விடிகாலைப் பொழுதின் வரவிற்காகக் காத்திருக்கும் கபிலவஸ்து. நிலவின் ஒளியில் குளித்து நிற்கும் மாட மாளிகைகள். ராஜ வீதி ஏறக்குறைய நிசப்தமாக இருந்தது. அது நள்ளிரவைத் தாண்டிய பொழுதாக இருக்கவேண்டும். சில்லு வண்டுகளின் ரீங்கார சங்கீதத்தையும் காவல்காரர்களின் குதிரைக் குளம்பொலிகளின் ஓசையையும் தவிர வேறெதுவும் கேட்கவில்லை.
நடுநடுவில் ராப்பாடிப் பறவைகளின் குரல் ஒலிகள். ஊரின் எல்லா மாடமாளிகைகளுக்கும் சிகரம் வைத்தாற்போல சித்தார்த்தனின் மகாராஜாவின் அரண்மனை. அந்தப்புரத்தின் ஒரு அறையில் எரிந்து கொண்டிருந்த தீபத்தின் ஒளி இன்னமும் கண் மூடி உறங்காமல் இருந்தது. அணைய ஆரம்பிக்கும் தீபத்தின் திரியை உற்றுப் பார்த்துக் கொண்டு எரியும் மனதுடன் அவள்.. யசோதரா!
ஆசைகள் உயிரற்றுப் போன கண்களில் உணர்வுகளற்ற நிலைக்குப் பதில் அடங்காத மனதின் ஆர்பரிக்கும் எண்ண அலைகளை அந்தக் கண்களில் பொங்கி வழிந்தன. “ஆலமரத்தடியில் அவர்தான் வந்திருக்கிறார்! பார்க்காமல் போய்விடுவாரா? சிந்தனைகள் மனதுடன் போர் புரிந்தன”. பட்டு மெத்தையில் ஏதோ அழகான கனவின் அருளால் புன்ன்னகை மாயாத முகத்தோடு ராகுலன்.
“தூங்கு. நீ தூங்கு. நாசமாய்ப் போன இந்த உலகத்தயும் அதோட சட்டதிட்டங்களயும் பத்தி உனக்கு ஒன்னும் தெரியாது இல்லயா? நட்சத்திரங்ககளயும் பட்டாம்பூச்சிகளயும் பத்தி மட்டும்தானே உனக்க்குத் தெரியும்?”. மறுபடியும் ஒரு தாயின் மனதில் இருந்து ஒரு பெண்ணின் மனதிற்கு அவள் மாறினாள். “வேணாம். எதுக்காக நான் போகணும்? என்னோட பெண்மைய தயவு தாட்சண்யம் இல்லாம புறக்கணிச்சு வீட்ட விட்டு போன அந்த மனுஷனுக்கு முன்னால எதுக்காக நான் போகணும்?
நான் அவர எதுக்காகப் போய்ப் பாக்கணும்? நான் எதுக்காக அடிபணிஞ்சு போகணும்”. மனது வாதப் பிரதிவாதங்களில் மூழ்கியது. “இல்ல… இல்ல… போகணும். போய்ப் பாக்கணும். அவரு என்னைப் பாக்கற்றப்பவாச்சும் நான் இன்னும் உசிரோடதான் இருக்கறேன்னு தெரிஞ்சுக்கணும். வாய்ப்பு கிடைச்சா ஒரு கேள்வி கேக்கணும்?
இப்படி எதுக்காக வீட்ட விட்டு ஓடினீங்கன்னு கேக்கணும். எந்த உலகத்துல இருக்கற கயாவுல அவருக்கு ஞானோதயம் ஏற்பட்டுச்சு? குடும்ப வாழ்க்கை முடிஞ்சுதானே சந்நியாசம்? இது தெரியாமப் போயிடுச்சா அந்த உலக மகா குருவுக்கு? அவனவனோட பொறுப்புகள்ல இருந்து ஓடிப் போறவனுக்கா சந்நியாசம்?
நரைச்சுப் போன முடியும் நோயயும் மரணத்தயும் பாத்துப் பயந்து போனவருதானே அவர்? அவரோட இந்தப் பீதி என்னையயும் மகனயும் ஆக்ரமிச்சுடுமோன்னு பயந்து போயிட்டாரு போல இருக்கு. இதயெல்லாம் எதுக்கறதுக்கான ஆயுதத்த தேடறதுக்குதான் இந்த சந்நியாசமும் யாத்திரையும்னு நியாயம் சொல்லிக்கறாரு. தன்னோட முடிவ எவ்வளவு அழகா நியாயப்படுத்தறாரு? கடவுள் விதிக்கற சுக துக்கங்கள்ல சஞ்சரிச்சு மோட்சத்த அடையறதுக்குப் பதிலா எல்லாத்தயும் விட்டெறிஞ்சுட்டுப் போகணுமா என்ன?
* என்னையும் மகனையும் காலப் பிரயாணங்கள்லேர்ந்து அவரால காப்பாத்த முடிஞ்சதா? அப்பறம் எதுக்காக இதெல்லாம்? மகானான வருகிட்ட கேக்கறது எனக்கு ஒரு கேள்வி இருக்கு. சந்நியாசியாப் போகப்போற ஒரு வாழ்க்கய திருத்தறத்துக்கு என்னொட வாழ்க்கைய எதுக்காகப் பலியா ஆக்கினீங்க? அவரால் பதில் சொல்ல முடியாது.
* என்னோட பார்வயச் சகிக்க முடியாம அவர் எப்பவும் ஒதுங்கிப் போறதுக்கு மனசுலேர்ந்து எழும்பற இந்தக் கேள்வியப் பாத்துத்தானே?சமூகத்துகிட்ட கேக்கறதுக்கு எனக்குக் கேள்விங்க இருக்கு. ஒரு காலத்துலச் சமூகத்து மேல எனக்கு மதிப்பு இருந்துச்சு. தோத்துப் போகமாட்டேன் நான். விதியும் பதியும் ஏற்படுத்தின பெரும்பள்ளத்துல நான் இன்னும் விழல. விழமாட்டேன்.
* ராகுலங்கற என்னோட மகனப் பத்தி பெருமிதத்தோட தலைய உசத்தி சொல்றதுக்காக நான் இன்னும் உசிரோட இருக்கேன்”. இரவின் பயண மொழியைச் சிந்தனைகள் அவளுடைய காதுகளுக்குக் கொண்டு போய்ச் சேர்க்கவில்லை. அறிவின் முதல் கீற்றுகள் வெளிச்சம் தரும் போது ராகுலனுடைய கொஞ்சு மொழிகளைக் கேட்டுவிட்டுச் சிந்தனைகளில் இருந்து விழித்தெழுந்து உறுதியான முடிவுகளுடன் அவள் காலைப்பொழுதை தரிசிப்பதற்காக நடந்தாள்.
* வாழ்க்கை என்னும் புத்தகத்தில் மேலும் ஒரு நாள் கடந்து போனது. ரதத்தில் ஏறும் போதும் மனது அமைதியாக இருந்தது. ராஜ வீதிகளின் நெரிசல்களில் இருந்து நகர்ந்து அதோ பாதையோர ஆல மரத்தின் அடியில் அவர்! ரதத்தில் இருந்து இறங்கும் போது மனம் வாடிப் போயிருந்தது. காயங்கள் இருந்தன.
* ராகுலனின் கை அவளுடையக் கையைப் பிடித்து இறுக்கியது. சுற்று முற்றும் தென்பட்ட காட்சிகளைப் பார்த்துக் கொண்டே நடந்த அவன் அம்மாவின் முக பாவம் மாறியதைப் பார்த்து லேசாக ஆச்சரியப்பட்டிருப்பான். எதையும் கவனிக்க அவளுக்குத் தோன்றவில்லை. திடமாக காலடிகளை எடுத்து வைத்து நடந்தாள்.
* அவரைச் சுற்றி மக்கள் கூட்டம் எதுவும் இல்லை. தங்ளுடைய மன்னனை மக்கள் மறந்து போய்விட்டார்கள் போலிருக்கிறது. ஓ! இவர் மன்னன் இல்லையே. புத்த பகவான் அல்லவா? எல்லோரும் சொன்னது சரிதான். ஆழ்ந்த ஒரு அமைதி அந்த முகத்தில் தவழ்ந்தது. வார்த்தைகளும் இந்த அமைதியின் ஒரு அம்சமா?
* அந்தக் கண்ணிமைகளின் ஓரத்தில் நஷ்ட உணர்வின் ஒரு துளி எங்கேயாவது தென்படுகிறதா? அதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அப்புறம் இந்த உலகக் குருவுக்கு ஞாபகப்படுத்த வேண்டும். உலக மகானின் கண்களில் இருந்து நான் எங்கேயும் ஓடிப் போகவில்லை என்பதை அவருக்கு உணர்த்த வேண்டும்.
* நடையின் வேகம் அதிகரிப்பதை அவளுக்குத் தெரியவில்லை. உலகத் தத்துவங்களையும் மகத்துவம் வாய்ந்த பொன்மொழிகளையும் ஒரு பக்கம் தள்ளி வைத்துவிட்டு மனிதக் குலத்திற்காக மன அழுக்குகளைக் கழுவிச் சுத்தப்படுத்த முயலும் அந்த மகானுக்கு முன்னால் ஒரு நிறைந்த தீபம் போல அவள் ஜொலித்தாள்.
* ஒரு நிமிடம்! கண்கள் பரஸ்பரம் கேள்வி கேட்பதற்கும் விடை காண்பதற்கும் ஒரு வாய்ப்பு? பதறும் மனதின் கேள்விகளுக்குப் பதில் தெரியாமல் ராகுலனுடைய கையைப் பிடித்து அவள் திரும்ப நடந்தாள்.மௌனம் வாய் ஜாலம் பேசும் நிமிடங்களில் தான் விட்டுக்கொடுத்த உலக மகா குருவை பின்னால் விட்டுவிட்டு அவள் முன்னோக்கி நடந்தாள்.
* அவளுடைய மனதில் ஒரு நிம்மதி ஏற்பட்டிருந்தது. உலகத்தையே அடக்கிய சந்தோஷம். அந்த ஒரு கண நேரப் பொழுதுக்கு ஒரு தனி அழகு இருக்கிறது என்பதை அவள் உணர்ந்தாள். ஆனால்… கேள்விகள் பொழிந்த அவள் மனதில் “தயவத்துக்கு துல்லியமானவர் என்று வாழ்த்தற புத்தர் இருக்காரா?
* எனக்கு உள்ள இருக்கற கேள்விங்களுக்கு பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்” மனதுக்குள் எல்லாவற்றையும் எண்களைக் குறித்து மனப்பாடம் செய்த பிறகு ராகுலனை மார்போடு அணைத்தபடி அவள் அன்று சுகமாகத் தூங்கினாள்.
பகலவன் வரவு அறிவிப்பதற்கு முன்பே அவள் எழுந்து காத்துக் கொண்டிருந்தாள்.
* “இன்னிக்கு என்னோட கேள்விங்களுக்கு எல்லாம் பதில் கிடைச்சே ஆகணும். விதியோட பரீட்சைங்களப் பாத்துப் பயந்து போன சித்தார்த்தனா ஜெயிச்சாரா இல்ல அதயெல்லாம் தைரியத்தோட சந்திச்ச நான் ஜெயிச்சேனா? காத்திருப்புக்கு முடிவை அறிவித்து அந்தப்புரத்துக்கு வெளியில் ஆரவாரங்கள் கேட்டன.
* “புத்தம் சரணம் கச்சாமி… சங்கம் சரணம் கச்சாமி… தருமம் சரணம் கச்சாமி… அவளுடைய மனதிற்குள்ளும் பெரும் பறை முழ்ங்கியது. அவர் வருகிறார்! தனக்கு முன்னால் நிற்கும் அந்த அமைதியான முகத்தைப் பார்க்க அவளால் முடியவில்லை. உதிர்ந்து விழுந்த கண்ணீரால் அவள் அந்த பாதங்களைக் கழுவினாள்.
* பாதங்களில் இருந்து அவளைப் பிடித்து எழவைத்து நெற்றியில் கைகளை வைத்து அனுக்கிரகம் செய்து ஸ்ரீபுத்தன் நடந்து அகன்றார். “பகவானே!” என்ற அலறலோடு அவள் சிலை போல நின்றாள். கண்ணீர் பல்கிப் பெருகி மறைத்த கண்களை அவள் திறந்தபோது, அவர் தொலைவில் நடந்து மறைந்து போயிருந்தார்.
* “நான் அழுதிருக்கேன். தன்னைத்தானே சுயமா ஜெயிச்சுட்டதா அகங்காரம் பிடிச்சு அலைஞ்ச நான் தோத்துப் போயிட்டேனா? வெறும் ஒரு பெண்ணாப் போயிட்டேனா நான் ஒரு நிமிஷத்துல?”. அவளுடைய சிந்தனைகளை முறித்து அதோ அங்கே தூரத்தில் மறையும் அந்தத் துறவி ஒரு முறை திரும்பிப் பார்த்தார். அவள் கண்களில் பிரகாசம் ஜொலித்தது.
* “இல்ல. நான் தோத்துப் போகல. பகவானேன்னு நான் கூப்பிட்ட குரலக் கேட்டு அந்த மனது பதறிப் போய்விட்டது. என்னோட குரலக் கேக்கணும்னு அந்த மனசு எதிர்பார்த்துக் காத்துகிட்டிருக்கணும். என்னோட நாக்கிலேர்ந்து “சித்தா த்த குமாரா”ங்கற குரலக் கேக்க அந்த மனசு ஏங்கிப் போயிருக்கணும். நான் தோத்துப் போகல”. அவளையும் அறியாமல் அவளுடைய உதடுகள் அந்த வார்த்தைகளை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தது”
* “மார்போடு சேர்த்துப் பிடித்திருந்த புத்தகம் கையில் இருந்து நழுவி விழுந்தது அவளுக்குத் தெரியவில்லை. குமாரன் ஆசான் எழுதிய “புத்த சரிதம்” என்ற புத்தகம்தான் நழுவி விழுந்தது. சுவரில் கடிகாரம் ராத்திரியின் கடைசி நாழிகைகளை அறிவித்து மணி அடித்து ஓய்ந்ததும் .அவளுக்குத் தெரியவில்லை. திறந்து வைத்திருந்த ஜன்னல் வழியாக ஒரு குளிர்ந்த காற்று தலையை வருடிவிட்டுக் கடந்து போனது.
* உதடுகள் அப்போதும் சத்தமில்லாமல் அசைந்துகொண்டே இருந்தன. “நான் தோத்துப் போகல”
- குறிப்பு குமாரன் ஆசான் புகழ்பெற்ற மலையாளக் கவிஞர்.