மாறனும் மணியும் சிறு வயதிலிருந்தே ஒன்றாய்ப் படிப்பவர்கள். கிட்டத்தட்ட இருவரின் எண்ணங்களும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் அந்த அளவுக்கு இருவரும் ஒற்றுமையாய் இருப்பவர்கள். பின்னாளில் கல்லூரியில் இணையும் போது அவர்கள் படிக்கத் தேர்ந்தெடுத்த முதன்மைப் பாடங்கள் மாறிப் போயின. ஆனாலும் ஒரே கல்லூரிதான். இருவரும் படித்துவிட்டுச் செய்வதெற்கென எத்தனையோ யோசனைகள், லட்சியங்கள் வைத்திருந்தனர். மற்ற நண்பர்களைப் போல் அல்லாமல் பெரும்பாலும்வாழ்க்கைக்கான முதலீடாக அந்த நேரத்தினை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். மாறனுக்கு எதனையும் உருவாக்கத் தெரியும். மணிக்கு அதற்கு உருவம் கொடுக்கத் தெரியும். அப்படித்தான் அதுவரையில் இணை பிரியாமல் 19 ஆண்டுகள் கடந்திருக்கின்றனர்.
மணி கல்லூரியில் கணிப்பொறித்துறையில் இரண்டாமாண்டு, மாறனுக்குத் தமிழ்த்துறையில் இரண்டாமாண்டு, ஆனாலும் யோசனை ஒன்று போலத்தான். மாறனும் கணிப்பொறித் துறைக்குத்தான் வருவான் என்று மணி நினைத்திருந்தான். ஆனால் எழுத்து யோசனை என்று தமிழ்த்துறையைத் தேர்ந்தெடுத்தான். கல்லூரிச் சேர்க்கையின் போது இவ்வளவு மதிப்பெண்கள் எடுத்திருக்கிறாய்? முதன்மைப்பாடமாக கணிப்பொறியும் கணிதமும் படித்திருக்கிறாய் அப்படியிருந்தும் ஏன் தமிழ்? என்று அங்கு கேட்ட பேராசிரியர்களைச் சமாதானப்படுத்துவே மிகப்பெரிய கடினமாய் இருந்தது.
எப்பொழுது எந்தப் போட்டி வந்தாலும் இருவரும் இணைந்தேதான் போட்டியிடுவார்கள். நடனம் என்றாலும் பேச்சு என்றாலும் இருவரும் இணைந்து புதுமாதிரியாய் உருவாக்கி மாணவர்களைக் கட்டுப்படுத்திவிடும் வல்லமைப் பெற்றவர்களாய் இருந்தார்கள். கல்லூரியிலிருந்து நடத்தப் பெறும் எல்லாக் கலை நிகழ்ச்சிகளிலும் இருவரும் நட்சத்திரங்களாய் ஜொலித்தார்கள்.
இவர்களுக்கெனவே இவர்களே இலக்குகளை நிர்ணயித்தார்கள். பெரும்பாலும் அடுத்தடுத்த நடவடிக்கைகளின் முடிவாகவே சந்திப்புகள் இருக்கும். அப்படித்தான் குறும்படம் ஒன்றை எடுக்க முடிவு செய்யப்பட்டது. ஒரு போட்டியை முன்னிட்டு, அந்தப் பேச்சில் இறுதி முடிவாக நாம் அனுதினம் பார்க்கும் காட்சிதான் இருக்க வேண்டும் கொஞ்சம் நகைச்சுவையும் கலந்திருந்தால் நலம் என்று முடிவெடுத்தனர். நாட்கள் குறைவாக இருப்பதால் அவர்களின் பார்வை கூர்மையாகி இருந்தது. எப்பொழுதும் ஒரு இடத்திற்கு தினமும் பயணிக்கும்போது மாறாத காட்சிகள் என்பவை என தீர்மானித்தபோது, சில இடங்களில் எப்பொழுதும் சந்திக்கும் முகங்களை மாறன் மனக்கண்ணில் ஓட்டிப் பார்த்தான்.
ஒரு நாளைக்குள் ஒரு பத்து சிக்னலையாவது கடக்க வேண்டியிருக்கும். அதுதான் பொருள் என்றதும் மாறன் தலைப்பையே முடிவு செய்தான். “சிக்னல்” என்பது குறும்படத்தின் தலைப்பு. படத்தினை எடுத்தல் அதற்கு ஆகும் செலவு உபகரணங்கள் எடுத்து முடித்ததும் செய்யும் வேலைகள் மணிதான் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் மூளை வேலையோ மாறனுடையது என்பதால் ஒரு கல்லூரி இல்லாத நாளில் மிகவும் பிசியான சிக்னல் ஒன்றை கவனிக்க ஒரு ஓரமாய் அமர்ந்து விட்டான்.
ஒரு நாளில் அந்த சிக்னலில் என்னதான் நடக்கிறது. மிகவும் ஈர்த்தவர்கள் அந்த சிக்னலுக்கு சம்பந்தமின்றி அதே நேரத்தில் அந்த சிக்னலின் கதாபாத்திரமாய் இருந்தவர்கள். போட்ட ஆடையையே போட்டுக் கொண்டு பல வருடங்களாய் குளிக்காமல் இருந்தவர்கள். யாராவது அவர்கள் இடத்தில் சாப்பாடு வைக்கிறார்கள். பெரும்பாலும் வேறு எதுவும் சாப்பிட்டதாய்த் தெரியவில்லை. பெரும்பாலும் தண்ணீர்தான் அவர்கள் உணவாய் இருப்பதைப் பார்த்தான். அங்கு ஒருவர் இக்கால சிக்ஸ் பேக் இளைஞர்களுக்கு சற்றும் குறைந்தவரில்லைஎன்றும் சொல்லும்படியாக நடந்து கொண்டிருந்தார். சொல்லப்போனால் அவர்களை விடவும் அழகாய் நடந்து கொண்டிருந்தார். அது அவரின் பேசன் நடைக்கான இடம் போல் தெரிந்தது.
அவர் மாறனின் கண்ணில் ஏதேச்சையாய் பட்டார். நல்ல ஒடிசலான தேகம், கண்டிப்பாகக் குளித்துச் சில மாதங்கள் இருக்கலாம். கைலி பழையது. அதை ஒரு பேசன் டிசைனரை கட்டச் சொல்லி கட்டியதைப் போல கட்டியிருந்தார். மறைக்கப்பட வேண்டிய இடம் மறைக்கப்பட்டிருந்த அதே நேரத்தில் அழுக்கேறிய அதே நேரத்தில் இளைஞர்கள் விரும்பும் கட்டு மஸ்தான தேகம் தெரியும்படி தொலைக்காட்சி பேசன் சோக்களில் நடப்பதைப் போல நடந்து வந்தார். அளவாக காலத்திற்கு ஏற்றவாறு அவரது பொடனி வரை நீண்டிருக்கும் அடர்ந்த முடியும், தாடியும் அளவாய் எப்படித்தான் வாய்த்ததோ? ஆச்சர்யபட்டுப்போய் அவர் நடந்து வருவது கூட ஒரு தேர்ந்த மாடலின் நடையாகத்தான் இருந்தது.
இவரைக் கண்கள் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே இவருக்கான இணை பற்றிய நினைவு மாறனுக்கு வந்தது. அது நடுத்தர வயது மதிக்கத்தக்க ஒரு அம்மா. ஆனால் பார்த்தால் அப்படித் தெரியாது. ஒரு கோயிலைச் சுற்றித்தான் அந்த அம்மா வாழ்கிறாள். யாரிடமும் பெரிசாகப் பேசி பார்த்ததே இல்லை. போட்ட உடைகளின் மேலேதான் வேறொரு ஆடையை அணிந்து கொள்கிறாள். அந்த அம்மாவின் நீண்ட கூந்தல் எந்தவித பராமரிப்புமின்றியம் நீண்டு திரித்திரியாய் இருந்தது. இன்றைய கொரியன் ஸ்டைலில் அதனை துணியின் நூலொன்றால் மடித்து கட்டியிருந்தாள். உண்மையில் அந்த அம்மாவிற்கு இதைப் பற்றியெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் நல்ல முடியைத் திரித்திரியாய் மாற்றுவதும் கலர் கலர் துணிகளால் அதனைக் கோர்த்துக் கட்டிக் கொள்வதும் இன்றைய பேசன் நடைமுறைதான். அதுவும் அந்த ஒரு கிராமத்தின் கோயிலில் எந்தவித பேச்சுவார்த்தையும் ஊடகங்களையும் அறியாத அம்மா எப்படி
இதனை அறிந்திருக்க முடியும்.
முன்பு சொன்ன மாடலோடு மாறன் இணைத்து நினைத்ததற்கு மற்றமொரு காரணமும் உண்டு. கிழிந்த துணி பனியனின் மேலே ஒரு புது டிசைனைப்போல அந்த அம்மாவுக்கு இருப்பதைப் போல இருக்கும். நீண்ட அழுக்கடைந்த பாவாடை. இருவரையும் ஒரே இணையாய் அவன் கற்பனைக் கண்ணில் நிறுத்திற்று. டக்கென அதற்கென நடிக்கும் ஆட்கள் கூட அவன் மனதில் தோன்றி விட்டார்கள்.
மொத்தமே 15 நாட்கள்தான் இருந்தது. கதையை முடிவு செய்வதற்கு. அதற்காகத்தான் இந்த சிக்னல் விசிட் மாறன் செய்தது. அப்பொழுதுதான் புதிதாய் ஒன்றைக் கவனித்தான். ஒரு நபர் தன்னைப் போலவே அந்த சிக்னலை கவனித்துக் கொண்டிருந்ததை, மாறன் கவனித்தான். ஆனால் காரணம் தெரியாததால் தன் வேலையை செய்து கொண்டிருந்தான். அவன் மறுநாள் ஒரு நடக்க மாட்டாதவனைப் போல ஒரு குச்சியை மட்டும் ஊன்றிக் கொண்டு தத்தித் தத்தி காசு கேட்க முயன்றான். பெரும்பாலும் அவன் ரெகுலர் மக்கள் வருகிற டைமிங்கைத் தவர்ப்பதை மாறனால் உணர முடிந்தது.
யாரும் அவனைக் கண்டு கொள்ளாமல் சென்றதால் அடுத்த நாள் முஸ்லீம் பெண்ணைப் போல் கருப்பு அங்கியை அணிந்து கொண்டு தத்தித் தத்தி நடந்தான். சிலர் இரக்கத்தில் பணம் போட ஆரம்பித்தார்கள். அவன்தான் அது என்பது முதலில் உணர மாறனுக்கு சிரமமாயிருந்தது.
ஆனால் சில நாட்களாக அவன் அவனைக் கவனிப்பதால் பெண் உடை அணிந்த போதும் முழு முதுகும் செயல் படாததைப்போல் கவிழ்ந்து கொண்டபோதும், முழு அங்கியால் மறைத்துக் கொண்டபோதும் அவன் கால்களில் இருந்த செறுப்பு முன்னாளில் பார்த்தவன்தான் என்பதனை மாறனுக்கு உணர்த்தியது. மற்றவர்கள் போகிற அவசரத்தில் காசிட்டனர் அல்லது திட்டிக்கொண்டே கடந்து சென்றனர்.
மாறனுக்கு கொஞ்சம் மோசமாகத் தோன்றியது. ஆதலால் அவரை பின்தொடர்ந்தான். ஒரு இடத்திற்கு போய் குளித்து முடித்து நல்ல நடையோடு டிப்டாப்பாக சென்றதைப் பார்த்ததும், அடிவயிற்றில் ஏதோ ஒன்று ஜில்லிட்டது. தன்னையே அறியாமல் ஏதோ ஒன்றைத் தொட்டுவிட்டதைப் போன்ற அருவருப்பும் பயமும் மாறனுக்கு உண்டானது. அடுத்த நாள் கல்லூரிக்கே மாறன் செல்லவில்லை. சிக்னலில் தானும் ஒருவனாய் காத்திருந்தான். இன்று அவன், அவனேதான் வந்தான். இன்று ஒரு சிறு குழந்தையோடு, அதே போல் வளைந்து கொண்டு நடக்க மாட்டாதவர்கள் வைத்திருக்கும் குச்சியை வைத்துக் கொண்டு முற்றிலும் வளைந்த உருவத்தில் ஒரு குழந்தையை பழைய துணியில் சுற்றி வளைந்த முதுகில் அமர்த்தியிருந்தான். அக்குழந்தை விடாமல் அழுது கொண்டே இருந்தது. கொஞ்ச நேரத்தில் அக்குழந்தை தொண்டை வறண்டு போய் அழுவதை நிறுத்தியிருந்தது. அழுக்கான முகத்தில் அது அழுத தடம் அங்கும் இங்குமாய்
திட்டுத்திட்டாய் நின்றது. இருந்தும், அதனைத் துடைத்துச் சுத்தப்படுத்தவோ இரக்கத்தில் கொடுக்கப்பட்ட காசில் ஏதேனும் வாங்கிக் கொடுக்கவோ அவன் செய்யவில்லை. அப்படிச் செய்வான் என்று எதிர்பாத்திருந்த மாறனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அடுத்த நாளில் இன்னும் ஒரு நபர் அதே போல இன்னுமொரு ஆள் வேறொரு குழந்தையோடு இவர் ஒருபுறமும் அவர் ஒரு புறமும் வசூலிக்க ஆரம்பித்தனர். இதை யாரிடம் சொல்வது? படம் எடுப்பது பேசன் சோ போல நகைச்சுவையாய் ஆரம்பித்த குறும்பட யோசனை, இப்பொழுது ஏதோ யோசிக்கவே கூடாத இடத்தில் வந்து நின்றது. இன்னும் இதனை மணியிடம் கூட கலந்தாலோசிக்கவில்லை. தான் பார்த்ததைச் சொன்னால் கண்டிப்பாக யாரும் நம்ப மாட்டார்கள் என்று அவனுக்குத் தெரியும். இப்பொழுது தீர்மானமாய் மாறன் யோசித்தான்.
உண்மையிலேயே அந்த ஆள் நடந்து வருவதையும் மாற்றுவதையும் ஒரு முகமதியப் பெண் போல மாறுவதையும் ஒரு மாற்றுத்திறனாளி போல நடிப்பதையும் யார் குழந்தையோ தெரியாது ஒரு நாளில் உணவு கூடக் கொடுக்காமல் அழ வைத்துக் காசு பார்ப்தையும் தனது கைபேசிலேயே படம் எடுத்தான்.
இதனைக் காவல் துறையில் ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் அவன் எண்ணம். ஆனால் அங்கே சென்றால் உடனடியாக மக்களை விழிப்புணர்வை பெறச் செய்ய முடியுமா என்று யோசித்தான். இன்று பெரும்பாலும் சமூகப் பிரச்சனைகளைப் பேசும் நம்பிக்கையான ஒரு யூடிபருக்கு அனுப்பினான். அவர் அன்றாட நடைமுறைப் பிரச்சனைகளை பேசுபவர் என்பதால் உண்மைத் தன்மையைக் கண்டறிவார் என்று துணிந்தான் மாறன். அனுப்பியாயிற்று மாறனுக்கு நிச்சயமாக என்று அவர் பதில் அளித்ததோடு இந்த மோசடிக்கு எதிராய் விழிப்புணர்வினை ஏற்படுத்தியும், அதே நேரத்தில் யார் குழந்தை என்றே தெரியாத குழந்தைகளையும் மீட்டெடுத்து அரசுக் காப்பகத்தில் ஒப்படைத்தார்.
இதே போன்ற குழுக்கள் எல்லா சிக்னல்களிலும் இருப்பதைக் கண்டறிந்து களைய சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும்படி பொது நல வழக்கு ஒன்றினையும் போட்டதாக மாறனுக்கு நன்றி தெரிவித்து அவனது சமூக அக்கறையையும் பாராட்டியிருந்தார் மெயிலில் யூடியூபர்.
தானாய் முடிக்க முடியாத ஒன்றினை யார் வாயிலாக முடியுமோ அவர்கள் வாயிலாக நிறைவேற்றுவதும் நல்ல யுக்திதானே. அப்படித்தான் குறும்படம் நடந்தது. இது நடந்ததும் இவற்றிலிருந்து பெற்ற அனுபவத்தை குறும்படமாகத் தயாரித்ததோடு, யூடியூபர் மாதிரியான கதாப்பாத்திரத்தை உருவாக்கி அவரே இதனைத் தட்டிக் கேட்டு விழிப்புணர்வை ஏற்படுத்துவதைப் போல கதையை நகர்த்தி முதன்முதலில் அவரைப் பின் தொடர்ந்த திக்திக் நிமிடங்களையும் பதிவு செய்து சிக்னல் என்பது தப்பு நடக்கவிடாமல் பார்த்துக் கொள்ளும் சிக்னலாகவும் இருக்க வேண்டும் என்கிற நினைப்போடு பார்த்துப் பார்த்து வார்த்தைகளைத் தயார் செய்து அந்தக் குறும்படம் எடுத்து குறிப்பிட்ட தேதிக்குள் அனுப்பியாயிற்று.
ஆனாலும் மாறனின் மனதில் அலையலையாய் சிக்னலின் ஞாபகங்கள். கொஞ்சம் மாட்டியிருந்தாருலும் எதிர்த் தரப்பில் தர்ம அடி கிடைத்திருக்கும். சரியாக மேலே எடுத்துச் செல்லாமல் விட்டிருந்தால் அங்கும் அலட்சியம் நிகழ்ந்திருக்கும். எல்லாவற்றையும் தாண்டி சில நாள் பார்க்கும் நமக்கே இவ்வளவு புரிகிறது என்றால் அங்கே கண்காணிப்பில் இருப்பவர்கள் அப்பாவிகளைச் சந்தேகிப்பதற்கு பதிலாக சமூகத்தின் மீது அக்கறை கொண்டிருக்கலாம். ஒரு சில நேரம் இப்படி எதாவது படைப்புகளை அனுப்பும்போது படைப்பாளனே தீர்வையும் சொல்ல வேண்டும் என்பது சிலரின் எதிர்பார்ப்பாய் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் தீர்வினை படைப்பவனே சொல்லிவிட்டால் நமக்கு ஒவ்வொருவருக்கும் தனித்தனியாய் பொறுப்பென்பது இல்லையா?
அவரவர் அவரவர் இடத்தில் என்ன பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டுமோ? அப்படி நடந்து கொள்வது அவ்வளவு நல்லது. எல்லாவற்றிலும் தீர்வினை எதிர்பார்ப்பவர்கள் இப்படியொரு நிகழ்வுகளை சந்திக்காமலா இருக்கிறார்கள். அவர்களும் சும்மா தானே கடந்து செல்கிறார்கள். ஒவ்வொரு தனிமனிதனும் தனது பொறுப்புகளை உணரும் வரை சமூகத்தில் தீர்வு என்பது மலராது என்று மாறனும் மணியும் உணர்ந்து கொண்டார்கள். குறும்படம் போட்டியில் வெல்வதை விட இப்படி ஒரு செய்தி மக்களுக்கு போய் சேர வேண்டும் என்கிற எண்ணம் அவர்கள் மனதில் தோன்றியது. அதற்கேற்றார்போல காட்சிகளும் வார்த்தைகளும் கைகொடுத்தது.
முதலில் மணி இவ்வளவு சிரமப்பட்டு எடுக்க வேண்டுமா? என்றபோது கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்கிற தீர்மானமான முடிவில் சிக்னல் எனும் குறும்படம் ஒன்றை எடுத்து விட்டார்கள். இந்த நிகழ்வு இப்பொழுது குறிப்பிட்ட இடங்களில் மாறியுள்ளது. எங்கோ வேறிடத்தில் வேற வகையில் இதே போன்றதொரு நிகழ்வு நடக்கலாம். மக்களையும் விழிப்புணர்வோடு இருக்கும்படி செய்தாயிற்று என்று மாறனும் மணியும் தங்களுக்கு எந்த முறை தெரியுமோ? அந்த முறையில் முயன்றிருக்கிறார்கள்.
நம்மால் முயன்றதை சமூகத்தில் செய்திடுவோம். சில நேரங்களில் எதிர்ப்பைப் பதிவிடுவது கூட வேலை செய்யலாம் என வாசகங்களோடு குறும்படம் முற்றிற்று. குறும்பட நடுவர்களின் முன்னால், சில நேரம் மக்கள் தானே நடுவர்கள். அவர்களே முடிவெடுக்கட்டும் என்று அமைதியாக அடுத்தகட்ட நகர்வில் இருந்தார்கள் மாறனும் மணியும்...!