சார் தபால்,,, குரல் கேட்டு, அந்த வளாகத்தில் நான்கு தலைகள் எட்டிப்பார்த்தன.
யாருக்கு?
ரெங்கசாமி! எனத் தபால்காரர் சொல்லவும், மற்றவர்கள் உள்ளே சென்றனர். படபடப்போடு கடிதத்தை வாங்கிப் படித்த ரெங்கசாமி அதைத் தூர வீசி எறிந்தார்.
என்னங்க ஆச்சு? மனைவி கமலம் கேட்க, ரெங்கசாமி கர்ஜித்தார்.
வசந்தாவைப் பெண் பார்த்துப் போனவங்க....
என்ன எழுதியிருக்காங்க?
அவங்களுக்கு இளையவளைத்தான் பிடிச்சிருக்காம்!? அனைவரும் திகைத்தனர்.
ரெங்கசாமியின் மூத்த மகள் வசந்தாவைப் பெண் பார்க்க வந்தார்கள். வசந்தாவும் அழகுதான். ஆனால், மாநிறம், முன்பல் சற்று எடுப்பாக இருக்கும். இதுவரையில் எத்தனையோ பேர் வந்து பார்த்துவிட்டு அமைதியாய்ச் சென்று விட்டனர், போனமுறை வந்த வரனில் மிகவும் நம்பிக்கையாய் இருந்தார். ஆனால், அதற்கு வந்த பதிலும் பேருடியாய் அல்லவா விழுந்திருக்கிறது.
பெரியவளைப் பார்க்க வந்திட்டு இளையவளைப் பிடிச்சிருக்காம், முட்டாள் பசங்க...?
இளையவள் அமுதா முன் வந்தாள். அப்பா... அந்த மாப்பிள்ளையைக் கட்டிக்க எனக்குச் சம்மதம், அவங்களைப் பெண் பார்க்க வரச் சொல்லி எழுதுங்க...
ரெங்கசாமி துடித்துப் போனார், சீ! நீ என் பொண்ணுதானா ? கூடப்பிறந்தவளை நிராகரிச்சவனைப் போய் .... அப்படி என்ன உனக்கு அவசரம்? இளைய மகளை அடிக்கப் பாய்ந்தவரைத் தடுத்தாள் வசந்தா.
விடுங்கப்பா....! என்னாலே தங்கச்சி திருமணம் நிற்க வேண்டாம், நான்தான் என்ன பாவம் பண்ணினேனோ, இப்படி மனசு வேதனைப்படறேன், எனக்கு வந்த வரன் யாருக்குப் போறது ? என் கூடப் பிறந்தவளுக்குத்தானே! இனியும் யார் முன்னாடியும் பொம்மையாய் அலங்கரிச்சிட்டு நிற்க என்னாலே முடியாது, கல்யாணம் நடக்கிறப்ப எனக்கு நடக்கட்டும். அவளைத் தடுக்க வேண்டாம். அவ விருப்படியே தகவல் சொல்லுங்கப்பா... சொன்ன வசந்தா அழுதபடி உள்ளே போய்விட, அமுதாவைப் புழுவைப் போல் பார்த்தார் ரெங்கசாமி.
அழுதபடியே இருந்தாள் வசந்தா. வீட்டில் யாருமே அமுதாவிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை, அவளும் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. மாப்பிள்ளை வீட்டாருக்குத் தேவையானவற்றை அவளே செய்து கொண்டாள்.
அந்த வீடு மறுபடியும் ஒரு பெண் பார்க்கும் நிகழ்விற்குத் தயாரானது. வசந்தா அறையை விட்டு வெளியே வரவே இல்லை. மனசே இல்லாமல் ஒருவித வெறுப்புடன் வரவேற்றார் ரெங்கசாமி. பரஸ்பர பேச்சுகள் முடிய, அமுதா அழகாய்-ஒயிலாய் அலங்காரத்துடன் கூடத்திற்கு வந்தாள்.
அப்பா... நான் மாப்பிள்ளை கூடக் கொஞ்சம் பேசணும் என்றாள். ரெங்கசாமி தலையில் அடித்துக் கொண்டார். மாப்பிள்ளை ராகவன் பற்களைக் காட்டியபடி அமுதாவைப் பார்த்தான்.
மிஸ்டர். ராகவன்! நீங்க ரொம்பவும் அழகானவர்தான். அதேமாதிரி உங்களுக்கு என்னையும் பிடிச்சுருக்கு இல்லையா?
யெஸ் அமுதா! நான்தான் கடிதத்தில் தெளிவாக சொல்லியிருந்தேனே!
ம்....! உங்க விருப்பத்த நீங்க தெளிவா அழகா சொன்ன மாதிரி நானும் நேரடியா என் விருப்பத்தைச் சொல்லலாமா?
கட்டாயம் வரவேற்கிறேன்.
கூட்டத்தையும், தந்தையையும் ஒரு முறை பார்த்துவிட்டுப் புன்னகையுடன் பேசினாள். ”ஸாரி! மிஸ்டர். ராகவன் எனக்கு உங்களை விடவும் உங்க தம்பியைத்தான் பிடிச்சிருக்கு!” என்றாள்.
என்னம்மா பேசுறே? நீ அண்ணனைப் பார்க்க வந்திட்டு, நீ பேசறது நல்லாயில்லையே? மாப்பிள்ளையின் தாய் பேசிட அதற்காகவே காத்திருத்தவள் போல் அமுதா ஆரம்பித்தாள்.
நீங்க மட்டும் எங்க அக்காவைப் பார்க்க வந்திட்டு என்னைப் பிடிச்சிருக்குன்னு சொன்னீங்களே... அது மட்டும் நாகரீகமா? அதென்னம்மா நீ பெத்த பிள்ளை மட்டும் உசத்தி... என் கூடப் பிறந்தவ மட்டமா?
நீ சொல்றதைக் கேட்டிட்டு தலையாட்டி பொம்மை மாதிரி கொஞ்சம் கூட சுயபுத்தியே இல்லாம பொண்ணு பார்க்க வந்த உன் பிள்ளையை விடவும், தன் கல்யாணம் நடக்கலைன்னாலும் பரவாயில்லை, தன் தங்கை நல்லாயிருக்கணும் என்று நினைச்ச என் அக்கா எத்தனை உசந்தவ!
ஒரு தாயா அவனுக்கு நீ புத்திமதி சொல்லியிருக்கணும். அக்காவைப் பார்த்திட்டு தங்கையைப் பிடிக்கிறதுன்னா அந்தப் பெண்ணோட மனசு எத்தனை வேதனைப்படுமின்னு உணர வேண்டாமா? நீங்களும் பெண்தானே.....? இப்போ மனசு குத்துது இல்லையா?
இதை முதலிலேயே தெரிவித்து இருப்பேன், ஆனால், என் அக்காவும் குடும்பமும் மனசுக்குள்ளே பட்ட வேதனையையும் அவமானத்தையும் நீங்களும் உணர வேண்டாமா? அதுக்குத்தான் இந்த நாடகம், இவரை மாதிரி மானங்கெட்ட மண்புழு மாப்பிள்ளை எனக்கு வேண்டாம். வெளியே போங்க !
மாப்பிள்ளை வீட்டார், முகத்தில் அவமானத்தை அப்பிக் கொண்டு வெளியேற, அமுதாவை ஆச்சர்ய அன்போடு பார்த்தார் ரெங்கசாமி.!
வசந்தாவிற்கு மனப்பாரம் எல்லாம் இறங்கியது. தங்கையைப் பாசமாய்க் கட்டிக் கொண்டாள்.