பீச்சில் இன்று கூட்டம் இல்லாமல் இருந்தது நந்தினிக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. “ஞாயித்துக்கிழமைகள்ல சாதாரணமா இப்படி இருக்காதே!”. அவள் நினைத்துக்கொண்டாள். இந்த நேரங்களில் கடற்கரையில் கூட்டம் அலைகளுக்கு சவால் விடுவது போல இருக்கும். அந்தச் சமயங்களில் மணற்துகள்களை மிதித்துச் செல்லும் காலடிச் சுவடுகள் போராங்கள் நடைபெறும் இடத்தைப் போலக் காட்சிதரும்.
பொழுது சாய்வதற்கு இன்னும் அதிக நேரம் இல்லை என்பதை நந்தினி உணர்ந்தாள். சாயும் வேளையில்தானே சூரியன் கடலில் மூழ்கிக் காணாமல்போவான்! மூழ்கி மறைந்தாலும் மறுநாள் காலையில் வெளிச்சத்தோடு திரும்பி வரும் வழக்கத்தை அது ஒருபோதும் மாற்றிக்கொண்டது இல்லை. தவறாமல் மீண்டும் உதயம்.
ஒருவேளை மூழ்கி மறைந்து போகும் சூரியன் அடுத்த நாள் மறுபடியும் உதிக்கவில்லை என்றால் என்ன ஆகும்? மனிதர்களில் அது ஏற்படுத்தும் பீதியை கற்பனை செய்து பார்த்தபோது நந்தினியின் உதடுகள் புன்னகை பூத்தன. சூரியனையும் ஆண்களையும் ஒப்பிட்டுப் பார்க்க அவள் மனது ஆசைப்பட்டது.
ஆண்கள் பலரும் சூரியனைப் போல இல்லை. மூழ்கினால் பிறகு அவர்கள் எழுந்து வருவதேயில்லை. தன் வாழ்க்கையில் இதே போல திரும்பத் திரும்ப நடந்தது பற்றிய சிந்தனைகள் அவளைப் பெரிதும் வேதனைப்படுத்தியது. மனதை நெறித்தது. ஆண்கள் ஓடிப்போனால் பிறகு திரும்பி வராதவர்கள்தானே?
சூரியனாக ஆக இவர்களால் ஏன் முடியவில்லை? அனிருத்தின் முகம்தான் நந்தினியின் மனதில் முதலில் தோன்றியது. கல்லூரி வாழ்க்கையில் கை கோர்த்த காதலன். “எத்தனையெத்தனை வாக்குறுதிகளை அள்ளி வீசினான்? அதெல்லாம் சத்தியம் என்று நம்பி அவனை நானும் காதலித்தேன்.
முறைப் பொண்ணைக் கல்யாணம் கட்டிக்கொண்டு அமெரிக்காவுக்குப் பறப்பதற்கு முன் அவன் என் முன்னால தோன்றினான்”. அவன்சொன்ன வார்த்தைகள் நெஞ்சில் துளைத்தப் பிறகே காதுகளில் வந்து விழுந்தது. “நந்தினி. உன்னை எனக்கு இப்பவும் பிடிக்கும். ஆனா விதி. அது நம்மப் பிரிச்சிடுச்சு. அந்த விதி. அதுதான் என்னை எதுவும் செய்ய முடியாதவனா மாத்திடுச்சு நந்தினி. உனக்கு நல்ல எதிர்காலம் அமையணும்னு நான் வேண்டிக்கறேன்” எப்போதும் அவளை மிகப் பிடிக்கும் என்று சொன்ன அந்த ஆண்பிள்ளை என்னை ஒரு தடவை கூட திரும்பிப் பாக்காம ஓடி ஒளிஞ்சுட்டான்”
அப்போது அதை வெறுமனே வேடிக்கைப் பாக்கமட்டுதான் அவளால் முடிந்தது. இவர்களால் ஏன் சூரியனாக ஆக முடியவில்லை? கடற்கரை ஆள் அரவம் இல்லாமல் மாற ஆரம்பித்தது. “இன்னிக்கு ஏன் இப்படி? ஓ! பக்கத்துல இருக்கற கோயில்ல உற்சவம்”ஆட்கள் எல்லாரும் அங்கே போக ஆரம்பித்துவிட்டார்கள்.
கடற்காற்று அவளுடைய தலைமுடியை வருடிவிட்டபோது அவளையும் அறியாமல் அவள் விஷ்ணுவை நினைத்துக் கொண்டாள். “தன் முடியழகை எப்போதும் கொண்டாடும் விஷ்ணு” அவன் சொல்லிச் சொல்லித்தான் தன் முடிக்கு இத்தனை அழகு இருக்கிறது என்று அவளுக்குத் தெரிந்தது.
அதற்குப் பிறகுதான் அவள் மற்றவர்கள் தன் முடியை எவ்வாறு கவனிக்கிறார்கள் என்பதைச் சிந்திக்க ஆரம்பித்தாள்.”நீ இல்லாமல் எனக்கு ஒரு வாழ்க்கை இல்ல”.ஒரு வருட காலம் நிறுத்தாமல் அவளை எப்போதும் சுற்றிசுற்றி வந்த விஷ்னுவின் வார்த்தைகள் அவை. ஜெர்மனிக்குப் போகும் செய்தியை வேலை நெருக்கடிக்கு இடையில்தான் அவன் சொன்னான்.
“நான் போயிட்டு அங்க செட்டில் ஆனப் பிறகு நம்ம கல்யாணம்” அவன் சொன்னதை அப்படியே நெஞ்சில் பதித்து வைத்துக் கொண்டாள். மூன்று மாதமான போது வாட்ஸ் ஆப்பில் அவன் அனுப்பிய செய்தியைப் பார்த்து தலை சுற்றியது. ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு நம்பமுடியாமல் மறுபடியும் அந்த செய்தியை வாசித்தாள்.
ஜெர்மனிக்குக் கூட்டிக்கொண்டு போன தம்பியுடைய சொந்தக்காரப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ள சம்மதிக்க வேண்டி வந்தது என்பதே செய்தி. “நீ என்ன மன்னிச்சுடு”அந்த அடிக்குறிப்பை வாசித்தபோது அவளுக்கு இதயம் நின்று போய்விடுவது போலத் தோன்றியது. செத்துப் போஇருந்தா என்ன என்று ஆத்மார்த்தமாக நினைத்த நிமிடமாக இருந்தது அது.
வாழ்க்கையில் இரண்டாவது ஆண் பிள்ளையோடும் துச்சம் தோன்றியது. எதனால் இவர்களுக்கு சூரியனாக ஆக முடியவில்லை? ஒன்று தப்பிப் போனால் மூன்று என்ற பழமொழி அவளை அலட்டியது. இதற்கு மேல் இனி இன்னொரு புருஷனின் காதல் தேர்வுக்கு அவள் தயாராக இல்லை. அதற்காக தன் உயிரையும் இதயத்தையும் வைத்து நீட்ட அவள் விரும்பவில்லை.
இந்தத் தீர்மானத்தில் அவள் உறுதியாக இருந்தாள். அதுவே அவளுடைய விருப்பமாகவும் இருந்தது. பிறகு அதற்காக வேண்டிய கடின பரிசோதனைகள். பெரும் முயற்சிகள். ஆபீசில் கூட வேலை பார்த்த பல ஆண்களும் காதலர் வேஷம் போட்டுக்கொண்டு அவளை வீழ்த்த படாதபாடுபட்டார்கள். யாரிடமும் எந்த ஆர்வத்தையும் காட்டாமல் அவள் நிரந்தரமாக ஒளிந்து விலகி மறைந்து கொண்டிருந்தாள்.
அதுவரை இல்லாத கண்டிப்பான சுபாவத்தை அணிந்து கொள்ள வேண்டி வந்ததையும் நினைத்துப் பார்த்தாள். கௌரவம் நிறைந்த அவளுடைய நடத்தையைப் பார்த்து கூட வேலை பார்த்தவர்கள் அவளை விட்டு விலகி நின்றார்கள். ஆசைபட்ட உயர்ந்த பதவியில் அமர்ந்த போதும் வேலையைத் தொடர்ந்தபோதும் அவள் தன்னை அவள் மாற்றிக் கொள்ளவில்லை.
அப்போதுதான் தான் தன் வாழ்க்கையை உண்மையாக அனுபவிக்க முடிந்தது என்று அவள் நினைத்தாள். அது ஒரு வகையான வெற்றி. பகை மீட்டல். “அக்கா. கடல வேணுமா?”. அந்தச் சிறுமியுடைய கேள்வி நந்தினியை கடற்கரைக்குத் திரும்பி கொண்டு வந்தது. “பத்து ரூபாதான் அக்கா. ஒரு பொட்டலம் வாங்கிக்க அக்கா”
நந்தினி அந்தச் சிறுமியைக் கவனித்தாள். ஒரு பன்னிரண்டு வயதுள்ள சிறுமி. எண்ணைத் தடவாத தாறுமாறாக பறந்து கொண்டிருந்த தலைமுடி. இருந்தாலும் அந்த முடிக்கு ஒரு தனி அழகு இருந்தது. நிறம் மங்கிப் போன பழைய ஆடை. அது அவளை விடஅதிக வயதுடையது. யாருடையதோ.
கடற்கரையில் தினமும் அடிக்கும் கொளுத்தும் வெய்யில் மொத்தமும் தலை மேல் விழுந்தது போல அவளுடைய நிறம் மங்கிப் போயிருந்தது. பாவம். இதெல்லாம் இருந்தாலும் அவளுக்கு முகத்தில் ஒரு தனி கலையும் அழகும் இருக்கிறது என்று நந்தினி உணர்ந்தாள். “உன்னோட வீடு எங்கம்மா இருக்கு?”
நந்தினி கேட்டதற்குப் பதில் சொல்ல முடியாமல் அவள் ஒரு நிமிடம் மௌனமாக நாக்கைக் கடித்துக் கொண்டாள். சிறிது நேரம் கழித்து லேசான பயத்தோடு சொன்னாள். “அதோ அங்க இருக்கற ஷெட்டுலதான் நான் தங்கியிருக்கேன்”. அவள் அந்த இடத்தை சுட்டிக் காட்டினாள்.
அங்கே தூரத்தில் நந்தினி அந்த ஷெட்டைப் பார்த்தாள். “அது வீடு இல்ல அக்கா. என்னோட அப்பா அம்மா யாருன்னு எனக்குத் தெரியாது”
“அப்ப மகளே நீ அங்க யாரு கூடதங்கியிருக்க?”. என்னவோ. என்னவென்று தெரியாத ஒரு பாச உணர்வு நந்தினிக்குத் தோன்றியது. அவள் மறுபடியும் ஒரு பயம் நிறைந்த கண்களோடு சுற்றிலும் பார்த்தாள்.
அவளை யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்ட பிறகு அந்த மண்ணில் முழங்காலிட்டு நந்தினியுடைய காதில் மட்டும் விழும்படி மெதுவாகச் சொன்னாள். “அக்கா. அந்த ஷெட்டுல எங்க கூட இருக்கறது எங்கள விட வயசுல பெரிய அண்ணன்ங்க. குழந்தையா இருந்தப்ப என்னை எங்கேர்ந்தோ கடத்திகிட்டு வந்துட்டாங்க.
நான் யாருன்னோ என்னப் பத்தியோ எதுவும் எனக்குத் தெரியாது அக்கா”. எங்கூட கொஞ்சம் பேரு இருக்காங்க. அவங்க எல்லாரயும் இது மாதிரி பிடிச்சுகிட்டு வந்தாங்க.” அவல் அழுதாள். கடல் அலைகள் பெரிதாக ஓசை எழுப்பின. அந்தச் சிறுமியுடைய வேதனையின் பிரதி பிம்பம் போல அந்த ஓசை கடல் வலியால் துடிதுடித்தது.
கடல் மீது பறந்த பறவைகள் சிறகடித்து கடலை ஆறுதல் படுத்துவதை நந்தினி பார்த்தாள். தன் மனதிலும் கடலின் வேதனையை நந்தினி அனுபவித்தாள். அமைதியில் இருந்து ஆர்பரித்து பொங்கி எழும் கடல் மனது நந்தினியில் உருவானது. “அக்கா. கொஞ்ச நேரத்துல அவங்க என்னை வித்துடுவாங்க. என் கூட இருந்த மூனு அக்காக்கள அவங்க நேத்து யாருக்கோ வித்துட்டாங்க”. தலையில் வந்து விழும் பலமான அடி போலதான் அந்தச் சிறுமியின் வார்த்தைகள் நந்தினியுடைய காதுகளில் வந்து விழுந்தது. அங்கே தூரத்தில் அவள் தங்கியிருந்த இடத்தையும் அதன் சுற்று வட்டாரத்தையும் நந்தினி கவனமாக ஆராய்ந்தாள்.
அந்தச் சிறுமியின் கையில் இருந்து ஒரு பொட்டலம் கடலை வாங்கி பத்து ரூபாய் கொடுத்தாள். “மகளே. அதோ அந்த சிவப்பு காரப் பாத்தியா? மகளே எதையும் கவனிக்காம அங்கே நடந்து போ. நான் இங்கேயிருந்து கதவத் திறந்துவிடறேன். பின்னால சீட்டுக்கு அடியிலப் போய் ஒளிஞ்சுக்க. நாம இங்கேர்ந்து தப்பிக்கலாம். வேகமாப் போ”
அந்தப் பெண்ணின் முகத்தில் சூரியன் பிரகாசித்தது. தூரத்தில் கடலுக்கு அடியில் அதன் எல்லையில் சூரியனுடைய வண்ணமயமான பிரகாசம் கடல் நீரிலும் அடிவானத்திலும் சாயங்கால ராகமாக சங்கீதம் பாடியது. அந்தச் சிறுமி “கடல… கடல…” என்று கூவியபடியே காருக்கு அருகில் நடந்தாள்.
காரின் மறைவை அடைந்த போது நந்தினி ரிமோட்டைப் பயன்படுத்தி கதவைத் திறந்தாள். எதுவும் நடக்காதது போல நந்தினி கடற்கரையில் இருந்து எழுந்து சூரியன் போல அந்தச் சிறுமியுடன் அவளும் தலைமறைவானாள். “அன்பு செலுத்தறதுக்கும் பகிர்ந்து கொள்றதுகும் என் கூட ஒரு பொண்ணு இருக்கா இப்ப! வாழ்க்கைக்கு முதல் முறையா ஒரு அர்த்தம் இருக்கறது போல தோனல்” வஞ்சகராக இருந்த புருஷன்களை பழிக்குப்பழி வாங்கியது போல ஒரு வெற்றி உணர்வோடு நந்தினி தன் பாதங்களை வலுவாக மண்ணில் ஊன்றிக் காரை இலட்சியமாக்கி நடந்தாள்.