அந்த இறப்புச் செய்தி, என்னவோ செய்து கொண்டிருந்தது.
நேரம், ஆக, ஆக மனசுக்குள், பெரிய கனத்தை எடுத்து இருந்தது, 'டீ' டைம் கடந்து, மதிய உணவு வேளை, இரண்டு மணி, சுவர்க்கடிகாரம், டிங்க்...டிங்க், டிங்க் ஓசை அடித்தோய்ந்தது. இருக்கையிலிருந்து எழ, அனுமதி இல்லாதது போல், கால்களிரண்டும் தரையை ஒட்டியே இருந்தன.
“என்ன சார், சாப்பிட வரலையா?” உதவியாளர்
“அவசரப் பைல், கொஞ்சம் லேட்டாகும்”
“வேலை இருக்கட்டும் வாசுதேவன், எழுந்து கேன்டீன் வாங்க.” மானேஜருக்கும் அதே பைல் பதிலைக் கூறினேன்.
மற்றவர்களும் டைனிங்ஹால், ஓய்வறைன்னு சென்று விட்டனர். முப்பதுக்கு அறுபது அலுவலக அறை. போகணுமா, வேண்டாமா..? என்ற கேள்வியோடு என்னை மட்டும் தனிமையில், வைத்திருக்கிறது.
வருடங்கள் கடந்தும் பங்காளிப் பகையின் விரிசல், காயம், வலியின் வடு. முன்பு பல விஷேசத்தை தவிர்த்தது போல, தட்டிக்கழிக்கும் யோசனைதான் என்றாலும், வழிமறித்த மனுஷியே இப்ப இல்லேன்னு ஆன பிறகு இருக்கும் உறவில் சேர்துக்கலாமென்ற யோசனையும் இடைச்சொருகாய் வருகிறது.
‘சொந்த சனத்தை அப்படியே விட்றக்கூடாதுப்பா கொஞ்சம் தள்ளிட்டாலும், அதன் போக்கில் தூரமாப்போயிரும்.’ யாரோ, எங்கோ எதார்த்தமாகக் கூறிய ஞாபகத்தில் முடிவெடுப்பதொண்ணும் பெரிய மெனக்கிடு கிடையாதுதான். வருஷக்கணக்கில் போக்குவரத்து கிடையாத வீடு… பேச்சு வார்தையைச் சட்டுனு நிறுத்தி ஒதுங்கிய சொந்தம்… அந்தத் தயக்கம் தடையா நிக்குது.
நூறு வயசத்தாண்டி ஒத்த சீக்குணு படுக்காம வாழ்ந்த மனுஷி பெரியம்மா. உறவு வட்டத்தில் பெரிய சாவுதான். கண்டிப்பாக போயே ஆகணும். என்ன செய்ய... நடந்த கசப்பு எல்லாத்துக்கும் மூலக்கூரான கோபக்காரியும், அதன் பிறகான இம்மியளவு அசைவு காட்டாத வீராப்புக்காரியும் அவளே... இருந்த வரை முறைத்து நாக்கத் துறுத்தி தகாத வார்த்தைகளில் வைது உறவறுக்கும் ஆங்காரத்துடன், அந்த வீட்டாரை இங்க விடாம, எங்களைச் சார்ந்தவர்களை அவளிருக்கும் சந்துப்பக்கம் கூட விடாமல் காவக்காத்த பூதம்ன்ணு.. அப்பா இருந்த மட்டும் கறுவினார்.
சீவம்போச்சு. பூதமுணுருந்தது பூதவுடலாக்கிப்போச்சுனு தகவலும் வந்துருச்சு, பழைய பெருசுக வீம்பு அப்படித்தான். அந்த மனுஷி எப்படி இருந்திருந்தாலும் போன பிறகு. பூதக்கண்கொண்டு பார்ப்பது நல்ல மனசுக்கு அழகல்ல, யார் என்ன நினைத்தாலும், எது பேசினாலும் காதுல வாங்காமல் அந்த வீட்டுக்குப் போய் ஒரு மாலையப் போட்டு, கடைசியா பெரியாத்தா முகத்தைப்பாத்து, அழுது, துக்கத்தை கழிச்சு வந்துரு… உள்ளுணர்வு, முணுப்புக்காட்டியது.
காரணம் என்னணு சுத்தமா மறந்துப் போச்சு, எப்போதோ மூண்டது எப்படியோ அமுங்கிப் போனது. சண்டையின் ஞாபகத்தை இந்தத் துக்கமான நேரத்திலா வெளிக்கொண்டு வரணும்? இந்தப் பகையால் ஒவ்வொரு நல்லது, கெட்டது இடங்களில் இடைவெளியே அதிகமாகிப் போனது. தனித்தனிப்போக்கு மனுஷ பொழப்புக்கு நல்லதில்லனு புத்திக்குத் தெரியும், ஆனாலும் ஒவ்வொருவரின், காழ்ப்புணர்ச்சி பாழாப்போகும் வேண்டவே வேண்டாம்னு பிடித்து, தொங்குது.
“ஒரு எட்டுப்போயி தலையக்காட்டி வந்துருங்க, பழக்கமானவங்க துக்க வீட்டுக்குப் போகலனாவே எப்படியோ இருக்குன்னு புலம்பிட்டே இருப்பிங்க பெரியம்மா முறை… தாங்கமாட்டீங்க போய், வாங்க.’ மனைவிதான்.
கழுத்தைப்பிடித்து தள்ளிவிடுமளவுக்கு அங்கே, மூர்க்கமானவர்கள் யாரும் கிடையாது, அப்படியே நடந்தாலும் பொறுமையாக இருந்துரலாம், ஏதும்னா, 'ஏ.. விடுங்கப்பா, இனி ஒண்ணாவா.. பொறக்கப்போறீக? அவனுக்கும் ஆத்தா தான, மாலையப் போட்டு ஒருதரம் மொகம் பாத்து அழட்டுமே..' இதுக்குன்னே பெருசு இருப்பார்கள். தகாதது ஏற்பட்டாலும், உடனே சரி பண்ணவும், சிலர் வருவார்கள். அதுவுமில்லாமால் துக்கவீட்டிலே பிரச்சனையை அதிகப்படுத்த விடாதவர்களே எழுதப்படாத ரூல்ஸில் அங்கே, உட்கார்ந்திருப்பார்கள்.
பிரிவின் தடயத்தை யோசிக்கக் கூட ஒன்றுமற்றதா வருத்தத்துடன் சென்று, அந்தவீட்டு வாசலில் போய் நிற்கையில், எதுவுமே நடக்கவில்லை. நீண்ட இடைவெளியில், உரிமையான வீட்டுக்கு வந்த. உணர்வு. படபடப்பாக துடித்த நெஞ்சம் சராசரி 'லப்.., டப்...லப்... டப்,' ஆனது. பெருமூச்சும் விட்டேன்.
மருத்துவமனையில் உயிர் பிரிந்ததால் அப்போதே ஆம்லன்ஸ் வந்து போயிருக்கும் போல். குளிர்ப்பாட்ட ஏற்பாடகிக் கொண்டிருந்தது. அங்க, ஒண்ணு விட்டசித்தப்பா பையன் ஊதுபத்தி புகை கக்க எடுத்து வருகையில் இன்னும் நம்ம சொந்தம் உயிர்ப்பாக உள்ளதென்பதை அவனின் பார்வை, புன்னகையில் காட்டினான். தெரிந்தவர் முகம் கொடுத்து பேச வந்ததில், என் விசயங்களை விசாரித்ததிலும் ஒதுங்கிப் போய் தலை கவிழ வேண்டிய அந்நியச்சங்கடம் இல்லாதிருந்தேன்.
“வாடா.. வாசு, சித்ரா வரலயா..?” மூத்த அண்ணன்.
“சென்னையில் இருகா.. அண்ணே.” என்று அவர் கைகள், பற்றினேன்.
“பெரியம்மா மொகத்தப்பாத்து அழுதுருப்பா...” அருகே வந்த அக்கா, ஆறுதல் போல் முதுகைத் தட்டிக் கொடுத்தாள், கடைசி தங்கை, என்னைக்கண்டதும் கட்டிக்கொண்டு அழுது, நிற்கிறாள்.
பிரிவின் ஆதங்கத்தை முடியும் மட்டும் நானும் அழுது... அழுது, தீர்த்தேன்.
உறவுகள், வரத்தொடங்கினார்கள்.
'மச்சான்.. இங்க வாங்க, இந்தச் சேலைய அந்த ஜன்னல் கம்பில முடிங்க,' தங்கையின் கணவர், உரிமையாகக் கூப்பிடுகிறார்.
மறைப்புக்கு சேலைகட்டும் போதுதான், பெரியம்மா கிடத்தலைப் பார்க்கிறேன். இந்த உடம்புல உயிர் இருக்க எப்படிலாம் பேசியது… வீம்பா நடந்து திரிந்தது.. சரீரத் திடத்தை எல்லாம் காலம் எடுத்துக் கொண்டது போக, எலும்பு நரம்புகள் மறைத்த சதையோவியமாக நீளவாக்கானப் பெஞ்சில் முகத்தில் மட்டும் அதே நிமிர் படிமமாய்.. வாழ்ந்தது போதும், போதும் போல.. வத்திப்போய்… தலைமுறைக்கே அவள் வாழ்வாதாரமாக, மதிப்பு மனுஷின்னு தெம்புவரை கம்பீரம் காட்டியவளின் முற்று..!
ஒண்ணுவிட்ட தங்கை கணவரின், வாய்வார்த்தை தடித்து, தகறாறு, சின்ன விசயம்தான்.. விட்டுக் கடந்திருக்கலாம் முடியவில்லை. சகிப்பின்மைக்கு என்னைப் பொருத்த உதாரணம் இந்த பெரியம்மா.. கூடவே கூடாதுனு தள்ளி வச்ச உசுரு, 'பார்த்துட்டுப்போ' என்பதாக இதோ கிடக்கிறது, வெத்து உடம்பு!
ப்ரிசரில் தூக்கி வைத்து, பெரியம்மாவுக்கு பிரியமான பச்சைநிறக் காட்டன் சேலையைச் சுற்றி, மற்றவைகளும் செய்து, நான் வாங்கி வந்த பன்னீர் ரோஸ் மாலையை கழுத்திலிட்டு கண்ணாடி, மூடுகையில் மறுபடியும் கவனிக்கிறேன்.
கோபம் நிரம்பிய, அரட்டல் பெரியம்மாவை, இப்போதும் சாந்தமாய் உணர முடியலைனாலும், எனக்குள் எதுவுமற்றவொரு சுத்திகரிப்பு நிலைகொண்டு விட்டது. றெக்ககட்டிய மாதிரி, பந்தல் ஏற்பாடு, டியூப்லைட் கட்ட, டீ கேன் வாங்கி வைக்கவும், அடக்கம் செய்வதற்கு நகராட்சி மயானம் நடைமுறைகள் தெரிந்திட, நீர் மாலைக்கு ட்ரம் தண்ணீர் வண்டிக்கு சொல்லியதும், என்று, ஒவ்வொருவர் கட்டளைக்கும் ஓடியோடி அலைந்து வேலைகள் செய்கிறேன்.
மின்மயான தகன அடுப்பில், துளி நேரத்தில் நினைவுகளை ஞாபகப்படுத்திக்க கொடுத்துவிட்டு, மண் கலயத்தில் சாம்பலாகி, இதுவே மானுட எதார்த்தம்னு உணர்த்தலாய் பெரியம்மா. இறந்த பொழுதும் கடந்தது, போகிறது.
"என்ன வாசுதேவன் மூன்று நாள் லீவு..."
"பெரியம்மா பதினாறு நாள் காரியத்துக்கு போகனும், சார்"
"மார்சென்ட், வாய்ப்பே இல்லை."
"நான்தான் சார் முன்ன நின்னு எல்லா வேலையும் செய்யணும். ரொம்ப நாட்கள் கழித்து, உறவைப் புதுப்பிக்க இதுவொரு நல்ல சான்ஸ், அவசியம் மனசு வைக்கனும்.” வேண்டிக் கேட்டேன்.
“பார்க்கலாம்,” மேனேஜர் இப்படி இணக்கமாய்க் கூறியதில், மகிழ்ச்சி.
குடும்பத்தோடு நம்ம வீட்டுக்கு வந்து உரிமையுடன், பெரியம்மாவின் பதினாறாம் நாள் விசேசத்துக்கு அண்ணன், அழைப்பார்? விட்டுப்போன சொந்தம் தொடரும் எதிர்ப்பார்ப்போடு, இருக்கிறேன்.
அப்படி யாரும் வரவில்லை?
நாள்தான் கடந்தது. அலைபேசியில் கூட அழைப்பு, இல்லை..!
பெரியம்மா முடிச்சுப்போட்டு வைத்திருந்த சண்டையின் அதே பகை, வீம்பு ஒட்டாமை.
‘வாசுதேவன் வந்ததுமில்லாம உருத்தாக வேலைகளை அப்படிச் செய்தான்.. அம்மா சாவோட எல்லா மனக்கசப்பும் போகட்டும். அவனையும் அழைக்கலாம்’ ன்னு எண்ணத் தோணாத, அண்ணன், அக்கா, அல்லது அந்த மொத்தக் குடும்பத்திடமும் இன்னும் மிச்சமிருப்பதாகவே உணரமுடிந்தது.
அவர்களின் இந்தக் குணம் இயல்பாக இருக்காம், இருந்துட்டுப் போகட்டும். அதற்காகச் சாவுக்குப் போன மாதிரி காரியத்துக்கும் அந்த வீட்டுக்குச்செல்ல எனக்கு ஒப்பவில்லை. பெரியம்மா இறந்த அன்று இருந்த வருத்தம், கணம் விசும்பல், எதுவுமே இப்போது இல்லை. என்னவொரு பகைமாறாத உறவு… என்று சலிப்போடு என் அன்றாடத்தில் நடக்கலானேன்.
சமீபத்தில் மார்க்கெட்டில் சந்தித்த சரசக்கா, 'என்ன வாசு, காரியவீட்ல காணோம், அண்ணன் சொல்லலையா?' கேட்கவும். 'இல்லக்கா, வேலையா வெளியூர் போயிருந்தேன்..' சமாளித்தேன்.
'அங்க ஓம் பேச்சுதாம்பா, கேத வீட்டில் பம்பரமா சுத்திச் சுத்தி அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டு செஞ்ச.. வந்தவங்க வாயாரிப் போனாங்க,' பெங்களூரில் இருந்து அண்ணன் மகன் சேலம் வரவே ரெண்டு மணி ஆனது. இங்கே வர, இரவு ஆகிடும்னு. நான்தான், யோசனை மேதாவியாக, மதுரை வரவும் காரில் போய் அழைத்து வந்து விடுவதாக, கார் எடுத்துட்டுப்போய், விளக்கு வைக்க, பெரியம்மா உடல் மயானம் கொண்டு செல்ல ஏது செய்தேன், வெளியூர் போக இருந்த சனங்களின் மனசுகளில், பதிந்திருப்பேன். அதான் விஷேசத்தில் பேசப்பட்டிருக்கிறேன்னு புரிந்து கொண்டேன்..!
எதிர்ப்பார்ப்பு இல்லாத செய்தலுக்கு, மனசை தொடும் இப்படியொரு ‘வரம்’ எதார்த்தமா கிடைத்து விடும்தானே! அது சரசக்காவுக்கு புரிந்திருக்கும் போல, அர்த்தமானவொரு புன்முறுவல் காட்டியதும், கிளம்பினார்.
விடுப்பு.. வேண்டாம் என்றதும், கேள்வியாக ஏறிட்ட மேனேஜருக்கு, மெளனம் பதிலாக.. இயல்பாக வாசுதேவன் நிற்கிறேன்… நான்தான், வாசுதேவன்!