“ராதாம்மா, சின்னதா ஒரு செலவு, கோரிக்கை..”
கோரிக்கையுடன் சமையலறைக்குள் வந்தார், சிவானந்தம்.
“மாசக்கடைசி, பட்ஜெட்டுக்குள் செலவு இருக்கணும் மாமா..,”
பூரிக்கு மாவு பிசைந்தவாறு மருமகள், ராதா.
“சிநேகிதன், நல்ல பழக்கம்மா. உங்க கல்யாணத்துக்குக் கூட வந்து இருந்தான். அவ்வப்போது செல்லில் பேசிக்குவோம். மதுரை மீனாட்சியம்மன், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், திருக்கோஷ்டியூர் செளமிய நாராயணபெருமாள் கோயில் எல்லாம் மனைவியோட தரிசனம் செய்து வந்து, இப்ப, லாட்ஜில் தங்கி இருக்காங்களாம். சன்டே.. நேரில் சந்திக்கலாமானு கேட்டான். உங்க அனுமதியை வாங்கிட்டு பேசுறதா சொன்னேன்.. சுவீட்.. காரம், காபி, அவ்வளவுதான்” வயசான நாகேஷ் சாடையில் நின்றார்!
“சரி வரச் சொல்லுங்க, அத்தையைப் பாத்திங்களா.. எல்லாம் செஞ்சாச்சாச்சா?” மாவை மொத்தம், சேர்த்தாள்.
“எண்ணை தேய்த்து தலைய சீவி முடிச்சுட்டு.. முகம், கை கால்கள் துடைச்சு, முதுகு புண்ணுக்கு பவுடர்லாம் போட்டு, நைட்டியும் மாத்தி விட்டுட்டேன். நீர் அதிகமாப் போயிருக்கா... போல… குடுவை நிரம்பி தரையெல்லாம் ஈரமா இருக்குமா,”
துணையாள் தானே.. அதையும் சுத்தம் செய்து விடுவார்.. ‘பரவாயில்லை செய்றேன்மா..’ வேண்டிக்கேட்டாலும் ‘தனது கடமையே..’ என்று ராதா, விடுவதில்லை! மீறிக்கேட்டால்.. கோபம் காட்டுவாளே.. அதான் வந்து, விட்டார்.
“அதை நான் பாத்துக்கறன். அடுப்பைக் கவணிக்கறீங்களா..? உருண்டை போடுறீங்களா? சிங்கில் கைகள், கழுவினாள்.
“பேரப்புள்ளைக பாதாம் கேட்டாங்க, எனக்குச் சரியா அதைக் கலக்கத் தெரியாதே… மாவையே கொடுமா” கேட்கிறார்.
“பெருசாப் பத்து உருண்டை, சின்னதா ஆறு போதும்” மருமகள் கொடுத்த, பிசைந்த மாவு இருக்கும் கண்ணாடிப் பவுல், சில்வர் தட்டு வாங்கியதும், “தேங்ஸ்மா” என்ற போது, “ரிட்டையர் ஆகும் போது திருச்சியில் இருந்த கோதண்டராம், அங்கிள் தானப்பா, இப்ப சென்னையில்தான இருக்கார்..”
சிவானந்தத்தின் ஒரே மகன்.. ராதா கணவன் வந்தான்.
“ஆமா சுந்தரம், நட்புக்கு இலக்கணமான மனுஷன்.. அவனோட மனைவியும் அதே மாதிரிதான். வீட்டிலயே இருப்பு.. அவரவர் விருப்பங்கள்.. முதுமையின் நகர்வு.. எல்லோருக்கும் வரும் பேலன்ஸ்.. பண்ணத்தெரியாத சில பிரச்சனைகள்தான் போல.. ‘வசதி இருந்து என்னத்துக்கு? கடைசிக்காலத்தில்.. புள்ளைகள் நம்ம தோதுக்கு இல்ல.. நிம்மதியைத் தேடி அலைய வேண்டி இருக்கு, எவ்வளவுதான் கோயில்களுக்குப் போனாலும், மனசுகள்.. இறுக்கமாகவே தவிக்குது, ‘இப்ப நீ.. வச்சுருக்கும் அலைபேசி அழைப்புப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் ஏதோ தோணுது, நேரில் சந்தித்து பேசணும், வரலாமா?’னு, கேட்டபோது, அவன் பேச்சில் கவலை, தளர்வு தெரிந்தது, ‘உச்’கொட்டி வருந்தினான்.
எனக்கும் கோதண்டத்தைப் பாத்து ரொம்ப நாள் ஆகிவிட்டதே.. நினைவுகள்.. திரைக்காட்சியா.. ஒளிருதுப்பா,” என்ற, அவரின் பேச்சில், நண்பரை சந்திக்கும், ஆர்வம்!
“சட்டம்தான் பாஸாகி விட்டதே, ம், ம்…” இது, சுந்தரம்.
“மாமா.. செல்லில் அப்படியென்ன பாட்டு வச்சுருக்கீங்க..? சமீபமா உங்களுக்கு போன்பேசும் தேவையில்லாமப்போச்சே..”
அவ்வப்போது பிடித்தமான காலர் டியூனை.. செல்லில் மாற்றி விடுவார், சிவானந்தம். அழைப்பிலே, செவிகளை மட்டுமா… நெஞ்சத்தையும் மயில் இறகு கொண்டு வருடி விடும் பாடலாக, இசையாக.. இருக்கும்! அதை கேட்கவே சிலர், மிஸ்டு விடுவர்.. தெரியும் அவருக்கு.. திரும்ப அழைப்பார்.. இசை விருப்பத்தில் சிவப்பு பட்டனை அழுத்தாது இருந்தவர் கூட, உண்டு!
“இளையராஜா பாடல், ராதாம்மா, போன மாசம் ஒருநாள் இரவு, ரொம்ப நேரம் தூக்கம், வரல.. அத்தையின் தூக்கம் கெடாமல், ஹெட்செட் மாட்டிய செல்லில் பாடல், இளையராஜா வாய்ஸ்.. ‘எம்பாட்டு எம்பாட்டு.. நெஞ்சினிக்கும் பூங்காத்து..,’ இரவின் மடியில் தாலாட்டு மாதிரி அப்படியொரு இலகுவாய்.. செவிகள் நிரப்பி, மனசுக்குள் நிரம்பி வழியும் ரசனையோ…ரசனை! பாட்ல, ‘கைய்யுள்ள முத்துச்சரம் பத்திரமா வச்சுக்கணும் ஒரு நூலு பிரிஞ்சாலும் உதிர்ந்தோடுமே…’
வரிகளிருக்கே..,‘ச்சே’ மொத்தமா உள்ளுக்குள்ளே சம்மணம் போட்டு உட்கார்ந்துருச்சு ராதாம்மா.. இசை ராஜாவுக்கு மானசீகமாக ‘சல்யூட்’ வச்சுட்டு, அப்படியே.. கொஞ்ச நேரத்தில்..!” உணர்வு ததும்பி, சற்றே.. நிதானித்து, உருண்டைகள் பாக்கி இருப்பதை, தீர்மானித்துக் கொண்டார்!
“எனக்கும் அந்த பாட்டு ரொம்பவும் பிடிக்கும், அருமையான வரிகள், இளையராஜாவின் உயிரோட்டமான குரல்!” என்றாள்.
“பாடல்களை கேட்கிறோம், சில வரிகளை உள்வாங்கியபடியே கடந்தும் விடுகிறோம். சமீபத்தில் கேட்ட இந்த பாடல் மட்டும் தெளிந்தோடும் நீரோடை மென்மையில் மெல்லிய வரிகளில் மனசைத்தொடும் தத்துவம்.. குளிர்ந்த ஈரமாய்.. தொடர்கிறது!”
சிரித்தபடியே காபி ‘கப்..’ எடுத்துக்கொள்கிறான், சுந்தரம்.
“இந்த டாப்பிக்கை ஆரம்பிக்கும் போதே நெனச்சேன், சினிமா சம்மந்த ஈர்ப்பா இருக்க ஏதாவது காரணம் இருக்கா மாமா..? உருண்டைகளை தேய்கிறேன் சட்டியில் ஆயில் விட்டுட்டே சொல்லுங்க.” என்றாள்!
“பெருசாலம் ஒண்ணுமில்லமா, அப்பா, டூரிங்க் தியேட்டரில் ஆப்ரேட்டர். சாப்பாடு கொண்டு போவேன், லீவு நாட்களில், நல்ல சினிமாவா.. பாக்க அனுமதிப்பார். ‘திரைக்காட்சிகளில் வரும் விசயங்கள் கூட நம்மோட வாழ்வுக்கானது,’னு அப்பா.. நம்பிக்கையோ என்னவோ, அவர் மூலமாக பாதையில், கல் முள் கிடக்கும், நாமதான் ஒதுங்கி, அல்லது ஒதுக்கி நடக்க.. வேண்டியதைக் கற்றேன். ‘புன்னகை..’ படத்தில் சத்தியத்தின் உண்மையை, ‘நாணல்..’ படத்தைப்பார்த்து, வளைந்து நிமிரும்
உத்தி, சமகால குடும்ப உறவுப்பிரச்சனைகள், உணர்ச்சிவசக் காட்சிகளை காட்டிய ‘விசு’ படங்களை உள்வாங்க வைத்தார். நட்புடன் பேசி.. உணர்த்துவார்.. அதன் தாக்கம்.. மனப்போக்கில் நிதானம், எதிலும் புரிதல், கிடைக்கும் அனுபவத்தில். பக்குவம் அவ்வளவுதான், ராதாம்மா,”
“இளையராஜா வரவு.. தமிழ் சினிமா மறுமலர்ச்சில, மாமா!”
“இந்திப்பாடல்கள் அதிகம் புழக்கத்தில் இருந்த காலம்.. ராஜா, பாடல்கள்தான், இந்தி’ சைக் கேட்டலைத் தடுத்தது எனலாம், இதச்சொன்னா ஒத்துக்க மாட்டாங்க, நாங்கதான் ..ய, விடாம எதிர்ந்தோம்ணு மார்தட்டும் கூட்டம் இப்பவும், இருக்கே..,”
“இங்க என்ன மாமனார் மருமக பட்டிமன்றமா நடக்குது..?” காலி ‘கப்’ கழுவி, வைத்ததும், அங்கே வந்த மகன்களில் மூத்தவனை சுந்தரம், தூக்க, பாதாம் நிரம்பிய ‘கப்’பை கணவனிடம் கொடுத்து, இளைய மகனைத் தூக்கி, தாணும் ஒரு ‘கப்’ எடுத்த ராதாவுக்கு, விசு சாரைக் குறிப்பிடவும், நினைவுக்கு வருகிறது…?
பெண் பார்க்க வந்த போது, மாப்பிள்ளை சுந்தரம், பற்றி பேசியது சிலதுகளே.. அப்பா, சிவானந்தமே ஏகபோகமா.. பேசுதலில் சபை நிறைந்திருந்தார்..! அவ்வளவு உயர்வாக அவரின் விபரங்களைத் தரகர் சொல்லிக் கொண்டு, இருந்தார்!
திருமால்.. காட்சிபோல் அந்த நிமிடமே.. சங்குசக்கர ஒளியில்.. வானத்து அளவுக்கு ராதா நெஞ்சில் தெரிந்தார், சிவானந்தம்!
‘மாப்பிள்ளையோட அப்பா விசு மாதிரிலப்பா, பேசுறார்.’ இப்படி பெண் வீட்டு பெரியவர் கூறவும், நீண்ட சிரிப்பு.. அதன் ஊடாக, ‘பொண்ணுட்ட நானும், பையனும் ‘ஜஸ்ட் டூ மினிட்,’பேசணுமே..’ விருப்பத்தை சட்டென்று கூறி விட்டார், சிவானந்தம்!
ராதா, மறுக்கவில்லை!
சொந்த வீடு, ஓய்வுப்பணத்தில் வாங்கிப்போட்ட இடம், மகன் வேலை, சம்பளம். வங்கிக்கடனுக்கு தவணை. தனது பென்சன், குணாதியம், அக்கம் பக்கத்துப்பழக்கம்.. படுக்கையில் கிடக்கும் மனைவி சாந்தா.. நிலை வரை. மொத்தமும். ஒரு தோழியிடம் பகிர்வதாகவே வெளிப்படையா.. தெளிவாக, சொல்லிவிட்டார்!
‘சகிப்பு, விட்டுத்தருதல், வெளிப்படை.. குறைந்தபட்சம் இது, போதுமானதே.. உண்மை உரைகல்லாய்.. வாழ்ந்து விடலாம்! அப்பா பிள்ளை.. பக்குவத்தில், சுந்தரம்!
பூஜையறை.., விளக்கு ஏற்றுவதற்கு முன் மாடிக்குச்சென்று, படுக்கையில் கிடந்தாலும்.. அத்தையின் கால்கள் தொட்டு வணங்க வேண்டும்.. எண்ணத்தில் சாந்தா.. ஆசியைப்பெற்ற மருமகள்.. ‘வராது வந்த குலவிளக்கு..!’ என்ற பெருமையை கொடுத்ததாக அகம் குளிர்ந்தனர், சிவானந்தம்.. சுந்தரமும்!
மனைவி, மருமகள்.. குடும்பத்தலைவி, சுவாதினமில்லாத மனுஷிக்கு கருணையில் சேவகியாகி, ராதா, நாளடைவில் ‘ராதாம்மா…’ ஆகினாள்!
பரஸ்பரமான விசாரிப்புகளைத் தொடர்ந்து, பையன்களை அழைத்து ‘கிப்ட்’ கொடுத்து, நண்பரையும், ராதாவையும் கவனித்தபோது, மருமகள் அனுமதி வாங்கி அழைப்பதாக, போனில் சிவானந்தம் சொன்னதை, ‘என்ன.. இப்படி..’ என்று
ஒரு மாதிரி கோதண்டராம், நினைத்தது, உண்மை. ஆனால்.. இங்க, அடுத்த மனுஷங்க முன்.. என்றெல்லாம் யோசிக்காம, இப்படி இருக்காங்க! மாமனாரிடம் அப்படியொரு உரிமையை எடுத்து சமையல்.. வேலைகளை சொல்கிறாள்..
நண்பருமே.. உன் உத்தரவு, எனது பணியே.. ‘எதாவது பண்ணனுமாம்மா?’ என்று, கேட்டுக்கேட்டு, செய்கிறார்!
“சுந்தரம், அங்கிள் கிட்ட பேசிட்டு இருப்பா.. ராதாம்மாவுக்கு உதவியா இருக்கேன்.” போய்விடுகிறார்!
‘பியூட்டி புள் பேம்லி… இது மாதிரி கூட இருக்க, முடியுமா..? அதுவும் இந்த காலத்தில்.. ஆச்சரியம்.”
மனதில் பட்டதைக்கேட்டார், கோதண்டராம்.
“காலத்துக்கு இதில் சம்மந்தம் இல்லை அங்கிள்.. மனசுகள் ஏற்றுக்கொள்ளும் சமதளமான நிலைபாடு இருந்தாப்போதும்.”
“குடும்பத்தில் இந்த அன்யோன்யமெல்லாம் நிறைவானது..”
கமலம் அம்மாளும், கொஞ்சம் வியந்துதான், இருந்தார்!
“வாழ்க்கைய அர்தமுள்ளதா மாற்றணும்னா இதுவே சிம்பிள்.. பாஸ்டிவ் எண்ணங்கள், பாஸ்டிவ்வான செயல்கள்.. மட்டுமே பெஸ்ட், அம்மா.” கட்டைவிரல் ‘தம்ஸ்’ காட்டினான், சுந்தரம்!
சுவீட் காரம், காபி, கண்ணாடி டீ.. பாயில் வைத்ததும், “சாப்பிடுங்க,” சோபாவில், சிவானந்தம்.
மாமனார் அருகே நின்று கொண்டாள், ராதா.
“அண்ணே… அண்ணிய பாத்துரலாமே…”
“சுவீட் காரம், சாப்பிடுங்க… அத்தைக்கு சரி பண்ணிட்டு வரேன்,” மருமகள், நகரவும்,
“ஈரம் போயிருப்பா அதான்.. உயர்ந்த மனுஷி, ராதாம்மா! சின்னதாகூட முகம் காட்டாமல் சாந்தாவுக்கு அனைத்தும் செய்துருவா, ஏதோ முன் புன்னியம்,” கைகள், கூப்பினார்!
புத்தனுக்கு போதிமரம்.. தங்களுக்கு இந்த வீடு.. என்னும் பெரும் அமைதியில்.. கோதண்டராம், கமலம் அம்மாள்!
“உங்களுக்கு தெரியும் என்னைப்பத்தி. நெகடிவ்வா எதையும் சிந்திக்க மாட்டேன். அனைத்தும் ஒரு நீரோட்டப்பாதைதான்.. அதனோட்டத்தில் போய், ஏதாவது கிடைத்தவுடன் அதையே பிடித்து கரை ஏறியேறி விடும் புத்திதான் ஆகச்சிறந்ததுன்னு முழுமையா நம்புவேன். அதையே நம்மைசார்ந்தவர்களுக்கும் தெரிய வைத்துவிட்டால், அவங்களும் நல்லா இருப்பாங்களே..” முடிக்கவில்லை, அவர்.. “ஆதாவது, ‘கையிலுள்ள முத்துச்சரம் பத்திரமா வச்சுக்கணும்..!’ புரிதல் மாதிரி என்ன, சிவானந்தம்..?”
நண்பர், புன்முறுவலிக்கிறார்!
“அண்ணே.. உங்க செல்லில் வருமே பாட்டு.. போன் பேசும் போதெல்லாம் உங்களை சந்திக்கணும்னே செல்லிக்கிட்டு இருப்பார். இங்கே வந்தது, கோயில்கள் தரிசனம் சிறப்புனா.. உங்களைச் சந்தித்தது புதிய வழிக்கான தொடக்கம்னே.. படுது,
பூட்டியிருந்த வீட்டில்.. கதவு திறந்து.. காற்று வருதுண்ணே.. பெருசா உணர்ந்த விசயங்கள்.. லேசா தோணுது. இப்படிலாம் நாம இருந்தா.. என்னணு புத்தி வருது. மகத்துவம் நிறைந்தது இந்த நிமிஷங்கள்..!” கமலம் அம்மா, முகத்தில் புத்துணர்ச்சி!
‘உண்மை..உண்மை!’ என்பது போல், கோதண்டராம்!
“அந்தந்த நேரப் புரிதல் நமக்கு முக்கியம்.. பிரச்சனைகள் வரும்.. உடனே அதை, தூக்கிப்போடும் துணிவே.. முதலில் வேண்டும், சோதிச்சுப் பாருங்கள், அடுத்த நிமிஷமே.. எதிர்மறை சிந்தனை நின்று போகும். மனுஷவாழ்க்கை அழகானது, அனுபவமானது, உறவில், பிறரிடமும் கூட, அன்பை கோர்த்தபடி இருக்கணும்! நல்லதை பொத்தி வச்சுக்கணும்.” சித்தத் தன்மையில் கூறினார்!
அப்போது, கோதண்டராம் பேசியில், கர்னாடகா இசை அழைப்பு.., மூத்த மகன்! மனைவியைப்பார்த்தவாறு பட்டன் அழுத்தினார்.
‘அப்பா, டிக்கெட் கன்பார்ம் ஆச்சா..?’ விசாரிப்பில் வழக்கமான தொணியில்லை, அக்கறையே இருந்தன, கண்கள் கசிந்தபோது.., கமலம் அம்மா.. பேசியில் சுப்ரபாதம் அழைப்பு. இளைய மகன், எண்கள்!
‘அம்மா.. அப்பா, யார்கிட்ட பேசுறார்..?’ குரலில், இணக்கம்!
‘அண்ணன் லையன்ல இருக்கான் தம்பி..’
‘அம்மா.. அண்ணனும், நானும் ஒரு சஸ்பென்ஸ் வச்சுருக்கோம் ஈவ்னிங் ரயில்தான கவனமா, வாங்க!’ குரலில், ஒட்டுதல்!
“உங்களுக்கான முத்துச்சரம் இங்கே கோர்க்கப்பட்டுள்ளது.. நம்ம எண்ணம் எதுவோ அதுவாகவே பயணம் தொடரும்,”
“ஆமாம் சிவானந்தம், உன்னோட நம்பிக்கையான வைப்ரேஷன் இந்த வீட்டில் இருந்த சில மணித்துளிகளில் விடியல் தகவல்.. வருகிறது. எங்க மனசுகள் மாற்றம் உணர்கிறது, எதிர்பார்த்து வந்தது கையில் கிடைத்துவிட்டது, பெரிய ஆனந்தம்..”
சஸ்பென்ஸ்.. அம்மா அப்பா, மணிவிழா..!
திருக்கடையூர் கோயில், மணிவிழா நிகழ்ச்சி.. குடும்பம் சகிதம் கோதண்டராம், கமலம் அம்மாள்!
‘அப்பா, சிவானந்தம் அங்கிளுக்கு போன் போடுங்க,’ மகன்கள்..!
இளையராஜா.. வாய்ஸ், ‘எம்பாட்டு, எம்பாட்டு..’ அழைப்பில்.. கையியுள்ள முத்துச்சரம் பத்திரமா வச்சுக்கணும்.. பாடல்.. ஒலித்துக்கொண்டு இருக்கிறது.. வழக்கமான நர்ஸை இரண்டு நாள், உதவிக்கு வைத்துவிட்டு, மணிவிழா நிகழ்ச்சிக்கு இதோ.. வந்து, மூலவரை வணங்கியபடி கோயிலுக்குள் நுழையும், சிவானந்தம் குடும்பத்தினரை.. கோதண்டராம், கமலம் அம்மாள், புன்னைகை மலர்ந்த முகங்களோடு, குடும்பமாய் வரவேறனர்!