“அடிச்சே... மாப்பிள்ள...எம்புட்டு காரு, வண்டி... இம்புட்டு கண்ணு மூக்கு தெரியாம போயி இருக்காங்கோ... கட்சிக்காரங்க மீட்டிங் கீட்டிங் போடுறாங்களோ...” என்று தனக்குத்தானே கேள்வி கேட்டபடி நடந்து கொண்டிருந்தான்.
“மூக்கையா... உனக்கு விசயம் தெரியாதா நம்மூரு ஆத்துப்பாலத்துக்கிட்ட சினிமா சூட்டிங் எடுக்கிறாங்களாம்... அதாம் கார், வண்டின்னு நெறைய போயிருக்கு” என்று அவன் புதிருக்கு விடை கொடுத்தான் லெப்ட் பாண்டி.
பாண்டியாக இருந்த அவனது இடது கைப் பழக்கத்தால் லெப்ட் லெப்ட் என்று சொல்லி இப்போது அவன் லெப்ட் பாண்டியாகிப் போனான்.
“அப்டியா மாப்பிள்ள...நாமளும் போயி சூட்டிங் பார்த்துட்டு வருவோம். அப்படியே நம்மளை ஏதாவது நடிக்கக் கூப்பிட்டா நடிச்சுக் காட்டுவோம்... நமக்குத் தெரியாத நடிப்பா? எத்தனை நாடகத்துல நடிச்சிருக்கேன்...” மூக்கையாவிற்கு நடிப்பாசை எட்டிப் பார்த்தது.
இருவரும் ஓட்டமும் நடையுமாக ஆத்துப்பாலத்தை நோக்கிப் போனார்கள்.
அங்கே சூட்டிங் பார்க்க வந்த கூட்டம் அதிகமாக இருந்தது.
பரபரப்புடன் காணப்பட்ட டைரக்டரும், கேமரா மேனும் ஆற்று ஓரத்தில் அவர்கள் நினைத்தபடி படத்திற்கேற்ற இடத்தைத் தேடி அலைந்து ஒரு இடத்தைத் தேர்வு செய்திருந்தனர்.
அந்த இடம் சூட்டிங்கிற்கு தயாராகிக் கொண்டிருந்தது.
டைரக்டர் தந்து உதவியாளருக்கு அந்தக் காட்சியை விளக்கிக் கூறினார்.
உதவியாளர்கள் அதைக் கேட்டுக் கொண்டு அந்தக் காட்சிக்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினர்.
டைரக்டர் “ஆர்ட்டிஸ்ட் ரெடியா? அந்த நடிகையை வரச் சொல்லுங்க...” என்றார்.
சேலையில் இருந்த ஒரு பெண் டைரக்டரை நோக்கி வந்தார்.
கிராமப்புறத்துப் பெண்ணாக சேலையைக் கட்டியிருந்த அவரைப் பார்த்தால் நடிகை என்றே தெரியவில்லை. அவர் புதுமுக நடிகை என்பதால் அவரை யாருக்கும் தெரியவுமில்லை.
டைரக்டர் அந்தப் பெண்ணிடம் காட்சியை விளக்கினார்.
அந்தக் காட்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும் போது மரம், செடி, கொடிகளையும் இழுத்துக் கொண்டு வரும். அந்த வேகத்தில் எதிர்முனையிலிருந்து ஒரு பெண் விறகு சுமந்து கொண்டு தன் குழந்தையை முதுகில் தொட்டில் போல் கட்டி நீந்திக் கடக்கிறாள். ஆற்றில் அடித்து வரப்பட்ட மரக்கிளைகள் அவளையும் அவள் குழந்தையையும் உரசிச் செல்வதால் குழந்தை வலி பொறுக்க முடியாமல் அழுகிறது. இவள் விறகுக் கட்டை ஆற்றில் விட்டுவிட்டுக் குழந்தையை மட்டும் காப்பாற்றிக் கரை சேர்க்கிறாள். கரையில் அந்தக் குழந்தையை தனது சேலையால் துடைத்துவிட்டு காது, கண், வாய்க்கு சுடுகாற்றளித்து அவசர சிகிச்சை அளிக்கிறாள்.
இந்தக் காட்சியைக் கேட்ட உதவி இயக்குனர்கள் இந்தக் காட்சி நல்லபடியாக அமைந்து விட்டால் டைரக்டருக்கு ஜனாதிபதி அவார்டு கிடைக்கும் என்று நம்பிக்கையூட்டினார்கள்.
டைரக்டருக்கும் தான் இப்போதே ஜனாதிபதி அவார்டு வாங்கி விட்டதாக கற்பனை செய்து கொண்டு மகிழ்ச்சியடைந்தார்.
சில நிமிடத்தில் அந்தப் புதுமுக நடிகை டைரக்டரிடம் “டேக் போகலாம் சார்!” என்றாள்.
டைரக்டரையும் கேமராவையும் வணங்கிய அந்த நடிகை ஆற்றுக்குள் இறங்கினாள்.
நடிகைக்குப் பாதுகாப்பாக ஆற்றுக்குள் அந்த ஆற்றின் தன்மையைத் தெரிந்த சில நபர்கள் முன் கூட்டியே இறங்கி நின்றிருந்தனர்.
நடிகை ... தயாரானாள்.
டைரக்டர் “டேக் போகலாமா?” என்றார்.
அவரது உதவியாளர்கள் “ஓகே சார்!” என்றனர்.
“ஸ்டார்ட் கேமரா...ஆக்சன்” என்றார் டைரக்டர்.
கேமராமேன் ஆற்றைக் குழந்தையுடன் கடந்து வரும் காட்சியைப் படமாக்கத் தொடங்கினார்.
ஆற்றில் குழந்தையைப் பின் முதுகில் தொட்டில் கட்டியபடி விறகுக்கட்டைத் தலையில் சுமந்தபடி நீந்தி வருவது போல் நடிகை வந்தார்.
இந்தக் காட்சி சரியாயில்லை என்றபடி திரும்பத் திரும்பப் படமாக்கினார்.
டைரக்டர் எதிர்பார்த்தபடி அமையவில்லை.
நடிகையைத் திட்டினார். அவர் புதுமுகம் என்பதால் அழுதபடி சென்றார்.
டைரக்டர் பிரேக் என்றபடி உட்கார சேரை நோக்கிச் சென்றார்.
மதிய சாப்பாட்டுக்குப் பின்பு மிகவும் கண்டிப்புடன் காட்சி தத்ரூபமாக அமைய வேண்டும் என்கிற எண்ணத்தில் அவர் ஆற்றுக்குள் நீந்தி வந்து காட்டினார்.
இப்போது அந்தப் புதுமுக நடிகை “சார் ரெடி!” என்றார்.
உதவி இயக்குனர்கள் நடிகையை அந்தக் காட்சிக்கேற்றபடி தயார் செய்து குழந்தையைத் முதுகில் தொட்டில் கட்டி விட்டு ஆற்றில் இறக்கி விட்டனர்.
நடிகையும் இந்த முறையாவது இந்த டேக் ஓகே ஆகிவிடவேண்டும் என்று நினைத்தபடி ஆற்றுக்குள் இறங்கினாள்.
குழந்தை வீரிட்டு அழுதது.
நடிகையால் நடிப்பைத் தொடர முடியவில்லை.
டைரக்டர் எதை மனதில் நினைத்துக் கொண்டு இந்த ஆற்றங்கரையில் அந்தக் காட்சியைப் படம் பிடிக்க வேண்டுமென்று வந்தாரோ... அந்தக் காட்சி படமாக்க முடியவில்லை...
அவருடைய நோக்கத்தை, அந்த ரியாலிசத்தை செய்து முடிக்க அவளையே அழைத்து வந்து முடிக்க வேண்டும்.
அவளை அழைத்து வர ஆள் அனுப்பினார்.
அவள் வேறு யாருமில்லை. வெள்ளைத்தாய்
வெள்ளைத்தாய் அந்த ஆற்றைக் கடந்து காடுகளுக்குள் போய் விறகுகளைப் பொறுக்கி வந்து அதை விற்பனை செய்வதால் கிடைக்கும் பணத்தில் அவளுடைய தாயையும்,கைக்குழந்தையையும் காப்பாற்றிக் கொண்டிருந்தாள். கணவன் ரோட்டு வேலைக்குப் போய்க் கொண்டிருந்தான். அவன் குடிகாரனாக இருந்ததால் குடித்துவிட்டு மிச்சம் பணமிருந்தால் அவளிடம் கொடுப்பான். அவனிடம் பணத்தை எதிர்பார்க்க முடியாமல் இவள் விறகு பொறுக்கி வருவதைத் தொழிலாகக் கொண்டு விட்டாள்.
ஒருநாள் இவள் குழந்தையுடன் விறகு பொறுக்கி வரும் போது ஆற்றில் திடீரென்று வந்த மழை வெள்ளத்தில் அடித்துச் செல்ல அவள் விறகுக் கட்டையும், குழந்தையுடன் காப்பாற்றி கரை சேர்க்க முயன்று கடைசியில் விறகுக் கட்டை ஆற்றில் விட்டுவிட்டு குழந்தையுடன் கரையேறிய அவள் குழந்தையின் வாயுக்குள்ளும் வயிற்றுக்குள்ளும் சென்றிருந்த தண்ணீரை வெளியேற்ற அவள் பட்டபாடு அப்பப்பா... அதை நினைக்கக் கூட முடியவில்லை.
அந்தக்காட்சியை அந்தப் பகுதி தொலைக்காட்சி நிருபர் ஒருவர் மழை நிலவரம் குறித்த செய்திக்காக ஆற்று வெள்ளத்தைப் படமெடுக்க வந்தவர் படமெடுத்து அனுப்ப அந்த பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி விட்டது. இதைப் பார்த்த பலர் அந்தப் பெண்ணின் நிலையைக் கண்டு பரிதாபப்பட்டார்கள்.
டைரக்டர் இந்த பரிதாபத்தைப் படமாக்கி விட்டால் தனக்கு ஜனாதிபதி அவார்டு கிடைக்குமென்று அந்த இடத்துக்கே வந்து விட்டார்.
டைரக்டர் அனுப்பிய ஆள் வெள்ளைத்தாயைக் குழ்ந்தையுடன் கூப்பிட்டு வந்து விட்டார்கள்.
டைரக்டர் வெள்ளைத்தாயிடம் தன்னைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டு தொலைக்காட்சியில் பார்த்தபடி இரண்டுமுறை செய்து காண்பித்து விட்டால் நடிகை அப்படியே செய்து விடுவார் என்றார்.
“இல்லைங்க... குழந்தைக்கு அன்றைக்கிருந்தே உடம்பு சரியில்லை...காய்ச்சலாயிருக்கு...” என்றாள்.
படப்பிடிப்புக்கு வந்திருந்த சிலர், “வெள்ளைத்தாயி... நீயும் உன் குழந்தையும் சினிமாவில தெரிவீங்க... மாட்டேன்னு சொல்லாதே... நம்ம ஊரு பேரு வாங்கிடும்” என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.
ஆனால், வெள்ளைத்தாய் அதற்கு மறுத்தாள். அன்று திடீரென்று தண்ணீர் வந்தது. நான் ஏதோ பிள்ளையைக் காப்பாற்றனுமின்னு நினைச்சு வேகமாக நீந்தினேன். இன்னைக்கு அப்படியெல்லாம் செய்ய முடியாது... என மறுத்தாள்.
படப்பிடிப்பைப் பார்க்க வந்த வெள்ளைத்தாய் புருசன் “தன் மனைவிக்கும், குழந்தைக்கும் நல்ல காசு கொடுத்தால்தான் நடிக்க விடுவேன்” என்று சத்தம் போடத் தொடங்கினான்.
அந்த சினிமாவிற்கான புரடக்சன் மேனேஜர் வெள்ளைத்தாய் புருசனை அழைத்து ஐநூறு ரூபாய்த் தாளை அவன் கையில் திணித்தார்.
அவ்வளவுதான், “வெள்ளைத்தாய்... நீ முதலில் குழந்தையோட ஆற்றில் இறங்கி நடிகைக்கு நடிச்சுக் காண்பி... அப்புறம் நடிகை கடைசியாக நடிச்சுப்பாங்க...” என்று சொன்னான்.
“கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருசன்” என்று கிராமத்தில் இன்னும் நம்பிக் கொண்டுதானிருக்கிறார்கள். கணவன் சொன்னவுடன் மறுப்பேதும் சொல்லாமல் வெள்ளைத்தாய் குழந்தையுடன் ஆற்றில் இறங்கி ஒருமுறை நீந்திக் காண்பித்தாள்.
கேமராமேன் அவள் நீந்தி வருவதைப் படம் பிடித்துக் கொண்டார்.
இப்படியே இரண்டு மூன்று முறை வெவ்வேறி இடங்களிலிருந்து வெவ்வேறு ஆங்கிள்களில் அந்தக் காட்சி படமாக்கப்பட்டது.
குழந்தை உடம்பு நெருப்பாகக் கொதித்துக் கொண்டிருந்தது. நீந்தி வரும் போது சில சமயம் ஆற்று நீரைக் குடித்திருந்தது. கரைக்கு வந்தவுடன் குழந்தையை தலைகீழாகப் பிடித்து தண்ணீரை வெளியேற்றினாள்.
கடைசியாக நடிகையின் முதுகில் அந்தக் குழந்தை தொட்டில் கட்டப்பட்டு சிறிது தூரம் மட்டும் குழந்தையுடன் நீந்திக் கரையேறுவது போல படமாக்கப்பட்டது.
கரைக்கு வந்தவுடன் குழந்தைக்கு நீரில் இருந்ததால் கை கால்கள் வெட்டி இழுப்பது போல் காட்சி அடுத்துப் படமாக்க வேண்டும்.
தற்போது குழந்தைக்கு கால், கை வெட்டி இழுக்கத் தொடங்கியது. நடிகை பயந்து போய் அந்தக் குழந்தையின் கை கால்களை நீவிவிடத் தொடங்கினாள்.
கதைக்கேற்றபடி குஅழந்தை கூட் நடிக்கிறதே... என்று கூட்டத்திலிருந்தவர்களெல்லாம் பேச வெள்ளைத்தாய் புருசனிடம் சொல்ல அவன் மகிழ்ந்து போனான்.
வெள்ளைத்தாய்க்கு மனதே சரியில்லை. குழந்தைக்கு ஏற்கனவே காய்ச்சல் வேறு இருந்தது. கணவனிடம் சினிமாக்காரங்க கொடுத்த ஐநூறு ரூபாயில் நூறு ரூபாயாவது அவனிடம் வாங்கி குழந்தையை டவுன் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய்க் காண்பிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
கூட்டமே கைதட்டியது.
டைரக்டர் முகத்தில் மகிழ்ச்சி வந்திருந்தது.
டைரக்டர் “டேக் ஒகே!” என்றார்.
வெள்ளைத்தாய் தன் குழந்தையை நடிகையிடமிருந்து வாங்கி உச்சி முகர்ந்தாள்.
அவள் சேலையின் முந்தானையைக் கொண்டு குழந்தையின் உடலிலிருந்த ஈரத்தைத் துடைத்தாள்.
குழந்தை கை கால்கள் குளிர்ந்திருந்தது... எப்போதும் அவளைப் பார்த்தவுடன் சிரிக்கும் அந்தக் குழந்தை பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால் சிரிப்பைக் காணோம்.
குழந்தையைச் சிரிக்க வைக்க முயன்றாள். அந்தக் குழந்தையின் தலை கீழே கவிழ்ந்தது.
பயந்து போன அவள் குழந்தையின் மூக்கில் கையை வைத்துப் பார்த்தாள். அதன் மூக்கில் மூச்சுக் காற்று வெளியேற வில்லை.
“அய்யோ... என் பிள்ளைக்கு மூச்சு வரலையே...” வெள்ளைத்தாயின் அலறல் அந்தப் பகுதி முழுக்க பிரதிபலிப்பதாக இருந்தது.
சினிமாக்காரர்கள் தங்கள் படப்பிடிப்பு முடிந்து விட்டதால் அனைத்தையும் பேக்கப் செய்து கொண்டிருந்தார்கள்.
குழந்தை இறந்து விட்டதறிந்து கிராமத்துக்காரர்கள் சண்டைக்கு வந்து விடக்கூடாது என்கிற எண்ணத்தில் டைரக்டர், நடிகை, கேமராமேன் என முக்கியமானவர்களெல்லாம் அந்த இடத்தை விட்டுப் போயிருந்தனர்.
புரடக்சன் மேனேஜர் வெள்ளைத்தாயின் புருசனிடம் பத்தாயிரம் ரூபாய் கொடுத்தார்.
அவன் அந்தப் பணத்தை வாங்கப் பிடிக்காமல் தூக்கி ஏறிந்தான். கிராமத்துக்காரர்கள் சினிமாக்காரர்களிடம் சண்டை போடத் தொடங்கியிருந்தார்கள்.
“அவங்களை விடுங்க... அவங்க போகட்டும்... என் குழந்தைக்கு உடம்பு சரியில்லாமல் இருக்குதுன்னு தெரிந்தும் அவங்க கொடுத்த ஐநூறு ரூபாய்க்கு ஆசைப்பட்டு ... என் குழந்தையை இழந்துட்டேனே...” வெள்ளைத்தாயின் புருசன் வாய்விட்டு அழுது கொண்டிருந்தான்.
டைரக்டருக்கு ஜனாதிபதி அவார்டு கிடைக்கும். வெள்ளைத்தாய்க்கும் அவள் புருசனுக்கும் அந்தக் குழந்தை கிடைக்குமா?