“விருதுநகர் ஒரு டிக்கெட் சார்.” ஏதோ தேவையற்றதைக் கேட்ட மாதிரி நடத்துனரின் பார்வை குத்தி நின்றது.
“சார்…” ஓர் விதமான மிரட்சியுடன் ஏறிட்டுப் பார்க்கிறாள் அந்தப் பெண். வயது முப்பதுக்குள் இருக்கும். தோளிலிருந்து இறக்காத கனத்த பேக்கும், மடியில் தூங்கும் குழந்தையும் இருக்க, விட்டா அழுது விடுவாள் போல். இரவுப் பயணம், அந்தப் பயமாகவும் இருக்கலாம்.
எதையும் கவனித்ததாகவே தெரியவில்லை. டிக்கெட் மெஷினை பேக்கில் திணித்தவாறு, யாரிடமோ பேசுவது மாதிரியே..,
“எக்ஸ்பிரஸ் வண்டிம்மா விருதுநகருக்குள்ளலாம் போகாதும்மா, ஏறும் போதே கேட்டுத் தொலைய வேண்டியதுதான,” கோபப்பட்டுக் கொண்டே குனிந்து, கண்ணாடி வெளியே உற்றுப் பார்க்கிறார், பழக்கம்தானே… பேருந்து சுற்றுச் சாலையில் ஓடுகிறது.
“இதோ பாருமா இடைவெளி டிக்கெட்டுலாம் இதுல போட முடியாது. வரும் டோல்கேட்டில் இறங்கிக்க, சிவகாசி பஸ் வரும் போது ஏறிக்க.” என்றார். அவரின் குரலில் இறக்கிவிடப்படும் கடுமையை உணர்ந்தவள்,“நைட் நேரம் சார்.., டிரைவரிடம் கேட்டுத்தான் ஏறினேன்.” கெஞ்சலானாள்.
“புரிஞ்சுக்கமா, கன்னியாகுமரி போகும் பயணிக அசந்து தூங்குறாங்க, சும்மா நொய்பண்ணிட்டு.” தட்டிக்கழிக்கும் குறியிலே கடுகடுத்ததும், டிக்கெட் போட பின் சீட்டுப் பக்கம் நகர்ந்த போது, ‘புல் டிக்கெட் கூட போட்டுக்கங்க சார், இறக்கி விடாதீங்க, மொதத் தடவை தனியா வாறேன்… கைல பச்சப்புள்ள, பயமாவும் இருக்கு.’ அவளின் புலம்பலைச் சட்டையே செய்யல, நடத்துனர்.
பயணிகள் கூட இடையில் நிற்காமல் சென்றால் நல்லதென்று உறக்கமே பிரதானமாய் அவரவர் இருக்கையில். இரவு என்பதால் இரக்கக் குணமும் பயணிகளிடமே உறங்க ஆரம்பித்து விட்டது போல்…
விருதுநகர் பெண்தான். தெற்கே செல்லும் தூரப் பேருந்துகளின் இந்த மாதிரி கெடுபிடியை அறிந்தவள்தான். என்ன செய்ய, காதல் கணவனுடன் தொடர் பிரச்சனை… பொறுத்திருந்து ஒன்றறை வருஷத்தை எப்படியோ கழித்தாள். இன்று முடியவில்லை. இனிமே நடப்பதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்னு ஓர் வித வேகத்தில் இரவைப் பாராமல் கிளம்பி வந்தாள், கிடைத்த பஸ்சில் ஏறி உக்கார்ந்தும் விட்டாள்.
நடத்துனர் கறார் காட்டக்கூடாதேன்னு மாரியம்மனை, வெயிலம்மனை வேண்டியே இருந்தாள்… இப்போது சொக்கநாதனையும், குலசாமியையும் சேர்த்து முணுமுணுத்துக் கொண்டாள்.
மணி பத்தரையாகிவிட்டது. ‘ரிங்க்’ டோக் கேட்டிலே அந்தப் பொண்ணை இறக்கினால் பாதுகாப்பு இருக்காதே… பேசாமல் மண்டேலா ஸ்டாப்பில் இறக்கி விடலாம், டிக்கெட்லாம் போட்டாச்சு, பேசாமல் தூக்கத்தைப் போட வேண்டியதுதான்னு நினைத்தவாறே ஓட்டுனருக்குப் பின்னால் இருக்கும் சீட்டில் உட்காரவும், “நாகராசு லைட்டை அமர்த்தலையா?” ஓட்டுனரின் கேள்விக்கு விருதுநகர் டிக்கெட் பெண்ணைப் பற்றிச் சொல்லி அந்த டிக்கெட் போடவில்லை, இறக்கிவிடணும் என்றும், தெரிவித்தார்.
“டிக்கெட் இருக்கட்டும், முதலில் லைட்ட ‘ஆப்’ பண்ணு.”
“இப்ப மண்டேலா ஸ்டாப் வந்துரும் இறக்கியதும் அமத்திடலாம்”
“என்கிட்ட கேட்டுத்தான் அந்தப் பொண்ணு ஏறுச்சு நாகராசு. பாவம் கொஞ்ச வயசுப் பொண்ணா இருக்கு பாத்துக்கலாம், ‘ஆப்’ பண்ணு.”
இரக்கத்துக்கு எடுத்துக் காட்டானவரு ஓட்டுநர் அண்ணன்… சொன்னா சொன்னதுதான். லைட்கள் அணைக்கப்பட்டது.
ஒரே சீரான வேகத்தில் பேருந்து ஓடியது.
அந்தப் பெண் எங்கே தூங்க? ஏதோவொரு நம்பிக்கையில் இருந்தாள்.
நாகராசு அசந்த தூக்கத்தில், முறுக்கிக் கிடந்தார்.
விருதுநகர் வந்து விட்டது:
கருமாதிமடம் முக்கில் நின்றிருந்தன, பேருந்து!
சத்தமில்லாமல் கதவைத் திறந்து இறங்கிய ஓட்டுநர், பார்வையைச் சுத்திப் போட்டார். சோதனைப் போலவே ஆட்டோக்கள் எதுவும் தென்படவில்லை. சற்றுத் தள்ளி மறைவிடம் போய், இயற்கை உபாதையக் கழித்து, வந்த போது ஒரு ஆட்டோ வந்து கொண்டிருந்தது தெரிந்தது…
பக்கமா வந்து நிற்கவும்.
“தம்பி ஒரு சவாரி போகலாமா?” கேட்டார்.
“நைட் சர்வீஸ்ணே…” வழக்கமான எக்ஸ்ட்ரா எதிர்பார்ப்பை எதிர்பார்த்தார்.
“பாத்து வாங்கிக்க தம்பி. பத்திரமா மட்டும் அந்த பொண்ண வீட்ல விட்ரு.” அவர் பேசிக் கொண்டு இருக்க, அந்தப் பெண், இறங்கும் வழிக் கதவோரம் நின்றிருப்பதைக் கவனித்தார் ஓட்டுனர்.
“என்னமா உறங்கவே இல்லையா..?” என்றபடியே, மெல்லக் கதவைத் திறந்து விட, அவள் இறங்கி நின்று, குழந்தையைத் தோளில் கிடத்தினாள்.
“எங்கம்மா போகணும்?” ஆட்டோ, நபர்தான்.
“ரோசல்பட்டிண்ணா…” என்றவள் கண்களில் சின்னதா பயத்தைப் பார்த்ததும், “தெரிஞ்ச தம்பிதான் தைரியமா போம்மா.” என்று ஒரு துண்டு சீட்டை நீட்டி, ‘இதுல என்னோட நம்பர் இருக்கு, வீடு போகவும் தகவல் சொல்லுமா’ன்னு அதைத் தந்தார்.
வெளிச்சத்தில் சீட்டைப் பார்த்த பெண், ஓட்டுனரை உயர்வாப் பார்த்தாள். காலம், இன்னும் சில நல்ல உள்ளம் கொண்டவர்களை மிச்சம் வைத்து மனிதாபிமானத்தைக் காத்து நிற்கிறது.
விழியோரங்களில் ஈரம் கசிய, நன்றி மிகுதியாக ஏறிட்டாள், பெண்.
சீட்டில் காவல் எண்ணும், அவரின் பேசி எண்ணும் எழுதியிருந்தன. தேவைக்கு இதைப் பயன்படுத்தலாமென்ற எண்ணத்தோடுதான் இதைக் கொடுத்துள்ளார்…
நினைத்த போது, “சாத்தூர் டிக்கெட் நூத்திமுப்பது கொடும்மா,” கடமையில் சரியா, இருந்தார். ஏற்கனவே நூறு ரூபாய் தாள் கையில் வைத்திருந்தாள், கைப்பேக்கில் இருபது ரூபாய் எடுத்து, சேர்த்துத் தந்தாள், பிறகு ஆட்டோவில் ஏறினாள்.
முழிப்புத் தட்டி, எல்லாமும் கவனித்தவாறே இருந்த நாகராசு, பேருந்து கிளம்பவும்,. மெல்லிய வெளிச்சத்தில் ஓட்டுனரைக் கேள்வியா ஏறிடவும், “அந்தப் பொண்ணு யார்ட்ட பேசுச்சுன்னு தெரியல நாகராசு, ‘பச்ச உசுரு இருக்கு இல்லனா…’ னு தேம்பிக்கிட்டே வந்து கேட்டுச்சு அந்த இல்லனா… சொல்லு என்னை என்னமோ பண்ணிட்டது நாகராசு, அதான் ஏறுமான்னு சொல்லிட்டேன். இந்தா சாத்தூர் வரை டிக்கெட் பணம்.” இடது கையை நீட்டிய ஓட்டுனரின், பேசியில் ‘நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்,’ அழைப்பிசைக்க, “போனை ஆன் பண்ணி ஸ்பீக்கரில் போடு, நாகராசு” என்றார்.
“அம்மா வீட்டுக்கு வந்துட்டேன்… ரொம்ப, ரொம்ப நன்றி அப்பா.” அந்தப் பெண்தான், மனமுருகி ‘அப்பா…’ என்கிறாள்.
“நல்லதும்மா, சரின்னு படுவதைச் செய்யும்மா.” நெகிழ்ந்து போனார்.
இணைப்பு விட்டதும், “சாரிண்ணே…” நாகராசு தான்.
“முடியாத ஒண்ணுல மெனக்கிடுவதுவேனா தேவையில்லாம இருக்கலாம், முடிஞ்சதைச் செஞ்சுட்டு போவதில் தப்பொண்ணும் இல்லை…” ஏதோவொரு திருப்தியில் புன்முறுவலித்த, ஓட்டுனரைப் பெருமையாப் பார்த்தார் நாகராசு.
இருட்டைக் கிழித்தவாறு நான்கு வழிச்சாலையில் பயணித்தது, அந்தப் பேருந்து!