சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் பூனை வந்து ஜன்னல் படியில் இருந்ததைப் பார்த்தேன். அப்புறம் “எனக்கும் இங்க உரிமை இருக்கு” என்பது போல அறைக்குள் இறங்கி நுழைந்தது. அது நான் வளர்க்கும் பூனை இல்லை. இதற்கு முன்பு அதை பார்த்து பழகிய அனுபவம் எதுவும் எனக்கு இல்லை.
நான்கைந்து நாட்களாக அது இங்கேதான் இருக்கிறது. ஆரம்ப நாட்களில் என்னை விரிவாக ஆராய்ச்சி செய்தபிறகுதான் அதன் நடமாட்டம் ஒவ்வொன்றும் அமைந்திருந்தது. “இறங்கிப் போ” என்று நான் உரத்த குரலில் கத்திய போதும் அது அசைந்து கொடுக்காமல் அங்கேயேதான் இருந்தது.
சாய்வு நாற்காலியில் இருந்து எழுந்திருக்கவும், புத்தகத்தில் இருந்து கவனத்தைத் திசை திருப்பவும் எனக்கு சோம்பேறித்தனமாக இருந்தது. நான் அதன் பிறகு அதைக் கவனிப்பதில் அக்கறை காட்டவில்லை. இளகிக் கழன்று போன ஜன்னலின் கதவை எப்படி என்றாலும் சரி செய்யவேண்டும் என்று மனதிற்குள் தீர்மானித்துக் கொண்டேன்.
நீண்ட பயணத்திற்குப் பிறகு நான் ஒரு வாரம் கழித்து வீட்டுக்கு வந்தேன். நோய்களின் பெருங்கூட்டத்தோடுதான் வந்தேன். தொடைகளில் யூரிக் அமிலம் சேர்ந்து நீர் கட்டிக்கொள்வது ஐந்தாறு வருடங்கள் ஆகிவிட்டால் வரும் விருந்தாளி. ஏராளமான வலி நிவாரணிகளையும் மருந்துகளையும் சாப்பிட்டு ஒரு சமயம் மரணத்திற்கு அருகில் போய் வந்தேன்.
அதனால் தானே நீர் வற்றும் வரை காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை. நீர் கட்டிக்கொண்டு வீங்கிப் போன இடத்தில் காற்று வந்து பட்டால் கூட வலி மூளைக்குப் பாய்ந்து செல்லும். மேலே இருந்த அறையில் பூனை பிரசவித்திருக்கிறது. எல்லாம் வெளியில் போயிருக்கின்றன.
அறை முழுவதும் அசுத்தமாகியிருந்தது. “இதுஞ்களுக்கு வேற இடம் எதுவும் கிடைக்கலையா??”புலம்பிக் கொண்டே வேலைக்காரி என்னிடம் வந்தாள். ஜன்னலைச் சரி செய்யவேண்டும் என்று அவள் என்னிடம் கொஞ்ச நாட்களாகவே சொல்லிக் கொண்டிருக்கிறாள்.
வேலைக்காரி போனபிறகு பூனையும் குட்டிகளும் எனக்கு முகத்தைக் காட்ட வந்தார்கள். கொழுகொழுவென்று இருக்கும் அழகான குட்டிகள். அவற்றுக்குத் தின்பதற்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நான் நினைத்தாலும், என்னால் இருந்த இடத்தில் இருந்து எழுந்திருக்க முடியாது. சிறிது நேரம் அவை என்னைச் சுற்றி சுற்றி வந்தன. பிறகு பூனையும் அதன் குட்டிகளும் பின் வாங்கின.
இரண்டு பூனைக் குட்டிகளை நாய் பிடித்து கொன்றுவிட்டது என்றும், தாய்ப் பூனையை அங்கே எங்கேயும் காணவில்லை என்றும் வேலைக்காரி மறுநாள் அறிவித்தாள். மிச்சம் இருந்த மூன்று குட்டிகள் அழுது கூவிக்கூவி அழைத்து அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தன. அலைந்து திரிந்து கொண்டிருந்தன என்று வேலைக்காரி அலட்சியமாகச் சொன்னாள்.
”அதுங்களுக்கு ஏதாச்சும் கொடு” நான் அவளிடம் சொன்னேன்.
இரண்டு நாட்களாக பூனைக் குட்டிகளின் அழுகை சத்தம் எதுவும் கேட்கவில்லை. ஐந்தாவது நாள் தாய்ப் பூனை என் வீட்டு வாசலில் வந்து நின்றது. கொஞ்ச நேரத்திற்கு முன்புதான் முற்றத்தில் இருந்து அது அழும் சத்தம் எனக்குக் கேட்டது. பூனையின் கழுத்தில் ஆழமான காயம் இருந்தது. ஒரு கண் வீங்கியிருந்தது. என்னுடைய அனுமதி வாங்காமல் அது மேல் நிலையில் இருந்த அறைக்கு நொண்டிக்கொண்டே ஏறிப் போனது. திரும்பி வந்தது.
எனக்கு முன்னால் வந்து நின்றுகொண்டு அது என்னை நோக்கி தீ கக்கும் ஒரு பார்வையைப் பார்த்தது.
“உங்கிட்ட நான் என்னோட குட்டிங்கள ஒப்படைச்சுட்டுப் போனேனே? அதுங்க இப்ப எங்க?”. பதில் சொல்லத் தெரியாமல் விழித்தேன் நான்!