பஸ்ஸில் இருந்து இறங்கி அப்புறமும் ஒன்றரை மைல் நடக்கவேண்டும். கால்களுக்கு அடியில் சக்கரம் வைத்து ஓடும் மனிதர்கள் வாழும் இந்த யுகத்தில் இப்படி ஒரு குக்கிராமத்தில் தன்னந்தனியாக வாழும் அவனுடன் எனக்குக் கோபம் வந்தது. ஒரு காலத்தில் தினமும் பதினெட்டு மணிநேரம் பயணம் செய்து கொண்டிருந்த பப்பு அண்ணன் இப்போது எதுக்காக இங்கே வாழவேண்டும்?
இங்கே இறங்காமல் நேராகப் போகலாம். ஆனால் ஏதோ ஒன்று இந்த ஏகாந்தத்தில் வாழும் மனிதனிடம் அவனைப் பிடித்து இழுக்கிறது. ஆறு மாதம் முன்பு இங்கே வந்த போது பப்புவுக்கும் தனக்கும் இடையில் நடந்த உரையாடல் ஞாபகத்துக்கு வந்தது. “இந்த கிஷ்கிந்தாவ்லேர்ந்து இடத்த மாத்துவீங்களா?”
பப்பு அண்ணன் உரக்கச் சிரித்தான். “இந்த வீட்டுக்குப் பொருத்தமான ஒரு பேரத்தான் சொல்லியிருக்க. ஆனா இந்த இடத்த விட்டு நான் போகற மாதிரி இல்ல. மனுஷங்களோட நடமாட்டம் போதாதுன்னு நினைக்கற இல்லயா? அது சரியா இருக்கலாம். முட்டி மோதிகிட்டு நடக்கற மாதிரி மனுஷங்களோட நெரிசல் இல்ல.
வாழ்க்கையே இல்லைன்னு கூட நீ சொல்லலாம். ஆனா இஞ்க இருக்கறவங்க ஒருத்தர ஒருத்தரு நல்லாத் தெரிஞ்சவங்க. கோபத்துலக் கைய நீட்டினா அடிக்க நினைச்சவனோட அந்த அடி விழும். பட்டணத்துல அப்படி உங்களால செய்யமுடியுமா?”
“ஆளுங்கள அடிக்கறதுக்கு வசதி இருக்குன்னுதான் இங்க வந்து குடியிருக்கியா?”. “அடிக்கறதுக்கும் அன்பு காட்டறதுக்கும் ஆள அடையாளம் தெரியணும் இல்லயா? என்னோட தம்பி கோபு இருக்கான் இல்லயா? பாம்பேயில அவனுக்கு அவனயே கண்டுபிடிக்க முடியாமப் போயிடும்.
தெரிஞ்சவங்க அவன பல தெருக்களிலயும் அலைஞ்சு திரிஞ்சு வீட்டுக்குக் கூட்டிகிட்டு வந்து விட்டுட்டுப் போவாங்க”. பெரிதாகச் சிரித்த போது வாழ்க்கையை இந்த மனிதன் இப்போது எவ்வளவு லாவகத்தோடு பார்க்கிறான் என்று நான் நினைத்தேன். அப்போது எனக்குள் சந்தோஷம் ஏற்பட்டதா என்று எனக்கே தெரியவில்லை.
“வாழ்க்கய இப்படி சின்ன சின்ன விஷயங்களுக்காக செலவழிக்கிறானே இவன்” என்று யோசித்தேன். “ஒரு ஏக்கரும் 83 செண்ட்டும் நெல் விளையற வயல் இருக்கு. இரண்டு ஏக்கர் அளவுக்கு நல்ல விளைச்சல் தர்ற நிலம் அது. கணக்கு காட்டறதுக்கும் லெவிய அளக்கறதுக்கும் எங்கயும் போகவேணாம்.
பம்ப் செட் கிடைச்சதுக்கு அப்புறம் ரெண்டு போகம் விவசாயம் செய்யறான். அத வச்சு மனைவி மகளோட சேந்து சாப்பிட்டு குடும்பத்த நடத்தறான். ஓலை வேய்ந்த ஒரு சின்ன வீடுதான் அது”. “இதக் காட்டேஜ்னு வேணும்னா சொல்லிக்கங்க. பட்டணத்துல பெரிய ஹோட்டலுங்கள்ல இந்த மாதிரி குடிச வீட்டக் கட்டி அதுல பெரியபெரிய ஆளுங்கள தங்கவைக்கறாங்க இல்லயா?
இந்த கிஷ்கிந்தாவும் அந்த மாதிரி ஒரு காட்டேஜ்னு நினைச்சுக்க. பதினஞ்சு பதினெட்டு நல்ல கோழிங்க இங்க இருக்கு. அழுகாத முட்டய உடச்சு ஆம்லெட் தயார் செஞ்சு கொடுக்கறேன். ரோஸ்ட் உண்டாக்கறது இல்ல. ரொட்டியில வெண்ண வச்சு சாப்பிடத் தரேன்.
ஆனா கான்ப்ளேக்ஸ் இல்ல. எப்படியிருந்தாலும் பழம் கிடைக்கும். மத்தியானம் வேணும்னா கோழி சூப் தயாராக்கலாம். சாப்பிடறப்ப விரிக்கறதுக்கு நாப்கின் இல்ல. ஆனாலும் மடியில வச்சுக்கறதுக்கு அழகான ஒரு துண்ட மடிச்சுத் தரேன். கத்தியும் முள்ளும் கிடையாது.
கூர்மையாக்கி வச்ச ஒரு ஈர்க்குச்சியயும் ஸ்பூனயும் வச்சு சாப்பிடலாம் இல்லயா? அப்படின்னா நீ எங்கயும் போகவேணாம்”. கடந்த காலம் முழுவதையும் பப்பு அண்ணன் மறந்து போயிருந்தான். அண்ணன் மீண்டும் ஒரு முறை சிரித்தான்.
சமூக அரசியல் அரங்குகளில் அண்ணன் யாராக இருந்தான்? “நான் இங்கயே இருக்கறதுனால யாருக்காச்சும் ஏதாச்சும் குறைவு ஏற்பட்டுச்சா? ஏதாச்சும் ஒரு தொழில செஞ்சுதான் மனுஷங்க வாழறாங்க? அவங்க அப்படி வாழறாங்க. நான் இப்படி வாழறேன். “சமூக அரசியல் காரியங்க எல்லாம் தொழில்தான்”
அண்ணன் அதற்குப் பதில் சொல்லவில்லை. சிரிக்கத்தான் செய்தான். “இன்னிக்குப் போகலயே?”. “இல்ல. போறேன்”. “சரி. நான் கொஞ்சம் முந்திரிப்பருப்பு எடுத்து வச்சிருக்கேன். அத உன்னோட பொண்ணுக்குக் கொண்டு போய்க் கொடு”. அவன் மனைவியை அழைத்தான்.
அக்கா முன்னால் வந்து நின்றபோதுஎனக்குள் ஏதோ ஒரு சங்கடம் தோன்றியது. அவர் அந்த முந்திரிப்பருப்பைக் கொண்டுவந்து தந்தபோது கண்ணீர் வழிந்த கண்களை மஏறைத்து வைக்க நான் முகத்தை எதிர்ப்பக்கம் திருப்பிக் கொண்டேன்.
“அக்காவோட வாழ்க்கை ஒருகாலத்துல எப்படி இருந்துச்சு?. பனியில விழுந்த பனித்துளி போல ஆயிடுச்சு அவங்களோட வாழ்க்கை. ஏராளமான பூ விரிச்ச மெத்தைங்க அவங்கள இரண்டு கை நீட்டி வரவேத்தது. அத்தனைக்கு நேரயும் ”த்தூ”ன்னு சொல்லி இந்த மனுஷன் பின்னால வாழ வந்தாங்க.
கைக்கு எட்டிய தூரத்தில் எல்லா வசதி வாய்ப்புகளும் இருந்தன. பை நிறையப் பணம். எல்லாம் போனது. “ஒரே ஒரு வெள்ளை நிறப் பட்டுப் புடவை வாங்கினது இப்பவும் ஞாபகத்துல இருக்கு. உங்கள யாரோ அடிச்சப்ப வந்த ரத்தத்தத் துடைக்க அத எடுத்தேன்.” ஒரு சமயம் அக்கா என்னிடம் சொன்னது இப்போது எனக்கு நினைவுக்கு வந்தது.
அக்கா வீட்டுலேர்ந்து ஆம்பளைங்க அடிக்கடி வந்து கூப்பிட்டாங்க. “நான் இங்க ஒரு மனுஷனோட வாழ வந்துட்டேன் வாழறேன்”னு சொல்லி அக்கா அவங்கள திருப்பி அனுப்பிட்டாங்க. “உனக்கு பணம் ஏதாச்சும் வேணுமா?”. “வேணாம்”. இத எல்லாத்தயும் கேட்டுகிட்டு இருந்த காலத்தப் பத்தி சரடுல தாலியக் கோத்துக் கட்டின அந்த கழுத்தப் பார்த்தப்ப எனக்கு ஞாபகம் வந்துச்சு”
“இப்பவும் ஆம்பளைங்க உதவத் தயாரா இருக்காங்க”. “அப்பறம் என்ன?”. நான் கேட்டேன். அக்கா அதற்கு பதில் சொல்லவில்லை. சிரித்தாள். “அவங்க எல்லாரும் இப்ப பெரிய காண்டிராக்டருங்க தம்பி. அதப் பத்தி நினைச்சாலே சந்தோஷம் வரும். அப்பறம். இப்ப எங்களுக்கு கஷ்டம்னு எதுவும் கிடையாது தம்பி.
எதுவும் வேண்டியதில்ல. எதுவும் இல்லைன்னு நினைக்கறது என் வீட்டுல ஆம்பளைங்களோட தப்பான நினைப்பாக்கும்”. வளரவேண்டும் என்ற ஆசை எல்லா மனிதர்களுக்கும் உள்ளதுதானே? தியாகி என்ற பட்டத்தை மட்டும் வெறுமனே வைத்துக்கொண்டு வாழ்வது ஒருவிதத்தில் கபட நாடகம் இல்லையா?
“வளர்றதுக்குன்னு வாழ்க்கையில ஒரு கட்டம் இருக்கறது மாதிரி வாழறதுக்குன்னும் ஒரு கட்டம் இருக்கு இல்லயா? கொலம்பஸும் கூட்டுக் காரங்கலும் ரொம்பக் கஷ்டப்பட்டு அமெரிக்காவக் கண்டுபிடிச்சாங்கங்கறதுக்காக அமெரிக்காக்காரங்க எல்லாரும் இப்பவும் கடல்ல கிடந்து துன்பத்த அனுபவிக்கணுமா என்ன?”
ஒரு நியாயத்தைக் கண்டுபிடித்ததாக எனக்குத் தோன்றியது. இந்தத் தடவை என்ன ஆனாலும் பப்பு அண்ணங்கிட்ட பத்து காரியங்களப் பத்தி சொல்லணும்னு நினைச்சுகிட்டு இருந்தேன். படிகள ஏறும்போதே சிந்தனையில அந்த விஷயங்கள் என்னோட மனசுல பிறந்தது”
“ஊர்லேர்ந்தா?”. குரலைக் கேட்டுத் திரும்பிய போது தலையில் கூடையோடு நின்று கொண்டிருந்த அக்காவைப் பார்த்தேன். “இதுல இருக்கற உரத்த , வயல்ல கொட்டிட்டு வரேன். அவரு உள்ள இருக்காரு. போங்க தம்பி”. உள்ளே போனேன். அண்ணனைப் பார்த்தேன். “உனக்கு இளநீர் வேணுமா? காபி வேணுமா?”
இளநீரைக் குடித்து முடித்தபோது அக்கா கேட்டார்.”பழுத்த பப்பாளிப் பழம்னா அந்த காலத்துல உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். இன்னிக்கு எப்படி?”. நான் பதில் சொல்லவில்லை. அக்கா பப்பாளியைக் கொண்டு வந்து தந்தார். சாப்பிட்டேன். மத்தியானம் சாப்பிட்டு முடித்தேன். இளைப்பாறும்போது கேட்டேன்.
“அண்ணன் எதுக்காக இப்படி வாழறீங்க?”. “நல்லா இருக்கணும்ங்கறதுக்காக”. சிறிது நேரம் அண்ணன் என் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு சிரித்தான். “பூமியோட இந்த பாகத்துக்குன்னு ஏதாச்சும் பெரிய சாபம் இருக்கா? நான் இங்க இருந்தா தம்பி அடிக்கடி இங்க வருவான்.
இது மனுஷங்க வாழற இடமுனு நீ கண்டுபிடிச்சுக்க. அதுவும் நல்லதுதானே?”. பப்பு அண்ணணுக்கு எவ்வளவோ பெரிய இடத்துக்குப் போய்ச்சேர முடியும். மனதிற்குள் நான் நினைத்ததை பப்பு அண்ணந்தான் முழுமைப்படுத்தினான். “நான் இப்ப இருக்கற இடம் ரொம்ப வசதியானது தம்பி.
நான் இப்ப ஒரு வேலயச் செய்யறேன். ஒரே ஒரு வேலதான் செய்யறேன். நீ வேற ஒரு வேலய செய்யற. அதுவும் நல்லதுதான். இதுவும் நல்லதுதான். நீ ஓய்வெடு. நான் வயலுக்கு போயிட்டு சீக்கிரமா வந்துடறேன். அவ அங்க காத்துகிட்டு இருப்பா”. அண்ணன் அக்காவை நினைத்துத்தான் சொல்கிறான்.
அவன் வேலியில் வளர்ந்திருந்த செடிகளைப் பிடித்துக் கொண்டு வயலுக்குப் போகும் வரப்பில் இறங்கி நடக்கும்போது என் மனது நிறைந்திருந்தது. கேள்விகள் இல்லாமல் இல்லை. ஆனால், கூடுதல் பதில்கள் வேண்டும் என்று மனது சொன்னது.