். நினைப்பதெல்லாம் நடந்துவிடுமா? இருக்கிற சிக்கல் பத்தாது என நந்தினியும் அந்தத் தேர்வில் தேறிவிட்டாள் என வீட்டிற்குக் கடிதம் வர அதுவும் நந்தினியின் கையில் முதலில் கிடைக்க இன்னும் தலைவலிதான் நந்தினியின் அப்பாவிற்கு.
இப்பொழுது நந்தினியின் அப்பா சின்னச்சாமி நந்தினியிடம் என்ன சொல்லித் தப்பிப்பது என்று விழித்துக் கொண்டிருந்தார். ‘படிக்கற பிள்ளய பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப முடியல என்கிற ஏக்கம் அவருக்கும்தான் இருந்தது’ ஆனால் படிப்புக்குச் செலவழிக்க பணம் எங்கே போவது? அவருக்கு உதவுகிற யாரும் பிள்ளையின் படிப்பு என்றதும் ஏதேதோ காரணம் சொன்னார்களேத் தவிர, பணம் கொடுக்க மனம் இல்லாதவர்களாக இருந்தார்கள். அதுக்கும் மேல ஒரு படி போயி, “பொம்பளப் புள்ள படிச்சு என்ன பண்ணப் போகுது. நீ இருக்கற கஸ்டத்துக்கு பொம்பளப் புள்ள படிச்சு என்ன பண்ணப்போகுது? ஒனக்கு ஒத்தசயா இருக்கப் போறது ஆம்பளப் பையன்தான” என்று மனதைக் காயப்படுத்தினார்கள்.
இது இப்படியிருக்க நந்தினியோ வீட்டுக்கு கடிதம் வந்ததால் தன் தோழிகளிடமெல்லாம் தன் பள்ளிக்கூடம் பற்றி பெருமை அளப்பதும், அண்ணன் அக்காமார்களிடம் அந்த பள்ளியைப் பற்றிக் கேட்பதும் என்று குதூகலமாய் இருந்தாள். கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு. “தாய் தவுட்டுக்கு குத்துனா. பிள்ளை இஞ்சி பனியாரம் கேக்குமாம்” என்கிறதைப் போல சின்னச்சாமி படுகிற கஸ்டமும் வறுமையும், பிள்ளை நந்தினிக்கு புரிவதாயில்லை.
“அந்தப் பள்ளிக்கூடத்துல பாடம் நடத்துறதுக்கு எலும்புக்கூடெல்லாம் இருக்காம். அதை வச்சுப் பாடம் நடத்துவாங்களாம். அது நெசமாவே ஏற்கனவே செத்துப் போனவங்க எலும்புக்கூடாம்.” என்றதும் பயத்தில் நந்தினி, “எலும்புக்கூட்டுல செத்தவங்க பேயா வந்துட்டா என்ன பண்றது” னு என்னென்னவோ நெனச்சு பயந்து கொண்டிருந்தாள். அது அதற்கென இருக்கும் மாவில் தயாரிக்கப்பட்டிருக்கும் என்று சின்னச்சாமி சொல்லியும் அதனை நினைத்து நந்தினிக்கு
காய்ச்சலே வந்துவிட்டது.
“சரி அப்ப அந்தப் பள்ளிக்கூடம் போக வேணாம்னு” சொன்னதுதான் தாமதம் “இல்லப்பா நான் அந்த பள்ளிக் கொடத்துலதான் படிப்பேன்” என்று எழுந்து உட்கார்ந்தாள். சின்னச்சாமி இந்தச் சிக்கலைத் தீர்க்க முடியாமல், பணம் தயார் செய்ய
முடியாமல் தயங்கிக் கொண்டிருந்தார். இதனைக் கண்டும் கண்டு கொள்ளாததைப் போல் கூலி வேலைக்குச் சென்று கொண்டிருந்தார்.
கூலி வேலை செய்யும் இடத்திலேயும் விசாரித்தார். ஒருவர் உதவுவதாகச் சொல்லவும், மனம் லேசானது சின்னச்சாமிக்கு, ஆனாலும் அவர் மனைவி, “அகலக்கால் வைக்காதீங்க. நாம இருக்கற நெலமையில திரும்பக் கடன் கட்ட முடியாதுன்னு” சொல்லியும், “நல்லாப் படிக்கிற பிள்ளய காசக் காரணம் காட்டி படிக்கவிடாம எப்படி வச்சிருக்கறது”னு சின்னச்சாமி நினைத்துத்தான் இந்த முடிவுக்கு வந்தார்.
ஒரு வழியாக உதவுகிறேன் என்று சொன்னவர் உதவவும் வேறு யாரிடமும் பணம் கேட்க வேண்டிய சூழல் ஏற்படவில்லை. முதல்நாள் பள்ளிக்குக் கௌம்பினாள் நந்தினி. வாய் நிறையப் புன்னகையோடு போன தீபாவளிக்கு எடுத்து ஒருநாள் மட்டும் போட்ட புது டிரஸ்ஸைப் போட்டுக்கொண்டு வானுலகத் தேவதை வந்ததைப் போல் பறந்து கொண்டு சென்றாள்.
அப்பா அன்று கிடைத்த வேலை செய்து வீடு வரும்போது வீடே அமைதியாக இருந்தது. என்னவென்று சின்னச்சாமி மனைவியிடம் கண்ணசைவில் கேட்க, நீங்களே அவளிடம் கேளுங்கள் என்று கண்ணால் பதில் சொல்லவும், அவர் என்ன நந்தினி முதல் நாள் பள்ளிக்குடம் எப்படி இருந்தது என்று கேட்கவும், கடகடவென்று அழுக ஆரம்பித்தாள்.
“அப்பா. நான் அந்த ஸ்கூலுக்குப் போக மாட்டேன்ப்பா.” என்றதும், “ஏன் என்ன ஆச்சு? அழுகாமச் சொல்லு…” என்று கேட்கவும் அழுகையினூடே, “அப்பா இன்னைக்கு பென்சில் கொண்டு வராதவங்க எழுந்திரிங்க. பென்சில் வாங்க
சிரமப்படுறவங்க இருந்தீங்கன்னா சொல்லுங்கன்னு ஒரு டீச்சர் கேட்டாங்க.”
“நானும் எழுந்திரிச்சம்பா”
“சரி மா. என்ன ஆச்சு?”
“நீயெல்லாம் ஏழையா? கொழுக் மொழுக்னு இருக்க. பாக்க ஆடம்பரமா டிரஸ் பண்ணியிருக்க. ஒனக்கல்லாம் பென்சில் குடுக்க முடியாதுன்னு சொன்னாங்க”
“எனக்கு ரொம்பக் கேவலமாப் போச்சுப்பா. எல்லாரும் சிரிச்சாங்க. நாம ஏழை தானப்பா. அதத்தானப்பா நானும் சொன்னேன். எல்லாரும் என்ன பாத்து சிரிச்சாங்கப்பா. நான் இனிமேல் அந்த ஸ்கூலுக்குப் போக மாட்டேன் பா.” என்று அழுது கொண்டே இருந்தாள் நந்தினி.
“அப்படியெல்லாம் சொல்லக்கூடாது காசெல்லாம் கட்டியாச்சு. நீ பத்தரமா ஸ்கூலுக்குப் போய் நல்ல பிள்ளையா படிக்கணும். சரியா?” என்று ஒருவாறு தேற்றி தூங்க வைத்தார். ஆனால் அவருக்குத் தூக்கம் இல்லை. வறுமை தெரியாது என்று நினைத்த பிள்ளைக்கு பென்சில் கூட நமக்கு வாங்க முடியாத வறுமையில் இருக்கிறோம் என்று நந்தினி உணர்ந்ததை நினைத்துப் பெருமைப் படுவதா? இல்லை அவ்வளவுக் கேவலமான வறுமை எல்லோராலும் நகைச்சுவையாய்
பார்க்கப்படுவதை நினைத்து கவலைப்படுவதா? என்று நினைத்து நினைத்து இரவெல்லாம் தூக்கம் தூரமாகியது.
தன் பிள்ளை ஏழை என்று ஒத்துக் கொண்டதை நினைத்து வருந்துவதா? பணங்காரிங்கற வார்த்தையையே அவள் கெட்ட வார்த்தைபோல் நினைப்பதை நினைப்பதா? எவ்வளவு துன்பத்திலும் கள்ளங்கபடம் அற்ற நந்தினியின் முகம் பார்த்து வறுமை மறந்ததை நினைப்பதா? அத்தனை நினைவுகளுக்கும் மேலாய் மற்றவர்க்கு கடன் கொடுத்து வாழ்ந்த தன் கடந்த காலத்தை நினைப்பதா? இரவோடு இரவாக நந்தினியின் அப்பா தனது நினைவால் வலி உண்டாக வெளியில் போய் தள்ளாடியபடி வீடு வந்தார். பகலெல்லாம் அழுது வீங்கியிருந்த தன் மகளின் முகத்தைத் தடவிப் பார்த்து சின்னக் குழந்தைபோல் அழுதான் சின்னச்சாமி.
ஆனாலும் அடுத்த நாளிலிருந்து நந்தினி நன்றாகப் படித்ததும் நல்ல மதிப்பெண் எடுப்பதைப் பார்த்து தானே பள்ளிக்கட்டணம் பத்தாம் வகுப்பு வரை கட்டிவிடுவதாக உறுதி கொடுக்கவும் மிக நன்றாய்ப் படித்தாள் நந்தினி. ஆனாலும் நோட்டு, புத்தகம் என்று சிறு செலவுகளுக்கே தடுமாறத்தான் செய்தார்.
ஒருமுறை சமூக அறிவியல் ஆசிரியர் நோட்டு வாங்கி எழுதி வரச் சொல்லவும். அப்பா பெரிய நோட்டுக்கு பதிலாக குட்டி நோட்டினை வாங்கி வரவும் எதுவும் சொல்லாமல் அந்த நோட்டிலேயே எழுதிக் கொண்டு போகவும், ஆசிரியர் நோட்டு அடுக்கச் சொல்லும்போது என்ன இது குட்டி நோட்டுல எழுதிகிட்டு வந்துருக்க என்று ஆசிரியர் அனைவரின் முன்னிலையிலும் திட்டியது அவளுக்கு மிகவும் வலித்தது. முதலில் பட்ட பாடம் தான். நாம் எவ்வளவு வறுமையில் இருந்தாலும் அடுத்தவரிடம் வறுமை என்று சொல்லக்கூடாதென திட்டும் அடியும் வாங்கிக் கொண்டாள்.
எப்பொழுதும் முதல் மூன்று இடங்களுக்குள்ளாகவே வந்து பத்தாம் வகுப்பிலும் நல்ல மதிப்பெண் பெற்றதால் பள்ளிக் கட்டணம் செலுத்தியவரே கல்லூரிக் கட்டணமும் செலுத்தினார். எதாவது போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றாலோ அல்லது நல்ல மதிப்பெண் பெற்றாலோ அப்பாவோடோ அல்லது அம்மாவோடோ கட்டணம் செலுத்துபவரிடம் காண்பித்து ஆசி பெறுவதும் 6 வருடத்தில் வழக்கமாகிவிட்டது.
ஒருமுறை அப்பா அழைத்துச் செல்ல வர இயலாத சூழ்நிலையில் அம்மாவுடன் அவரைப் பார்க்கச் சென்றாள் நந்தினி. உதவி செய்பவரும் அவருடைய மனைவியும் வீட்டில் இருக்க, அம்மாவும் அவ்வளவு பெரிய வீட்டைப் பார்த்து ஆச்சர்யபடவும், அந்த அம்மாள் வீட்டைச் சுற்றிக் காட்டவும் அம்மா அவர்களோடு போகவும், “இன்னைக்கு என்ன வாங்கியிருக்கீங்க?” என்று அவள் எதிர்பாராத விதமாக கையை நீட்டி கேட்கவும், “மாவட்ட அளவில் தமிழ் வளர்ச்சித் துறை நடத்திய கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்று அதற்காக ஒரு 1000 ரூபாய் தொகையுடன், வந்ததைக் கண்ட அவர், “உனக்கு எப்பவுமே என் ஆசீர்வாதம் உண்டு” என்று அவர் சொல்லவும், ஆமாம் அப்பாவோடு வரும்போதெல்லாம் நாம் இவரிடம் ஆசீர்வாதம் வாங்குவோமே என்ற நினைப்பு வர, அவர் காலில் விழுந்தாள் நந்தினி.
நந்தினி காலில் விழுந்ததும் அவளை தூக்கி நிறுத்தியவர் நெற்றியில் முத்தமிடவும், ஒரு நிமிடத்தில் அவளுக்கு உலகமே இருண்டு விட்டது. அவள் தள்ளாடி நிற்கவும் அவளின் அம்மாவும், அவரது மனைவியும் வர சரியாக இருந்தது. அம்மாவிடம் இதைச் சொல்வதா? அம்மா என்ன நினைப்பாள்? சாதாரண நேரத்திலேயே வயசுக்கு வந்த பிள்ளயப் பள்ளிக்கூடம் அனுப்பாதீங்க அவமானமா போய்டும்னு அடிக்கொருமுறை சொல்லிக் கொண்டே இருப்பாள். அதனால்தான் படிக்க விட மாட்டார்களே என்பதால் தெரியாமல் வகுப்பில் படிக்கும் பையன்கள் கேலி செய்தால் கூட சொல்ல மாட்டாள். இதைச் சொன்னால் அவ்வளவுதான் இனி படிக்கவே வைக்க மாட்டாள் என்று இதனை மனதோடு வைத்துக் கொண்டு, அதன் பிறகு எந்தச் சூழ்நிலையிலும் அவர் வீட்டுக்கு போவதில்லை. அப்பாவிடம் இதைச் சொன்னால் சிக்கலாகிவிடும்.
நடந்தது தவறு. அவரின் மகள் வயதுதானே தனக்கும், அப்படியானால் இத்தனை நாட்களாக அப்படித்தான் நினைத்தாரா? நினைக்க நினைக்க அவளுக்கு இன்னும் சிரமமாக இருந்தது. அதனாலேயே நல்ல மதிப்பெண்களுடன் தேறி அரசுக் கல்லூரியில் சேர்ந்து, அரசு விடுதியிலேயே சேர்ந்து முடிந்தளவு வீட்டைத் தொந்தரவு செய்யாமல் படித்து முடித்தாள். அதே போல ஆசிரியர் பயிற்சியையும் மேற்கொண்டு சம்பாதிக்க ஆரம்பித்தாள். தான் பட்ட துயரங்களால் வறுமையில் சிரமப்படும் குழந்தைகளுக்கு உதவும் நல்ல இடமாக அதனை பயன்படுத்திக் கொண்டாள்.
தான் அவமானப்பட்டதைப் போல பிள்ளைகளை வறுமைக்காக ஒரு சுடுசொல் கூட சொல்லக் கூடாது என்று கவனமாக இருந்தாள். பழைய நினைவுகளெல்லாம் அவ்வப்போது வந்து போகும். முத்தம் என்றாலே இன்னும் நடுக்கம் வந்து போவதை உணர்கிறாள். இவ்வளவு நாட்களின் பின்னும் அது மனதை ரணப்படுத்துவதை மறைக்கவும் முடியவில்லை.
இப்பொழுது வாழ்ககையில் பலவற்றைக் கடந்தாயிற்று. இப்பொழுது நந்தினிக்கு திருமணம் முடிந்து ஒரு பையனும் இருக்கிறான். இருந்தாலும் அந்நியர் யாரேனும் அருகில் வந்தாலும் அந்த தலையைக் கிறுகிறுக்க வைக்கும் நிமிடங்கள் நினைவில் வந்தபடியே இருக்கின்றது.
தன் பையனை தன் சுய வருமானத்தில் படிக்க வைப்பதே நிறைவாய் இருந்தது அவளுக்கு.
சில நேரம் கர்வம் கூட வருவதுண்டு.
இவ்வாறு இருக்கையில் தான் பார்க்க வளர்ந்த மாணவன் தன் கைகளால் பிழைகள் திருத்தி பல மேடைகள் செல்லும்போது எப்போதும் இவளிடம் ஆசி வாங்குவான். தன் மகனைப் போலவே நந்தினி அவனை நினைக்க ஆரம்பித்திருந்தாள். சில நேரங்களில் சொந்த பிள்ளையின் வெற்றியை விட அவனின் வெற்றி அவளை குதூகலிக்கச் செய்யும். இப்படியாக இருக்கையில் மாணவன் தான் மிகவும் விரும்பும் வெற்றி மேடையை அவன் அடைந்து ஒரு சிறந்த விருதினைப் பெறவும், அவன் பள்ளியை விட்டு ஆறு ஆண்டுகளுக்குப் பின் தனது முன்மாதிரியே நந்தினி ஆசிரியை தான் என்று பேச்சோடு பேச்சாக மேடையில் சொன்னதோடு, இன்று வீட்டுக்கே மெடல், பொன்னாடை, விருதோடு வந்து சேர்ந்தான்.
வந்ததும் அம்மா என்று சொல்லி காலில் விழுந்தான். அவன் காலில் விழுந்ததும் உடலெல்லாம் புல்லரித்து ஆனந்தத்தில் கண்கள் கண்ணீர் வார்த்தது. அவன் வந்து காலில் விழுந்ததும் தன் மகன் தான் என்ற எண்ணமே மேலோங்கியது.
இப்போது காலில் விழுந்தவனை அள்ளி அணைத்து முத்தமிடத் தோன்றியது. அவ்வளவு உணர்விலும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, அவனது தலையில் கை வைத்து ஆசீர்வதித்தாள்.
இப்பொழுது மின்னலென மங்கலாய் ஒரு நினைவும் அதனைத் தொடர்ந்து ஒரு கேள்வியும் அவள் மனதில் உதித்தது. இன்று உணர்ச்சி வசத்தில் மனதில் நினைத்த மாத்திரத்தில் அவனை முத்தமிட்டிருந்தால் சிறு பிள்ளையில் தனக்கு நடந்ததைப் போல அவன் நினைத்திருந்தாள் என்னவாயிருக்கும் இப்பொழுது சிறிதாய் ஒரு புரிதல் எட்டிப் பார்க்கிறது.
அன்று நிகழ்ந்தது தவறா? தான் புரிந்து கொண்டது தவறா? என இப்பொது யோசிக்கையில், ஏற்கனவே பெற்றவரும் மற்றவரும் பெண்ணைக் குறித்து என்னவெல்லாம் சொல்லி வைத்தார்களோ? ஆதலால் அன்பின் வெளிப்பாடாக முத்தம்
இடப்பட்டிருந்தாலும் அது வேறொன்றின் தொடக்கமெனவே இதுவரையிலும் சொல்லப்பட்டது.
அதைத்தானே இந்தப் பெண்ணின் மனதும் நம்பியது. இத்தனை வருடங்களுக்குப் பின் அன்று நடந்ததிற்கு விடை கிடைத்தது. அதுவும் தனக்கு நடக்கும் போதுதான் ஒரு புரிதல் வருகிறது. அடுத்தவருக்கு நடக்கும் வரை நம் கருத்து வேறாகவும், நமக்கு நடந்தால் வேறாக இருக்கும் என்பது இப்போது விளங்கி விட்டது.
இந்த நீண்ட சிந்தனைக்குப் பின் நாளை தனக்கு உதவியவரைத் தேடிப் பிடித்து தன் மகனோடு சென்று காலில் விழுந்து ஆசி வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள் நந்தினி.