வெய்யில் கொளுத்திக் கொண்டிருந்த நட்ட நடு மத்தியான நேரத்தில் ஒரு பையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு சாலையின் ஓரத்தில் ஒரு பெண்மணி நடந்து கொண்டிருந்தாள். முன்னால் இருந்த பாதையைத் தவிர, வேறு எதையும் அவள் பார்க்கவில்லை. வாகனங்களின் சத்தம் அவள் காதுகளுக்கு கேட்கவில்லை. கனத்த சிந்தனையுடன் நடந்தாள்.
கொஞ்ச நேரம் அவளைப் பார்த்தால் யாருக்கும் பரிவு ஏற்படும். அந்த அளவுக்கு அவளுடைய முகம் பலவீனமாக இருந்தது. கொளுத்தும் வெய்யிலில் இருந்து தற்காத்துக் கொள்ள அவளிடம் குடை எதுவும் இல்லை. நடைபாதை ஓரத்தில் போடப்பட்டு உடைந்திருந்த ஸ்லாப் கற்களின் சூட்டைத் தாங்கிக் கொள்ள அவளுடைய தேய்ந்த செருப்புகள் மட்டுமே உதவிக்கு வந்தன.
வெயில் அதிகமாக இருந்ததால் பாதசாரிகள் மிகக் குறைவு. குடை வைத்திருந்தவர்கள் அதன் துணையுடன் வெய்யிலை ஒரு மாதிரியாகச் சமாளித்தார்கள். திடீரென்று நீண்ட போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒரு டாங்கர் லாரியின் முன்னால் இருந்த கயிறு அறுந்து அது நடுவழியில் நின்று கொண்டிருந்தது. ஒரு பக்கமாக ஒரு வாகனம் மட்டும் போக வழி இருந்தது.
நெரிசலைக் கட்டுப்படுத்த ஒரு போலீஸ்காரர் கொளுத்தும் வெய்யிலைச் சகித்துக் கொண்டு சாலையில்ல் நின்று கொண்டிருந்தார். நீண்ட வரிசையில் ஊர்ந்து கொண்டிருந்த வாகனங்களின் அணிவகுப்பில் நவ நாகரீகக் காரின் உள்ளே குளிர்ச்சியில் பின் இருக்கையில் ஹோட்டல் முதலாளி ரத்னாகரும் அவனுடைய மனைவி கீர்த்தியும் சுகமாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.
முன்னால் இருந்த வாகன நெரிசலைப் பார்த்துவிட்டு அந்த ஆள் யாரையோ சபித்துக் கொண்டிருந்தான். நேரத்துக்கு அங்கே போய்ச் சேரமுடியாது என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டிருந்தான். போனில் மூழ்கியிருந்த மனைவி கீர்த்திக்கு இது எதுவும் தெரியாது. இதற்கு நடுவில்தான் காரோடு சேர்ந்து நடைபாதையில் நடந்து போய்க் கொண்டிருந்த அந்தப் பெண்மனியை அவன் பார்த்தான்.
கீர்த்தியின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவன் சொன்னான். “அந்தப் பொம்பளைக்கு என்ன பைத்தியமா? இந்தக் கொளுத்தற வெய்யில்ல குடை கூட இல்லாம நடந்து போய்கிட்டு இருக்கா?. வெய்யில் குறஞ்ச பிறகு போனாப் போதாதா? அந்த அளவுக்கு அத்தியாவசியமா இருந்தா ஆட்டோ ரிக்ஷாவுல வரணும்”
லேசான வெறும் ஒரு முனகலை மட்டும் பதிலாகத் தந்து விட்டு கீர்த்தி தன் வேலையில் தீவிரமாக இருந்தாள். “இது ஒன்னும் கவனிக்க வேண்டிய அளவுக்கு முக்கியமானதில்ல” என்கிற பாவம் அவளுடைய முகத்தில் தெரிந்தது. ஆனால் முதலாளியின் பேச்சைக் கேட்டு டிரைவர் சானுவுக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்தது.
இரண்டு பேரும் பாவப்பட்டவர்கள். ஒரு வசதியும் இல்லாதவர்கள். “எதனால தீ மாதிரி கொளுத்தற இந்த வெய்யில்ல அந்த அம்மா நடந்து போறாங்கன்னு சிந்திக்கறது இல்ல. ஆதரவோடு பாக்கறதும் இல்ல”
“இன்னிக்கு வேலைக்கு வரமுடியாது. விடுமுறை தரணும்”னு பல தடவை முதலாளியிடம் கேட்டது அவன் நினைவுக்கு வந்தது.
அவனுடைய மகன் ஆஸ்பத்திரியில் இருக்கிறான். கடுமையான காய்ச்சல். சூடு அதிகமாகி மயக்கம் வந்தபோதுதான் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கொண்டு போனான். அவனுக்குத் துணையாக இருக்க பத்து வயதுக்காரி மகள் மட்டும்தான் இருந்தாள். மனைவி சமையலறையில் இருந்து வேலை செய்தால்தான் முடியும்.
கஞ்சி போட்டு குழந்தைகளுக்கு கொண்டு போய்க் கொடுக்க வேண்டும். உதவிக்கு வேறு யாரும் இல்லை. “இன்னொரு டிரைவர ஏற்பாடு செஞ்சு தரேன்னு” சொன்னான்.
உடனே பதில் வந்தது. “நீதான் வரணும். மத்த ஆளுங்க சரிப்பட்டு வராது”
“மகன் ஆஸ்பத்திரியில இருக்கான்” சானு சொல்லிப் பார்த்தான். அப்படியாவது அந்த ஆளுடைய மனது மாறும் என்று நினைத்தான்.
ஆனால் அதற்கு அந்த ஆள் “அதுக்கு உன்னோட மனைவி இருக்கா இல்லயா? எல்லாத்தயும் அவ பாத்துப்பா” என்று பதில் சொன்னான்.
“அவ ஆஸ்பத்திரியில இருந்தா ஆகாரத்தை யாரு தயார் செஞ்சுகொடுப்பாங்க” என்று அவன் அந்த ஆளைத் திரும்பிக் கேட்கவில்லை. பிடிக்காத எதைச் சொன்னாலும் அந்த ஆளுக்கு கோபம் பொத்துக் கொண்டு வரும்.
அப்போது எது சொன்னாலும் அந்த ஆளின் காதில் விழாது. எர்ணாகுளம் பயணம் ஒரு மணிக்கு என்று சொல்லப்பட்டிருந்தது. காலையில் ஆஸ்பத்திரிக்குப் போகத் தயாராகிக் கொண்டிருந்த போதுதான் போன் வந்தது. “அத்தியாவசியமா கொல்லத்துக்கு போகணும். அதுக்கப்பறம்தான் எர்ணாகுளத்துக்கு”. கையாலாகாத்தனத்தின் ஆழத்தை கண்டறிந்த நிமிடமாக இருந்தது அது.
கொல்லத்துக்குப் போய்விட்டு திரும்பி வந்தபோதே தாமதமாகிவிட்டது. வேலைக்காரி பரிமாறிய சாப்பாட்டைச் சாப்பிட விருப்பமில்லை. மனைவி மற்றும் குழந்தைகளின் நிலையை நினைத்தபோது சாப்பாடு இறங்கவில்லை. மன நிலை சரியில்லாதபோது எப்படிச் சாப்பிடுவது?
வேலைக்காரி பார்க்காத போது, சாப்பாட்டைக் குப்பையில் கொட்டினான். முதலாளி கொடுக்கும் சிறிய சம்பளம் மட்டும்தான் வருமானத்திற்கு உள்ள ஒரே வழி. இன்றே ஐநூறு ரூபாய் கடன் வாங்கவேண்டி வந்தது. ரூபாயை ஆஸ்பத்திரியில் கொடுக்கவேண்டும். வேலையை விட்டுவிட்டால் மொத்தக் குடும்பமும் பட்டினியில் கிடக்கும்.
அதை நினைத்தே அவன் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டிருந்தான். சாலையில் கால்நடையாக நடந்த பெண்மணி ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தாள். அவன் பட்டென்று தலையில் அடித்துக்கொண்டு பின்னால் இருந்தவர்களின் கவனத்தை ஈர்க்கும்படி சொன்னான். “அந்தப் பெண்மணி ஆஸ்பத்திரிக்கு போறாங்க. அவங்களுக்கு வேண்டியவங்க யாராச்சும் அங்க அட்மிட் ஆகியிருப்பாங்க. ஆகாரம் கொடுக்கத்தான் இந்தப் பெண்மனி கொளுத்தற வெய்யில்ல நடந்து வந்திருக்காங்க”
இதை கேட்ட முதலாளி எதிர் கேள்வி கேட்டான். “ஒரு குடையயாச்சும் எடுத்துட்டு வரக்கூடாதா?”
“நல்ல குடை இல்லாம இருக்கலாம்”. சானு பதில் சொன்னபோது “ஒரு குடை கூட இல்லாத ஆளுங்க இந்த உலகத்துல இருப்பாங்களா?” முதலாளி கேட்டான். அவனிடம் இருந்து. பரிகாசச் சிரிப்பு பொங்கி எழுந்தது.
சானு பதில் சொல்லவில்லை. லாரியைக் கடந்து கார் முன்னால் போனது. லேசாக இடது பக்கம் திருப்பிக் காரை நிறுத்தி அவன் சொன்னான். “முதலாளி. ஒரு அஞ்சு நிமிஷம். ஆஸ்பத்திரிக்குப் போய் பையனப் பாத்துட்டு வரேன். ரூபாயக் கொடுக்கணும். உடனே வரேன்”. அந்த ஆளுடைய முகம் சிவந்தது. கோபம் அதிகமானது.
உரத்தச் சத்தத்துடன் சொன்னான். “இதுக்கு மேலயும் லேட்டாக்கணுங்கறதுதான் உன்னோட முடிவா?” வண்டிய ஓட்டு”. சானுவின் குரல் உயர்ந்தது.
“ரூபாயக் கொடுக்கணும். கொடுக்கலைன்னா…?”. அந்த வார்த்தையைப் பூர்த்தி செய்ய அந்த ஆள் அனுமதிக்கவில்லை.
அதற்கும் முன்பே கேட்டான். “நாளைக்குக் கொடுத்துக்கலாம்”. உறுதியாகச் சொன்னான்.
சானுவுக்கு அழுகை வரவில்லை. அவ்வளவுதான். ஆக்சிலேட்டரில் விரல்களை அழுத்தினான். மாதத்தில் இரண்டு தடவை எர்ணாகுளம் பயணம். அங்கே சொந்தமாக இன்னொரு ஹோட்டல் இருக்கிறது. இன்று அங்கே போய் இருந்துவிட்டு நாளைக்குத் திரும்பி வருவதாகத்தான் திட்டம். கொஞ்சம் தாமதமாகப் போனால் எதுவும் ஆகிவிடாது.
இந்த ஆள் சொல்வதைப் பார்த்தால் நாளைக்குத்தான் ஆஸ்பத்திரிக்குப் போக முடியும் போலிருக்கிறது! வேலை பெரிதா? மகன் பெரிதா? ஒரு நிமிடம் யோசித்தான். காரை எங்கேயாவது இடித்து ஏற்றினால் என்ன என்று கூட தோன்றியது. அப்படி செய்தால் ஒன்று யாராவது செத்துப் போவார்கள். இல்லையென்றால் மோசமான காயம் ஏற்படும். மூன்று பேரில் யாருக்கும் இது சம்பவிக்கலாம்.
தற்கொலை செய்துகொள்வதற்கு சமமானது அது. இறந்து போவது தானாக இருந்தால் மனைவியும் குழந்தைகளும் அல்லவா அனாதையாகிவிடுவார்கள் என்ற சிந்தனை அவனை நடுங்கவைத்தது. “எலியை விரட்ட வீட்டை கொளுத்தியது மாதிரி கதை” என்ற பழமொழி அவன் ஞாபகத்துக்கு வந்தது. கார் ஐந்து கிலோமீட்டர் ஓடி முடித்தது.
அப்போது பின்பக்கத்தில் இருந்து முதலாளியின் சத்தம் கேட்டது. “ஏதாச்சும் பேக்கரிக்கு முன்னால கார நிறுத்து. ஒரு ஜூஸ் குடிச்சுட்டுப் போகலாம்”. அதுவரை போனில் மூழ்கியிருந்த கீர்த்தி தலையை நிமிர்த்திச் சொன்னாள். “பழங்களயும் வாங்கணும்”. சானுவுடைய கால் ப்ரேக்கை அழுத்தியது. வேகம் குறைந்தது.
ஜூஸ் வாங்கிக் குடிக்கப் போனால் குறைந்தது பதினைந்து நிமிடமாவது ஆகும். அப்புறம் பழக்கடையில் அரை மணி நேரமாவது ஆகும். அவனால் பொங்கி வந்த கோபத்தைச் சகிக்க முடியவில்லை. வரப்போகும் விளைவுகளைப் பற்றி அவன் சிந்திக்கவில்லை. முதலாளியுடைய சம்பளத்தை விடப் பெரியது பையந்தான். அவனுக்கு மகன் என்றால் உயிர்.
எதையும் எதிர்கொள்ளும் மன வலிமை அவனுக்கு எங்கிருந்தோ பீறிட்டு வந்தது. காரைத் திருப்பி வந்த வழியில் செலுத்தினான். பின்பக்கம் இருந்து உரத்த சத்தத்தில் முதலாளியின் குரலில் கம்பீரம் கலந்திருந்தது. “என்ன செய்யற நீ? வீட்டுக்குப் போறியா? மரியாதையா எர்ணாகுளத்துக்கு வண்டிய விடு. சொல்லிட்டேன்”
அந்த மிரட்டலை சானு காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அமைதியை வரவழைத்துக் கொண்டு சொன்னான். “ஆஸ்பத்திரிக்குப் போய் பையனப் பாக்கணும். ரூபாயக் கொடுக்கணும். அங்கயும் ஜூஸ் கடையும் பழக்கடையும் இருக்கு”. அத முடிச்சுட்டு எர்ணாகுளத்துக்குப் போகலாம்”. அதற்குப் பிறகு முதலாளி சொன்னது எதையும் அவன் கேட்கவில்லை.
உடனே ஆஸ்பத்திரிக்குப் போவதற்காகக் காரின் வேகத்தை அதிகரித்தான். ஆஸ்பத்திரிக்கு அருகில் இருந்த ஒரு பேக்கரிக்குப் பக்கத்தில் காரை நிறுத்தி அவன் சொன்னான். “அந்தக் கடையில ஜூஸ் கிடைக்கும். பக்கத்திலயே பழக்கடையும் இருக்கு”. பிறகு ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தான். பையனைப் பார்த்தான். ரூபாயைக் கொடுத்தான்.
பையனுக்குப் பரவாயில்லை. சாயங்காலம் வீட்டுக்குப் போய்விடலாம் என்று சொல்லியிருந்தார்கள். இதற்கெல்லாம் மொத்தமாக ஆறு நிமிடம் மட்டுமே ஆனது. வேகமாக அவன் திரும்பி வந்தான். இரண்டு பேரும் பேக்கரிக்குப் போகவில்லை என்பதை அவன் உணர்ந்தான். காருக்குள்ளேயே இருந்தார்கள். காரைத் திருப்ப ஆரம்பித்த போது பின்னால் இருந்து கம்பீரமான சத்தம் உயர்ந்தது.
“வீட்டுக்குப் போ!” ப்ரேக்கும் ஸ்டியரிங்கும் தன் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்பதை முதலாளி உணர்ந்து கொண்டதாக சானுவுக்குத் தோன்றியது. வீட்டுக்குப் போய் சாவியைக் கொடுத்துவிட்டு நேராக ஆஸ்பத்திரிக்குப் போனான்.
“இனிமேல் என்ன?” என்று அவன் யோசிக்கவில்லை. மனது முழுவதும் ஆஸ்பத்திரியும் மகனும்தான் இருந்தார்கள்.
உயரங்களை மட்டுமே பார்த்துக் கொண்டு வாழும் அவர்களிடம் எதுவும் சொல்ல அவனுக்குத் தோன்றவில்லை.