மின்னல் என மின்னும் கண்கள் உலகை அள்ளி வாரத் துடிக்கும். துறுதுறுவெனத் திரியும் சோம்பலற்ற இறக்கைகளற்ற பட்டாம் பூச்சி அவள். தத்தித்தத்திப் படிக்க வைக்கப்பட்டக் குடும்பத்தில் படித்த முதல் பட்டதாரி பெண் அவள். ஆண்களையே அளவாகப் படிக்க வைக்கும் சமூகம் அவளுடையது. படிப்பில் படு கெட்டிக்காரி என்பதால் இத்தனை வருடங்களும் ஒரு தவமென படித்து முடித்தாள். படிப்புதான் அனைத்தையும் தரும் என்று நம்பியவள் அவள். அதற்கான பலன் கிடைக்கும் நாளின்று. அது மட்டும் அவள் முகமலர்ச்சிக்குக் காரணம் இல்லை.
எல்லாவற்றையும் எளிதில் கற்றுக் கொள்ளும் அவள். புது வகையான கற்றலுக்கு அன்று தயாராகியிருந்தாள். இத்தனை வருடங்களின் தவமும் கனவும் கைவரும் நாளென்று நள்ளிரவு முதலே அவளுக்குத் தூக்கம் வரவில்லை. பெற்றோரின் துக்கமெல்லாம் மாறப்போகும் நல்ல நாளென்றே நம்பியிருந்தாள்.
இருபத்து மூன்று வயது நிரம்பிவிட்ட தமிழ்ச்செல்வியின் முதல் நேர்காணல் இன்று. அதைவிடச் சிறப்பிலும் சிறப்பு என்னவென்றால் அவளுக்கெனவே பார்த்துப் பார்த்து எடுக்கப்பட்ட கருநீலப்புடவை, அவளின் செந்நிறமேனி நிரப்ப அதற்கேற்ற சட்டையும் அதுவும் அவளை அமர வைத்து அவளது மார்பளவு, கை அளவு என்று அவளுக்கென அளவு எடுத்துத் தைக்கப்பட்ட சட்டை, அதை அணியும் போதே ஆனந்தக் கூத்தாடும் மனதோடு தமிழ் இருந்தாள்.
இது என்ன அவ்வளவு பெரிய செய்தியா? என்று கேட்காதீர்கள். நீங்கள் தமிழ்ச்செல்வியை முழுவதும் அறியவில்லை என்றே நினைக்கிறேன். மற்றவருக்கு ஏதேதோ கனவுகள் இருக்கலாம். ஆனால் தமிழின் கனவு வித்தியாசமானது. தனக்கென அளவு எடுக்கப்பட்ட ஒரு சட்டையை அணிந்து கொள்ளும் பாக்கியம் இதுவரை அவளுக்கு வாய்க்காதது அவள் கொடுத்து வைத்தவள் இல்லை என்பதைத்தான் காட்டுகிறது.
அவளுக்கென தனி உடை இதுவரை வாங்கியதில்லையா? ஏதாவது சொல்லாதீர்கள் என்ற என்னைக் கேட்டாள். தமிழின் ஆழ் நினைவுகளின் வழியாக அவள் கடந்து வந்த பாதை பார்த்தால், அவளுக்குப் பிறப்பு எடுத்த நாள் முதற்கொண்டு அவளுக்கென தனித்த உடைகள் இல்லை. அண்ணனுக்கு அடுத்தவளாகப் பிறந்தவள் என்றதாலும், பிறந்ததும் என்ன துணிகள் போட்டு விட்டார்களோ தெரியாது. அவள் வளர வளர அண்ணனின் சட்டை டிரவுசர்களே அவள் உடையாய் இருந்தது.
பின் பள்ளிப் பருவத்தில் பழைய மாணவிகளின் சீருடைகள் அவளின் சீருடையாய் மாறியது, பள்ளிக்குப் போகும் போது, கால்களில் செருப்பும் இருக்காது. வீட்டில் இருக்கும் நாட்களிலும் பள்ளிச் சீருடையை அணிவது பற்றிச் சிலர் கிண்டலடிப்பதுமுண்டு. அதனைக் கண்டு கொள்ளாமல்தான் இருந்தாள். வருடத்தின் ஒரே பண்டிகை அவளுக்குத் தீபாவளிதான். அப்பொழுதுதான் அவளுக்குப் புதிதாய் ஒரு உடை கிடைக்கும். அப்பொழுதெல்லாம் தீபாவளி இரவு மிக நீண்டதாய் இருக்கும். அப்பா முதல்நாள் இரவுதான் தீபாவளிக்கு துணி வாங்கச் செல்வார், அதற்காக அவள் மனம் அடித்துக் கொண்டே இருக்கும்.
அது என்ன வண்ணத்தில் இருக்கும்? அதில் என்ன டிசைன் இருக்கும்? பாவாடை, சட்டையா? கவுனா? சுடிதாரா? பூக்கள் வரைந்திருக்குமா? எப்பொழுது அந்தப் புதுத் துணியின் வாசத்தை நுகர முடியும் என்று பல சிந்தனைகளுக்கு நடுவே அப்பா வருவது அர்த்த சாமமாக இருந்தாலும் அதைப் பார்ப்பதற்காக அமர்ந்திருப்பாள். சில நேரம் தூக்கம் வந்தாலும் அதனையும் பொறுத்துக் கொண்டு இருப்பாள். சில நேரம் கண்கள் மூடிக்கொண்டாலும், அப்பா நடந்து வரும் சத்தம் கேட்டதும் எழுந்து விடுவாள். அப்பா வரும்போது தீபாவளிக்குப் போட்டிருக்கும் பண்டு சீட்டிலிருந்து மிச்சர் மற்றும் மைசூர்பாக், கட்டி கட்டியாய் அல்வா என்று ஒருமுறை அந்த வாசனையை மட்டும் உண்டுவிட்டு காலைக்காகக் காத்திருப்பாள்.
அப்படி வாங்கும் எந்த உடையும் இதுவரையில் அவள் அளவிற்கு இருந்ததில்லை. பெரும்பாலும் தொளதொளவென்று இருக்கும். கழுத்து இறுக்கமாகவோ அல்லது கீழிறங்கியோ இருக்கும் அல்லது துப்பட்டா மிகக் குட்டியாய் அல்லது கண்ணாடி போல இருக்கும். அதைவிடவும் மறுநாள் பள்ளிக்கு போட்டுச் செல்லும் போது மிகப் பழைய டிசைனாய் இருக்கும். தோழிகள் எல்லோரும் புது டிசைனில் போட்டு வந்து, பின்பு “இந்த முறை புது டிரஸ் வாங்கவில்லையா?” என்பார்கள்.
இவளுக்கு அழுகை அழுகையாய் வரும். அழுதுவிட்டு வீட்டில் ஒன்றும் சொல்ல மாட்டாள். அதைவிடவும் இந்த நிலை கல்லூரி வரையில் மாறவில்லை. மற்றவர்களின் வண்ண உடைகளும், மாற்றுத்துணியாகக் கிடைக்கும் அவளுக்கு. அவளின் அப்பாவோ, அம்மாவோ, முதலாளியோ, பணக்காரர்களோ உடை கொடுத்துவிட்டதாகச் சொல்லும் போது, அது அவ்வளவாக்க கிழியாமல், தேய்த்த சூடும் அதன் மணமும் மாறாமல் இவள் அணியும் போது ஒரு மாதிரியாக இருக்கும் துவைத்து தன் வீட்டுக் கொடியில் அவள் போடும்போது கூட இது அத்துணிகளுக்கான கொடி இல்லை எனத் தோன்றும்.
பதினொன்று பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கையில், கொடுக்கப்படும் சீருடையை அணிந்து நடக்கையில் சில நேரம் அவளை முழுவதுமாக சிலநேரங்களில் முழுங்கி விடுவதுண்டு. அவள் தலை மட்டும் வெளியில் தெரிவதைப் போல இருக்கும். இதனைப் பார்த்ததும் தோழிகள் அனைவரும் “கிறித்தவப் பாதிரியாரின் அங்கியினைப் போல டிரஸ்ஸா” என்று சொல்லிச் சிரிப்பார்கள். சில நேரங்களில் அவளுக்கே அப்படித்தான் தோன்றும். நடக்கும் போதெல்லாம் அவள் கால்வரை இருந்து தடுத்துக்கொண்டே இருக்கும்.
“ஒனக்குல்லாம் எதுக்குடி பேண்ட் . டாப்ஸே பாதம் வரை இருக்கு” என்பார்கள்.
ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட சீருடை என்பதால் ரொம்பவும் வெளுத்துப் போயிருக்கும். இருந்தாலும் உடை பற்றி மூச்சுக் காட்டியதில்லை.
சில நேரங்களில் தான் படிக்கும் பள்ளியின் ஆசிரியைகள், அதுவும் தான் பெரிதும் மதிக்கும், விரும்பும் ஆசிரியைகள் அவள் மீது பரிதாபப்பட்டுத் தங்களுடைய பழைய உடைகளைத் தரும் போது வேண்டாமென்று மறுக்கவும் முடியாமல், ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் தவித்த நாட்கள் அதிகம். மீண்டும் அந்த ஆசிரியைகளின் கண் முன்னே வந்து நிற்கக்கூட சிரமப்பட்டுக் கொண்டு அவர்கள் காணும் இடத்திலெல்லாம் ஒழிந்து கொள்வாள். பேசக்கூட மாட்டாள். அவளுக்கென்று தோழிகளே இல்லை. அந்த நேரத்தில் இதையெல்லாம் பகிர்ந்து கொள்ளும் உயிர்த் தோழிகளுக்கு எங்கு போவது.
கொஞ்சம் படிப்பு, நல்ல படிப்பு கொண்டவள் என்பதால் கல்விக் கட்டணம் செலுத்த ஆசிரியர்கள் உதவினாலும், சாப்பாடு கொடுக்க யாராலும் முடியாதல்லவா? அது ஒருபுறம் தமிழை வாட்டிக் கொண்டிருந்தது. சில நாட்கள் வகுப்பில் பயிலும் மாணவிகள் இவள் சாப்பிடாமல் இருப்பதைக் கண்டுபிடித்து அவளுக்குத் தங்களது சாப்பாட்டில் கொஞ்சம் கொஞ்சம் பகிர்ந்து ஒரு மூடியில் வைத்துத் தந்தார்கள்.
இளமையில் வறுமை கொடிது என்று சொன்னவர்கள், உண்மையைத்தான் சொல்லி இருக்கிறார்கள். அவளால் இரண்டு மூன்று நாட்கள் தாங்கிக் கொண்டு சாப்பிட்டாள். பின்பு கொஞ்ச நாட்கள் தங்கள் வீட்டில் இருக்கும் பழைய சோற்றைப் பிழிந்து வைத்து குழம்பினை ஊற்றிக் கொண்டு வந்தாள். காலையில் சாப்பிடாமல் மதிய உணவாகக் கொண்டு வருவதும் பின்பு பழையச் சாப்பாட்டினை வெறும் வெங்காயம் கடுகு உளுத்தம் பருப்பு போட்டுத் தாளித்து மண மணக்க கொண்டு வந்து மதியம் மணம் இல்லாமல் போன பின்பு சாப்பிட ஆரம்பித்தாள். கொஞ்ச நாளில் காலை உணவைத் தவிர்க்க முடியாமல் போகவே மதிய உணவை இரண்டாகப் பிரித்து உண்ண ஆரம்பித்தாள்.
எல்லோரும் ஏதாவதொன்று கடைகளில் வாங்கிச் சாப்பிடும் போதெல்லாம் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு பாத்ரூம்க்கு செல்வதைப் போல் சென்றுவிட்டு இடைவேளை முடிந்ததும் வகுப்பிற்கு வந்து சேர்வாள்.
இதெல்லாம் விட அவளுக்கு அழுகையாய் வருவது, தான் படிக்கும் வகுப்பில் அவளே முதல் மாணவியாக இருந்தும், அவள் இரவல் உடை உடுத்துவதால் மட்டுமே இழிந்தவளாகக் கருதப்படுதலும், உதட்டோரம் ஒரு நக்கலான புன்னகையோடு அவள் மற்ற பெண் தோழிகளிடம் கையை நீட்டி அந்த உடையைப் பற்றி சொல்லிக் கொண்டே நடக்கையில், அந்த உடை தன்னை நிர்வாணமாகக் காட்டுவதைப் போல் உணர்ந்திருக்கிறாள் மனம் பதைத்துப் போய் எல்லோரும் தன்னை இழிவாகத்தான் பார்க்கிறார்களோ என்று தோன்றும். மற்ற தன் சொந்தக்காரர்களின் மகள்கள் கூட இந்த விசயமெல்லாம் கேள்விப்பட்டு கேவலமாகப் பார்ப்பதும் நிகழ்ந்து கொண்டுதான் இருந்தது.
மேலும் முன்பே வாங்கப்பட்ட பெரிதான பாவாடைகளுக்கு மேல் அண்ணனின் சட்டைகள் பாதுகாப்பாய் இப்போது இருக்க. இதுதான் அவளது உடை அனுபவம். படித்து முடித்ததும் அவளுக்கே என்று தைத்து வாங்கப்பட்டது சட்டையும் கருநீலப் புடவையும்தான்.
அதனைத் தழைய தழைய உடுத்திக் கொண்டு அதில் உடல் முழுவதும் மயில் டிசைன்கள் இருப்பதையும் பார்த்து ரசித்துக் கொண்டாள். தான் நடக்கும் போதும் முந்தானை விரித்தால் மயில் தோகை விரிப்பதைப் போல் இருப்பதைப் பார்த்துப் பார்த்து மனசெல்லாம் மயில் தோகை விரிந்தது தமிழுக்கு.
இன்று அவளுக்கு முதல் நேர்காணல் மனமெல்லாம் தன்னம்பிக்கையின் ஊற்றெடுப்பு. தான் பேசிய செய்தியிலும் அங்கிருப்பவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் சரி தன்னம்பிக்கையின் ஊற்றிலிருந்து பதில்கள் வந்து கொண்டே இருந்தது. முடிந்ததும் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளீர்கள், ஏன் பாடம் சம்பந்தமான ஆய்வினைத் தேர்ந்தெடுக்காமல் வேலை என்ற போது தன்னையும் அறியாமல் தன் குடும்பத்தின் பொருளாதாரத் தேவையைச் சொல்லிவிட்டாள். அடுத்த தகவல் வரும் என்றார்கள். காத்திருக்கலாம் மகிழ்வோடுதான் வீடு வந்து சேர்ந்தாள் தமிழ்.
ஆனால், தகவல் எதுவும் இரண்டு வாரங்களாகியும் இல்லாததால் அங்கு வேலை செய்யும் ஒருவரை விசாரித்த போது அந்த நிமிடம் வரையிலும் எதையெல்லாம் தனது பலமாக நினைத்திருந்தாளோ அதெல்லாம் தவிடு பொடி ஆனது. முதன்முதலாக தான் உடுத்தியிருந்த அந்த உடையின் நிறம் சரியானதாக இல்லையாம். நம்பிக்கை தெறித்த அவள் வார்த்தைகள் கொஞ்சம் தலைக்கனத்தைக் கொண்டிருந்ததாம். அதையும் தாண்டிப் பேசிய அந்தப் பத்து நிமிடங்களுக்குள்ளாக சரியாகப் பேசியதைப் போல் இல்லையாம். இது ஏதோ காரணம் என்று சொல்லிவிட்டு ஏற்கனவே தெரிந்தவர்கள், வழியில் வந்தவர்களை நியமித்துக் கொண்டார்கள் வருகிற ஒன்றாம் தேதி புதன்கிழமையில் இருந்து அவர்கள் பணியில் சேர்வார்களாம்.
கேட்டபோது, ஆள்பாதி ஆடைபாதி உள்ளிருந்த மகிழ்ச்சிதான் உன்னை மேம்படுத்தும் எச்சூழ்நிலையிலும் உண்மையே பேச வேண்டும் என்கிற எல்லாவற்றையும் கடந்து, பெண் இருக்கும் எல்லா வீடுகளிலும் படித்தவளா? நிறமா? என்று அக்கம் பக்கம் கேட்டுத் தெரிந்து கொண்டு , வீடு சென்று எத்தனை பவுன் நகை போடுவார்கள்? வீடு வாசல் உண்டா? வேறு நிலம் ஏதும் வைத்திருக்கிறார்களா? வரதட்சணை ஏற்றிக் கேட்டால் கொடுப்பார்களா? என்றெல்லாம் எத்தனையோ நினைவுகளோடு வந்து பார்த்து எல்லாவற்றுக்கும் சரி என்றால் திருமணம், இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது. பொண்ணு நடக்கும்போது தாங்கித் தாங்கி நடக்குது. கண்ணு நம்மள பாக்காம வேற எங்கேயோ பாக்குது? பல்லு துருத்திக்கிட்டு இருக்குது. வீடு ஆரம்பிச்ச உடனே முடிஞ்சு போகுது என்று சொல்லிவிட்டு தங்கள் சொந்தத்தில் பேசிப் பார்த்து முடித்துக் கொள்வதைப் போல்தான். தேநீர்க் குவளையேந்தி அவள் முன்னே நிற்கும் அந்தப் பெண்ணை ஒரு நிமிட நிமிர்ந்து பார்த்தலில் முடிவு செய்வதைப் போலத்தான் அவளது முதல் பணிக்கான நேர்காணலும் இப்போது நடைபெற்றிருக்கிறது.
எத்தனை எத்தனை ஆசையாசையாகப் படித்து வேலை கிடைக்கும் எனக் காத்திருந்தாளோ, நினைப்பெல்லாம் கனவுகளாகி தனக்கென்று நிற்க நிழல் தேட முடியாமல் எப்படியோ கடினப்பட்டு அப்பா சேர்க்கும் அந்த பத்து பவுன் தங்க நகை கொண்டு அதுவே அவளின் கடைசிக் கலமாகப் பிடித்துக் கொண்டு கரையேற வேண்டுமா?
தன் வாழ்வில் தனக்கெனக் கிடைத்த முதல் கருநீலப் புடவையும் கசப்பான அனுபவத்தைத் தந்து அவளைப் பாடுபடுத்த வேண்டுமா?