பதினைந்தடி அகலத்தில் தெரு இருக்குணுதான் பேரு, வீட்டுக்கு வீடு, ரெண்டு மூணு படிகளின் ஆக்கிரமிப்பில் மெலிந்து, பத்தடிக்குள்ளே நடைபாதையாகி, போனாப் போகுதுனு ‘டூவீலர்போக மட்டும்’ என்றாகியிருந்தது தெரு. கடைக்கோடியில் அக்கா, வீடு. கார் வாங்கி இருக்கேன். வீடுவரைக் காரில் போக முடியாது, மெயின் சாலை ஓரமா நிறுத்திவிட்டு நடந்தேன்.
அக்காவின் வீட்டு வாசல் முன்பு பந்தல் போட்டிருப்பது தெரிந்தது. பேரனுக்கு பெயர் வைக்கும் விஷேசம்… வீட்டாளுகளுக்கு மட்டுமே அழைப்பு, குலசாமி கோயிலில், முதல் மொட்டைக்கு கெடாவெட்டு விஷேசம் வைப்பதாகத்தானே தகவல். இதென்ன..? வேனப்பந்தலா இருக்குமோ? போன மாசம் வந்த போது, அந்த அக்னி வெயிலுக்கே இல்லை. இது காத்துக்காலம். இதுல போய் பந்தல், போடுவாங்களா..என்ன? யோசனையாகவே பக்கத்தில் போனதும் தெரிந்தது அது, எதிர்த்த வீட்டுக்கான பந்தல், என்று!
பெருசு… போயிருக்குமோ?
குடோன் மாதிரி ஆஸ்பெட்டாஸ் வீடு. தகரக்கதவு மூடிக்கிடந்தது. வேப்பிலை சொருகிய தண்ணிச்சொம்பு வாசல் ஓரத்தில், இருந்தது. உண்மை போலிருக்கு…. யூகித்துவிட்டு, இங்கே வந்த விஷேசத்தை நினைத்துக் கடந்தேன்.
பெருசு, ஞாபகத்துக்கு வந்தார்… வீட்டைக்கட்டி, அக்கா இங்கு குடி வந்தபோதே அவர், ஒரு மாதிரி. பொண்டாட்டி இல்லாத தனிமை, புள்ளைகளும் ஒதுங்கி இருந்தனர். ஒத்தையாளாகப் பெருசு கிடந்தார். மகன், வீட்டிலிருந்து நேரத்துக்குச் சாப்பாடு வரும். வீட்டுக்குள்ளேயே ஏதேதோ பேசியவர், வெளியில் வந்து, வந்து புலம்பவும் ஆரம்பித்தார். காறிக்காறி துப்புவார், வருமோ, வராதோ, அக்கத்தில் ஆளுக இருக்காங்கன்னு பார்க்க மாட்டார், கைலியைத் தூக்கிட்டு வந்து, வாசலில் ஒண்ணுக்கிருந்து விடுவார். சந்துப் பக்கத்தில் வெளிக்கு இருந்து வைப்பார்.
‘ச்சே..,’ நாந்நமெடுக்குமாம்.., வீட்டுக்குள் கொமட்டல் வருமாம்.
அக்காவும், மாமாவும் அப்படியொரு சகிப்புக்காரங்க கண்டுக்காத மாதிரியே… பழகிட்டதா, இங்கே வரும் போதெல்லாம் சொல்லுவாங்க. ஒருவழியாக தெரு, நிம்மதிப்பெருமூச்ச விட்டதுபோல், எனக்குமே '.அப்பாடா,'னு ஆனது. பெருசோட அசிங்கமெல்லாம் நாட்களின் நகர்வில் மறைந்து போய்விடும்!
அக்கா, மாமா… நிம்மதியாவார்கள்.
கேட்டுக்கு வெளியே வந்து, 'வாடா தம்பி… வழக்கம் போல, ஓ..ம்.. பொண்டாட்டி வரல பாரு… வரலன்னா போறா அவ, நீ வா’ன்னு என் கையைப் பிடித்துக் கொண்டு போக… நிலைப்படியில் நின்று பார்த்த மாமா, நக்கலிப்பு செய்வது தெரிந்தது, 'அவரு கிடக்கார்,'ன்னு முணுத்த இந்த அக்காவுக்கு மூத்தவங்க ஒரு அண்ணன், அக்கா. எனக்கு, மூத்தவர், ஒரு அண்ணன்: இவங்க நாலுப்பேருக்கும் நானே, கடைசி தம்பி!
விவசாயக் குடும்பம், அப்ப, எனக்கு ஆறு வயசு. மாட்டு வண்டி குடை சாய்ந்து, தலையில, அடிபட்ட அதிர்ச்சியில் அப்பா இறந்து, போனார். அப்பா செல்லம் நான்… திடீர் இழப்பை நெனச்சு, நெனச்சுத் தேம்புவேணாம். என்னைச் சமாதானம் பண்ணும் அம்மாவின் பரிவைத்தாண்டி, என் மேல் இந்த, அக்காவுக்கு அக்கறை அதிகம், இருக்குமாம். காட்டு வேலைக்கு, பள்ளிக்குப் போகும் போதும், கூடவே வைத்துக் கொள்ளுமாம். பாசக்கார அக்கானு மற்றவர் சொன்னா அப்படியொரு பெருமை, எனக்குள் அதை, இப்பவும் நினைக்கும் போது அடைவேன். இவ்வளவு ஏன், அக்கா கல்யாணத்தை முழு ஆண்டு விடுப்பிலே வைக்கணும் என்று அடம் பிடிச்சதாம், காரணத்தைக் கேட்டாச் சிரிப்பீங்க…. ரெண்டு மாச லீவில் என்னைய, கூட்டிப் போகணும்னு சொல்லவும், எல்லோருமே சிரிக்க, அக்கா அழுததாம்!
மாப்பிள்ளை வீட்டுக்கு விசயம் தெரிய, பாசம் ஜெயிச்சுருச்சுனு, சாகையில் நாவு குழறச் சொல்லிட்டு, பேரன் விட்ட தீர்த்தத்தில் உயிர் விட்டாள் அம்மா.
வாழ்க்கையில் மாற்றங்கள்… அவரவர் எண்ணங்கள், விருப்பங்களில் கொஞ்சம் கொஞ்சமாகக் குடும்பங்கள் அன்னியப்பட்டது. சின்னச்சின்ன விசயங்களில் கூட, பெரியதொரு இடைவெளியைப் போட்டுக் கொண்டன, மனசுகள்!
காத்திருந்தது போல்… வேலை தோதுக்கு வசிப்பிடங்கள் மாறின.
தவிர்க்க முடியாதச் சொந்தக்காரர்கள் நிகழ்ச்சிகளில், ஏதோ நலம் விசாரிப்புடன் ஒதுங்கிவிடுவதில், அவ்வளவுதான் உறவுகள்… சலித்துக் கொள்வது, சாதாரமான இயல்பாகி விட்டது!
வயது மூப்பும், புரிதல் பக்குவமும், சிலதான அனுபவத்திலே சமீபமாக போனில் பேசுவதுமாக இப்போதையத் தலைமுறைக்குச் சற்றேணும் ஆறுதலானது.
பழைய மாதிரி மொத்தச் சொந்தமாக இருக்க நினைப்பது கடினமான ஒன்று… எங்கே இருந்தாலும் உறவு சொந்தமாக இருந்தாலாவது போதுமே எனும் தோணல் ஏற்படும் போதெல்லாம், இந்த அக்காவின் வீட்டு விஷேசங்கள் நம்பிகை, தரும்!
மனுசங்க வாழ்கையானது, செடி, கொடி, மரங்கள் மாதிரி தானே… இரண்டுக்கும் துளிர்வு அவசியம். இல்லனா, அதற்கான தளர்ச்சி இல்லை. துளிர்வுக்குப் போதும் என்ற எல்லை கிடையாது, துளிர்வுதான் அடுத்த கட்டத்துக்கான இயற்கைக்கும், மனுசங்க வாழ்க்கையோட மேன்மைக்கும், உயிர்ப்பு!
அக்கா, பொதுமனுஷி, வீட்டில் ஒவ்வொண்ணுக்கும் உறவுகளைக் கண்டிப்பாக, அழைத்துவிடும். நிகழ்ச்சியின் முடிவில், ஏதாவது, துளிர்வு முளைவிடுவதை, உள்ளூர உணர்ந்து விடுவேன். பேரனுக்குப் பெயர் சூட்டும் நிகழ்ச்சி… இதிலும் எதிர்பார்ப்போடு வந்திருக்கிறேன். சொந்த உறவுகள் ஓண்ணுமன்னா இருந்தா அடுத்தத் தலைமுறை பேர் சொல்லும்னு நினைக்கிறேன்!
பெரியண்ணன், மகன் குடும்பம் சகிதமா இருந்தார். கும்பிட்டேன்… அண்ணியிடம் நலம் கேட்டேன், தலையாட்டினார். வெடுக்கென்று முகம் திருப்பாது இருந்ததில், ஆறுதலானேன். அடுத்த அறையில், பெரியக்கா, மாமா, சிரித்துப் பேசினார்கள்.
வாரிசுகளுக்குத் தூரம் கிடையாது., கூட்டமாக ஓடி வந்து, 'சித்தப்பா, மாமா, அங்கில், தாத்தா' னு ஒட்டிக் கொண்டார்கள். என்னோட இரண்டாவது பொண்ணு பிளஸ்டூ பாஸாகி இருந்தாள்,‘ட்ரீட்’கோன் ஐஸ்… கேட்கவும் ஓகே, சொன்னேன்…
அங்கே வந்த அண்ணன் மருமகள், பேத்தியக் கொஞ்சக் கொடுத்தாள்… 'திண்டுக்கல் பிராஞ்சுக்கு மாறிட்டேன் சித்தப்பா, அடுத்த மாதம் அங்க மாலாவைக் கூட்டிப் போக இருக்கேன். புது வாழ்க்கை தொடங்கப்போறேன். பால்காச்சிக்கு போன் பேசுறேன் சித்திய, தங்கைகளை அழைச்சிட்டு வரணும்பா' என்றான். மருமகள் அழைத்து, வந்து வாழ்த்தச் சொன்னாள். 'வரேன்யா...' தோழமையுடன் தோள், தட்டினேன்.
'மகளுகளையாவது கூட்டி வந்துருக்கலாம், கொழுந்தனாரே.' குழந்தையில்லாத வருத்தம், என்னோட பொண்ணுகளைப் பார்க்கவும், பேசவும் முடியாத ஏக்கத்தச் சுந்தரி அண்ணியின் கண்களில், தகிக்கக் கண்டேன். என்ன காரணமோ தெரியல ஆரம்பத்திலிருது இந்த, அண்ணிய, பெரிய அண்ணிக்குப் பிடிக்காது. மருமகளுக்குத் தெரியும்தான். ஆனாலும், அங்கே நின்றிருந்த மருமகள், சின்ன அத்தை மடியில் தனது, குழந்தையை 'பொசு' னு கிடத்தினாள்!
பச்ச உசுரு… உருண்டு, புரண்டு, நெஞ்ச நிமித்தி, திமிறிக்கொண்டு, அப்பத்தாவின் நாடியை, பிஞ்சு விரல்களால் நீவிய போது, உணர்ச்சி வசப்பட்டு அழுதுட்டாங்க… தகித்த அண்ணியின் கண்களில், அப்படியொரு குளிர்ச்சி.. தாரைதாரையா கண்ணீர் வடிகிறது. “பேத்தி கொஞ்சச் சொல்றா… அண்ணி… அழாதீங்க,” நாந்தான் சூழ்நிலை புரிந்து, சமநிலைக்குக் கொண்டு, வந்தேன். அப்போது வாசல் திரையை விலக்கி, வீட்டுக்குள் வர முற்பட்டு, பெரிய அண்ணி, அப்படியே நிண்ணுருந்தாங்க….
கல்யாணம் கட்டி வந்த முதல் நாள், முடியாமல் இருந்த அம்மாவின் அறைக்கு வந்தோம். அண்ணி புதுப்பொண்ணு… பெஞ்சில் உட்காரச் சொல்ல, நானும் உட்கார, ஜிகினாதுகள் ஒட்டிய தனது வலது கையால் என் உடம்பை வளைத்து, இறுக்கி: சேர்த்துக் கொண்டும், 'நீங்களும் உக்காருங்க…' அண்ணனை ஏறிட்டு இடப்பக்கம் காட்டினார். வாலிப முறுக்காக இருந்த அண்ணன், மரியாதையுடன் மறுத்ததும், 'அண்ணி.., நீங்களும் இனிமே எங்களுக்கு அம்மாதான்,’ என்று சொன்ன போது, அனுசரித்துப் போகும் தன்மையாக இருந்தது அவங்க முகம், பார்வை! கிட்டத்தட்ட அதே மென்மையை இப்பவும், பார்க்கிறேன்!
“அய்யர், வரச்சொல்றார் வாங்க, மாலதி… நீ இங்கேயே இருந்து குழந்தையை அமத்திட்டு வாம்மா...” என்றதும் போயிட்டாங்க. அந்த ‘இருந்து’ அழுத்ததில், 'சின்ன அத்தைட்ட குழந்தை, இருக்கட்டும்.' அர்த்தம் இருந்ததைப் புரிந்தேன்!
முடிவு செய்தது, ‘சண்முகராஜ்’ பெயர் வைக்கப்பட்டது. சண்முகம், அப்பா பெயர். ராஜேந்திரன், மாமா… அப்பா பெயர். சண்முகத்தில் ராஜே ராஜ், ஆக்கி இணைத்து விட்டார்கள் போல்!
அக்கா, மாமாவின் பக்குவமே தனிதான்.
‘அம்மன்’ ஹோட்டலில்… ஆமாங்க, நடிகர் சூரி பிரதர்ஸோடதுதான். ஆர்டர் செய்திருந்த சாப்பாட்டு வகை ஆட்டோவில் வர, ஆளுக்கொருப் பாத்திரமாக வீட்டுக்குள் இறக்க, பந்தி ஆரம்பமானது. அத்தனை அன்போடும், பரிவோடும் அக்கா வீட்டார், பரிமாறிக் கவனித்தனர். என்னதான் கசப்போடு, உறவுக்குள்ள பேசாமல் மெளனம் காத்தாலும், அவரவர் விசயம் தெரிந்து கொள்ள, மனசு துடுப்பது இயல்புதானே, தனக்குத் தெரிந்த சங்கதிகள் பேசவுமே, இப்படியான சந்தர்ப்பத்தில், ஆர்வமாகிவிடுவது வடிகால் மாதிரியான உலவியில். அதிலும், மாமா வீட்டாளுக கூடிட்டாங்கனா பேச்சுக் கச்சேரிதான். போங்க.. எவ்வளவு உம்மனாம் மூஞ்சா இருந்தாலும், அவர்கள் கலகலப்பில் சிரிக்கணும்…
குறைந்தபட்சம் புன்முறுவலாவது வந்துவிடும். கேலி கிண்டல், அந்தக் குடும்பத்துச் சொத்தாயிற்றே..!
'என்னாங்க, உங்க தம்பி பொண்டாட்டிக்கிட்ட பேசுங்க…' ஒரு கட்டத்தில் இப்படி, பெரிய அண்ணி, சொன்னதைக் கேட்க முடிந்தது?
‘திடீர்னு? நா…னென்னத்த பேசுறது,' முனங்கினார் அண்ணன்.
'நீங்கதானே தேடித்தேடி அரும சுந்தரியா… அருப்புக்கோட்டையில் இருந்து கட்டி வச்சீங்க, பேசுங்கன்னா..' கடைசி உச்சரிப்பு, கட்டளையானது.
"இந்தாமா.. சுந்தரி, மாமாவுக்குத் தண்ணி கொண்டு வா…" கேட்டார்!
காத்திருந்த மனுஷில சுந்தரியண்ணி.. பரபரக்க எழுந்து ஓடிப்போய் தண்ணீர் சொம்போடு வந்து, கொடுத்தும், சட்டுனு முட்டிப்போட்டு, "அக்காவ பேசச்சொல்லுங்க மாமா, என்னால முடியல,” என்றதும், அண்ணன் மடியில் முகம் வைத்து விசும்ப ஆரம்பித்தார். உறவுகள், உரைந்து போனோம்.
இதை பார்த்துக் கொண்டிருந்த மூத்த அண்ணியும், பாசக்காரங்க… அவங்க இங்க வந்துதான, எங்க நாலு பேருக்கும் நல்லதெல்லாம், முன்னின்னு செஞ்சாங்க!
மருமகளிடம் பேத்திய வாங்கியதும் சுந்தரியண்ணியின், முதுகைத் தட்டினார்.
‘நான் என்ன தப்பு செஞ்சிருந்தாலும் மன்னிச்சுருங்க அக்கா..' சட்டென அவங்க காலில் விழுந்து, அழவும், “அழாத எந்திரி, இந்தா ஓ பேத்திய புடி..” பெரிய அண்ணி மனசு, இறங்கினாங்க.
அண்ணிகள் கைகளில், மாறிய பேத்தி, அடுத்த தலைமுறையின் ‘துளிர்வு’ வில், புன்முறுவலித்தாள்!
அக்கா பேசியில் அழைப்பு;
“ஓம் பொண்டாட்டிடா தம்பி, சொல்லு கவிதா.. மருமகளுகளோட வந்துருந்தா என்ன..? ஒண்ணை தொடர்ந்து விட்டுட்டா, அப்படியே போயிரும்ல கவிதா... சரி, அப்பாவுக்கு இப்ப உடம்பு சரியாயிருச்சா?" பேசி முடித்த அக்கா, நாத்தனார், நல்ல விதமாப் பேசியதாக, விபரத்தைக் கூறினார்… சந்தோஷப்பட்டேன்!
துளிர்வு மொய்படுவதாக, ஆகிறதோ..எல்லோரும் கிளம்ப இருக்கையில்,
"அடியே சுந்தரி.. நீ என்னடி… சந்தடி சாக்குல ஏம்புருஷன் மடில விழுந்துட்டே,' பெரிய அக்காட்ட, அண்ணி சாடை காட்டி.. கண்கள், சிமிட்ட… கிட்டத்தட்ட அனைவருமே சிரிப்பு மழை, குடைக்குள்… ரொம்ப நாளைக்குப் பிறகு, பழைய சுந்தரியண்ணியா வெட்கதில் சிரித்து வைக்க… அண்ணனுக்குமே நிம்மதி!
சந்தோஷச்சாரலோடு பிள்ளைக எல்லாரும் மொத்தமா முன்னே முன்டிவர, ஆர்டர் செய்த கோன் ஐஸ், பார்சலும் அப்போதே வரவும், ‘ஹே..ய்… ஹே…ய்…’ ஆர்ப்பரிப்பில்… ‘ஆளுக்கொரு கோண் ஐஸ் எடுத்து நில்லுங்க செல்ஃபி எடுக்க,’ நாந்தான்… பதிவு செய்த காட்சிகளை உறவுகளுக்கு, ‘வாட்ஸ் ஆப்’ செய்தேன்!
அக்கா, வீட்டு விஷேசம் தலைமுறை ‘துளிர்வு’ தானே…
இங்கே வந்த போது தனி ஆளாக நடந்து வந்தேன்… இப்போது உறவுகளோடு மொத்தமாகச் செல்கிறேன். புரிதல் எல்லாத்திலும் ‘துளிர்வு’ விடும் நம்பிக்கை தரும்… நீங்களும் நம்பி உறவில், கலந்திருந்து, பாருங்களேன்..!